இதழ்கள் இளைஞர் முழக்கம் வரலாறு

திப்பு சுல்தான்: காலனிய எதிர்ப்பின் பெருமைமிகு வரலாறு!

 – சுந்தா

“நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல… அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத, கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நாம் பெற்ற பாக்கியம்.”

1798 ஆம் ஆண்டு அன்றைய கவர்னர் ஜெனரல் வெல்லெஸ்லி தனது லண்டன் தலைமைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டது.

திப்புவின் 18 ஆண்டு கால ஆட்சி அதற்குச் சான்று கூறுகிறது. ராஜபிளவை கட்டியால் 1782 ஆம் ஆண்டு ஹைதர் அலி இறந்தபின் ஆட்சிபீடம் ஏறிய திப்புவிற்கு வயது 29. 1799ல் 4ஆம் மைசூர்ப் போரில் வீரமரணம் எய்தும்வரை திப்புவின் ஆட்சிக் காலம் ஓயாத போர்களால் நிறைந்திருந்தது. 1857ஆம் ஆண்டின் சிப்பாய்களின் விடுதலைப் போருக்கும் முன்னதாகவே ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்பு அரசியலை எதிர்த்தவர்.

ஒரு தர்காவில் பணியாளாய் இருந்தவரின் குடும்பவழி வந்தவர் திப்பு. சூஃபி வழிபாட்டு முறையில் நம்பிக்கை கொண்டிருந்த பாரம்பரியம். இதனைத் தனது தந்தை ஹைதரிடமிருந்து திப்பு பெற்றுக்கொண்டார். மைசூர் அரசைக் கைப்பற்றிய ஹைதர் அலி தனது இருப்பிடத்தை சிரிரங்கத்திற்கு மாற்றிக் கொண்டார். 1774ல் ரங்கநாதர் ஆலயம் தீயில் பழுதானபோது ஒரே மாதத்தில் ஹைதர் அலி அதனைப் புதுப்பித்தார்.

“தன்னையும் தன்னைப் பின்பற்றுபவர்களையும் ஒரு பிரிவு இந்துக்கள் தாக்குகின்றனர். ஹைதர் அலி தலைமையில் உள்ள ஒரு முஸ்லீம் அரசாட்சி அவர்களைக் கடுமையாகத் தண்டிக்க முன்வரவேண்டும்”; என்று ஒரு முஸ்லிம் மதகுரு ஹைதர் அலியிடம் முறையிட “இது ஒரு முசல்மான் அரசாட்சி என்று யார் உங்களுக்குச் சொன்னது?” என திருப்பிக் கேட்டாராம் ஹைதர் அலி. இத்தகைய அரசாட்சி முறையைத் தவறாமல் பின்பற்றியவர்தான் திப்புவும்.

பரசுராம் பாவு தலைமையிலான மராட்டிய படைப்பிரிவு 1791ல் சிருங்கேரி மடத்திற்குச் சொந்தமான சாரதா கோயிலைக் கொள்ளையடித்து 17 லட்சம் வராகன் மதிப்புள்ள அதன் செல்வங்களையும் விக்கிரகங்களையும் சூறையாடியது. சிருங்கேரி மடத்தின் சங்கராச்சாரியாரான சச்சிதானந்த பாரதி தப்பித்துச் சென்று திப்புவின் உதவி கேட்டு கடிதம் அனுப்பினார். திப்புவின் படைகள் மராட்டியப் படையை விரட்டியடித்தது. சாரதா பீடம் மறுபடியும் எழுப்பப்பட்டது. நாணயத்தை அச்சடிப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்த திப்பு அரசானது உடனடியாக ஒரு கையில் கிளி ஏந்திய சாரதா தேவியின் உருவம் பதித்த 200 பொற்காசுகளை அச்சடித்து காணிக்கையாகக் கொடுத்தது.

வரலாற்று அறிஞர் பிஷாம்பர்நாத் பாண்டே அவர்கள் மாநிலங்களவையில் 1977ல் உரைநிகழ்த்தினார். திப்பு சுல்தான் குறித்து ஒரு சுவையான தகவலை அவர் அப்போது பரிமாறிக்கொண்டார். அந்த உரையினூடே திப்பு காலத்து ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தின் அணுகுமுறையை அம்பலப்படுத்தினார்.1895 முதல் 1899 வரை கவர்னர் ஜெனரலாக இருந்தவன் கர்சன் பிரபு. அவனுக்கு இந்தியச் செயலாளராக இருந்த ஜார்ஜ் பிரான்சிஸ் ஹாமில்டன் பின்வருமாறு ஆலோசனை வழங்குகிறான்: “பல்வேறு சமூகப் பிரிவுகளுக்கிடையே உள்ள வேறுபாடுகளை மேலும் மேலும் ஆழமாகப் பிளவுபடுத்தும் வகையில் பாடப்புத்தங்கள் தயாரிக்கத் திட்டமிடவேண்டும்.”

1884 -1988 வரை வைஸ்ராயாக இருந்த டூஃபரின் பிரபுவிற்கு லண்டனிலிருந்து வந்த ஆலோசனை என்ன தெரியுமா? அது இதுதான்:

“மத அடிப்படையிலான பிளவுகளை உண்டாக்குவது என்பது மிகப்பெரும் அளவிற்கு நமக்கு உதவும். எனவே இதன் அடிப்படையில் இந்தியாவில் கிடைக்கும் பாடப்புத்தகங்கள் உருவாக்கப்படுகிறதா என்பதை ஒரு ஆய்வுக்குழு கொண்டு ஏற்பாடு செய்யவேண்டும்.”

ஒன்றுபட்ட பொது உணர்வு உருவாவதற்கு எதிராக எல்லா பிளவுத் திட்டங்களுக்கும் ஏற்பாடு செய்துகொண்டிருந்த ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களின் அணுகுமுறையை ஆவணமாக வெளியிடப்படும் முன்பே அறிந்தவர் திப்பு. அதனை முறியடிக்கும் விதமாகவே திப்புவின் அரசியல் இருந்தது.

“சாதி மதம் இனம் ஆகியவற்றின் பெயரால் நமது மைசூர் அரசின் ஆளுகையில் உள்ள எவரையும் வேறுபடுத்திப் பார்ப்பதோ, ஒதுக்குவதோ சட்ட விரோதமானதாகும்”- இது திப்புவின் அறிவிப்பு.

கல்கத்தா (கொல்கத்தா) பல்கலைக் கழகத்தில் சம்ஸ்கிருதத் துறையில் இருந்த பேராசிரியர் ஹர் பிரசாத் சாஸ்திரி என்பவர் எழுதிய நூலின் ஒரு பகுதி பாடமாக இருந்துள்ளது. திப்பு ஆட்சியின் கொடுமை தாங்காது மத மாற்ற நிர்ப்பந்தத்தை ஏற்க முடியாமல் 3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று அப்பாடப் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது.

வரலாற்றாளர் பாண்டே அவர்கள் பலமுறை சம்பந்தப்பட்ட சாஸ்திரி அவர்களுக்கு எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இத்தகவலை எழுதினீர்கள் என்று கடிதங்கள் எழுதினார். கடைசியாக பதில் வந்தது. மைசூர் கெசட்டிலிருந்துதான் என்று.

மைசூர் பல்கலைக் கழக துணைவேந்தர் மூலம் இத்தகவலை சரிபார்க்க கேட்டுக்கொண்டார் பாண்டே அவர்கள். “3000 பிராமணர்கள் தற்கொலை என்கிற தகவல் சரியல்ல.எந்த ஆவணத்திலும் காணப்படவில்லை. மாறாக திப்பு அவர்களின் பிரதம மந்திரியும் படைத் தளபதியும் பிராமணர்கள்தான்” என்று கெசட் ஆவணங்களைச் சரிபார்த்து பாண்டே அவர்களுக்கு பதில் அனுப்பப்பட்டது.

ஹர் பிரசாத் சாஸ்திரியின் ஆதாரமற்ற நூல் பல மாநிலங்களிலும் பாடப்புத்தகமாக இருந்தது. இன்றும் இந்துத்துவாவினர் இந்த ஆதாரமற்ற செய்தியை திப்புவிற்கு எதிராக உலவவிட்டுக்கொண்டுள்ளனர்.

ஆங்கிலேயருக்கு எதிரான உணர்வு என்பது திப்புவின் அடி மனதில் ஆழ வேரூன்றியிருந்தது. அது ஆக்கிரமிப்பாளனுக்கு எதிரான அரசியல் உணர்வு.

துருக்கி சுல்தான் அப்துல் ஹமீதுக்கு அவர் எழுதிய கடிதத்தில் இந்துஸ்தானத்தில் ஆங்கிலேயர் செய்யும் அத்துமீறல்களைக் குறிப்பிடுகிறார். உள்நாட்டுக் குடிகளின் சட்டப்படியான உரிமைகளை மறுக்கின்ற ஆங்கிலேயர்கள் இந்திய மண்ணில்உருவாக்கி வரும் அரசியல் அதிகாரத்தைக் குறிப்பிடுகிறார்.

ஆங்கிலேயருக்கு எதிராக துருக்கியுடன் மைசூர் உடன்படிக்கை செய்து கொள்ளத் தயாராக இருக்கிறது என்பதைக் குறிப்பிடுகிறார். ஆங்கிலேயர்களின் பகைவர்களாக இருந்த பிரெஞ்சுக்காரர்களுடன் உடன்படிக்கை செய்துகொள்ளவும் நட்புறவு பாராட்டவும் திப்பு எடுத்துக்கொண்ட முயற்சிகள் அவரின் அரசியல் சாதூரியத்தையும் ஆங்கிலேய ஆதிக்க எதிர்ப்பு அரசியலையும் காட்டுகின்றன.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நட்பு வழிபட்ட தொடர்புகளை உருவாக்கிக்கொள்ள திப்பு இரண்டு காரணங்களுக்காக விருப்பப்பட்டார். ஆங்கிலேயருக்கு எதிரான வலுவான கூட்டு உருவாக்குவது ஒன்று. மற்றொன்று தொழில் வளர்ச்சி கண்டிருக்கும் மேற்கத்திய நாடுகளைப் போல் உள்நாட்டிலும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தி விரிவாக்குவது.

காந்தகார் மற்றும் பாரசீகத்தின் மன்னர்களை வங்காளத்தின் மீதும் மராத்தாக்களை பம்பாயின் மீதும் படையெடுக்கச் செய்யவேண்டும். பிரெஞ்சுக்காரர்களையும் அணைத்துக்கொண்டு ஒரு கூட்டான நடவடிக்கை மூலம் ஒரே சமயத்தில் எல்லா முனைகளிலும் ஆங்கிலேயர் மீது போர் தொடுக்க வேண்டும் என்கிற கனவை ஹைதர் அலி கொண்டிருந்தார். திப்பு அதனை நடைமுறைப்படுத்த தனது இறுதி நாள்வரை முயன்றார்.

பால் முகந்த் ராய் , மூல்சந்த் மற்றும் சஜ்ஜன் ராவ் மூலம் டில்லி மொகலாயர்களுடன் உறவை ஏற்படுத்திக் கொள்ள முயன்றார். ஆப்கானிஸ்தானத்து சுல்தான் சமன் ஷா அவர்கள் திப்பு கேட்டுக்கொண்டதற்கு இணங்க படைஉதவி தர முன்வந்தார். ஆங்கிலேயர்கள் தங்களது தந்திரத்தால் பெர்ஷியாவைத் தூண்டிவிட்டு சமன் ஷா மீது போர் தொடுக்க வைத்தனர். இதன் மூலம் திப்புவிற்கு படை உதவி கிடைப்பதைத் தடுத்தனர். இது நடந்தது 1799ல்.

இயந்திரப் புலி ஒன்றை உருவாக்கி அதன் ஆவேசத் தாக்குதலில் ஆங்கிலேய வீரன் வீழ்ந்து கிடப்பதுபோலவும் அலறுவது போலவும் வடிவமைத்து பெருமைப்பட்டார் திப்பு. திப்புவின் மரணத்திற்குப்பின் ஆங்கிலேயர்கள் இதனை லண்டனுக்குக் கடத்திக்கொண்டு போய்விட்டனர்.

திப்பு உருவாக்கிய ராக்கெட் ஆங்கிலேயர்களை அதிரவைத்தது. பல கிலோ மீட்டர்கள் வானில் பறந்து வாள்களை பகைவர்கள் மீது பொழியும் அழிப்புத் திறன் வாய்ந்தது. அவர்களால் கைப்பற்றப்பட்ட 2 ராக்கெட்டுகளை வழக்கம்போல் லண்டனுக்கு கொண்டு சென்று 4 ஆண்டு ஆராய்ச்சிக்குப் பின்னர் வில்லியம் காங்ரீவ் என்பவரால் காங்ரீவ் ராக்கெட் என்கிற பெயரில் வடிவமைக்கப்பட்டது.

இன்றைய இந்திய அரசுபோல் வெறும் முதலீட்டாளர்களைக் கெஞ்சி அழைக்கும் அரசியல் ஒருபோதும் திப்புவிடம் இல்லை. பிரான்சிலிருந்தும் துருக்கியிலிருந்தும் தொழில் நுட்ப அறிஞர்களைக் கொண்டு வந்தார் திப்பு. தொழில் நுட்பச் செல்வங்கள்தான் கொண்டுவரப்பட்டன.

ஒரு நிலப்பிரபுத்துவ சமூகத்தில் தொழில் வளர்ச்சிக்கு முயன்று விரிவுபடுத்திய முதல் அரசன் திப்பு. முதலாளித்துவ தொழில் உற்பத்தியின் வாயிலில் அன்றைய மைசூர் இருந்தது. அது காகித ஆலையைக் கண்டது. முதன் முறையாக 3 கப்பல் கட்டும் தளங்களைக் கண்டது. நாணயம் அச்சடிக்கும் தொழிற்சாலையைக் கொண்டிருந்தது. கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டிற்கு அடித்தளம் போடப்பட்டது. நிலமற்றோருக்கு நிலம். எனவே பயிரிடப்பட்டபகுதி விரிவடைந்தது. முதலாண்டு வரியேதும் இல்லை. இரண்டாம் ஆண்டு கால் பங்கு மட்டுமே வரி. 3ஆம் ஆண்டிலிருந்து வழக்கமான வரி விதிப்பு.   மதுவிலக்கு கொண்டுவரப்பட்டது.தேவதாசி முறை பாலியல் தொழில் சட்டவிரோதமாக்கப்பட்டன. ஆங்கிலேயர்கள் திப்புவின் மண்ணில் வாணிகம் செய்யமுடியாது. அதனை மைசூர் அரசாங்கமே செய்தது. ஓட்டோமான் பேரரசு, சீனா, மஸ்கட், ஆர்மீனியா, ஜிட்டா, ஓர்முஸ் போன்ற பல நாடுகளுடனும் வணிகத் தொடர்புகள் உருவாக்கப்பட்டு மிளகு, பட்டு, சந்தனம், தேங்காய், தேயிலை, தந்தம், யானைகள் ஏற்றுமதியாயின.

இத்தகைய வளமான உள் நாட்டுத் தொழில் வளர்ச்சி என்பதனை எந்நேரமும் போர் என்ற சூழலிலும் திப்புவின் தலைமை சாதித்தது. 1792ல் நடந்த 3ம் மைசூர்ப் போரில் திப்புவிற்கு மிகப்பெரும் தோல்வி ஏற்பட்டது. துரோகத்தாலும் உள்நாட்டு மன்னர்களின் துணையோடும்தான் கார்ன்வாலிஸ் தலைமையிலான ஆங்கிலேயரின் கை ஓங்கியது. அப்போது ஏற்பட்ட ஒப்பந்தப்படி பணஇழப்பீடாக 3 கோடி தரப்படவேண்டும். பிணையாக திப்புவின் மகன்கள் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்படுவர். குடகு உட்பட பலபகுதிகளும் ஆங்கிலேயர் வசம் போனது.

1793 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக அரசு வணிகக் கம்பெனிகளைத் துவக்குகிறார். தோற்றபோதிலும் ஆங்கிலேயரை தனது எல்லைக்குள் வணிகம் செய்ய அனுமதிக்கவில்லை.

உள்நாட்டு வளர்ச்சியில் கவனம் செலுத்திய திப்பு இழப்பீட்டுத் தொகையையும் ஒப்பந்த நிபந்தனைகள் அனைத்தையும் நிறைவேற்றினார்.1794ல் சர் ஜான் ஷோர் திப்புவின் மகன்களை விடுவித்தான்.

1767-69ல் ஹைதர் அலியிடம் ஆங்கிலேயர்கள் தோற்றார்கள். அந்தப் போரில் இளைஞன் திப்புவின் போராற்றல் மிகப்பெரும் புகழை அவனுக்கு ஈட்டித் தந்தது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் ஒரு ஓவியம். இதைப்பற்றி லாலி என்கிற ஆங்கிலேய அதிகாரி வெறுப்பின் உச்சத்தில் விவரிக்கிறான்:

“நொறுங்கிக் கிடக்கும் பீரங்கிகளின் குவியலின் மீது அமர்ந்து கொண்டு தன் காலடியில் மண்டியிட்டிருக்கும் டூப்ரேயின் மூக்கைப் பிடித்து உலுக்குகிறான் ஹைதர் அலி.அவனுடைய வாயிலிருந்து தங்க நாணயங்கள் சிந்துகின்றன. ஆங்கிலேய ராணுவ அதிகாரியின் பதக்கம் அணிந்த ஒரு நாய் ஹைதர் அலியின் பின்புறத்தை நக்கிக் கொண்டிருக்கிறது”

இப்படியான யுத்த வரலாறு கொண்டிருந்த திப்புவிற்கு 3ம் மைசூர்ப்போர் தோல்வியைத் தந்தது. அலெக்ஸான்டர் டோவ் தனது வரலாற்று நூலில் குறிப்பிடுகிறார்: “எங்களுடைய சுவர்களை அவ்வளவு விரைவாகத் தாண்டும் திப்புவின் குதிரைகளைக் கண்டு எங்களுக்கு ஆச்சரியம். அவைகளுக்கு இறக்கைகள் உள்ளனவோ என்று”

மீண்டும் 1799ல் வாழ்வா சாவா யுத்தம். அதாவது 4வது மைசூர் போர். பிரிட்டிஷாருடன் சமாதானமாகப் போன பிரான்ஸ் திப்புவிற்கு கைகொடுக்கவில்லை. துருக்கி கைகொடுக்க இயலவில்லை. காபூலும் உதவ முடியாத நிலை. நிஜாம், மராத்திய மன்னர்கள், மலபார் சிற்றரசுகள், ஆற்காட்டு நவாபுகள் , மைசூர் ராணி என அத்தனை பேரும் ஆங்கிலேயனின் ஆதிக்கத்திற்கு துணைபோனார்கள். உளவு கொடுத்தார்கள். கோட்டைக் கதவுகளைத் திறந்து விட்டான் துரோகி மீர் சதக். மற்ற வீரர்களோடு வீரனாய் நின்று போரிட்ட திப்பு வீழ்த்தப்படுகிறான்.

இனி இந்தியா எங்களுடையதே என்று எக்காளமிட்டான் வெல்லெஸ்லி.

கிழக்கிந்தியக் கம்பெனியின் தலைமையிடமாக இருந்தது லண்டன் நகரத்து லெடன்ஹால் தெரு. 1760 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டு வரை லெடன்ஹால் தெருவை பயமுறுத்தி வந்த மைசூர் விழுந்துவிட்டது.

திப்புவின் மரணத்திற்குப் பின்னர் ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்கள் திப்புவின் மீது அவதூறுகளை அடுக்க ஆரம்பித்தனர். அவர்களது பிளவுபடுத்தும் பாடத்திட்டக் கைவரிசையை அகலப்படுத்தினார்கள். வில்க்ஸ் என்பான் இதில் முன்னிலை வகிக்கிறான். திப்பு ஒரு மதவெறியன் என்று நாக்கூசாமல் பொய்யை அடுக்கினான். ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்கள் வெட்கம்கெட்ட முறையில் திப்புவை ஆக்கிரமிப்பாளன் என்றார்கள். திப்புவின் அரசியல் நடைமுறையில் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அவருடைய மைய அரசியல் முழக்கம் அற்புதமானது.

“மக்கள்தான் நம் கவசம். நமக்கு அனைத்தையும் வழங்குபவர்கள் மக்கள்தான். நம்முடைய சாம்ராஜ்ஜியத்தின் வலிமைகள் அனைத்தையும், வெறுப்புகள் அனைத்தையும் சேமித்து வைப்போம். அந்நிய எதிரிகள் மீது மட்டும் பாய்ச்சப்படுவதற்காக” என்று பேசியும் செயலில் காட்டியும் வந்தார் திப்பு.

காலனி ஆதிக்கத்திற்கு எதிராக உள்நாட்டு மன்னர்களைத் திரட்ட நினைத்த திப்பு தோல்வியடைந்தார். ஆங்கிலேயருக்கு எதிரான சிவகங்கைச் சீமை வேலு நாச்சியாருக்கு, தீரன் சின்னமலைக்கு, விருப்பாட்சி கோபால் நாயக்கர் போன்றோருக்கு ஆதரவைக் காட்டினார் திப்பு. ஆங்கிலேயருக்கு சேவகம் செய்யும் மன்னர்களை பென்சன் மன்னர்கள் என்று வெறுப்புடன் குறிப்பிட்டார்.

ஆங்கிலேயர் ஆட்சி முதன்மையாகச் சந்திக்கும் அபாயம் திப்புதான் என்று தாமஸ் மன்றோ இலண்டனுக்கு கடிதம் எழுதினான். அந்த திப்புவின் உடல் பிணக்குவியலுக்குள் கண்டெடுக்கப்படுகிறது. ஆங்கிலேயப்படை நகரத்தை சூறையாடுகிறது.

தீயின் புகை நகரமெங்கும் பரவுகிறது. ஆங்கிலேயனின் பைகள் கொள்ளைகளால் நிரம்பி வழிந்தன. வணிகத்தை விட போர் மூலம் அடிக்கும் கொள்ளை பல மடங்கு பெரியது. லார்ட் ஹாரிஸ் 50 ஓட்டகங்கள் சுமக்கும் அளவு தனது கொள்ளைப் பொருட்களை எடுத்துக்கொண்டு போனான்.

அரசாங்க ஊழியர்கள் பதவி ஏற்கும்போது “ சொல்லாலோ அல்லது செயலாலோ ஏழைகளையும் விவசாயிகளையும் துன்புறுத்த மாட்டேன்” என்று உறுதிமொழி ஏற்கச் செய்த திப்பு வீழ்ந்து கிடக்கிறார்!

திப்புவின் ஆட்சிக் காலத்தில் விவசாயிகளின் சிறுகுற்றங்களுக்கு கசையடி போன்ற தண்டனைகள் நிறுத்தப்பட்டன. மாறாக நாகரிக சமூகச் சிந்தனையை உருவாக்கும் முனைப்போடு தண்டனை தரப்பட்டது. அதாவது சிறு குற்றம் இழைத்தோர் 2 மாமரங்கள் 2 பாதாம் மரங்களை நட்டு அவை மார்பளவு உயரம் வரும்வரை நீர்விட்டு பராமரித்து வரவேண்டும். மலபார் திப்புவின் வசம் வந்தவுடன் ஒரு விஷயத்தைக் கவனித்தார். சில இளம்பெண்கள் மார்பகங்களை துணியாமல் மூடாதிருப்பதைக் கண்டார். நவீன சிந்தனையாளரான திப்பு சுல்தான் இது குறித்து அற்புதமான கடிதத்தை மலபார் கவர்னருக்கு அனுப்புகிறார்.

“மேலாடை அணியாமல் இருப்பது வறுமையால் என்றால் வறுமையைப் போக்கும் அனைத்து உதவிகளையும் அவர்களுக்குச் செய்யுங்கள். மரபு என்று கூறினார்கள் என்றால் அவர்களுடைய இனத் தலைவர்களுடன் பேசி ஒத்துழைப்பைப் பெற்று இப்பழக்கத்தை மாற்றுங்கள்.”

பாரசீகம், உருது, அரபி, கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை அறிந்த திப்பு தனது அரண்மனை நூலகத்தில் 2000ற்கும் மேற்பட்ட நூல்களை சேமித்து வைத்திருந்தார். தனது மைசூர் அரசின் அலுவல் மொழிகளாக பாரசீகம், கன்னடம், மராத்தி என மும்மொழிகளை வைத்திருந்தார். இன்றைய ஜனநாயக யுகத்திலும் மொழியுரிமை அங்கீகரிக்காது இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்க விரும்பும் இந்துத்துவா சக்திகள் திப்புவை கன்னட மொழி எதிர்ப்பாளர் என்று வசைபாடுவது கொடுமையானது. முரணானது. திப்புவிற்கு சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய முழக்கங்கள் மீது தீராக் காதல் இருந்தது. தன்னைக் குடிமகன் திப்பு என்றே அழைத்துக் கொண்டார்.பிரெஞ்சு மன்னராட்சிக்கு எதிரான ஜாகோபின்களுக்கு தனது மண்ணில் அடைக்கலம் கொடுத்தார். அமெரிக்க விடுதலைப் போருக்கு நன்கொடை அளித்தார்.

திப்புவின் மரணத்திற்குப் பின் அவரது மகன்கள் வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டனர்.

“நமது மக்களுக்கு வளமான வசதி மிக்க வாழ்வை அளிக்க வேண்டும்.உணவு, உடை, வீடு, பிள்ளைகளுக்கான கல்வி, மகிழ்ச்சியான ஓய்வு ஆகியவற்றின் தேவை உணர்ந்து வசதிகளை உருவாக்குவது நமது கடமை. மக்களுக்குப் பொருளாதார நிறைவை உண்டாக்காமல் விட்டால், மக்கள் உரிமை சமூக நீதி என்பதெல்லாம் பொருளற்றதாகிவிடும்”

என்று மன்னராட்சியில் அதுவும் யதேச்சதிகாரச் சூழலில் பேசினார் திப்பு. சுயச் சார்பு பொருளாதாரத்தை தென்னிந்திய மண்ணில் விதைத்துச் சென்றவர் திப்பு. இந்து மராட்டிய மன்னர்களும் இஸ்லாமிய நிஜாம்களும் அன்றைக்கு இது பற்றி உணர்ந்ததே இல்லை. அவர்களும் பிறந்தார்கள். மறைந்தார்கள். ஆனால் திப்புதான் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் பிறந்தது என்னவோ1753 நவம்பர் 20 அன்றுதான்.

 

 

Related Posts