மெக்சிகோவின் ஒரு மாநில கவர்னர் போதை பொருள் மாஃபியா கும்பலிடம் இருந்து பணம் வாங்கும் வீடியோ அந்நாட்டின் ஒரு முக்கியமான ஊடகத்திடம் கிடைக்கிறது. அந்த ஊடகம் அந்த வீடியோவை ஒளிபரப்பு செய்து கவர்னரின் ஊழல், போதை மருந்து மாஃபியாக்களிடம் அவருக்கு இருக்கும் தொடர்பு என்று கவர்னரை திக்குமுக்காட செய்கிறார்கள்.

இறுதியாக கவர்னர் பதவி விலக வேண்டும் என்று ஊடகம் வைத்த கோரிக்கை பொது மக்களிடம் வலுக்கிறது.

மெக்சிக்கோ நாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முக்கியமான அரசியல் படம். ரொம்ப சுவாரசியமாக எதார்த்ததோடு நகரும் கதை.குறிப்பாக நாம் பார்க்கும் போதே இந்தியாவின் தற்போதைய நிலையும் அதன் பின் சுழலும் அரசியல் சித்து வேலைகளும் நம் கண் முன்னே வந்து வந்து போகும்.

பிரச்சனையின் தீவிரத்தன்மை புரிந்து கொண்ட கவர்னர் ஒரு கட்டத்தில் வீடியோவை வெளியிட்ட ஊடகத்திடமே பேரம் பேச முடிவு செய்கிறார். முதலில் காசுக்கு சோடை போக மாட்டோம், உள்ளதை உள்ளபடியே சொல்லுவோம், ஊடக அறம் என்று எல்லாம் சிலிர்க்கும் ஊடக முதலாளி பின்பு கவர்னரின் லாபியிங்க்கு சோடை போய் கவர்னரின் ஆசை கனவான ஜனாதிபதி வேட்பாளராக உருவாக எல்லாம் உதவியும் செய்வதாக ஒப்பந்தம் போடுகிறார்கள்.

ஒப்பந்தத்தை ஒட்டி ஊடக முதலாளி ஒரு எக்ஸ்பேர்ட் டீமை (Expert Team) அனுப்புகின்றார்.அந்த டீம்மின் பிரபலமான ஆங்கரும் (Anchor) மாஸ்டர் மைண்ட் கொண்ட நிகழ்ச்சி வடிவமைப்பாளரும் கவர்னரின் எல்லா நகர்வையும் சிறிது சிறிதாக வடிவமைக்க தொடங்குகின்றார்கள்.

கவர்னரின் போதை மருந்து ஊழல் மாஃபியாக்களிடம் இருக்கும் தொடர்பு போன்றவற்றை மறைக்க மக்களிடம் வேறு ஒன்றைப் பற்றி விவாதம் உருவாக்க பொய்பிரச்சாரம் செய்ய தொடங்குகின்றார்கள்.

பொய் பிரச்சாரத்தின் உச்சமாக ஒரு தம்பதியரின் இரட்டைக் குழந்தைகளை இவர்களே ஆள்வைத்து கடத்தி அதனை நாடு முழுவதும் தலைப்பு செய்தியாக்குகின்றார்கள்.

இதனை கண்டுபிடித்த எதிர்க்கட்சித் தலைவரை தங்களுடைய ஊடக நேர் காணலுக்கு வர வைத்து அவர் மேல் பாலியல் புகார் அடுக்கி, அவரை சுட்டுக் கொன்று அதனை தற்கொலை என்று மூடிமறைகிறார்கள். இறுதியாக கவர்னர் செல்வாக்கை உயர்த்த முதல்வன் படதில் ரகுவரன் சொல்லுவது போல் ” அவர்களே வைப்பாங்களாம் அவர்களே எடுப்பாங்களாம்” என்ற வசனத்துக்கிணங்க இவர்களே கடத்தி வைத்து இருந்த இரட்டை குழந்தைகளை கவர்னரின் விசேஷ முயற்சியால் (Surgical Strike) மீட்டு வந்ததுபோல் மக்களை நம்பவைக்கிறார்கள். இதற்கிடையில் கடத்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்க்கிடையில் சண்டையை உருவாக்கி அவர்களையும் தங்கள் கைவசம் வைத்துக்கொள்கிறார்கள். இப்படி ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செய்து இறுதியாக கவர்னரை ஜனாதிபதி வேட்பாளராக கொண்டு சென்றார்களா?? இல்லையா?? என்பது தான் படத்தின் கடைசி செக்!!

உலகம் முழுவதும் ஜனநாயகத்தின் ஆணி வேர், அடித்தளம் என்று எல்லாம் போற்றப்படும் ஊடகம் எப்படி எல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்று வெளிப்படையாக விமர்ச்சிக்கும் படம் தான் ‘THE PERFECT DICTATORSHIP’.

Screening : Netflix
Duration : 2h 23m
Language : Spanish, English.
Subtitles : English Available

(டிஸ்கால் : படம் முடியும் போது உங்களுக்கு ரஜினியோ, பிரசாந்த் கிஷோர் போன்றவர்கள் நினைவுக்கு வந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல

– அனஸ் சுல்தானா.

Related Posts