அரசியல்

ரயில்பயணம் காக்க தேவை செம்பயணம்

கரகரவண்டி காமாட்சி வண்டி கிழக்கே போகுது பொள்ளாச்சி வண்டி.. இந்தப் பாடலை நினைக்கும் போது மனம் குதூகலிக்கும் கிராமப்புறத்தின் பசுமையும் வெள்ளந்தி மனிதர்களும் நினைவில் வருவார்கள்.


ஒரு இடம் விட்டு வேறொரு இடம் நகர்வது என்பதில் குழந்தைகள் முதல் முதியோர் வரை அடையும் மகிழ்ச்சிக்கு ஈடுஇணை ஏதுமில்லை . அறிவு விசாலமடைய பயணங்கள் மிக அவசியம் என்பர் பெரியோர் !


பொருள் தேடலின் பொருட்டு நாடு விட்டு நாடு, மாநிலம் விட்டு மாநிலம் ,ஊர் விட்டு ஊர் என மேற்கொள்ளும் பயண அனுபவம், அறிவுத் தேடலின் பொருட்டு அல்லது இன்பமான சூழலில் மேற்கொள்ளும் பயண அனுபவத்தின் தன்மையிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது.

அயல் நாடுகளில் வேலை தேடி குடும்பங்களை விட்டு தனியே சென்றவர்கள் ஒருபுறம் இருக்க , உள்நாட்டில் பல மாநில மக்களும் பல ஊர்களில் வேலை தேடிச் சென்று குடும்பமாய் குவிந்துள்ளதை இந்த நோய்த் தொற்று ஊரடங்கு காலம் வெளிச்சமிட்டுள்ளது.


கிடைக்கும் கூலியில் வாழ்வை நகர்த்திய இவர்கள் மிகக் குறைந்த சேமிப்பும் கரைந்து போய், வாழவழியற்று மேற்கொள்ளும் நடைபயணமும் வாகன பயணமும் , ரயில் பயணமும் தந்து கொண்டிருக்கும் கொடூரமான அனுபவங்கள் காண்போர் கண்ணில் ரத்தம் வரவைக்கின்றன . ’இப்படியாவது இது போன்ற பயணம் தேவையா ’என்று கேட்போருக்கு , ’வாழ்வு தேடி வந்த மண்ணில் வாழத்தான் முடியவில்லை, மரண தேவதை தன் கரங்களால் அணைக்கும் கடைசி மணித்துளிகள் உற்றார் உறவினர் சூழ சொந்த மண்ணில் கழியட்டும் எனும் பேராசையில் நடக்கிறோம் ‘ என்பதே அவர்களின் பதிலாக உள்ளது .

மக்களை பாதுகாக்க எந்த வித ஏற்பாடுகளும் செய்யாமல் ஓரிரவில் ஊரடங்கை அறிவித்தவர்கள், இருபது லட்சம் கோடி ரூபாய் அறிவிப்பும் பெரும் முதலாளிகளுக்கு தான் ! மத்திய நிதியமைச்சரின் கொண்டைக் கடலை அறிவிப்பு தான் மக்களுக்கு என்று மக்களை ஏளனம் செய்தனர் ! இந்த ஊரடங்கு காலத்திலும் உழைப்பாளி மக்களின் வரிப்பணம் போலி வெண்டிலேட்டர் வாங்குவது போன்ற பலவழிகளில் வீணாகவும் ,அதன் மூலம் தங்களின் பைகள் நிரம்பவும் திட்டமிடத் தயங்கவில்லை . அது மட்டுமா ..

புலம்பெயர் தொழிலாளிகளின் பயணத்திற்கென சிறப்பு ரயில்கள் என அறிவித்து இயக்கப்பட்ட ரயில்களில் பயணித்த பலரும் வழியில் உணவும் நீரும் கிடைக்காமல் செத்து மடிகின்ற அவலக்காட்சிகள் தினமும் அரங்கேறி வருவதைக் காண்கிறோம்.

நேரும் விபத்துகளால் மரணம், அதீத மழை வெள்ளம் ,தண்டவாள சேதாரம் போன்ற பலவற்றால் தாமதமாகும் பயணம் என்பது போன்ற பல விசயங்களை இந்திய ரயில்வே துறையில் கண்டுள்ளோம்.


ஆனால் இத்தனை ரயில்கள் தடம் மாறி பல நாட்கள் பயணித்து வேறிடம் சென்றடைவது நாடு இதுகாறும் கண்டிராத சீரழிவு !திக்கு திசை அறியாத மக்களின் பயண மரணங்கள் எலிக்கு பயந்து புலியிடம் சிக்கிய பரிதாப நிலையைச் சொல்கிறது !

ரயில்வே பட்ஜெட்டை நீக்கி பொது பட்ஜெட்டுடன் இணைத்த மத்திய அரசின் இது போன்ற சீரழிவு நடவடிக்கைகள் மாபெரும் பொதுத்துறையான ரயில்வேயை தனியார்மயப் படுத்தும் எண்ணத்திற்கு உதவும் வகையில் மக்களுக்கு இந்தத் துறை மீது அதிருப்தி உருவாக்கும் நடவடிக்கைகளில் ஒன்றென யூகிக்கவும் இடமளிக்கிறது .

இந்த சூழலில் வலுத்தவன் வாழ்வான் என்பதையே மத்திய அரசின் நடைமுறைகள் காட்டுகின்றன. தப்பிப் பிழைக்கும் உயிர்கள் அல்ல நாங்கள் வளமான வாழ்விற்கு முழு உரிமை பெற்றவர்கள் என அழுத்திச் சொல்லும் வகையில் உழைப்பாளி மக்கள் கைகோர்க்க வேண்டிய காலம் இது !

செம்படை அணி வகுப்பை போல் திரளான மக்கள் முஷ்டி உயர்த்தி செம்பயணம் மேற் கொள்வோம் ! ஊரையடித்து உலையில் போடும் கொடும் அதிகாரம் செல்லாது !எதிர் கொள்ளும் உழைப்பாளி மக்களின் குரல் எளிதில் அடங்காது என உலகிற்கு உரக்கச் சொல்வோம் . .

செம்மலர்

Related Posts