இதழ்கள்

மணற்குன்று பெண் – (புத்தகக் கண்காட்சி சிறப்பு பதிவு)

மணற்குன்று பெண்
கோபோ ஏப் | தமிழில் ஜி.விஜயபத்மா | பக்:351 | விலை: 220/- | வெளியீடு: எதிர் வெளியீடு

பூச்சிகளை உணவுப் பொருளாக பயன்படுத்தும் ஜப்பான் சமூகம் அவைகளை வெறும் உணவுப் பொருளாக சுருக்கி விடாமல் மனித வாழ்வினூடாக அவைகளின் குணநலங்களை மனித நடவடிக்கைகளுக்கு பொருத்தி பார்க்கும் உளவியல் பழக்கம் ஜப்பான் இலக்கியத்துகுண்டான தனிச்சிறப்பாகும். சிக்மன்ட் பிராய்டின் உளவியல் ஆய்வுகளில் மிகமுக்கியமாக கருதப்படும் இடிபஸ் காம்ப்ளக்ஸ் (Oedipus) எனும் உளவியல் சிக்கலுக்கான மனோநிலைக்குல் அகப்பட்ட பூச்சி ஆராய்ச்சியாளன் தனது ஆராய்ச்சிக்காக மணல் பகுதிக்கு பயணிக்கிறான். ஒரு பூச்சி ஆராய்ச்சியாளன் தனது ஆராய்ச்சிக்காகவும் எதிர்வரும் பூச்சிகளை பற்றிய மாநாட்டில் புதியவகை பூச்சிகளை கண்டுபிடித்து பெயர் பெற வேண்டும் என்ற வேட்கையினாலும்  தன் குடும்பத்தை விட்டு ஒரு கடல் கரை கிராமத்திற்கு பயணிக்கிறான். அங்கே அவனுக்கு ஏற்படும் எதிர்பாரா சம்பவங்களினால் ஒரு விதவை பெண்ணிடம் சேர்க்கப்படுகிறான். அவர்களுக்குள் நடைபெறும் விவாதங்கள், உடலியல் சார்பான ஈர்ப்பு, தப்ப நினைக்கும் அவனின் முயற்சி என சுவாரஸ்யங்களினூடாக பயணிக்கிறது நாவலின் கதைக்களம்.

கடற்கரையின்  மணற்பரப்பில் புதியவகை பூச்சிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடல் கரை கிராமத்திற்கு வரும் பூச்சி ஆராய்ச்சியாளன் இரவானதால் அங்கேயே தாங்கியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் கிராம பெரியவர்களின் ஏற்பாட்டில் மணல் புயலில் இருந்து தப்பிக்க குன்றுகளாய் கட்டமைக்கப்பட்டிருக்கும் குன்றிக்குள் கயிற்றின் வழியே அனுப்பப்படுகிறான்.அங்கே கணவனையும் பெற்ற பிள்ளைகளையும் மனற்புயலுக்கு கொடுத்துவிட்ட இளம் விதவை பெண்ணான ‘நிக்கி’ ஒற்றை ஆளாக தனிமையில் வசித்து  வருவது கண்டு அதிர்ச்சியுறும்  அவன் இனி அவளோடுதான் நாட்களை கழிக்க வேண்டும் என்பதை எண்ணி சலிப்புறும் நிலையில் தனக்கொரு துணை வந்துவிட்ட உற்சாகத்தில் முன்பைவிட ஈடுபாட்டுடன் அவளின் அன்றாட பணிகளை குன்றுகளுக்குல்லேயே செய்யத் துவங்குகிறாள் நிக்கி.

கிட்டத்தட்ட தாம் சிறைபடுத்தப்பட்டுள்ளோம் என்பதை தாமாக உணரும் இவன் ஏன்  தன்னை சிறை வைத்திருக்கிறீர்கள் என்ற கேள்வியில் துவங்கி தன்னைப்போல் எத்தனைபேர் இங்கே சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அவளிடம் கேட்டு தெரிந்து  கொள்வதோடு அந்த   கிராமத்தை நினைத்து அச்சமுறும் அதே வேளையில் கிராமவாசிகளின் செயல்களை நினைத்து வருத்தப்படவும் செய்கிறான்.

துவக்கத்தில் விதவையாக பார்த்த நிக்கிக்கும் அவனுக்குமான இடைவெளி விவாதங்களினால் நெருக்கமாகி உடலால் சங்கமிக்கும் நிலை வரை கடந்து ஆஸ்பரின் மாத்திரையால் அவளை மயக்கமுற செய்து கயிற்றால் கட்டிபோட்டுவிட்டு தப்பித்து செல்லும்போது எதிர்பாராவிதமாக புதைகுழியில் அகப்பட்டு  மீட்கப்படும் அவன் எந்தவித தண்டனையுமில்லாமல் மீண்டும் கிராம நிர்வாகத்தால் அதே குன்றிர்க்குள் அனுப்பப்டுகிறான். எவ்வித கோவத்தையும் வெளிக்காட்டாமல் அப்போதும் அவனிடம் முன்பைப்போல் பழகும் அவள் அவனை தன் துனையாக்கியதில் வெற்றி  கொண்ட களிப்பில் திளைத்திருக்க  இவனோ சமயம் பார்த்து மீண்டும் தப்பிக்க முயற்சி செய்து வருகிறான். அப்படியொரு  முயற்சியின்போது தான் மணற்பரப்பில் தண்ணீர் சேகரிக்கும் முறையை கண்டுபிடிக்கிறான்.

தன்னுடைய இந்த கண்டுபிடிப்பு மணல்  கிராமத்தின் தண்ணீர் பஞ்சத்தை போக்கும் என்று நினைத்து கொண்டிருக்கையில் இவனால் கர்ப்பமான அவள் பிரசவத்திற்காக ஆழ்துளையின் வழியே கயிற்றின் உதவியோடு மேல் நோக்கி சென்று கொண்டிருக்க……  இவனோ  தனிமையின் தவிப்பிலும் அவளை பிரிந்த ஏக்கத்திலும் அவளையே பார்த்துகொண்டிருக்க இருவரின் ஆசையும் எதிர்புறமாக நடந்தேறி கனத்த பாரத்தையும் மௌனத்தையும் நமக்குள்  விட்டு சென்று நிறைவடைகிறது நாவல்.

தனது நிரந்தர வசிப்பிடத்தை விட்டு பூச்சிகள் பற்றிய ஆய்வுக்காக புதியதொரு மனற்பகுதிக்கு செல்லும்  ‘நிகில் ஜேம்பி’  எதிர்பாரா விதமாக குழப்பமான சூழலுக்குள் தள்ளப்படுகிறான். அங்கே அவனின் இருப்பு கேள்விக்குள்ளாகி அவனது சுதந்திரம் பறிக்கப்பட்டு  ஒரு குறிப்பிட்ட சூழலுக்குள் அவன் விருப்பமில்லாமல் வாழ நிற்பந்திக்கப்படுகிறான். இருப்பின் மீதான வெறுப்பு அவநம்பிக்கை தோல்வி மனப்பான்மை என எல்லாம் சேர்ந்து அவனை சூழ்நிலை கைதியாக்கிவிடுகிறது. இதுவே இருத்தலியல் கோட்பாடு (Existentialism) எனப்படுவதால்  இது ஒரு பின்நவீனத்துவ நாவலாக அடையாளப்படுத்தப்படுகிறது.

அவர்களின் அன்றாட வாழ்விலும் இரவுநேர மனலப்புரப்படுத்தும் பணிகளின் போதும் உரையாடல்களின் போதும் தன்னைமறந்து உடல் சார்ந்த வேட்கையில் கிளைத்திருக்கும் போதும் கடற்கரை மணலால் சூழப்பட்ட குன்றுகளுக்கான வாழ்க்கை முறை தான் அவர்களின் அன்றாட பனி என்பதால் உஷ்ணத்தின் தாக்கம் உடல் வியர்வையை உற்பத்தி செய்து அவர்களை தினமும் குளிப்பாட்டுவதும் இரவு நேரங்களின் போது நிர்வாணமாக உறங்கும் அவர்களின் பழக்கம் மணலோடு தொடர்பு கொண்டிருப்பதால் நாவலெங்கும் தவிர்க்க இயலாதவாறு வியர்வையும் மணலும் பரவிக்கிடக்கிறது.

1962ல் வெளியான இந்நாவல் ‘ஹிரோஷி தோரிகாஹா’ எனும் ஜப்பானிய திரைப்பட இயக்குனரால்  படமாக எடுக்கப்பட்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான  விருதை பெற்றுள்ளது.20 மொழிகளுக்கும் மேல் மொழிபெயர்க்கப்பட்டுள்ள  இந்நாவல்  பென்சில்வேனிய பல்கலைகழகத்தின்  ஜப்பானிய மொழி ஆராய்ச்சித் துறைக்கான பேராசிரியர் ‘ஈடேல் சாண்டர்ஸ்’ சால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அமரிக்காவில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. முதல் மொழிபெயர்ப்பு ன்பது தெரியாதவாறு மிகைபடுத்தப்படாத  வார்த்தைகள்  கொண்டு கதையின் சூழலை விஞ்சிடாதவாறு நர்த்தகி திரைப்பட இயக்குனர் ஜி.விஜயபத்மா அவர்களால் இந்நாவல் தமிழில் மொழியாக்கம் பெற்றிருக்கிறது.

 

Related Posts