சமூகம்

பணிமனை இடிபாட்டிலிருந்து தொழிலாளர்களின் கதறல் …

காலை எழுந்தவுடன் அந்த அதிர்ச்சிகரமான செய்தியை நாம் எல்லோருமே பார்த்திருப்போம். நாகை, போக்குவரத்துப் பணிமனை இடிந்து, தூக்கத்திலேயே செத்தார்கள் 8 தொழிலாளர்கள். 3 பேர் உயிருக்கு போராட்டம்.

அவர்கள் ஏன் வீடுகளில் தூங்கவில்லை என்று நினைத்துப் பாருங்கள்.

தீபாவளி முடிந்து, சொந்த ஊரிலிருந்து, வேலைக்குத் திரும்பும் எல்லோரின் வாழ்க்கையிலும் – ஓட்டுனர்களின் பங்கினை மறுக்க முடியுமா?

அவர்கள் வீடுகளில் தீபாவளி எப்படியிருந்திருக்கும்? அவர்கள் குழந்தைகளின் மனநிலை இப்போது எப்படியிருக்கும்? … நாம் இதையெல்லாம் சிந்திக்காமல், வேறு திசையில் நகர்ந்து செல்ல முடியாது.

தலைநகரின் கதையைச் சொல்கிறேன்.

அரசுப் போக்குவரத்தின் இன்றியமையாமையை இருவேறு தருணங்களில் இயற்கை நமக்கு உணர்த்தியது. சென்னை வெள்ளத்தில் 3 நாட்கள் தத்தளித்து, ஒரு வழியாக அண்ணா சாலையை அடைந்தபோது, முந்தி வந்து நின்றது அரசுப் பேருந்துதான்.

வார்தா புயலில் நகரமே இருண்டு கிடந்தபோது, புயலுக்கு நடுவே அவசர அவசரமாக மக்களை வீடு கொண்டு சேர்ந்ததும் அரசுப் பேருந்துகள் தான்.

இப்போது சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் ஏன் வீடு சென்று தூங்கவில்லை? எந்த நகரத்திலிருந்து இரவு வேலை முடித்துவிட்டு வந்து அந்தப் பணிமனையில் உறக்கம் கொண்டிருப்பார்கள்?

அரசுப் பேருந்துகளின் தரம் எப்படி இருக்கிறது? தரம் பற்றி விமர்சிக்காதவர்கள் உண்டா?

அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் இயக்கப்படும் 22,500 பேருந்துகளில் 7000 பேருந்துகள் மட்டுமே இயக்குவதற்கு தகுதியானவை. மீதமுள்ள பேருந்துகள் அனைத்தும் 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோமீட்டருக்கும் மேல் ஓடி காலாவதியானவை.

ஒரு நாள் பயணிக்கும் நமக்கே நிரம்ப விமர்சனங்கள் எழுகின்றனவே, நாள்தோறுமும் அதோடு மல்லுக்கட்டும் அந்த ஓட்டுனர்களின் பாதங்களை சிந்தித்துப் பாருங்கள். உடைந்த பணிமனை, உயிரையெடுத்தபோது அவர்கள் என்ன கனவு கண்டுகொண்டிருந்திருப்பார்கள்.

வெள்ளமெனப் பெருக்கெடுக்கும் துயர் தொண்டையை அடைக்கிறது. அவர்கள் நம்மைக் கைவிட்டதில்லை, ஆனால் நாம் அவர்களை கைவிட்டுத்தான் வாழ்கிறோம்.

சில மாதங்கள் முன்னர் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராடினார்கள். தங்கள் ஓய்வூதியப் பயன்களை அரசிடம் கேட்டு மன்றாடினார்கள்.

அவர்களின் கோரிக்கைகளுக்கும் நமக்கும் நேரடித் தொடர்பு இல்லையா?

கடந்த 6 ஆண்டுகளில் பணி ஓய்வு பெற்ற 13 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியப் பயன்கள் வழங்கப்படவில்லை. அவற்றின் மதிப்பு ரூ.1500 கோடி. போக்குவரத்துக் கழகங்களின் சேவைகளுக்கு அரசு தரவேண்டிய உரிய பங்கு கொடுக்காததினால் – தொழிலாளர்களுக்கு சொந்தமான ரூ.7000 கோடி இன்னும் அவர்களுக்கு சேரவில்லை.

காலாவதியான பேருந்துகளை மாற்றுவது, பாழடைந்த பணிமனைகளை புதுப்பிப்பது என அனைத்துக்குமான நிதி முடக்கப்பட்டுள்ளது. தங்கள் ஓய்வூதியப் பயன்களையாவது கொடுக்கக் கேட்ட தொழிலாளர்கள், தரமான சேவையை உறுதிப்படுத்தவும் சேர்த்து குரல்கொடுத்தார்கள். அரசு ஊழியர்களுக்கு நிகரான சம்பளம் கேட்டார்கள். இடியும் பணிமனையைக் கட்டக் கேட்டார்கள்.

இன்றைக்கு வரையிலும் அந்தப் பேச்சுவார்த்தை இழுத்தடிக்கப்படுகிறது.

இடிபாடுகளில் சிக்கி, தற்போது சிகிச்சை பெற்றுவருகின்ற ஓட்டுனர் பிரேம் குமார், தனது நேர்காணலில் “விடியற்காலை 3 மணிக்கு கட்டடம் இடிந்து விழுந்தது. அரை மணி நேரமாக கதறினோம். எங்களுடன் நடத்துனர்கள், ஓட்டுநர்கள், நிர்வாக அதிகாரிகள், மெக்கானிக் உள்ளிட்டோர் சிக்கிக் கொண்டனர். எங்கள் சத்தம் கேட்டு ஓடிவந்த சக தொழிலாளர்கள் எங்களை மீட்டனர்” என்று தெரிவித்திருக்கிறார்.

இடிபாடுகளுக்குள் இருந்தபடி அவர்கள் அரைமணி நேரம் கதறியிருக்கலாம். உண்மையில் அவர்களின் கதறல் எத்தனை நாட்களாய் நீடிக்கிறது. என் செய்தோம் தமிழகமே! என் செய்வோம் அன்னைத் தமிழகமே !?

Related Posts