கலாச்சாரம்

மார்க்சிய விமர்சன மரபின் தொடர்ச்சி பண்பாட்டு ஆய்வாளர் பேராசிரியர். தொ.ப……….

பாசிசச் சூழலின் பிடியில் நாடு இறுக்கத்திற்கு உள்ளாகி இருக்கின்ற இந்தச் சூழலில், பாசிசத்திற்கு எதிராக, ஒற்றை இந்துத்துவத்திற்கு எதிராக, ஏறக்குறைய 40 வருடங்களாகப் பண்பாட்டு ஆய்வுகளின் வழியே, நிலத்தின் பன்முகத்தன்மையை விளக்கிய பெருமகன் பேராசிரியர் தொ பரமசிவன்.

தொ ப அவர்களின் மறைவுச் செய்தியை கேட்டதிலிருந்து, நண்பர்களும் தோழர்கள் பலரும் அவரைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொண்டோம். நண்பர் ஒருவர் “தொ பரமசிவன் ஏன் இவ்வளவு முக்கியம்” என்று கேட்டார். இந்தக் கேள்வியைத் தலைப்பாகக் கொண்டு இக்கட்டுரையை எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

“பண்பாடு என்பது பாடறிந்து ஒழுகுதல்” என்பது தமிழ் வாக்கு. “பண்பாடு மீறப்படும்போது தான் அந்தப் பண்பாடு முக்கியத்துவம் பெறுகிறது” என்கிறார் தொ ப. ஆயிரமாயிரம் அர்த்தங்கள் கொண்ட வரிகள் இவை. நிலவுகிற பண்பாட்டு மரபும் அதன் எதிர் மரபும் ஒடுக்குகிற, ஒடுக்கப்படும் மக்களின் போராட்டங்களின் விளைவுகளாகும். அந்தவகையில், பண்பாட்டை, அது முன்வைக்கும் நிர்ப்பந்தங்களை, அதன் வேர்க்கால்களை, பரப்பு எல்லையை, அது சுமந்துவரும் வரலாற்றை வேர்ச் சொற்களிலிருந்து விளக்கியவர் தொ ப. ஒற்றை நிறுவன மையத்தை நோக்கிய நிலமானிய வளர்ச்சியில் இருந்து, இன்றைய முதலாளித்துவக் கட்டம் வரையிலான நிறுவன வளர்ச்சிப் போக்குகளையும், அதன் எதிர் மரபுகளையும் பேசிய இவரது நூல்கள், ஒற்றை நிறுவன மயத்திற்கு எதிராக எந்த அடையாளங்களை முன்வைக்க வேண்டும் என்பதைப் பேசுகின்றன. இவரது நூல்கள், “ஒரு கள ஆய்வை எப்படிச் செய்யவேண்டும்” என்பதற்குச் சான்றுகளாக, முன்மாதிரிகளாக இருப்பவை.

“அழகர்கோவில்” எனும் அவரின் முனைவர் பட்ட ஆய்வேடு சொல்லிடும், இவரது கள ஆய்வு பிரம்மாண்டத்தை. அந்தப் புத்தகத்தின் தகவல்களும், கருதுகோள்களும் பிரமிப்பூட்டுபவை. “தெய்வம் என்பதோர்”, “அறியப்படாத தமிழகம்”, “தெய்வங்களும் சமூக மரபுகளும்”, “பண்பாட்டு அசைவுகள்”, “நான் ஏன் இந்துவல்ல” போன்ற எல்லா படைப்புகளும் நிறுவன இந்துத்துவ எதிர்ப்பையும், இந்துமதக் கூறுகளையும் தொடர்ந்து விவாதிப்பவை.

“நாட்டார் மரபு” என்றாலே நம் நினைவுக்கு வருபவர்கள் நா வானமாமலை, தொ பரமசிவன், கோ.கேசவன், ஆ.சிவசுப்பிரமணியம் போன்ற சிந்தனையாளர்கள் தாம். நிறுவனமயப் “பெருந்தெய்வ வழிபாட்டின்” சமூக அரசியலைத் துல்லியமாக பேசும் தொ பரமசிவன் அவர்கள், அதற்கு மாற்றாக “சிறுதெய்வ வழக்காறு” எனப்படும் “நாட்டார் மரபை” முன்வைத்துப் பேசுகிறார்.

“”பழையனூர் நீலி”, “மதுரை மீனாட்சி” உள்ளிட்ட தாய் தெய்வங்களின் கதைகளையும், சமூகச் செல்வாக்கையும், நிறுவன ஆதிக்கத்தில் இத்தெய்வங்கள் எவ்வாறு சிக்கின” என்பதையும் விளக்குகின்ற இவர், “நாட்டார் மரபின் சாதியக்கூறுகளை” ஒப்புக்கொண்டே விவாதிக்கிறார். ஒற்றைத்துவத்துக்கு மாற்றாக, பன்முகத்தன்யை அடித்தளமாகக் கொண்ட சமணத்தை, மக்களின் வாழ்வியல் சடங்குகளில் கண்டுணர்கிறார். தமிழ்ச் சமணம் குறித்து ஆழமாகப் பேசும் தொ பரமசிவம், பௌத்தச் சிந்தனைகளின் வரலாற்றுச் சுவடுகளை தன் ஆய்வுகளில் விரிவாகப் பேசுகிறார்.

“நம்பிக்கை, மூடநம்பிக்கைகளின்” வாழ்வியல் அரசியல் பண்பாட்டை பிரித்துக் காட்டும் பேராசிரியர், நாட்டார் மரபு, சிறுதெய்வ வழிபாட்டுச் சடங்குகளின் எதிர் அடையாளங்களையும், கலகக் குரல்களையும், சனநாயகத் தன்மையினையும், ஒற்றை நிறுவன அதிகாரத்துக்கு எதிராக நேர் நிறுத்துகிறார்.

அழகர் கோவிலின் பௌத்த எச்சங்களை ஆய்வின் வழி நிறுவும் தொ ப அவர்கள் வைணவத்தின் சமய கலாசார வெற்றியை எடுத்துரைக்கும் பாங்கு ஆச்சரியம் அளிக்கக் கூடியது. ஆய்வாளனுக்கு இருக்கவேண்டிய விருப்பு வெறுப்புச் சார்பற்ற தன்மைக்கு இவரும் சமகாலச் சான்றாக விளங்குகிறார்.

“மொழிப்போர் மீண்டும் தொடங்கப்பட வேண்டும்” என்று இவர் கூறியது, அவரது மொழிவழித் தேசிய அரசியல் நிலைப்பாட்டுக்குச் சான்றாகும். தாய்தெய்வ வழிபாட்டை உவகையோடு மெச்சும் தொ பரமசிவன், “கடவுள் இல்லை; கடவுள் இருந்தால் நல்லா இருக்கும்” என்ற பிரசித்தி பெற்ற வாக்கியத்தைச் சொன்னவர். இவற்றிலிருந்து அவர் வறட்டு நாத்திகத்தை, கைகொள்ளாதவர் என்பதையும், “இறையின்” சமூகவியல் தேவையைப் புரிந்து கொண்டவர் என்பதையும், உழைக்கும் மக்களின் பண்பாட்டுச் சிக்கலைப் பேசுவதன் வழியாக, அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்டியவர் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

காலனிய ஏகாதிபத்திய எதிர்ப்பு பாரதியை ஏற்றுக்கொண்டு, சமூக விடுதலையை உரக்கப் பேசிய பெரியாரை எதிர்ப்பவர்களுக்கு இடையே, பெரியாரை ஏற்றுக்கொண்டு, பாரதியை வெறுத்து ஒதுக்குபவர்களுக்கு இடையே, பெரியாரைப் பெரிதும் மதிக்கும் தொ பரமசிவன், பாரதி உள்ளிட்டோரையும் வரலாற்று ரீதியாக சரியாக மதிப்பிடுகிறார். பெரியாருக்கு, “ஒட்டுமொத்த மானுட விடுதலைக்குப் பாடுபட்டவர்” என்று புகழாரம் சூட்டும் இவர், திராவிட இயக்கங்களின், தற்போதைய அரசியலையும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். “தொ பரமசிவன் ஒரு பெரியாரியளாளர்” என்று சொல்லப்படும் அளவுக்கு, அவரது பெரியாரிய மதிப்பீடு இருந்தாலும், அவர் மார்க்சிய விமர்சன மரபின் தொடர்ச்சி ஆவார்.

சிறுதெய்வ வழிபாடு, சடங்கு ஆச்சாரங்களை இயங்கியல் வழியாக விளக்கும் ஒருவரால் பெரியாரை நேசிக்க முடியும் என்பதற்கும், பெரியாரின் நேசிப்பது மார்க்சிய தோழர்களுக்கு ஓர் இடறல் அல்ல என்பதற்கும் சமகால உதாரணம் தொ பரமசிவன் அவர்கள். தமிழ் ஆய்வுலகின் முக்கியமான ஒருவரான பேராசிரியர் தொ பரமசிவம் அவர்கள் தமிழ்ப்பேராசிரியர் மட்டுமல்ல; “மூட்டா” தொழிற்சங்கவாதியும் ஆவார்.

அவரது வைணவம் குறித்த பார்வைகளில் எனக்கு மாறுபாடு உண்டு. அவைதிக பௌத்த, சமண மதங்களின் வைதீக எதிர்ப்பை விளக்குகிற எந்த ஒரு மார்க்சியருக்கும், சமண, பௌத்த சமயங்களின் கருத்து முதல் வாதமும் புரியும். பௌத்தத்தைச் சமயத் தளத்தில் வெற்றிகொண்ட வைணவத்தைப் பற்றிய பெருமிதத்தைக் காட்டியிருக்கிறார் தொ பரமசிவன் என்ற ஐயம் எனக்கு உண்டு.

பெரியாரால் ஆட்கொள்ளப்பட்ட
தொ பரமசிவன் அவர்கள் பெரியாரின் நிலைப்பாடுகள் பலவற்றை விமர்சனத்துக்கு உள்ளாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. சிறுதெய்வ வழிபாடு, சடங்குகள், நாட்டார் வழக்காறுகள், மூடநம்பிக்கைகள் போன்ற நிலைப்பாடுகளில் அவரின் ஆய்வுமுறை, பெரியாரின்பால் பட்டதல்ல. மார்க்சிய வழிமுறையே ஆகும்.

பாசிசப் பேரிருள் சூழ்ந்த இந்தக் காலத்தில், நிலத்தின் பன்முகத்தன்மையை, மதச்சார்பற்ற தன்மையை, மதச் சகிப்புத் தன்மையை, நிறுவன அதிகார எதிர்ப்பைத் தன் வாழ்நாள் முழுவதும் பேசிய பேராசிரியர் தொ ப அவர்களின் படைப்புகளை மக்களிடம் கொண்டு சென்று, விரிவான விவாதத்தைத் தொடங்குவதும், மாற்று பண்பாட்டினை முன்வைத்து பேசுவதும், “எங்களுக்குப் பிறகு யாரும் இல்லையே…!” என்ற அவரது பெரும் கவலையை முடிவுக்குக் கொண்டுவர, நாம் செய்ய வேண்டிய பெரும் பணியாகும்.

தமிழ் உள்ளமட்டும் தொப வின் புகழ் ஓங்கி இருக்கும். “மன்னனை விட மாசறக் கற்றோனே பெரியவனாம்”

தொப விற்குப் புகழஞ்சலி…….

  • ரபீக் ராஜா.

Related Posts