அரசியல்

என்னை கவர்ந்த முதல் தலைவர் தோழர். இ.எம்.எஸ்……….

இன்று “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” என்ற பதம் பிரபலமாகி அது வலியுறுத்தப்பட்டும் வருகிறது. அதாவது பொதுவுடமை என்னும் உலகளாவிய மார்க்சிய சித்தாந்தம் ஒரு குறிப்பிட்ட நிலத்துக்கு தகுந்தாற்போல் தன்னுடைய இலக்குகளை நிர்ணயித்து தனது கொள்கைகளை பரவலாக்குவது என கொள்ளலாம்.ஆனால் இதில் பொதுவுடமை தத்துவம் பாதிக்கப்படாமல் இருத்தல் அவசியம்.அப்படி ஒரு மார்க்சியத்தை கேரளத்தில் வளர்த்தெடுத்தவர் ஈ எம் எஸ் நம்பூதிரிபாட்.

கேரளத்தில் வரும் சட்டமன்றத்தேர்தலில் இடதுசாரிகள் ஆட்சியை இழக்கலாம்.ஆனால் இன்னும் 50 ஆண்டுகளுக்கு  கேரளத்தில் பொதுவுடமை தத்துவத்திற்கான இடமும் ஆதரவும் இருந்து கொண்டுதான் இருக்கும். காரணம் மூன்று மாநிலங்களாக கேரளம் துண்டாடப்பட்டு கிடந்தபோது ஐக்கிய கேரளம் என்ற கோசத்தின் மூலம் இன்றைய கேரள மாநில அமைய போராடியவர்கள் இடதுசாரிகள். திருவிதாங்கூர் சமஸ்தானம் தனிநாடாக விரும்பியபோது  ராஜாவுக்கும் திவான் ராமசாமி ஐயருக்கும் எதிராக இந்தியாவுடன் சேர வலியுறுத்தி கடும் சமரமாடியவர்கள் கம்யூனிஸ்ட்கள். இப்போராட்டங்களில் முன்வரிசையில் நின்றவர் ஈஎம்எஸ்.இப்படி மலையாளிகளின் உணர்வோடு ஒன்றாக மார்க்சியத்தை வளர்த்தெடுத்தவர் அவர்.

கடும் வைதீக குடும்பத்தில் பிறந்த அவர் தன்னுடைய 15 ஆவது வயது வரை வேதக்கல்வி பயின்றவர். ஆனால் தன்னுடைய 21 ஆம் வயதில் திருச்சூரில் நடந்த கூட்டத்தில் பூணூலை அறுத்தெறிந்துவிட்டு பொதுவுடைமை இயக்கத்தில் சேர்ந்தவர். பின்பு பிரிட்டிசாருக்கு எதிராகவும் திருவிதாங்கூர் ராஜாவுக்கு எதிராகவும் சுதந்திரத்திற்கு பின் காங்கிரசுக்கு எதிராகவும் பல்வேறு போராட்டங்களின் பயனாய் சிறை வாழ்க்கையையும் தலைமறைவு வாழ்க்கையையும் மேற்கொண்டார்.

கேரள மாநில அமைந்த பின்பு நடந்த முதல் பொதுத்தேர்தலில் வென்று முதலமைச்சரானார். அது ஆசியாவிலேயே ஜனநாயகப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிச அரசாகவும்,இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத அரசாகவும் அமைந்தது. அவ்வரசு நிலசீர்திருத்தம், கல்விமசோதா,தொழிலாளர் நலன் என இன்றும் சிலாகிக்கப்படும் அரசாக உள்ளது.கடும் ஜாதிய ஒடுக்குமுறையில் கிடந்த கேரளம் இன்று அதையெல்லாம் பெரும்பாலும் துடைத்தெறிந்திருக்கிறது தலித்துகள் ஒட்டுமொத்த இந்தியாவைக் காட்டிலும் ஒரடி கேரளத்தில் முன்னேறியிருக்கிறார்கள் என்றால் அதற்க்கு முக்கிய காரணம் ஈஎம்எஸ் அரசின் நிலசீர்திருத்தம். உலக அரசியல் வரலாற்று ஆய்வாளர்கள் “கேரளா மாடல் “என போற்றுகிறார்கள்.அவ்வரசு பிற்போக்கு ஜாதி மத சக்திகளின் போராட்டம் மூலம் இரண்டறை ஆண்டுகளில் கலைக்கப்பட்டது. அப்போராட்டத்திற்கு பின்னில் அமெரிக்காவின் தூண்டுதலும் உதவியும் இருந்தது. 

பின்பு 1967 இல் வென்று மீண்டும் முதல்வரானார்.அப்போதும் இரண்டரை ஆண்டுகளில் ஆட்சி கலைக்கப்பட்டது. அதற்க்குபின் அவர் ஒருமுறை தேர்தலில் போட்டியிட்ட அவர் பின்னர் தேர்தல் அரசியலுக்கு வரவே இல்லை. தனது குடும்ப சொத்துக்களை விற்று அதன் மூலம் 1940 களில் கிடைத்த வருவாய் சுமார் 38000 ரூபாயை கட்சிக்கு கொடுத்துவிட்டு கடைசிவரை கட்சி தந்த அலவன்சில் மிக எளிமையாக வாழ்ந்தவர். அவர் கொடுத்த தொகையின் மூலம்தான் கட்சி பத்திரிகையான தேசாபிமானி தொடங்கப்பட்டது. அந்த இதழின் ஆசிரியராய் சுமார் 50 ஆண்டுகள் பணியாற்றினார் ஈஎம்எஸ்.

நேரு எப்படி ஜனநாயகத்தைபோதிக்கும் ஆசிரியராய் இருந்தாரோஅதே போல் ஈஎம்எஸ் மலையாளிகளின் உன்னத புத்திஜீவியாகவும் வழிகாட்டும் ஆசிரியராகவும் இருந்தார். அவர் எழுதிக்குவித்தவை நூற்றுக்கணக்கான நூல்கள். அவற்றில் 15 லிருந்து 20 நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இங்கு ஒரு விசயத்தை குறிப்பிடவேண்டும். தமிழ் சூழலை பொறுத்தவரை நூல்களும் கருத்துகளும் பெரும்பாலும் தங்களுடைய இடம் சார்ந்து கருத்துத் திணிப்புகளாகவே உள்ளன.

ஆய்வுப்பார்வைகளில் மார்க்சிய நோக்கத்துடன்அணுகப்படும் நூல்களே சிறந்தவை. அந்த வகையில் நான் வாசித்தவர்களில் ஈஎம்எஸ் தலைசிறந்த மார்ச்சிய வரலாற்று ஆசிரியர்.இந்திய வரலாறு, சுதந்திர போராட்ட வரலாறு,பொதுவுடைமைத் தத்துவம், மதச்சார்பின்மை,இன்னும் பல கட்டுரை நூல்கள் என. அவர் வேதத்தை மார்க்சிய நோக்குடன் அணுகி வேதகாலகட்டத்தில் இருந்த பிற்போக்குத்தனங்களை எடுத்துச் சொன்ன நூல் “வேதங்களின் நாடு”. ஒரு சிலரால் தலைப்பை மட்டும் பார்த்து விட்டு நூலின் ஒரு பக்கத்தைகூட படிக்காமல் அவருக்கு பார்ப்பன பட்டம் கட்டிய வரலாறு உண்டு

பாஜக தொடங்கப்பட்ட காலத்திலேயே இந்தியாவிற்க்கு நேரப்போகும் மதப் பெரும்பான்மை சார்ந்த சீரழிவுகளை சுட்டி எச்சரித்தவர் அவர்.இந்தியாவில் அனைத்து மதங்களும் புழங்கும் பின்பற்றப்படும் நாட்டில்  மதச்சார்பின்மைக்கு உரிய பொருள் சொல்லி நூல் எழுதியவர் அவர். அவர் சொன்ன பொருள்” இந்தியாவை பொருத்தவரை செக்கியூலரிசம் என்பது மதத்தை சாராமல் அதைத்தவிர்த்து இருப்பதல்ல. ஒவ்வொருவருக்கும் அவரின் மதத்தை பின்பற்ற உரிமை கொடுப்பதும், மதத்தை கல்வியிலும் அரசியலிலும் கலக்காமல் இருப்பதுமே”

ஈ எம் எஸ் நம்பூதிரிபாட் உலக கம்யூனிஸ்ட் தலைவர்களின் வரிசையில் வைக்கப்பட வேண்டியவர். ஆனால் கடைசிவரை அவர் கட்சியின் சாதாரண தொண்டராகவே நினைத்தார். கட்சியும் அவரை ஒரு தனிமனித பிம்பமாக கடைசிவரை கட்டமைக்கவே இல்லை. அவர் தனிஒரு தலைவரல்ல மாபெரும் தத்துவத்தின் பிரதிநிதி. இங்குள்ள சூழ்நிலையைப் போல் கடைசிவரை ஒரு தலைவருக்கு அடங்கியிருக்கும் கொத்தடிமைத்தனமும் தலைவரையே இயக்கமாகவும் தத்துவமாகவும் சித்தரிக்கும் அடிமை மனோபாவமும் அங்கில்லை. அந்த சூழல் வளராமல் இருந்ததற்க்கும் அவரே முக்கிய காரணம்.

ஒருமுறை அவர் ” பொதுவுடைமைத் தத்துவத்திற்கு நேர் எதிரான , சனாதன நிலவுடைமை பூர்ஷ்வா சமூகத்தில் பிறந்த என்னை இந்த தொழிலாளர் சமுதாயம் தத்துப்பிள்ளையாக ஏற்று அரவணைத்துக்கொண்டது. அதுவே எனக்கு பெருமை “என குறிப்பிட்டார்.

என்னை கவர்ந்த முதல் தலைவர்.

தோழர் இ எம் எஸ் நம்பூதிரிபாடு அவர்களின் பிறந்ததினம்.

  • பார்த்திபன்.

Related Posts