அரசியல் நிகழ்வுகள்

தங்கக்கடத்தல் விவகாரத்தில் அரசியல் சூழ்ச்சிகளை இடது முன்னணி முறியடிக்கும்!

இன்று கேரளத்தில் அனைவராலும் தீவிரமாக விவாதிக்கப்படும் சர்ச்சைக்குரிய பிரச்சனையான #தங்கக்கடத்தல் வழக்கு நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து, பாதுகாப்பையே சந்தேகத்துக்கு உட்படுத்தும் பிரச்சனை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இதையொட்டி கேரள அரசியல்க்களத்தில் நிகழ்த்தப் படும் விவாதங்கள் என்பது பல்வேறு அரசியல் உள்நோக்கங்களை குறிக்கோளாகக் கொண்டது என்பது யாவருக்கும் எளிதில் புரியும் ஒன்றாகும்.

கேரளத்தை ஆளும் இடது ஜனநாயக முன்னணியையும் அதனைத் தலைமை தாங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்கான முயற்சிகளை, கேரளத்தின் எதிர்கட்சிகளும், வலதுசாரி குணாம்சம் கொண்ட ஊடாகங்களும், சில ஊடகவியலாளர்களும் ஓய்வின்றி செய்து வருவதும் தெளிவாகப் புலனாகிறது.

கடந்த ஒரு வாரகாலமாக ஏராளமான திருப்பங்களைச் சந்தித்து நேற்று பிரதான குற்றவாளி என்று சந்தேகப்படும் பெண்மணியை தேசிய புலனாய்வு நிறுவனம் பெங்களூருவில் வைத்து கைது செய்ததில் முடிந்திருக்கிறது.
ஆனால் வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் கேரள அரசையும் கம்யூனிஸ்டுகளையும் குற்றச்சாட்டுக்கு உட்படுத்த எதிர்கட்சிகள் வகுத்த வியூகங்கள் ஒவ்வொன்றும் உண்மைக்கு புறம்பானது என்று நிரூபணமாகிக் கொண்டே வருகிறது என்பதை வழக்கின் ஆரம்பப் புள்ளியில் இருந்து ஆய்வு செய்தோமென்றால் ஐயம் ஏதுமின்றி விளங்கும்.

கடந்த 5 ம் தேதி கேரள தலைநகரான திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஐக்கிய அரபு நாடுகளின் சார்பில், இந்தியாவில் டெல்லியில் உள்ள அந்நாட்டின் தூதரகத்திற்கு அரசுமுறை பொட்டலம் ஒன்று வந்தது. அது சுங்க இலாகா அலுவலகர்களின் பரிசோதனைக்கும் ஒப்புதலுக்கும் உட்படுத்தப்பட்டது. வழக்கமாக அரசுமுறைப் பொட்டலங்கள் தீவிர பரிசோதனைகள் எதுவும் செய்யப்படாமல் நமது நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பெறுநர்களுக்கு வழங்கப் படுவதே மரபாக நடைமுறையில் இருந்துள்ளது. இப்போதும் அவ்வாறே செய்ய, அந்தப் பொட்டலத்தை தணிக்கை செய்த அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆனால் வழக்கமாக பதிவு செய்யப்படும் அடிப்படையான தகவல்களை சரிபார்க்கும் போது அந்த பணியை மேற்கொள்ளும் சம்பத்தப்பட்ட அதிகாரி ஒரு முரண்பட்ட விஷயத்தை கவனித்தார். பொட்டலம் பற்றிய விவரத்தில் 30 கிலோகிராம் என்று அதன் எடை குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு நேர் மாறாக பொட்டலம் சுமார் 80 கிலோகிராம் எடையுடன் இருந்தது. உடனே டெல்லியிலுள்ள தனது மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததோடு அந்தப் பொட்டலத்தை திறந்து பரிசோதிக்கும் அனுமதியையும் பெற்றார். உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அன்றாடத் தேவைகளுக்கான பொருட்கள் தான் உள்ளே இருப்பதாக பொட்டலத்தை அனுப்பியவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். பொட்டலத்தை திறந்து பார்க்கும் போது அந்த பொட்டலத்தினுள் வேறொரு தனி பொட்டலமும் இருந்தது. அந்த இன்னொரு பொட்டலத்தில் வேறு சில பொருட்களும் இருந்துள்ளன. அத்துடன் சுமார் 29.240 கிலோகிராம் தங்கமும் இருந்துள்ளது.

இது போன்ற பொட்டலங்கள் வரும்போது வாங்கிச் செல்ல முகவர் ஒருவர் செயல்படுவது வழக்கம். அது போலவே இந்த பொட்டலத்தையும் பெற்றுச் செல்ல சரித் என்பவர் பெறுநரின் அங்கீகாரக் கடிதத்துடன் சுங்க இலாகா அலுவலகத்தை அணுகும் போது அவர் சுங்க இலாகாவால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் சுவப்னா சுரேஷ் என்ற பெண்மணியும் சந்தீப் நாயர் என்பவரும் இதில் தொடர்புடைய குற்றவாளிகள் என்று தெரியவந்தது.
இதுவரையிலும், நடந்தவற்றில், ஒரு தூதரகத்திற்கு வந்த இராஜீய ரீதியான அந்தஸ்து பெற்ற பொட்டலம் என்பதைத் தவிர, மற்ற அனைத்துமே, கடத்தல் விவகாரங்களில் சுங்க இலாகா செய்யும் வழக்கமான நடைமுறைகள் தான்.
ஆனால் இதன் பிறகு நடந்த அரசியல் சித்து விளையாட்டுகள் தான் பலவிதமான விவாதங்களுக்கு வழிவகுத்தன.

என்னென்ன குற்றச்சாட்டுகள், யாருக்கு எதிரானவை, குற்றச்சாட்டு சுமத்துபவர்கள் யார் யார்? என்பவற்றை உன்னிப்பாக கவனித்தால் இந்தப் பிரச்னையை திசைதிருப்பி, அதன் மூலம் இந்த குற்றம் நிக்ழ்த்தப்பட்டதன் உண்மையான நோக்கம் மறைக்கப்பட்டு, ஒரு மாநில அரசியலில் நடக்கும் சாதாரண பிரச்சனையாக மாற்றி பிரச்சனையை சிறிதாக்குவதற்கான முயற்சிகள் நடப்பதை நாம் உணர முடியும்.
இனி சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஒவ்வொரு குற்றச்சாட்டுகளாக பார்க்கலாம்.

முதல் குற்றச்சாட்டு, முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுவப்னா சுரேஷ் கேரள அரசின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றும் லட்சக்கணக்கில் ஊதியம் பெறும் ஒரு முக்கியமான அதிகாரி. பத்தாம் வகுப்பு கூட தேறாத அவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, இந்த பதவியை பெற்றுள்ளார்.

தகவல் தொழில்நுட்பத் துறையின் செயலாளராகவும் முதலமைச்சர் பிணறாயி விஜயனின் நேர்முக உதவியாளராகவும் இருந்த சிவசங்கரனின் சிபாரிசின் பேரில் சுவப்னாவை அந்த வேலையில் நியமனம் செய்ததில் முதல்வரின் முறைதவறிய நடவடிக்கைகள் உள்ளன. இந்த தங்கக் கடத்தலில் முதல்வர் சம்பந்தப் பட்டுள்ளார். விமான நிலையத்தில் சரித் கைது செய்யப்பட்டார் என்று தெரிந்த உடனேயே, முதல்வர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி மூலமாக சுங்க இலாகாவை அழைத்துள்ளார்கள், என்பது போன்ற குற்றச்சாட்டுகள் மாநிலத்தை ஆளும் இடதுமுன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றை குறிவைத்து சரமாரியாக சுமத்தப்பட்டன.

அன்றைய தினம் நடந்த, கொரோனா காலத்தில் வழக்கமாக நடக்கும் ஊடக சந்திப்பின் போது கேரள முதல்வர், இந்த பிரச்சனையில் மாநில அரசுக்கோ முதல்வர் அலுவலகத்துக்கோ தொடர்பு ஏதுமில்லை. முதல்வர் அலுவலகத்தில் இருந்து யாரும் சுங்க இலாகாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள வில்லை. சுவப்னாவின் பணி நியமனம் குறித்து தனக்கு ஏதும் தெரியவில்லை என்றும் முறையாக இந்த பிரச்சனை குறித்து அறிந்தபிறகு மேற்கொண்டு இதுபற்றி தகவல் கூறுவதாக செய்தியாளர்களுக்கு பதிலளித்தார்.

இந்த ஒரு நாளில் ஊடகங்கள் தங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் முதல்வரையும் இடது முன்னணியையும் பொய்ச் செய்திகளைப் பரப்பி வேட்டையாடினார்கள். முதல்வர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் கலந்துகொண்ட விழாக்களில் அவர்களுடன் சுவப்னா கலந்துகொண்டது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு, இடதுமுன்னணி அரசுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது என்று நிருபிக்க முயன்றனர். அனைவரும் ஒரே மாதிரியான பொய்யை கட்டமைத்து பரப்பினார்கள்.

முதல்வரின் நேர்முக உதவியாளர் சிவசங்கரன், சுவப்னாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்றும், ஏறத்தாழ தினமும் சுவப்னாவின் வீட்டிற்குச் சென்று மது அருந்தி கலாட்டா செய்து பிரச்சனைகளை செய்தார், சுவப்னாவுடன் தகாத தொடர்பு கொண்டிருந்தார் என்றும் அக்கம்பக்கம் இருப்பவர்கள் புகார் செய்தனர் என்பது வரையிலான செய்திகளை தொலைக்காட்சிகளில் நிறைத்தனர்.
அடுத்தநாள் மீண்டும் செய்தியாளர் சந்திப்பில், முதல்வர் செய்தியாளர்களின் ஒவ்வோரு கேள்விகளுக்கும் தெளிவாகப் பதிலளித்து, அனைத்துப் பொய்களையும் சுக்கு நூறாக உடைத்தார்.

சுவப்னா சுரேஷுக்கும் கேரள அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே முதல்வர் கொடுத்த முதல் தகவல். கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் துணை நிறுவனமான கேரளா ஸ்டேட் இன்பர்மேஷன் டெக்னாலஜி இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெடில்(KSITIL) ஸ்கில் டெலிவரி பிளாட்பாம் கேரளா(SDPK) என்ற திட்டத்திற்கு ஒரு வருட ஒப்பந்தப் பணியாளருக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு (Reference No. 60/KSITIL/RCT/2019/2972 dated 29/11/2019)வெளியிட்டு, தரவரிசைப் பட்டியல் மூலம் ஆட்களையும் தேர்வு செய்தது. இதில் போலியான வணிகவியல் பட்டச் சான்றிதழைக் கொடுத்து சுவப்னா வேலைக்குச் சேர்ந்துவிட்டார் என்பதே பணி நியமனம் குறித்த குற்றச்சாட்டு. ஆனால் உண்மை என்னவெனில், மேற்குறிப்பிட்ட பணிக்காக அவர் நியமனம் செய்யப்படவில்லை.

உண்மையில் KSITIL நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் திட்டப் பணிகளைச் செய்யும் “விஷன் டெக்” என்ற தனியார் நிறுவனத்தின் ஊழியராகத் தான் சுவப்னா வேலை செய்கிறார். அவருக்கு கேரள அரசு, ஒரு ரூபாய் அளவில் கூட எந்த ஊதியமும் வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த குற்றம், முழுக்க முழுக்க மத்திய அரசு அதிகாரவம்புக்குட்பட்ட விமானநிலையம், மற்றும் சுங்க இலாகா அலுவலகங்களில் நடந்துள்ளது. எனவே மத்திய அரசு முறையான விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை கண்டறியவேண்டும். அதற்கு கேரள அரசின் அனைத்து ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்றும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதோடு, சில தவறான செய்திகள் மற்றும் போலியாக உருவாக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு, இப்படி உண்மைக்கு புறம்பான புகைப்படங்களையும் செய்திகளையும் வெளியிட்டவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டில் தொடர்பு படுத்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியான சிவசங்கரன், தகவல் தொடர்புத் துறை செயலாளர் மற்றும் தனது தனிச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் அறிவித்தார்.
விஷன் டெக் நிறுவனத்தில் வேலை செய்வதற்கு முன்னர் ஐக்கிய அரபு நாடுகளின் தூதரகத்தில் செயலாளர்களில் ஒருவராக சுவப்னா வேலை செய்துள்ளார். அப்போது இந்தியாவில் இருந்து வரும் அரசுமுறை விருந்தினர்களை வரவேற்று தங்குமிடம், உணவு, போக்குவரத்து போன்ற ஏற்பாடுகளை கவனித்துள்ளதாகவும் அதில் கேரள முதல்வர், சபாநாயகர், கேரள எதிர்க்கட்சித்தலைவர், மத்திய அரசுப் பிரதிநிதிகள் என பலருக்கும் தூதரகம் சார்பில் இவ்வாறான பணிகளை நீண்டகாலம் ஒருங்கிணைத்துள்ளதாகவும் சுவப்னாவே நியுஸ் 24 என்னும் செய்தித் தொலைக்காட்சிக்கு தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில் கூறினார். அந்த வகையில் பல நிகழ்ச்சிகளிலும் பல முக்கிய பிரமுகர்களுடனும் தான் பங்கேற்றுள்ளதாகவும் கூறினார்.
ஆனால் இதில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் முதல்வரோ சபாநாயகரோ ஏனைய இடதுமுன்னணித் தலைவர்களோ சுவப்னாவை எந்த நிகழ்ச்சிக்கும் அழைத்ததில்லை. வேறு யாராவது ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், குறிப்பாக ஐக்கிய அரபு நாட்டு தூதரக நிகழ்ச்சியில் தங்களுடன் பங்கேற்பவர்களைப் தாங்கள் எப்படி அறிய முடியும் என்பது தான் இடது முன்னணித் தலைவர்கள் எழுப்பும் கேள்வி.

இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவெனில் எதிர்க்கட்சித்தலைவர் இரமேஷ் சென்னிதல நடத்திய இப்தார் விருந்தில் சுவப்னா விருந்தினராக சென்னிதலாவின் அழைப்பின் பேரில் கலந்து கொண்டார் என்ற சம்பவமும் நடந்துள்ளது. இருந்தபோதிலும் இரமேஷ் சென்னித்தல, முதல்வருடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சுவப்னாவின் புகைப்படங்களை வைத்து, இந்த சம்பவத்தில் முதல்வரையும் மற்ற இடது முன்னணித் தலைவர்களையும் தொடர்புபடுத்தி குற்றம் சாட்டி வருகிறார்.

ஐக்கிய அரபு நாடுகளின் தூதரகப் பணியில் இருக்கும் போது கேரளத்தில் இருந்து பணியாற்றும் இந்தியாவைச் சேர்ந்த பணியாளர் என்ற முறையில் நிறைய தடவை கேரள தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல அலுவலகங்களுக்கும் பலமுறை வந்து சென்றதாகவும் சுவப்னா கூறுகிறார். இன்னொரு நாட்டு தூதரகப் பணியாளராக ஒருவர் ஒரு முதல்வர் அலுவலகத்துக்கோ தலைமைச் செயலகத்திற்கோ அரசுமுறையாக முறையான அனுமதி பெற்று வரும் போது, அவரை எப்படி கேரள அரசு தடுக்க முடியும்?

இதற்கு அடுத்ததாக அவர் பணியாற்றிய இடம் அதைவிட ஆச்சரியம் அளிக்கும் ஒன்றாகும். ஐக்கிய அரபு தூதரகப் பணியில் இருந்த போது சில முறைகேடுகளில் ஈடுபட்டதாக சுவப்னா அந்த வேலையிலிருந்து தூதரக நிர்வாகத்தால் நீக்கப்படுகிறார். ஆனால், அவர் தனது தூதரகப் பணியின் வாயிலாக கிடைத்த சில நட்பு வட்டத்தின் மூலம் மத்திய அரசின் நேரடிக்கட்டுப்பாட்டில் உள்ள அரசு பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான, ஏர் இந்தியா சாட்ஸ் என்ற நிறுவனத்தில் ஒரு பொறுப்பான பதவியில் பணியாளராக நியமனம் பெறுகிறார். அரசியல் செல்வாக்கு மிகுந்த நட்பு வட்டத்தின் உதவி இல்லாமல் சுவப்னாவுக்கு அந்தப் பணி நியமனம் எவ்வாறு கிடைத்திருக்கும் என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வியாக நம் முன்னே நிற்கிறது? ஆனால் இது குறித்து இதுவரை யாரும் கேள்வி எழுப்பவில்லை என்பது தான் இந்த குற்றச்சாட்டுகளின் பின்னால் உள்ள சூழ்ச்சியை வெளிச்சம் போட்டுக் கட்டுகிறது.

ஐக்கிய அரபு நாட்டின் தூதரகப் பணி மற்றும் ஏர் இந்தியா சாட்ஸ் போன்ற பணிகளின் முன்னனுபவச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி விஷன் டெக் என்ற உள்ளூர் தனியார் நிறுவனத்தில் வேலை வாங்குவது அவ்வளவு ஒன்றும் கடினமான விஷயமல்ல என்பது யாருக்கும் எளிதில் விளங்கும்.
இனி அடுத்த குற்றச்சாட்டு, சந்தீப் நாயர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேந்தவர். இந்த குற்றச்சாட்டுக்கு சந்தீபின் தாயாரே பதிலளித்து விட்டார். ஆனால் அதையும் திரித்து செய்தியாக்கி, பிறகு மனோரமா போன்ற தொலைக்காட்சிகள் வருத்தம் தெரிவித்துத் திருத்திக்கொண்டன என்பதோடு மட்டுமல்லாது, சந்தீபுக்கு இருக்கும் சங்க பரிவார் தொடர்பும் அவரது முகநூல் பக்கம் மூலம் நிருபிக்கப்பட்டது.

முன்னாள் பாஜக கேரள மாநிலத் தலைவர் கும்மனம் இராஜசேகரனுடன் கட்டிப்பிடித்து நின்றவாறு எடுத்த புகைப்படம், சில கருத்துப் பதிவுகள் போன்றவை அவரை தீவிர பாஜக சங் பரிவார் ஆதரவாளர் என்ற அளவில் வெளிச்சமிட்டுக் காட்டிக் கொடுத்தன.
அதோடு சரித் சுங்க இலாகாவில் மாட்டிக்கொண்ட செய்தியறிந்தவுடன் தொலைபேசியில் சுங்க இலாகாவைத் தொடர்பு கொண்ட பாஜக தொழிற்சங்கத் தலைவர் ஹரிராஜ், இந்த குற்ற சம்பவத்தில் சங் பரிவாரத்தின் தொடர்பை நிருபிக்கும் அடுத்த ஆதாரமாக நிற்கிறார். இந்த வழக்கு விசாரணையின் பகுதியாக, சுங்க இலகா அவரது வீட்டில் சோதனை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்குடனான, ஹரிராஜின் தொடர்பு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி. முரளிதரனை இந்த வாழக்குடன் தொடர்பு படுத்தும் விதத்தில், அவரை நோக்கி விரலை நீட்டுகிறது. ஹரிராஜின் முகநூல் பக்கம் இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது. ஹரிராஜ் இறுதியாக பகிர்ந்த பதிவு எதுவெனில், “இந்த வழக்கு விசாரணை சரியான முறையில் நடத்தப்பட வேண்டும்” என்று முகநூலில் முரளீதரன் பதிவிட்ட பதிவாகும். அதோடு, தீவிர சங் பரிவார் ஆதரவுப் பதிவுகள் பலவும் ஹரிராஜின் முகநூல் பக்கத்தில் காணக்கிடைக்கின்றன. ஹரிராஜ் அமைச்சர் முரளீதரனின் தீவிர ஆதரவாளர் என்ற தகவலும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

மத்திய அரசுத்துறைகளில் சுவப்னாவுக்கு உள்ள செல்வாக்கு எப்படிப் பட்டது என்று, இப்போது நாம் கற்பனை செய்து கொள்ளலாம்.
ஹரிராஜ் ஏற்றுமதி இறக்குமதி பரிவர்த்தனை சேவைகளைச் செய்யும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான BMS சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆவார். எனவே தனக்கு இருக்கும் சுங்க இலாகா அதிகாரிகளின் தொடர்பைப் பயன்படுத்தி சரித்தை விடுவிக்க முயன்றுள்ளார் என்பது தெளிவாகிறது.

சரித், ஐக்கிய அரபு நாட்டுத் தூதரகத்தில் சுவப்னாவுடன் அவருக்கு உதவியாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோல், எஸ். கே. பி . இரமேஷ் என்ற திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜக கவுன்சிலர் , கே. சுரேந்திரன் என்பவர் மாநிலத் தலைவராக பதவியேற்ற கொஞ்ச நாட்களிலேயே கட்சியில் வேகமாக உயர் பொறுப்புகளுக்கு கொண்டுவரப்பட்டுளார். அவருக்கும் சந்தீப் நாயருக்கும் நெருங்கிய நட்பு உள்ளது நிருபிக்கப் பட்டுள்ளது. இதிலிருந்து பாஜக மாநிலத் தலைவருக்கு இந்த வழக்கில் உள்ள தொடர்பு குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

சுவப்னா தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றத்தில், ஒரு வழக்கறிஞர் மூலமாக மனு அளித்துள்ளார். அந்த வழக்கறிஞர் யாரெனில், ஆர்.எஸ்.எஸ்-ன் துணை அமைப்பான “இந்து எக்னாமிக் பாரம்” என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர். அவர் இந்த முன்ஜாமீன் மனுவை சுவப்னாவுக்காக சமர்ப்பிக்க, எவ்வாறு, யாரால் அமர்த்தப்பட்டார் என்பதும் அடுத்த கேள்வியாக எழுந்து சங்க பரிவார் அமைப்புகளுக்கு இந்த வழக்குடனான நெருக்கத்தை நிருபிக்கும் ஆதாரங்களுக்கு வலுவூட்டுகிறது.

கேரளாவில் உள்ள ஆலப்புழை நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த முறை உறுப்பினராக இருந்த, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.சி.வேணுகோபால், ஐக்கிய அரபு நாடுகளின் தூதரகத்தில் சுவப்னாவுக்கு வேலை கிடைக்க சிபாரிசு செய்த தகவல் காங்கிரஸ் கட்சியில் விவாதமாகியுள்ளது. கோழிக்கோட்டைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரான சித்திக் என்பவர் தங்கக் கடத்தல் குற்றவாளியுடன் இணைந்து துபாய் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது எடுத்துக்கொண்ட படமும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லீம் லீக் கட்சியின் திரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மம்மூட்டிக்கு, கோழிக்கோட்டைச் சேர்ந்த, இந்த வழக்கில் தொடர்புடைய தொழில் அதிபர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பு உள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த தொழிலதிபரின் வீட்டில் இந்த வழக்கு தொடர்பாக சுங்க இலாகா சோதனை நடத்தவும் செய்தது.

இதுபோக, கடந்த சில நாட்களுக்கு முன்னர், முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ஒருவர், தங்கத்தை ஆசன வாயில் மறைத்து வைத்து கடத்தி வந்த போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களால் ஆசன வாயில் மறைத்துவைக்கப் வைக்கப்பட்ட தங்கம் கண்டறியப் பட்டு, அதனை நீக்கி சிகிச்சை அளித்தனர். அந்த சம்பவம் தொடர்பாக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இது முஸ்லிம் லீக் கட்சிக்கு தங்கக் கடத்தல் விவகாரத்தில் நிறைய தொடர்புகள் உண்டு என்பதை நிரூபிக்கும் வேறொரு சம்பவமாகும். எனவே காங்கிரஸ் கூட்டணிக்கும் இந்த வழக்கில் நேரடியான தொடர்புகள் அம்பலமாகியுள்ளது.
ஆனால், இவ்வளவுக்கு பிறகும் எதிர்கட்சிகளும் அவற்றின் ஆதரவோடு ஊடகங்களும் கேரள அரசையும் முதல்வரையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் வேலையையே, மீண்டும் மீண்டும் பொய்களை பரப்புவதன் மூலம் செய்ய முயல்கின்றன.

தற்போது சுவப்னா கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் கேரள போலீஸ் தோல்வியடைந்துவிட்டது என்றும், அவர் பெங்களூரு தப்பிச் செல்ல கேரள போலீஸ் உதவியது என்றும் புதிய குற்றச்சாட்டை கிளப்பி வருகிறது. உண்மை என்னவெனில் துவக்கத்தில் இருந்தே இந்த வழக்கை சுங்க இலாகா தான் விசாரித்து வந்தது. அதன் பிறகு தேசிய புலனாய்வுத்துறை தான் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. ஆனால் கொரோனா கட்டுபாட்டுக்காலத்தில் குற்றவாளிகள் கேரளாவிலிருந்து தப்பித்து பெங்களூரு சென்றது கேரள போலீசின் தோல்வி என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
தற்போது, கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தாலும் கேரளத்தில் இருந்து வெளியேற கர்நாடக மாநில அரசின் அனுமதிச்சீட்டு இருந்தாலே போதும் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதே நேரத்தில் இந்த வழக்கு விசாரணையில் என்.ஐ.ஏ மற்றும் சுங்க இலாகா கேரள போலீசின் உதவியை இதுவரை கேட்கவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

குற்றவாளிகள் கர்நாடகாவுக்குத் தப்பிச் செல்லவும், கர்நாடகாவில் தங்குவதற்கும் “இந்து எக்னாமிக் பாரம்” என்ற சங் பரிவார் அமைப்பு தான் கர்நாடக மாநிலத்தில் உள்ள சங்க பரிவார் அமைப்புகளிடம் பேசி ஏற்பாடு செய்தது என்ற செய்தியும் வெளியாகி உள்ளது.

குற்றவாளிகள், தொலைபேசி வாயிலாக அழைத்ததால் கிடைத்த தொலைபேசி சமிக்ஞை தான் அவர்களின் இருப்பிடத்தைக் காண்பித்துக் கொடுத்துள்ளது.
இவ்வளவு நடந்தும் கூட, ஊடகங்கள், பாஜக மற்றும் சங்க பரிவார் அமைப்புகளுக்கு இந்த வழக்குடனான தொடர்புகளைக் கேள்வி கேட்க தயங்குகின்றன.
ஒட்டு மொத்தத்தில், இப்போது குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நபர்கள், இந்த வழக்கின் சங்கிலித்தொடரில் இந்த முனை தொட்டு அந்த முனை வரை உள்ள தொடர்புகளில் இடையில் உள்ள சில கண்ணிகளே ஆவர்.

ஆனால் இப்போதும் கூட ஊடகங்களும் எதிர்கட்சிகளும் விவாதிக்கத் தயங்கும் ஒரு விஷயம் இந்த தங்கம் யாரால் அனுப்பப்பட்டது. யாருக்காக அனுப்பப்பட்டது என்பதே. பாஜக தலைவர்கள் அவசர அவசரமாக “இது எந்த நகைக்கடை நிறுவனங்களுக்காகவும் கடத்திக் கொண்டு வரப்படவில்லை என்று தெரிகிறது ” என்று ஒரு விஷயத்தை கூறியுள்ளார்கள். சில பிரமாண்ட நகைக்கடை உரிமையாளர்கள் இந்த குற்றத்தின் பாகமாக இருக்கக் கூடும் என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.
இதுவரை இதே முறையில் மட்டும் 14 முறை தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது என்றும், கடந்த ஒரு வருடத்தில் பல்வேறு முறைகளில் வெவ்வேறு விமானநிலையங்கள் மூலம் நாட்டுக்குள் 2000 கிலோகிராம் தங்கம் கடத்தப்பட்டுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.

ஐக்கிய அரபு நாடுகளின் தூதரகம் தங்களுக்கும் இந்த கடத்தலுக்கும் தொடர்பு இல்லை என்று கூறியுள்ளது.
ஆனால் நமது நாட்டையாளும் மத்திய அரசும், கேரளத்தின் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும், ஊடகங்களும் சந்தீப், சுவப்னா, சரித் போன்றவர்களுடன் மட்டும் தொடர்புபடுத்துவதன் மூலம் இந்த வழக்கை சிறிய சம்பவமாக மாற்ற முயல்கிறார்கள் என்பதோடு கேரளத்தில் இன்னும் சில மாதங்களில் வரவிருக்கும் பஞ்சாயத்துத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல்கள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு அரசியல் சித்துவிளையாட்டுகள் நடத்தும் களமாக இந்த வழக்கை மாற்றி, உண்மையான குற்றவாளிகளான பெரும்புள்ளிகளை பாதுகாத்து, தங்களையும் காப்பாற்றத் துடிக்கும் சூழ்ச்சியாகவே தோன்றுகிறது.

ஆனால் இடதுமுன்னணி எத்தகைய சூழ்ச்சிகளையும் விசாரணைகளையும் எதிர்கொண்டு தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை தகர்த்து, தங்களை குற்றமற்றவர்கள் நிருபிப்பார்கள்.
விசாரணையை நேர்மையாக நடத்தி குற்றவாளிகள் யாராக இருப்பினும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதையே இடது முன்னணியும் அதனைத் தலைமை தாங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வலியுறுத்துகின்றன.

சதன் தக்கலை

Related Posts