அமேசான் பிரைமில் The Forgotten Army பார்த்தேன். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆரம்பித்த ஐஎன்ஐ பற்றிய கதை.

கடந்தாண்டு ஜனவரியில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் 75 ஆண்டு தொடக்கவிழாவை கொண்டாடும் வகையில் செங்கோட்டையில் கொடியேற்றி மோடி பேசினார். அப்போது கிட்டத்தட்ட சுபாஷ் சந்திரபோஸை தங்கள் தலைவராக சித்தரித்து பேசினார். இந்திய சுதந்திரப்போராட்டத்தில் சிறுத்துரும்பைக்கூட கிள்ளிப்போடாத ஆர்எஸ்எஸ் இந்த தேசத்துக்காக உயிரை விட்ட நேதாஜி போன்றோரை தங்கள் தலைவராக முன்னிறுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. நேதாஜிக்கும், நேருவுக்கும் மோதல் இருந்தது போல ஒரு பொய்பிராச்சரத்தை பரப்புகிறார்கள்.

உண்மை என்னவென்றால் ஆர்எஸ்எஸ்சின் தொடக்ககால அமைப்பான ஹிந்து மகாசபாவை நேதாஜி கடுமையாக சாடியுள்ளார். அதை வகுப்புவாத, மதவாத அமைப்பு என்று சொல்லியுள்ளார். முதன்முதலில் இராணுவத்தில் பெண்களை சேர்த்தது போன்ற எண்ணற்ற முன்மாதிரிகளை வைத்து பார்க்கும்போதும் நேதாஜி இந்த ஹிந்து மஹாசபாவுக்கு எதிராகவே இருந்துள்ளார்.

ஹிந்து மகாசபா வரலாறை பார்ப்போம்.

1911ல் சாவர்க்கர் அந்தமான் சிறைக்கு செல்கிறார். அங்கிருந்து வெளிவந்தபிறகு கிட்டத்தட்ட பிரிட்டிஷாரின் கைக்கூலியாக மாறிப்போனார். 1921 -ல் சாவர்க்கரை இந்தியாவில் உள்ள ரத்னகிரி ஜெயிலுக்கு மாற்றுகிறார்கள். 1924 ஜனவரி 6 ஆம் நிபந்தனை விடுதலையில் வெளிவருகிறார். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அரசியலில் பேசக்கூடாது ரத்னகிரியை விட்டு வெளியே செல்லக்கூடாதென்று பிரிட்டிஷ் அரசு நிபந்தனை விதிக்கிறது.

அப்படியென்றால் பிரிட்டிஷ் அரசு தனக்கு மாதம் நூறு ரூபாய் சம்பளம் தரவேண்டுமென்று மனுப்போடுகிறார். ஆனால் பிரிட்டிஷ் அரசு மாதம் அறுபதுரூபாய் தருகிறது. அதை உயர்த்தச்சொல்லி தெடர்ந்து போராடுகிறார். இந்தியாவே ஒன்று திரண்டு சுதந்திரத்துக்கு போராட்டம் நடத்த இவர் எதற்கு போராட்டம் நடதியுள்ளார் என்று பாருங்க. 1937ல் சாவர்க்கருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் எல்லாம் ரத்து செய்யப்படுகிறது . அவர் ஹிந்து மகாசபாவின் தலைவராகிறார். ஹிந்து மகாசபா என்பது பிரிட்டிஷ் அரசின் கையாளாக மாறுகிறது.

நேதாஜி ஐஎன்ஐ ஆரம்பித்தபோது காந்திஜி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்கினார். ஆனால் சாவர்க்கரோ பிரிட்டிஷாருக்கு உதவுங்கள் என்று ஹிந்து மகாசபா முகாம்களை நடத்தி பிரிட்டிஷ் ராணுவத்தில் லட்சக்கணக்கில் ஹிந்துக்களை சேர்த்துள்ளார் 1940ல் மதுராவில் ஹிந்து மஹாசபாவின் 22 ஆவது மாநாடு நடந்தது.

அதில் சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக பேசினார். பிரிட்டிஷ் அரசுதான் இந்நாட்டை காப்பாற்றும் என்று சொன்னார். 1941ல் பகல்பூரில் ஹிந்து மகாசபா 23 ஆவது மாநாடு நடந்தது. அதில் சாவர்க்கர் பிரிட்டிஷாருக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்தார். பிரிட்டிஷ் ராணுவத்தை பலப்படுத்த இந்தியர்களை அழைத்தார். நாடெங்கும் உள்ள ஹிந்து மகாசபாவின் கிளைகளுக்கு செய்தி அனுப்பினார். ஹிந்துக்களை பிரிட்டிஷ் ராணுவத்திலும் கடற்படை, விமானப்படைகளில் சேர சொன்னார்.

அதேநேரம் மறுபக்கம் காந்திஜி வேறு நிலைப்பாட்டை எடுத்தார். பிரிட்டிஷ் ராணுவத்துக்கு ஆதரவாக இந்தியர்கள் போரிடமாட்டார்கள் என்று அறிவிக்க பிரிட்டிஷ் அரசு அதிர்ச்சியடைந்து காந்தியை சமாதானபடுத்தும் வேலைகளால் இறங்கியது. இரண்டாம் உலகப்போர் முடிவுக்குவரும்போது நேதாஜிக்கு எதிராக பிரிட்டிஷ் அரசு விசாரணைகமிஷன் வைக்கிறது. அந்த விசாரணையில் நேதாஜிக்கும் ஐஎன்ஐ வீரர்களுக்கும் ஆதரவாக வழக்கில் ஆஜராகி வாதாடியவர் நேரு . அவரே நேரில் ஆஜராகி வாதாடினார்.

இன்னும் ஐந்து வருடங்களில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டுவிழா வரும். அதற்குள் முழுக்க முழுக்க இங்குள்ள வரலாற்றை மாற்றியமைக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார்கள். காந்தி, நேருவை தலைவராக அறிவிக்கமுடியாது. இவர்களுக்கென்று வரலாறும் இல்லை. தலைவர்களும் இல்லை. எங்காவது யாரையாவது கடன்வாங்கி தத்தெடுக்கவேண்டும். அப்படி தத்தெடுக்கப்பட்டவர்கள்தான் படேலும், நேதாஜியும். The Forgotten Army தொடரை உன்னிப்பாக பார்த்தேன். நல்லவேளை. எங்கும் இந்த சாவர்க்கர் பற்றி சிறுகுறிப்புக்கூட வரவில்லை.

இந்தத்தொடரில் எனக்கு ஒரு சின்ன மனக்குறை. ஐஎன்ஐயில் கணிசமான தமிழர்கள் இருந்தார்கள். இவர்களை முன்னிறுத்தும் காட்சிகளை வைத்திருக்கலாம். தொடரை பற்றியும், நேர்த்தியான தொழில்நுட்பத்தையும், பிரமாண்ட செலவையும் பற்றி தனியாக பேசவேண்டும். இந்தியளவில் தரமான வெப்சீரிஸ் வருகின்றன.

தமிழில் ஏன் அப்படி எடுக்க முடிவதில்லை? நம்மிடம் செலவழிக்க பணம் இல்லையா? கோடி கோடியாக கொட்டி குப்பைப்படங்களை எடுக்கிறார்கள் இல்லையா? ஒருவேளை நம்மிடம் கதை இல்லையா? நம்மிடம் எவ்வளவு கதைகள் கொட்டிக்கிடக்கின்றன? எனக்கு ஒரு ஆசை. எனது வலம் நாவலை வெப்சீரிசாக எடுக்கவேண்டும். கொஞ்சம் செலவு பிடிக்கும் கதைக்களம்தான். இருந்தாலும் பிரிட்டிஷ்அரசின் அன்றைய சென்னைமாகாணத்தை வேறொரு புதிய பரிமாணத்தில் காட்டலாம். வரலாற்றில் நாம் என்னவாக இருந்தோம் என்று தெரிந்துக் கொண்டால் மட்டுமே இதுபோன்ற வரலாற்றை திரிக்கும் போலிமயக்கத்திலிருந்து விடுபடலாம்.

விநாயக முருகன்.

Related Posts