அரசியல்

பிரம்மாண்ட சிலைகளின் அரசியலும் பொது உளவியலும்!

 

இதோ நாடு முழுவதும் மீண்டும் விவாதமாகி இருக்கிறது போலி !? சாமியார் விவகாரம். இம்முறை சர்ச்சையில் சிக்கி இருக்கும் கார்ப்பரேட் சாமியார் தமிழகத்தில் கோவையில் ஆசிரமம் நடத்தும் ஜக்கி வாசுதேவ்.

யார் இந்த ஜக்கி..?

ஜக்தீஷ் இதுதான் ஜக்கியின் இயற்ப்பெயர் 1957 -ல் மைசூரில் பிறந்தவர், தாய் மொழி தெலுங்கு.

இதை தன்னுடைய மூன்றாவது பிறவி என்று சொல்லிக்கொள்ளும் அவர்,தன் முதல் பிறவியில் பில்வாஸ் என்னும் தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்தேன் என்றும்,

இரண்டாவது பிறவியில் சத்குரு ஸ்ரீப்ரமா என்ற பெயரில் தேனி அருகில் பிறந்து ஊட்டியில் வாழ்ந்து வெள்ளியங்கிரி மலையில் உயிர் விட்டதாகவும் சொல்லிக்கொள்கிறார்.

தம் மூன்று பிறவியின் நோக்கம் ஒன்றே, அது தியானலிங்கம் கோவில் கட்டுவதே என்றும், அது முடிந்தவுடன் உயிர் துறப்பதாகவும் உறுதி கொடுத்திருந்தார். வேடிக்கை என்னவென்றால் அப்பணி முடிந்து 15 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது.

ஜக்தீஷ் கோவையில் தன் சேவையை துவங்கும் முன், மைசூரில் ரிஷி பிரபாகர் என்ற யோகா குருவிடம், யோகா ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

அங்கு அவர் விஜி என்ற பெண்ணை சந்திக்க நேர்ந்தது, அவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர், அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கோவையில் ஆசிரம் ஆரம்பித்து சில ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு நாள் விஜி தனது “அணாகத்தா” சக்ராவில் இருந்து தனது உயிரை விட்டதாக ஜகதீஷ் (எ) ஜக்கிவாசுதேவ் கூறுகிறார். ஆனால், தனது மகளை ஜக்கி வாசுதேவ் கொன்று விட்டதாகவும், ஆசிரமத்தில் வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் விஜியின் தந்தை காங்கன்னா போலீஸிடம் புகாரும் கொடுத்துள்ளார்.

இது மட்டுமல்லாது கோவை மேம்பாலத்தின் கீழ் உள்ள குதிரை வண்டி ஸ்டாண்ட் அருகே கஞ்சா விற்றது உட்பட மேலும் சில வழக்குகள் ஜக்தீஷ் எனும் ஜக்கி மீது இருப்பதாக கோவையை சார்ந்த சமூக ஆர்வலர்கள் சொல்கிறார்கள்.

“ஆசையே அனைத்து துன்பத்திற்கும் காரணி” எனும் மக்கள் மனதில் ஆழப்பதிந்த புத்தரின் வாக்குகளை அப்படியே
நேர் எதிராக்கி “அத்தனைக்கும் ஆசைப்படு” எனும் தலைப்பில் பிரத்யேகமான போட்டோ ஷூட்டுகள் மூலம் பொது வெளியில் ஜகதீஷை பிரபலப்படுத்தி… ஜகதீஷை  ஜக்கிவாசுதேவாக மாற்றி சத்குருவாக பரிணாமம் அடைய செய்தது
ஆனந்த விகடன். இதுதான் ஒரு கஞ்சா வியாபாரி சத்குருவாகிய வரலாற்று சுருக்கம்.

சிலையின் அரசியலும் உளவியலும்:

முதலில் உருவ வழிபாடு இல்லை என சொல்லி வந்த ஜக்கி பின்னர் தியான லிங்கம் நிறுவும் போது இது வழிபாட்டுக்கான உருவமல்ல இது சக்தியை தேக்கி வைக்கும் வடிவம் ஆகவே இந்த வடிவத்தில் பிரதிஷ்டை செய்கிறோம் என சொல்லி வந்தார்.

பின்னர் ஈஷா மையத்தை சுற்றி ஏராளமான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வந்த நிலையில் குறிப்பாக சமீப நாட்களில் தங்கள் மகள்களை மூளை சலவை செய்தும் மிரட்டியும் உள்ளே வைத்துள்ளனர் என கோவை வடவள்ளியை சேர்ந்த பெற்றோர் தொடுத்த வழக்கு, அனுமதியின்றி கட்டடங்கள் கட்டப்பட்டதாக சூழலியல் ஆர்வலர்கள் எழுப்பிய குரல் அதானால் எழுந்த புகார்கள், பழங்குடி மக்களின் நிலங்களை அபகரித்ததாக எழுந்த புகார்கள், அதையடுத்து முற்போக்கு ஜனநாயக சக்திகள் மக்களை திரட்டி தடைகளை உடைத்து குடியேற்றப் போராட்டம் செய்தது என கோவையில் ஈஷா மையத்தின் செல்வாக்கு சரிந்து வந்த காலச்சூழலில் தான் இந்த ஆதியோகி சிலை திறப்பு.

112 அடிக்கு பிரம்மாண்டமான சிலை ஈஷா மையத்தில் பல கட்டிடங்கள் மலை வழித்தட பாதுகாப்பு குழுவின் அனுமதி எல்லாம் இல்லாமலே கட்டப்பட்டது போலத்தான் (அவர்களே ஒத்துக் கொண்ட வாக்குமுலத்தின் இணைப்பு https://m.facebook.com/story.php?story_fbid=1476590282353130&id=100000065162765&__mref=message_bubble) இந்த சிலையும் விவசாய நிலங்களை அழித்து கட்டப்பட்டுள்ளது.

112 அடி பிரம்மாண்டம் ஆதி முதலே மனிதன் பார்த்து வியந்த பார்த்து பயந்த விசயங்களைத்தானே கடவுளாக கொண்டாடினான். அந்த உளவியலின் நீட்சியே இதுவும் பழைய பாணி பயங்கர ஆயுதங்கள் தாங்காத காலத்தோடு மாடர்னாக மாறிய ஆதியோகிசிலை.

பொதுவாகவே அடிக்கடி காணும் விசயங்கள் நம் மனதில் ஆழப்பதியும் அதிலும் அதை பெரிய பிம்பங்களாக பதித்தால் இன்னும் ஆழமாக பிரமிப்பாக பதியும், அதனால்தான் பலருக்கு சின்னத்திரை நட்சத்திரங்கள் மேல் ஒரு ஈர்ப்பு அதைவிட  பெரிய திரை நட்சத்திரங்கள் மீது அதிகமான பிரமிப்பு. இந்த உளவியலை பயன்படுத்தியே திலகர் துவங்கி வைத்த விநாயகர் விசர்ஜன ஊர்வலங்களுக்காக வைக்கப்படும் சிலைகள் மக்கள் மனதில் ஈர்ப்பையும் பிரமிப்பையும் ஏற்படுத்த வீதிக்கு வீதி பெரிய பெரிய சிலைகள் வைக்கப்படுவதன் பின்னணி அரசியல்.

சரிந்து வரும் தன் ஈஷா மையத்தின் பெயரை அதிகாரத்தை மீண்டும் தூக்கி நிறுத்த இந்த சிலை அதை திறந்து வைக்க மோடியின் வருகை. அரசுகள் தங்களை தக்க வைத்துக்கொள்ள மதம் ஒரு கேடயமாக பயன்படுகிறது, மடங்கள் தங்கள் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள அரசுகளை பயன்படுத்திக் கொள்கின்றன. இதற்கான ஒரு வரலாற்று உதாரணம்  எவ்வளவோ போர்களில் எதிரி நாட்டின் பல வீரர்களை கொன்று குவித்த அசோகருக்கு கலிங்கத்து போரில் மட்டும் மக்கள் மடிவது கண்டு மனம் வெதும்பி மனம் மாறினார் என்றால் நம்பர மாதிரியாங்க இருக்கு. உண்மையில் ஏன் மதம் மாறினார் பல நாடுகளை பிடித்துக்கொண்டு வெற்றியோடு வந்து கொண்டிருந்த அசோகரால் நிறுவனமயமாகாத பழங்குடி மக்களின் போர் முறையை சமாளிக்க இயலவில்லை பின்னர் அம்மக்களை வீழ்த்த அசோகர் கண்ட ஆயுதமே புத்த மதம்.

ஒரு பக்கம் ஈஷாவின் செல்வாக்கு சரிந்து வருவதை போலவே மறுபக்கம் தொடர்ந்து மோடியின் தவறான நிர்வாகத்தால் பா.ஜ.க வின் செல்வாக்கும் சரிந்து வருகிறது. அதை சரி செய்ய உடனடியாக மதம் எனும் போர்வைக்குள் ஒளிந்து மக்களை பிரித்தே ஆக வேண்டிய கட்டாயம் மோடிக்கு… ஆகவே இருவரும் பரஸ்பரம் தங்கள் செல்வாக்கை தூக்கி நிறுத்த இந்த சிலை அவர்களுக்கு அருள் பாலித்தது.

நாடு முழுவதும் சிலைகளின் இந்த பிரம்மாண்டத்தை கொண்டே ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம் என எண்ணுகிறது பா.ஜ.க. ஆம் உரிய அனுமதியில்லாமல் கட்டப்பட்ட இந்த சிலையை திறக்க கோவை வருகிறார் நாட்டின் பிரதமர் மோடி.

இன்னொரு பக்கம் மஹராஸ்ட்டிராவில் வீர சிவாஜி சிலையை மூவாயிரத்து அறநூறு (3,600,000) கோடி செலவில் அரபிக்கடலில் மண்ணை கொட்டி நிரப்பி கட்ட உள்ளது. அதற்க்கு மீனவ மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் ஆயினும் அந்த எதிர்ப்புகளை எல்லாம் பொருட்படுத்த போவதில்லை என்கிறார் மஹராஸ்ட்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபாட்னவிஸ். சாதாரன உழைக்கும் மக்களை வங்கி வாசலில் அவனது மாதச்சம்பளத்தை பெற்றுக்கொள்ள வரிசையில் நிறுத்தி வைத்துத்தான் அவனது வரிப்பணத்தில் இருந்து 3600 கோடி பணத்தை சுரண்டி சிவாஜிக்கு சிலை வைக்கிறது இந்த அரசு.  பணம் பற்றிய விவாதங்கள் எழுந்த போது மஹராஸ்ட்டிர நிதியமைச்சர் உதிர்த்த முத்துகள் என்ன தெரியுமா..? சிலை நிறுவ ஆகும் செலவை ஒரு நிமிடத்தில் சேர்த்திடுவோம் பணம் ஒரு பிரச்சனையே அல்ல என்பதுதான். இதை அவர் சொல்லும் போது மஹராஸ்ட்டிராவின் விவசாயிகள் அரசு  அவர்களுக்கு வாக்குறுதியாக (வாக்குறுதியாக மட்டும்)  1000கோடி வறட்ச்சி நிவாரணத்திற்க்கு வேண்டி காத்திருந்து ஓராண்டு கடந்திருந்தது.

அதே போலத்தான் தேசப்பற்றை பறைசாற்ற என சொல்லி குஜராத்தில் நிறுவ உள்ள வல்லபாய் பட்டேலின் சிலையும் கிட்டதட்ட 3000கோடி செலவில் மிக பிரம்மாண்டமாக நிறுவ இருக்கிறார்கள். காவிகள் சீனாவை எதிரியாக சித்தரித்து பதிவுகள் போட்டுக்கொண்டு இருக்கும் போதே வல்லபாய் பட்டேலின் சிலை தயாரிப்புக்கான ஆர்டரை சீனாவிடம் கொடுத்துள்ளது அவர்களின் சுதேசி மேக் இன் இந்தியா அரசு.

ஈஷா மையம் திறப்பு விழாவில் கூடிய கூட்டம் 3இலட்சம் இருக்குமாம். இதில் நாம் எதை புரிந்துகொள்வது எது குறித்து அச்சம் கொள்வது, ஒரு முழு நேர ஆர்.எஸ்.எஸ் ஊழியர் கேரளாவில் மனம் மாறி வெளியேறினார் பின்னர் அவர் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில் இப்படி சொல்கிறார் “நாங்கள் பல்வேறு பேனர்களில் மாணவர்களிடம் செல்வோம் உதாரணமாக வேதிக் மேக்ஸ் எனும் எளிய முறையில் கணித கற்பித்தல் யோகா வகுப்புகள் தற்காப்பு வகுப்புகள் என அப்படி சென்று ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு இலவச வகுப்பை எடுப்போம் பின்னர் அதில் கல்ந்து கொண்ட மாணவர்களின் பெற்றோர்களின் மொபைல் எண்ணை பெற்றுக்கொண்டு விஜதசமி, சிவராத்திரி போன்ற நிகழ்வுகளுக்கு அழைப்போம் அப்படி கூடும் கூட்டத்தில் மதத்தில் பொதிந்த மத வெறியை மெதுவாக ஊட்டுவோம்” என்றார்.

இனி அது இந்த சிலைகளின் வடிவில் இன்னும் எளிதாகிவிடும் ஆதி யோகி தமிழ்நாட்டுக்கு, வீர சிவாஜி மஹராஸ்ட்டிராவுக்கு, வல்லபாய் பட்டேல் குஜராத்துக்கு….

மார்க்ஸின் வாழ்க்கை வரலாறு படிக்கும் போது ஜெர்மானியில் யூதர்களுக்கு சரியான மரியாதை இல்லை. மக்கள் அவர்களை இழிவாக கருதுகிறார்கள் என்பதால் மார்க்ஸின் தந்தை கிறிஸ்த்துவராக மாறியதாக வருகிறது பின்னர் பல ஆண்டுகள் கழித்து ஜெர்மானியில் ஹிட்லர் யூதர்களை கொன்று குவித்தான். அப்படியானல் அதற்கான வேர் பல ஆண்டுகளுக்கு முன்னரே அதாவது மார்க்ஸின் அப்பாவின் காலத்துக்கு முன்னரே விதைக்கப்பட்டுள்ளதை உணர முடியும்.

இங்கேயும் கூட அரசியல் அயோக்கியத்தனங்கள், பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அயோக்கியர்களால்மதம் மற்றும் தேசப்பற்றை கொண்டுதானே மறைக்கப்படுகிறது. அவர்கள் திட்டமிட்டு உருவாக்கி வைத்திருக்கும் பொதுபுத்தி, ஜனநாயக சக்திகளால் கேள்விக்குள்ளாக்கப்படும் போது தேசபக்தி எனும் ஆயுதமே ஜனநாயக சக்திகளுக்கெதிரான ஆயுதங்கள் அவர்களுக்கு. அதன் உதாரணமே பெங்களூரு திரையரங்கில் தேசிய கீதத்துக்கு எழுந்து நிறக்கவில்லை என கால்கள் ஊனமுற்ற நபரை காவிகள் தாக்கிய சம்பவம்.

இனி வரும் காலங்களில் களத்திலும் கருத்தியல் பரப்புரையிலும் இவர்களை எதிர்கொள்ளத் தவறினோமானால்… வரும் சந்ததியினருக்கு நாம் மிக மோசமான ஒரு தேசத்தையே விட்டுச்செல்ல நேரிடும்.

– ஃபெரோஸ் பாபு.

Related Posts