அரசியல்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . ! – 1

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குறித்து “ஒரு உள் பார்வை” என ஒரு ஆய்வு நூல் வெளி வந்துள்ளது. The RSS: A View to the Inside எனும் இந்நூலை வாஷிங்டனில் உள்ள ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசியராக உள்ள வால்டர் கே.ஆன்டர்சனும் ஸ்ரீதர் டி.டாம்லே என்பவரும் இணைந்து எழுதியுள்ளனர்.

நான் இந்த நூலை இதுவரையும் படிக்கவில்லை. ஆனால் ஆன்டர்சன் 1971ம் ஆண்டு EPW இதழில் நான்கு வாரங்கள் ஆர்.எஸ்.எஸ் பற்றி தொடராக எழுதிய நான்கு கட்டுரைகளைப் பல ஆண்டுகளுக்கு முன் வாசித்துள்ளேன். அது pdf வடிவில் EPW Archives ல் இருந்து நான் தரவிறக்கம் செய்தது. இப்போது அது எங்கோ உள்ளது. இன்று நான் அதை மீண்டும் தரவிறக்கம் செய்ய முயன்ற போது கிடைக்கவில்லை. ஒரு வேளை நீக்கிவிட்டார்களோ தெரியவில்லை.

இருக்கட்டும். நான் இப்போது எழுதுவது நூலாசிரியர்களில் ஒருவரான வால்டர் ஆன்டர்சனின் நேர்காணல் ஒன்று சில நாட்களுக்கு முன் Indian Express நாளிதழில் (டெல்லி) வெளிவந்துள்ளது (A battle between Hindutva and Hinduism is coming, IE, Aug 11, 2018). நேர்காணலைச் செய்தவர் இன்னொரு முக்கிய ஆய்வாளரும் சோல் கோல்ட்மான் பேராசிரியருமான அசுடோஷ் வார்ஷ்ணே.. நேர்காணல் என்பதைக் காட்டிலும் இதை ஒரு உரையாடல் எனலாம்.

1971 லேயே ஆன்டர்சன் EPW போன்ற இதழில் ஆர்.எஸ்.எஸ் குறித்து அத்தனை விரிவாக எழுதினார் என்றால் கிட்டத் தட்ட 50 ஆண்டு காலமாக அவர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைக் கூர்ந்து கவனித்து வந்துள்ளார் என்பது பொருள். கோல்வால்கரிலிருந்து இன்றைய மோகன் பகவத் வரை எல்லா சர்சங்சலாக் களையும், சுதர்ஷன் ஒருவரைத் தவிர, அவர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

கோல்வால்க்கரிடம் இவரை அறிமுகப்படுத்தியது ஆர்.எஸ்.எஸ்சின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் ரானடே. ஒரு ஆய்வு மாணவராக இந்தியா வந்த ஆன்டர்சனுக்கு அவர் மூலமாகத்தான் முதன் முதலில் ஆர்.எஸ்.எஸ்சுடன் தொடர்பு ஏற்படுகிறது. அந்தத் தொடர்பு மிகவும் நெருக்கமாகி கோல்வால்க்கரை (குருஜி) சந்திக்க விருப்பம் உண்டா என ரானடே இவரைக் கேட்க, இவரும் சரி என்றவுடன் இருவரும் ரயிலில் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்து நாசிக்கிற்குச் செல்கின்றுனர். அங்கு சித்பவன் பார்ப்பனர்கள் வசிக்கும் ஒரு பகுதியில் ஒரு ஆர்.எஸ்.எஸ் ஊழியரின் வீட்டில் ஆண்டர்சன் தங்க வைக்கப்படுகிறார். பின் குருஜியின் ஒப்புதல் கிடைத்தவுடன் சிலவாரங்கள் தினமும் ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்று அவரைச் சந்தித்துப் பேசுகிறார்.

ஒன்று தெளிவாகத் தெரிகிறது. ரானடே, குருஜி இருவருக்குமே ஆன்டர்சன் மீது உறுதியான நம்பிக்கை இருந்திருக்கிறது என்பதுதான் அது. இல்லாவிட்டால் ஒரு வெள்ளைக்கார கிறிஸ்தவரை இப்படித் தினம் ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகம் சென்று குருஜியைச் சந்தித்து இவ்வளவு விரிவாகப் பேச அனுமதித்திருப்பார்களா?

ஆன்டர்சனின் இந்த நேர்காணலை வாசிக்கும்போது ஆன்டர்சன் மீது அவர்கள் நம்பிக்கை வைத்ததில் எல்லா நியாயங்களும் இருப்பது விளங்குகிறது. இந்த நேர்காணலிலிருந்து இந்த நூல் உண்மையிலேயே ஒரு “உள்” பார்வையாக, அதாவது ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உள்ளே இருப்பவர்களின் பார்வைக்குக் குந்தகமில்லாமல் எழுதப்பட்டுள்ளதை உணர்ந்து கொள்ள முடிகிறது. இந்த நூலுக்கு ஒரு அருமையான விமர்சனத்தை எழுதியுள்ள விகாஸ் பதக் கூறுவது போல (Blurred Vision, The Hindu, Oct 07, 2018) ஒரு பிளவுவாத வன்முறை அரசியலுக்கு வித்திட்டுள்ளதாக அறியப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீது வைக்கப்பட்டுள்ள எந்த விமர்சனங்களையும் மாற்றுக் கருத்துக்களையும் கண்டு கொள்ளாமல்தான் இந்த நேர்காணலிலும் ஆண்டர்சனின் பதில்கள் அமைகின்றன.

சரி. அது குறித்துப் பேசுமுன் குருஜியிடம் ஆன்டர்சனை ஆற்றுப்படுத்திய ஏக்நாத் ரானடே யார் எனப் பார்க்கலாம். மலேகான் முதலான வெடிகுண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டுச் சிறையில் உள்ள சுவாமி அசீமானந்தாவின் நேர்காணல் மொழியாக்கத்தில் இவர் குறித்து நான் குறிப்பிட்டிருப்பேன். ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டு, அதன் தலைவர்களெல்லாம் கைதாகி இருந்த நேரத்தில் அந்த இயக்கத்தை வழி நடத்தியவர் அவர். அதனால் இவருக்கு ‘தலைமறைவு சர்சங்சலக்’ என்றொரு பெயரும் உண்டு. இரண்டாண்டு காலம் கன்னியாகுமரியில் தங்கி விவேகாநந்தர் பாறையை அமைத்தவரும் இவர்தான். அவை மட்டுமல்ல பின்னாளில் ஒரு கலவர பூமியாக ஆக்கப்பட்டதும், இன்றளவும் ஆர்.எஸ்.எஸ் முதலான அமைப்புகள் வலுவாக உள்ளதாகவும் இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இதற்கெல்லாம் கால்கோள் இட்டுச் சென்றவரும் இவரே.

இந்நூலில் பல பிரச்சினைகள் இருந்தபோதும் சுமார் 50 ஆண்டு காலம் இந்த இயக்கத்தை ஆய்வு செய்தவர் என்கிற முறையில் ஆன்டர்சன் இந்த நேர்காணலில் முன்வைக்கும் கருத்துக்களிலிருந்து நாம் ஆர்.எஸ்.எஸ் குறித்த சில அடிப்படையான கூறுகளைப் புரிந்து கொள்ள இயலும். அதன் அமைப்பு வடிவம், தலித்கள், சாதி அமைப்பு, இட ஒதுக்கீடு, முஸ்லிம்கள் தொடர்பான அதன் அணுகல்முறைகள் ஆகியவற்றை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

தொடரும்

– அ.மார்க்ஸ்.

Related Posts