பிற

விரலால் உணர முடியும் ஒரு காதல் கடிதம் …

பட்டு – அலெக்சாண்ட்ரோ பாரிக்கோ.

இந்த நாவலை ரொம்ப எளிதாக 300- 400 பக்கங்கள் இழுத்து எழுதியிருக்கலாம்.. ஆனால் ஆசிரியர் காரணமாகவே 120 பக்கங்களில் முடித்திருக்கிறார். ஒரு திரைப்படத்தை எழுத்தில் படிப்பது போன்ற உணர்வு இருந்து கொண்டேயிருந்தது. மிகவும் சின்னச் சின்ன அத்தியாயங்கள். ஒரு பக்க அளவில், சில பாதிப் பக்கங்களில்..

நாவலை எப்படி பெரிதாக எழுதியிருக்கலாம் என்றால்.. அதற்கு எக்கச்சக்கமான வாய்ப்புகள் கதையில் இருந்தன. நாயகன் உலகின் ஒரு மூலையான ஃப்ரான்சில் இருந்து மறுமூலையான ஜப்பானுக்கு நான்கு முறை பயணம் செல்கிறான். இது போதாதா பெரிதாக கதை செய்வதற்கு?? ஆனால் ரொம்ப சிறிய அளவிலேயே அந்த பயணங்களைப் பற்றி சொல்லிவிட்டு முக்கிய கதாபாத்திரங்க்களில் மட்டும் கவனம் செலுத்தியிருக்கிறார்.

அதிலும் அவனது ஃப்ரான்ஸ்-ஜப்பானிய பயணத்தை ஒரே பக்கத்தில் எழுதி, அதே வரிகளை மீண்டும் மீண்டும் நான்கு முறை எழுதியிருக்கிறார்.

ஜப்பானிய பெண்ணுடனான காதல் வருகிற இடம் தான் அசத்தல்… மனுசன் நான்கைந்து வரிகளை மட்டும் எழுதி விட்டு மவுனமாக அடுத்த பகுதிக்கு சென்று விடும் போது, அந்த மவுனம் நம்மை கனமாக அழுத்திவிடும். ஒருமுறை நான்காயிரம் கிமி பயணித்து அவளை ஒரே ஒரு முறை சில நிமிடங்களே பார்த்து விட்டு மறுபடி ஊர் திரும்பி விடுவான்…

அவனை அவளை நோக்கி இழுக்க வைத்த காதலை/காமத்தை, அப்படிச் சில கணங்களே நீடித்து முடிந்த சந்திப்பின் வலியை, பிரிவை, சோகத்தை கொஞ்சம் கூட சொல்லாமல் வாசகனை யோசிக்கச் சொல்லி விட்டு கதையில் நமக்கும் ஒரு சரிசமமான கதை புனையும் வாய்ப்பைத் தருகிறார் ஆசிரியர். அது தான் நாவலின் தனித்துவமென்று எண்ணுகிறேன். நமது கற்பனை உலகம் எத்தனை விஸ்தீரமானதோ அத்தனை அற்புதமான அனுபவம் கிடைக்கும்.

கதை இது தான். தான் வியாபாரம் செய்யச் சென்ற இடத்தில் இருக்கும் வியாபாரியின் மனைவியுடன் காமம் கலந்த காதல் அல்லது காதல் கலந்த காமம் அப்படித் தெளிவில்லாத ஒரு ஈர்ப்பில் விழுந்து விடுகிறான். ஈர்ப்பைத் தாண்டி அவர்கள் இருவருக்குள்ளும் எதுவும் நடந்திடாது. ஆனால் அந்த ஈர்ப்பு அவனை மறுபடி மறுபடி பதினாயிரம் கிமி தூரம் பயணிக்க வைக்கிறது. இதை அவனது மனைவி நுட்பமாக உணர்ந்து விடுகிறாள். ஏமாற்றத்தில் இறந்து விடுகிறாள். நாயகன் குற்றவுணர்வோடும், சோகத்தோடும் மீதி நாட்களை கழிப்பதாக நாவல் முடியும்.

இதே போல ஒரு கதையை வண்ணதாசன் எழுதியிருக்கிறார். ‘சுலோசனா அத்தை ஜெகதா மற்றும் ஒரு சுடுமண் காமதேனு’ என்ற கதை. தனது மாமாவின் மனைவி மேல் இருக்கும் மெல்லிய ஈர்ப்பை தனது மனைவி கண்டுபிடித்து விடுவாள் இது தான் கதை. இவர் அத்தனை அழகாக ஒவ்வொன்றையும் விவரித்து எழுதும் போது நம் வாழ்க்கை எப்படி மேம்போக்காக கவனித்து வாழ்ந்து வீணடிக்கிறோம் என்ற உணர்வு வந்து விடும். பெண்கள் எப்படி கூர்மையாக கவனிப்பார்கள் என்பதை உணர்த்தும் அழகான கதை..நான் மறுபடி மறுபடி வாசித்துக் கொண்டிருக்கும் கதை.

பட்டு நாவலில் நான் அதிகம் ரசித்த இடம். என்னவென்றால் நாயகனுக்கு ஜப்பானில் இருந்து ஒரு காதல் கடிதம் வரும்(ஆனால் எழுதியது ஜப்பான் காதலி அல்ல.. சஸ்பென்ஸ்…படிக்கும் போது தெரிஞ்சுக்கங்க) அந்த ஜப்பானிய கடிதத்தை படித்துத் தெரிந்து கொள்ளவும் முடியாமல், படித்துச் சொல்ல ஆளும் கிடைக்காமல், வெறுமனே கோட் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு, உணவருந்தும் போதும், தனது நிலத்தில் விவசாயிகளோடு பேசும் போதும், பாக்கெட்டுகுள் கை விட்டு கடிதத்தை தடவிப்பார்த்துக் கொள்வான்…

யோசித்துப் பாருங்கள் நமக்கு ஒரு வேற்று மொழியில் காதல் கடிதம் வந்து, அதை புரிந்து கொள்ள முடியாமல் திணறி, அதை வெறுமனே தடவிப் பார்க்கும் உணர்வு எப்படி இருக்கும்??

Related Posts