அறிவியல் காதல்

இது தான்டா காதல் ..

love 2

காதல் என்றால் என்ன என்று நாம் உணர்ந்து தெரிந்து கொள்வதற்கு முன் நமது திரைப்படங்கள் சொல்லிக் கொடுத்து விடுகின்றன. “அண்ணே … எப்படிணே காதல் வருது? “ என அப்பாவி செந்திலாக கேள்வி கேட்டால் நமது திரைப்படங்கள் சொல்லும் பதில் ” ஒரு பெண்ணைப் பார்த்ததும் அந்த காதல் நம்மள போட்டு கும்மு கும்முன்னு கும்மும்”, “காதலுக்கு உருவம் எதுவும் தேவையில்லை மனசு தான் முக்கியம்” , “காதலுக்கு காரணமே சொல்ல முடியாது” என்று மக்களைக் குழப்பி விட்டிருக்கிறது. “அட வண்டுரட்டான் தலையனுங்களா காதல் எப்படி தான்டா வருது” என்று கவுண்டமணி போல் கத்தியதில் விஞ்ஞானம் சில காரணங்களை அடுக்கியிருக்கிறது தெரிய வந்தது.

பசி, தாகம், போல் காதலும் ஒரு மனித தேவையால் ஏற்படுவதே. காமம், ஈர்ப்பு,இணைப்பு ஆகிய மூன்றும் காதலின் பின்னப்பட்ட படி நிலைகள். காமம் என்பது உடல் வேட்கையைக் குறிப்பது. ஈர்ப்பு என்பது யாரைத் தேர்ந்தெடுக்கிறோம், எந்த காரணங்களுக்காகத் தேர்ந்தெடுக்கிறோம் போன்றவை. இணைப்பு என்பது தனது வீட்டைப் பகிர்ந்து கொள்வது, அக்கறை, பரஸ்பர பாதுகாப்பு உணர்வு ஆகியவை சம்மந்தப்பட்டது.

ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு குறித்த வரைபடம்

காமத்தின் போது நமது உடலில் டேஸ்டோஸ்டீரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஆகிய ஹார்மோன்கள் சுரக்கும். இது ஒருவருடன் உடல் ரீதியாக உறவு கொள்ள தூண்டும்.சில வாரங்களில் இருந்து மூன்று மாதங்கள் வரை இந்நிலை நீடித்திருக்கும். நம்ம ஊரில் கூட ‘ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்’ என்று பழைய கிழவிகள் கணக்கிட்டு கலாய்ப்பது நினைவுக்கு வருகிறதா?
ஈர்ப்பு இது ஒரு நேரத்தில் குறிப்பிட்ட ஒரு நபரிடம் தான் ஏற்படும். பெரோமோன்ஸ் , டொபமைன்,நோர்ப்பின்ப்ரின் மற்றும் சிரோட்டினின் ஆகிய மூளையின் மகிழ்வுப் பகுதியை தூண்டும் ஹார்மோன்கள் இதில் சுரக்கின்றன. இதனால் இதயம் வேகமாக துடிக்கும், தூக்கம் வராது , பசி எடுக்காது. இது ஒன்று முதல் மூன்று வருடங்கள் வரை நிலைத்திருக்கும்.
காமமும், ஈர்ப்பும் தற்காலிக கட்டங்கள் என்றே அழைக்கப்படுகின்றன. ஆனால் இணைப்பு கட்டம் என்பது மிக நீண்ட வருடங்கள் நிலைத்து இருக்கும். இக்கட்டத்தால் தான் பல முதிய தம்பதிகள் இன்றும் அன்பொழுக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு திருமணம் குழந்தைகள் போன்ற பந்தங்கள் கூட ஒரு காரணம் தான். ஆக்சிடாசின் மற்றும் வேசொப்ரேசின் என்கிற ஹார்மோன்களின் தொடர் சுரப்பே இவற்றுக்கு காரணம். ஒருவர் காதலில் விழுந்த முதல் ஒரு வருடத்தில் அவரது நரம்பு வளர்ச்சிக்கான புரதங்கள் அதிகமாக உற்பத்தியாகும் பிறகு ஒரு வருடங்கள் கழித்து சாதாரண நிலைமைக்கு வந்து விடும். இது வரை பார்த்தது உடலியல் காரணங்கள்.இனி உளவியல் காரணங்கள்
நமது அனைவரது ஆழ் மனதிலும் தமக்கான துணை பற்றி ஒரு ஓரத்தில் உருவம் அல்லது ஒரு வரைபடம் இருக்கும். அதே போல் இருப்பவர்களைத் தான் அனைவரும் பெரும்பாலும் விரும்புகின்றனர் .
தமது பெற்றோர்கள் போல அல்லது சிறுவயதில் இருந்து யாரை பார்த்து வளர்ந்தார்களோ அவர்கள் போல இருப்பவர்களை அவர்களை நினைவு படுத்துபவர்களையே மனம் தேர்வு செய்கிறது. இன்னொரு ஆராய்ச்சி தம்மை பிரதிபலிக்கும் உருவத்தை தான் நாம் தெரிவு செய்கிறோம் என கூறுகிறது . ஒரு ஆணின் உருவத்தை எடுத்து கணினியில் அதை பெண் போல வடிவமைத்துவிட்டு பல பெண்களின் படங்களுடன் கலந்து கொடுத்த போது அதில் அவர்கள் மனதை அதிகம் கவர்ந்தது அவர்களின் படத்தை கணினியில் பெண்ணாக மாற்றிய படம் தான்.அதே போல் தான் பெண்களும் ஆண்களாக மாற்றப்பட்ட தங்களது படங்களையே தேர்வு செய்தார்கள். அவர்களால் அது தாம் தான் என உணரமுடியவில்லை.

இவ்வளவு தான் காதல். காரணங்கள் தெரிந்தாகிவிட்டது. வேறென்ன போய் காதலிங்க.. அதான் பாரதியே சொல்லிருக்காரே..

“காதலினால் மானுடர்க்கு கலவி உண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலைதீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதை உண்டாம்
கானம் உண்டாம்; சிற்பம்முதல் கலைகளுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே”

Related Posts