இதழ்கள்

விஷவாயு மரணச் செய்திகளும், தோட்டியின் மகனும் …

(எழுத்தாளர் சுந்தரராமசாமியின் பிறந்த நாளன்று, எழுத்தாளர் ‘தகழி சிவசங்கரன்’ எழுதி, சுந்தரராமசாமியின் மொழியாக்கத்தில் வெளிவந்த ‘தோட்டியின் மகன்’ நாவல் அறிமுகத்தை வாசிப்புக்காக வழங்குகிறோம்.)

வாசிக்கும் பழக்கம் அறவே விடுபட்ட நிலையில் மீண்டும் ஏனோ இதன் மேல் ஈர்ப்பு வந்து ஒட்டிக்கொள்ள, எளிமையான தமிழ் புத்தகங்களை வாசிப்போம். என்று ஆரம்பித்து ச.தமிழ்செல்வன் நூல்களை வாசிக்கலானேன். எங்கள் பழைய புத்தக அலமாரியில் சில புத்தகங்கள் வாசிக்கும் பட்டியலை நீட்டியது. அப்படி அகப்பட்டது தான் “தோட்டியின் மகன் “.

இந்த வார்த்தை, இப்புத்தகத்தை கட்டாயம் வாசிக்கும் எண்ணத்தை தூண்டியது. என் பாட்டியின் ஊரில் தோட்டி என்ற வார்த்தை எனக்கு பரிச்சயமானது. வீட்டின் பின்புறத்தில் பெரியம்மா ஒருவருக்கு சோறு கொடுத்ததைக் கண்டேன். யார் அவர் என்று வினவிய போது தோட்டி என்று கூறியது நினைவுக்கு வந்தது.

தோட்டியின் வாழ்க்கையில் பயணிப்பதற்கு முன்:
நூலாசிரியர் சுந்தர இராமசாமி தன் முன்னுரையில் சில விடயங்களை பதிவேற்றுகிறார். இந்நாவல் 1946ல் தகழி சிவசங்கர பிள்ளையால் மலையாளத்தில் எழுதப்பட்டுள்ளது. 1952ல் தமிழில் சுந்தர ராமசாமி மொழி பெயர்கிறார். இருப்பினும் 2000ல் தான் முழு நாவலாக வடிவம் பெருகிறது.

இந்நாவலுக்கு பெயர் சூட்டுவது பற்றி சிறிய’விவாதத்தை’ அவர் எழுதுகிறார். ‘சிலரிடம் பேசுகையில் தோட்டி என்று பெயரே வாசிக்கையில் துர்வாடை விசுவது போல் முகம் சுருங்குவதை உணர முடிகிறது. இச்சமூகத்தில் மாற்றத்திற்கான தேடல் உள்ளவர்கள் அளிக்கும் உத்வேகமே இந்தப் புத்தகம் வெளி வர முக்கிய காரணமாக அமைகிறது.’

இசக்கிமுத்துவின் இறுதி நாட்களோடு நாவல் துவங்குகிறது. இசக்கி முத்து ஒரு தோட்டியாக சுமார் முப்பது வருடம் வீடுவீடாக ஏறி மலத்தை வாளியில் நிரப்பி மலக்கிடங்களில் கொட்டும் பணியை செய்து வந்தான். முதுமையால் நோய்வாய்ப் பட்டு தோட்டி வேலை பறிபோகும் நிலையில், எப்படியேனும் தன் மகனுக்கு அந்த வேலையை வாங்கி கொடுக்க வேண்டும் என்ற சூழலில் கதை துவங்குகிறது.

தனக்கு ஒப்பாத தொழிலை தன தகப்பனுக்காக செய்ய துணியும் இசக்கிமுத்துவின் மகன் சுடலை முத்துதான் கதையின் மையச் சரடு. மனிதனை மனிதனாக பார்க்க மறுக்கும் ஒரு சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் என்று சுடலைமுத்து தன் பணி துவங்கிய சில நாட்களில் புரிந்துக் கொள்கிறான்.

தன் தகப்பனை இழந்து நிர்கதியாக நிற்கும் சுடலைமுவுத்துக்கு தோட்டிகளின் அரவணைப்பும் ஆதரவும் இதமளிக்கிறது.மலக்கிடங்கின் நடுவில் மனிதநேயம் தழைத்து நிற்கிறது என்பதற்கு ஒரு சான்றாக அமைகிறது அந்த மரணச் சூழல்.

சுடலைமுத்து மலத்தை அள்ளுபவனாக இருப்பினும் தன்னை எப்போதும் தூய்மையாக வைத்திருப்பான். ஆனாலும் தோட்டிகள் சுத்தமாகப் பணி செய்தால் அவர்களை கண்டு கொள்ள ஆள் இல்லை என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தான்.

தோட்டிகள் மலக்கிடங்கின் அருகில் தினமும் கூடிப் பேசுவார்கள். அப்படி பேசுகையில் வசதிபடைத்த மனிதர்கள் தங்கள் மனதை போலவே கக்கூசையும் எத்தனை அசுத்தமாக வைத்துள்ளார்கள் குறிப்பாக பெண்கள் கழிப்பறையை பயன்படுத்துவது பற்றி, ஒரு தோட்டி நகைப்புடன் பேசியதும், இந்த சமூகம் துப்புரவு தொழிலாளர்களை மனிதர்களாகவே ஆண்டாண்டு காலமாக எண்ணி பார்க்காத அவலத்தை நாவலாசிரியர் வெளிக்கொணறுகிறார்.

தோட்டிகளுக்கு கொடுக்கும் சம்பளம் சரியாக கொடுக்க படாமல் போவதும் அதனை எதிர்த்து கேட்க யாவரும் அற்ற நிலையில் சங்கம் அமைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இதனை வீழ்த்த அதிகார வர்க்கம் செய்யும் சூழ்ச்சியில் சுடலை முத்து மாட்டுகிறான், அவனுடன் சேர்ந்து ஒத்துழைக்கும் நண்பர்களின் நிலை என்ன ? என்பதை நாவல் வலியுடன் கூறுகிறது.

இதனிடையில் வள்ளிக்கும் சுடலைக்கும் மலக்கிடங்கின் நடுவில் மலரும் நறுமணம் கமழும் காதல். தன் திருமணத்திற்குப் பின் நகரும் வாழ்கையை ஒரு சராசரி மனிதனாக வாழத்துடிக்கும் சுடலையின் மனநிலை. அவன் மற்ற தோட்டிகளை விட்டு எட்ட நிற்பதற்கான காரணம் என்ன என்று விவரிக்கிறது.

மலத்தினால் ஏற்படும் கொடூர நோய்கள் தோட்டிகளின் குடிசைப் பகுதியை எத்தனை சுளுவாக வந்தடைகிறது.  ஏழை எளிய மக்களை எப்படிக் காவு வாங்குகிறது என்பதைப் பளிச்சென வெளிப்படுத்துகிறது இந்த நாவல்.

சுடலை’முத்து தனக்கு மகன் பிறப்பதை எவ்வாறு கொண்டாடுகிறான். தன் மகன் தோட்டியாக வளர்க்க விரும்பாதது ஏன் ? தன் பிள்ளைக்கு வைக்கும் பெயர் சொல்லும் செய்தியன்ன ? ஒவ்வொரு முறை தெருக்களில் தோட்டிகளை மக்கள் கடக்கையில் மூக்கடைத்து போவதை எண்ணி வெதும்பும் சுடலை. தன் மகனை தொட்டு தூக்கி கொஞ்சுவதில்லை. பள்ளி கூடம் சுடலையின் மகனை எப்படி வரவேற்கிறது? பிச்சாண்டி, சுந்தரம் , முனுசாமி இவர்களுக்கு என்ன நேர்ந்தது?. இவர்களின் பிள்ளைகள் என்னவானார்கள்? அடுத்து வரும் காலரா நோயின் கோரப்பிடியில் சிக்கிக் காணாமல் போன குடும்பங்களின் நிலையென்ன? என்று வாழ்கையில் நிகழும் சம்பவங்களை அச்சமூகத்தின் பின் புலத்தோடு வலியை வேதனையோடு காட்சி படுத்துகிறது இந்த நாவல்.

வள்ளி பல நேரங்களில் சுடலையின் மனசாட்சியாய் கேட்கும் கேள்விகள் அவனை அச்சுறுத்துபவை.கடவுளை தினமும் நம்போவோர் நிலை பற்றி அவளுக்கு எழும் அய்யப்பாடும். நம்ம சனங்களை மொத்த மொத்தமாக காவுவாங்கும் கடவுள் எங்கே உள்ளார் என்ற தொனியில் எழும் கேள்விகள் ஒட்டு மொத்த சமூகத்தையும் கேட்பதாக அமைகிறது .

இந்த நாவல் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதாக இருந்தாலும் இன்றும் துப்புரவு தொழிலாளர்களின் நிலை மிக பெரிய மாற்றத்தை அடைந்துவிட்டாதா? என்ற வினா நெஞ்சை உறுத்துகிறது .

இதனை ஒட்டி ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. நான் ஒரு அலுவலகத்தில் பணி செய்த போது , சென்னை திருவான்மியூரில் குப்பம் பீச் ரோட்டில் சில தெருக்களில் துப்புரவு தொழிலாளிகள் வசிக்கின்றனர். இதில் ஜெயராம் தெருவில் மாரியம்மா என்றவர் தன் கணவரை இழந்தநிலையில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்தார். கணவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளராக பணி புரிந்தவர். இவர்களுக்கு கிஷோர் என்ற மகனும் இருந்தார். தந்தையிடம் சேர்ந்து சாக்கடை சுத்தம் செய்யும் பணியை நன்கு அறிந்திருதார் கிஷோர். கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் கிஷோர் பகுதிநேர பணியாக சாக்கடை சுத்தம் செய்யும் பணியை செய்துவந்தார். ஒருநாள் சொந்தக்காரர் வீட்டுக்கு செங்கல்பட்டு சென்ற இடத்தில் சாக்கடை சுத்தம் செய்ய 1000/- ரூபாய் வழங்குவதாக சொன்னதால், அப்பணிக்கு ஒப்பு கொண்ட கிஷோர் விஷ வாயு தாக்கி உயிர் இழந்தார். இந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துதான் தாய் மாரியம்மாள் தெரிந்து கொண்டார். எந்த துணையும் அற்ற மாரியம்மா தன் மகனை நன்கு படிக்க வைக்க எண்ணி நிறைவேறாமல் போனது. அரசாங்கம் 1,00,000 ரூபாய் நஷ்ட ஈடாக கொடுத்துள்ளது.

பல ஆண்டுக்கு முன் எழுதபட்ட இந்த நாவலுக்கும் மேலே கூறப்பட்ட சம்பவத்திற்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதை உணர முடியும்.

சென்னையில் பல குடிசைப் பகுதிகளில் துப்புரவு தொழிலாளர்கள் சொற்ப காசுக்காக ஒப்பந்த பணியாளராக வாழ்கையை நடத்தி வருகின்றனர். நாம் தினசரி செய்திகளை கவனித்தால் தெரியும் விஷ வாயு தாக்கி வாலிபர் மரணம், இன்றும் மலத்தை கையால் அள்ளும் நிலை நீடிக்கிறது. இவைகளை எதிர்க்கும் போராட்டங்கள் மேலும் வலுப்பெறவேண்டும்.

நாவலை வாசித்து முடித்த பின் வாசிப்போரின் அகம் புறம் நாசி நரம்பெல்லாம் மலவாடை வீசும். மனிதனை மனிதனே கொடூரமாக சுரண்டி வருகிறான் என்பது விளங்கும். செங்கொடி இயக்கம் இக்கொடுமைகளை எதிர்த்து தொடர்ந்து போராடிவருவதை உணரமுடியும்.

ஒரு முறையேனும் வாசித்துப் பாருங்கள் மல உலகின் அகப்பயணம் மனிதனாய் பிறக்கும் அனைவரும் மனிதனை வாழ உரிமை பெற்றவர்கள் என்பதை உணரவைக்கும்.

Related Posts