அறிவியல்

ஹைட்ரோகார்பன் திட்டம்: விளக்கங்களும் விளைவுகளும் . . . . . . . . !

ஹைட்ரோகார்பன் எவ்வாறு எடுக்கப்படுகிறது ?

மீத்தேன், ஈத்தேன், ஷேல் கேஷ் அனைத்தும் ஹைட்ரோகார்பன் உபபொருட்கள்தான். இவற்றை வெளியே கொண்டுவர நீரியல் விரிசல் (Hydraulic Fracking) என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட  இருக்கிறது. கீழேயுள்ள படம்  இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படை செயல்பாட்டினையும் அதன் பாதிப்புகளையும் மேலோட்டமாக விவரிக்கிறது.

பாதிப்புகள்

1. நிலத்தடி நீர் தட்டுப்பாடு :

அமெரிக்காவையே அதிஉன்னத உதாரணமாக எடுத்துப்பழகிய நமக்கு புரிவதற்காக, அமெரிக்காவின் சுற்றுசூழல் பாதுகாப்பு துறை எடுத்த ஆய்வறிக்கையையே  பார்ப்போம் .

அந்த அறிக்கையின்படி, 2011ஆம் ஆண்டில் அமெரிக்கா முழுவதும் உள்ள 35000 ஹைட்ரோகார்பன் கிணறுகளில் மொத்தம் 140 பில்லியன் கேலன்கள் தண்ணீர் நீரியல் விரிசலுக்காக  பயன்படுத்தபட்டுள்ளது. (1 கேலன் =  3. 78 லிட்டர்) அதாவது ஒவ்வொரு  கிணறும் ஆண்டிற்கு 5,66,33,693 லிட்டர்  தண்ணீரை வீணடித்திருக்கிறது.

கர்நாடகாவிலிருந்து 10 TMC தண்ணீர் வாங்கவே 20 TMC கண்ணீர் விடவேண்டியிருக்கிற இன்றைய சூழலில், நம்மால் இத்தனை பெரிய நீர் இழப்பை எப்படி சமாளிக்கமுடியம் ?

மேலும், கிணறுகள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகள் மட்டுமே பாதிக்கும் என்று சொல்ல முடியாது; ஒவ்வொரு கிணறும் பக்கவாட்டில் பல கிலோமீட்டர்கள்வரை உள்ள நிலத்தடி நீராதாரங்கள் அனைத்தையும்  உறிஞ்சியெடுத்து வறண்ட பாலைவனமாக மாற்றிவிடும்.

2. நிலம், நீர், காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் அழியும் அபாயம்:

இந்த கிணறுகளில் இருந்து மீத்தேன் மட்டும் அல்ல;  விரிசலுக்கு உள்செலுத்திய வேதிப்பொருட்கள், மிக அதிக அளவிலான நிலத்தடி உப்பு , அமிலங்கள் மற்றும் வாயுக்கள் கலந்த நச்சு நீரும் சேர்ந்தே நிலத்திற்கு வருகிறது.

மீத்தேன் வருவாய் பற்றி மட்டுமே பேசும் நிறுவனங்களும் அரசும் இந்த நச்சு நீரை எங்கு கொண்டுபொய் பாதுகாப்பாக வடிக்க போகின்றன என்பதைப்பற்றி ஏதும் சொல்லவில்லை. இவை நீர் நிலைகளில் கலக்கும் போதும், பாசனக் கால்வாய்கள் மூலம் வெளியேற்றப்படும்போதும் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

தொடர்ந்து நிலத்தடி நீரை வெளியேற்றுவதால் கடல் நீர் உள்புகும் வாய்ப்பும் அதிகம்; கடல்நீர் உள்ளே புகுவதினால் விளைநிலம் தரிசாகும். மேலும், மீத்தேனை வெளியில் எடுக்கும் கிணறுகளில் இருந்து கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படுவதும் தவிர்க்க முடியாதது.

இதுதவிர, ஒரு கிணற்றுக்கு சுமார் 400 டேங்கர் லாரிகள் நீர் எடுத்து வருவதற்கும் கழிவு நீரை அப்புறப்படுத்தவும் தேவைப்படும்.  தினமும் ஆயிரக்கணக்கில் லாரிகள் நீரினை சுமந்து கொண்டு வந்தும் சென்ற வண்ணமும் இருந்தால் அந்த சாலைகளும், சுற்றுப்புறகிராமங்களும், விவசாயமும் என்ன ஆகும்?

3. நிலநடுக்கம் & பருவநிலை நெருக்கடி:

தொடர்ச்சியான நீரியல் விரிசல் பூமிக்கடியில் அசாதாரமான சூழலை உருவாக்கும், அதன் விளைவாக நிலநடுக்கம், மற்றும் பெருமளவிலான மண் உள்வாங்குதல் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படக்கூடும்.

கூடுதலாக, இந்த ஹைட்ரோகார்பன் எரிவாயு பிரித்தெடுத்தலில்,  மீத்தேன் கசிவு என்பது தவிர்க்க முடியாத ஒன்று; வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்தில் கூட இன்றும் ஏராளமான கசிவு பிரச்சினைகளை சீர்செய்ய முடியாமல் தவிக்கின்றன.

நீண்ட காலப்போக்கில் (~20 ஆண்டுகள்), மீத்தேன் வாயு கார்பன்-டை-ஆக்சைடை விட  100 மடங்கு மோசமான சுற்றுசூழல் பேரழிவை உண்டாக்கும் என நிரூபிக்கப் பட்டிருக்கிறது. இது இன்றைய உலகை அச்சுறுத்தும் பிரச்சனைகளில் ஒன்றான புவி வெப்பமாவதையும்  (குளோபல் வார்மிங்) அதன் விளைவுகளையும் இன்னும் பயங்கரமாக்கவே செய்யும்.

 4. எதிர்கால சந்ததியினருக்காண அச்சுறுத்தல்

“இயற்கை எரிவாயு செயல்பாடுகள் – பொது சுகாதார கண்ணோட்டத்தில்” (Natural Gas Operations from a Public Health Perspective) என்ற தலைப்பில் 2010ஆம் ஆண்டில் வெளிவந்த ஆராய்ச்சி கட்டுரை மொத்த உலகத்தையும் திரும்பி பார்க்கவைத்ததோடு அல்லாமல், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளையும் இந்த தொழில்நுட்ப உபயோகம் பற்றி மறுபரிசீலனை செய்யவைத்தது.

இந்த அறிக்கை, நீரியல் விரிசல் செயல் முறைக்கு சராசரியாக 353 வேதிப் பொருட்கள் பயன் படுத்தப்படுவதாகவும், இந்த தொழிற்சாலைகளின் கழிவுகள் தோல், கண், தொடு உணர்வு அழிதல், சுவாசக் கோளாறு, செரிமான மண்டலங்களின் நோய் தாக்கம், ஈரல், மூளை மற்றும் நரம்பு கோளாறுகள்… என 12 பெரும் நோய்களுக்கான சாத்தியப்பாடுகளை ஆதாரங்களுடன் பட்டியலிடுகிறது .

பாதுகாப்பு சட்டங்கள் முறையாக பின்பற்றப்படுகின்ற அமெரிக்காவிலேயே இந்த நிலை என்றால், பாதுகாப்புச் சட்டங்களும்  நெறிமுறை ஆணையங்களும்  வெறும் கைக்கூலிகளாக மட்டுமே இருக்கும் நம் நாட்டில் வரவிருக்கும் விபத்துகளையும் நோய்களையும் நினைத்துப்பார்ப்பதே கடினம்.

வளர்ச்சி என்ற பெயரில் முன்மொழியப்படும் இந்த திட்டம் மிஞ்சிப்போனால் 35- 50 ஆண்டுகளுக்கு வேண்டுமென்றால் பயன் கொடுக்கும்; அதற்காக பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை   கொல்வது நியாயமா? ஒரு சில நிறுவனங்களின் லாபத்திற்காக நாம் ஏன் நம் எதிர்கால தலைமுறையின் வாழ்வாதாரத்தை பணயம் வைக்க வேண்டும் ?

கிணறு வெட்ட பூதம் என்ற ஒரு கதை கேட்டிருக்கிறோம் , ஆனால் இந்த மீத்தேன் கிணறு வெட்ட பூதம் மட்டுமில்லை  பூகம்பமும் சேர்ந்தே வரப்போகிறது.!

– பொன்கணேஷ்

References:

Related Posts