அரசியல்

மறைக்கப்பட்ட 9/11

உலகின் பெரும்பாலான மக்களுக்கு 9/11 என்றதும் உடனே நினைவுக்கு வருவது 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாள், செவ்வாய்க் கிழமையன்று நியூயார்க் நகரின் வர்த்தக மையக் கட்டிடம் தகர்க்கப்பட்டதே, ஊடகங்கள் பல தொடர்ச்சியாக அதைப் பற்றி செய்திகள் வெளியிட்டும், ஒளிபரப்பியும் அந்நிகழ்வைத் தாண்டி வேறெதையும் நம்மை சிந்திக்காதவாறு நம் சிந்தனையை மழுங்கச் செய்துள்ளன.
இதை விட பல மடங்கு கோரமான ஒரு 9/11 ஐ இவ்வுலகம் ஏற்கனவே சந்தித்துள்ளது. அது நம்மிடமிருந்து நம்மையறியாமல் மறக்கடிக்கப்பட்டுள்ளது. சரியாக நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் 1973 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி செவ்வாய்க் கிழமையன்று பெரும்பான்மையான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் சால்வடர் ஆலெண்டே தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னனி அரசை – அமெரிக்க உதவியுடன் செயல்பட்ட இராணுவக் கலவரக் காரர்கள் தூக்கியெரிந்தனர். அதிபர் அலெண்டே கொலை செய்யப்பட்டு, மோனெடா மாளிகை மீது குண்டுகள் வீசி தீக்கிறையாக்கப்பட்டு – அங்கு பாசிஸ அரசு நிறுவப்பட்ட நாள் 9/11 .

அதிபர் சால்வடர் ஆலெண்டே

Allende

1908 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் தேதி வால்பரைசோ நகரில் பிறந்த சால்வடர் ஆலெண்டே அவர்கள் 1933 ஆம் ஆண்டு சிலி மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தனது மருத்துவப் படிப்பை முடித்தார்.
சிறு வயதிலிருந்தே அரசியலில் ஈடுபாடு கொண்ட ஆலெண்டே, மரண்டு கியூ க்ரோவுடன் இணைந்து “சிலி சோஷியலிஸ்டு கட்சியை” 1933 ஆம் ஆண்டு நிறுவினார். 1938 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆட்சியில் வால்பரைசோ மாகாணத்திலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலெண்டே மருத்துவ மற்றும் சுகாரத்துறை அமைச்சராக திறம்பட பணியாற்றினார்.
1952, 1958 மற்றும் 1966 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபருக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய போதிலும் ஒவ்வொரு முறையும் அவருடைய வாக்கு சதவீதம் ஏறு முகமாகவே இருந்தது. 1970 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 44% வாக்குகள் பெற்று தேர்தல் மூலம் லத்தீன் அமெரிக்க நாடுகளில் அதிபரன முதல் மார்க்சியவாதியாவார். இந்த வெற்றியின் மூலம் “புதியதொரு சோஷியலிசத்திற்கான பயணம்” ஒன்றை உலகுக்கு அளித்தார்.
அப்பாவி மக்கள் மீது தொடுக்கப்படுகின்ற வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கத் தயங்காத ஆலெண்டே ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் யூதர்களைக் கொன்று குவிக்கத் துவங்கிய போது, ஹிட்லரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அவருக்கு கண்டனத் தந்தியனுப்பினார்.

சிலியில் 1970 ஆம் ஆண்டு ஆலெண்டே தலைமையில் ஆட்சி அமைத்த மக்கள் ஐக்கிய முன்னணி சிலியின் மிக முக்கிய இயற்க்கை வளமான தாமிர தாதுக்களை பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து குறிப்பாக அமெரிக்க நிறுவனங்களான அனகோன்டா மற்றும் கென்னேகாட் நிறுவனங்களிடமிருந்து பிடுங்கி நாட்டுடமையாக்கினார். வங்கிகளும், 47 தொழில் நிறுவனங்களும் நாட்டுடைமையாக்கப்பட்டன. நிலச்சீர்திருத்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு சுமார் 60 லட்சம் ஏக்கர் நிலம் நிலப்பிரபுக்களிடமிருந்து கையகப்படுட்தப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. அரசின் இந்நடவடிக்கையால் சிலியின் பாட்டாளி மக்களின் ஊதியம் 30% உயர்ந்தது.

ஆலெண்டேவின் மக்கள் ஐக்கிய முன்னனி அரசின் இந்நடவடிக்கையால் சிலி நாட்டின் பாட்டாளி மக்களின் சமூக-பொருளாதார நிலை மேம்படத்துவங்கிய அதே நேரத்தில் வலதுசாரிக் கட்சிகளான தேசியக் கட்சி, கிறித்துவ ஜனநாயகக் கட்சி, இதர வலதுசாரி குழுக்கள், முதலாளி வர்க்க நலனில் நாட்டம் கொண்ட இராணுவ உயரதிகாரிகள், அமெரிக்க அதிபர் நிக்ஸன் தலைமையிலான அரசு, அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு புலனாய்வுத்துறை(Defense Intelligence Agency) மற்றும் மத்திய புலனாய்வு முகமை (CIA) ன் வெறுப்பை சம்பாதித்தது.

தொடர்ச்சியாக மூன்று முறை அதிபருக்கான தேர்தலில் ஆலெண்டே தோல்வியடைந்த போதும் அவருடைய வாக்கு வீதம் அதிகரித்து வருவதை உணர்ந்து கொண்ட அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் சிலியின் வலதுசாரிகள் ஆலெண்டே அதிபராக வந்துவிடக்கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வந்தனர். 1950 ஆம் ஆண்டுகளில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் மில்டன் ஃபிரைடுமேன் மற்றும் அர்னால்டு ஹார்பெர்கேர் தலைமையின் கீழ் சிலி நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு முதலாளித்துவ பொருளாதாரத்தில் பயிற்சியளிக்கப்பட்டது. இப்பயிற்ச்சியின் விளைவே “சிலி புராஜக்ட்”.
இவ்வாறு சிகாகோ பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்றவர்கள் “சிகாகோ பாய்ஸ்” என்றழைக்கப்பட்டனர். இராணுவ கலகத்திற்க்கு பிறகு நிறுவப்பட்ட அரசின் பொருளாதாரம் சார்ந்த துறையில் சிகாகோ பாய்ஸைச் சேர்ந்த பலர் இடம்பெற்றனர். (அண்மையில் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரகுராம் ராஜன் அவர்களும் சிகாகோ பாய்ஸைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.)

1969 ஆம் ஆண்டு வாஷிங்டன் புறநகர் பகுதியில் நடைபெற்ற விருந்தில் சிலி நாட்டின் இராணுவ உயரதிகாரிகள், விமானப்படைத் துணைத் தலைவர் லெப்டினன்ட் கர்னல் ஜெரார்டோ லோபல், ஜெனரல் எர்னஸ்டே பேஸாவும் மற்றும் பென்டகன் உயரதிகாரிகளும் கூடி 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கின்ற அதிபர் தேர்தல் பற்றியும், ஒருவேளை மார்க்சியவாதியான ஆலெண்டே தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னனி ஆட்சியமைக்க நேர்ந்தால் கூடியிருக்கின்ற இராணுவ அதிகாரிகள் என்ன செய்ய வேண்டும், இராணுவக் கலகத்தின் மூலம் முதலாளிகளுக்கும், அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு சேவகம் செய்யக் கூடிய வலதுசாரிகளின் அரசை எவ்வாறு நிறுவ வேண்டும் என்பது பற்றி விவாதித்தனர். இராணுவக் கலகத்தை நடத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவதிகாரிகளுக்கு இசைப் பயிற்சியளிக்கிறோம் என்கிற பெயரில் அமெரிக்க அரசு ஆயுதப் பயிற்சியளித்தது. அமெரிக்க-சிலி நாட்டின் கடற்படை கூட்டுப் பயிற்சியான “ஒற்றுமை நடவடிக்கையின்” போது இராணுவக் கலகத்தை நிகழ்த்த வேண்டுமென்று திட்டமிடப்பட்டது.

9/11 இராணுவக் கலவரம்

ஆலெண்டே தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னனி அரசிற்கு எல்லா வழிகளிலிருந்தும் நெருக்கடி ஏற்படுத்தும் விதமாக அமெரிக்க ஐக்கிய அரசு மற்றும் அதன் மத்திய புலனாய்வு முகமை (CIA) சிலி நாட்டில் கள்ளச் சந்தையை உருவாக்கியது என்று நோபல் பரிசு பெற்ற கவிஞர் பாப்லோ நெரூடா கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் நிக்ஸன் அரசு ஆயுதங்கள் வாங்குவதற்க்கு $10 மில்லியன் தொகையை கடனாக அளித்தது.
அரசுக்கு நெருக்கடி தரும் விதமாக சரக்கு வாகன உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் 9/11 கலகத்திற்கு முன்னர் துவக்கப்பட்டது. இத்தகைய நிலையில் இராணுவக் கலவரத்தின் மூலம் மக்கள் ஐக்கிய முன்னனி அரசை தூக்கியெறிவதற்கான நிகழ்வு செப்டம்பர் 11 ஆம் தேதி செவ்வாய்க் கிழமையன்று பாசிஸ, வலதுசாரி இயக்கங்கள் மற்றும் அமெரிக்க ஆதரவுப் படைகள் என அனைத்துப் படைகளும் மோனெட மாளிகையைத் தாக்கியதோடு மட்டுமின்றி சால்வடார் ஆலெண்டே உட்பட சுமார் 5000 க்கும் மேற்ப்பட்ட பாட்டாளிகளைக் கொன்று குவித்தது.

அதிபர் ஆலெண்டேவின் நண்பரும் கியூபாவின் முன்னாள் அதிபருமான பிடல் கேஸ்ட்ரோ சிலியில் 30 நாள் பயணம் மேற்க்கொண்டார். 9/11 தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து செப்டம்பர் 28 ஆம் தேதியன்று பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றினார். இக்கண்டன உரையில் கலவரத்தின் போது நிகழ்ந்ததை உலக மக்களுக்கு விவரித்தார்.

6:20AM:          இராணுவக் கலவரம் பற்றிய தகவல் அதிபர் ஆலெண்டேவிற்க்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டது.

7:30AM:          தன்னுடைய காவலர்களுடன் மோனெடா அதிபர் மாளிகையை சென்றடைந்தார்.

8:15AM:          பாசிஸவாதிகள் மற்றும் அதன் ஆதரவுப் படைகள் அதிபரை சரணடையுமாறும் பிறகு அவர்கள் ஏற்பாடு செய்துதரும் விமானத்தின் மூலம் குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறுமாறும் தகவல் தெரிவித்தனர். அதிபர் ஆலெண்டே இறுதி மூச்சுள்ள வரை சிலி நாட்டு ஏழை எளிய மக்களுக்காகவும், பாட்டாளிகளுக்காகவும் அரசை காக்க போராடத்துணிந்தார்.

9:00AM:          இராணுவ உயரதிகரிகளைச் சந்தித்த அதிபர் ஆலெண்டே அரசைக் காக்குமாறு கட்டளையிட்டார். கலவரம் ஏற்படும் 48 மணி நேரத்திற்க்கு முன்பு பெரும்பாலான உயரதிகாரிகள் மாற்றப்பட்டனர். அதிபரின் கட்டளையைய் நிராகரித்த இவ்வதிகாரிகளை மாளிகையைய் விட்டு வெளியேறுமாறு கட்டளையிட்டார்.

9:15AM:          அமைச்சர்கள், அமைச்சக செயலாளர்கள், மக்கள் ஐக்கிய முன்னனியின் உறுப்பினர்கள் மற்றும் ஆலெண்டேவின் மகள்கள் ஆகியோரை சந்தித்த ஆலெண்டே அரசைக் காக்கும் தனது நிலையை தெரிவித்தார். அவர்கள் அணைவரும் அதிபருடன் சேர்ந்து போராடத் தயாராக இருப்பதைத் தெரிவித்தனர். இந்தச்சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது 200 பேர் கொண்ட பாசிஸ படைகள் தங்கள் தாக்குதலைத் துவக்கினரார்கள். 3 இராணுவ பீரங்கிகள் அதிபர் மாளிகையைச் சுற்றி வளைத்தன. இத்தகைய பலம் வாய்ந்த படையிடமிருந்து அரசைக் காக்க வெறும் 40 பேர் கொண்ட சிறிய படை எதிர்த் தாக்குதலைத் துவங்கியது.

10:45AM:        மீண்டும் தனது ஆதரவாளர்களைச் சந்தித்த ஆலெண்டே ஆயுதமின்றி போராடத் துணிந்தவர்களையும், பெண்களையும் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார். மேலும் எதிர்காலப் போராட்டத்தை வழிநடத்திச் செல்ல தலைமை வேண்டும் என்ற அவசியத்தை நன்கு உணர்ந்திருந்த ஆலெண்டே ஆயுதமின்றி போராடி உயிர்த் தியாகம் செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தினார். அதே சமயத்தில் அதிபரை சரணடையுமாறும் இல்லையெனில் வான்வழித் தாக்குதலைத் துவங்குவோம் என எதிரிகள் மீண்டும் கொக்கரித்தனர்.

11:45AM:        ஆயுதமின்றி போராடியவர்களும், பெண்களும் அதிபர் மாளிகையிலிருந்து பாதுகாப்பான பகுதிக்கு வெளியேறினர். இச்சமயத்தில் அரசு ஆதரவு படை ஒரு பீரங்கியை வெடித்து சிதரடித்தது.

12:00PM:        இராணுவம் வான்வழித் தாக்குதலைத் துவக்கியது. அரசு ஆதரவுப் படையினர் மாளிகையின் ஆயுதக் கிடங்கிலிருந்து 0.30 வகை துப்பாக்கிகளையும், சிக்(sik) வகை துப்பாக்கிகளையும், கையெறி குண்டுகளையும், தலைக்கவசம் மற்றும் தோட்டாக்களை வெளியெகொண்டுவந்தனர். ஆயுதங்களுடன் வெளியேவந்த ஆலெண்டே “வரலாற்றின் முதல் பக்கத்தை நாம் இவ்வாறு தான் எழுத வேண்டும். நம் மக்களும் லத்தீன் அமெரிக்க மக்களும் அவ்வரலாற்றை பூர்த்தி செய்வார்கள்” எனக் கூறினார். தொடர்ந்து நடைபெற்று வந்த தாக்குதலில் ஆலெண்டேவின் முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.

1:00PM:          பாசிஸவாதிகல் சமாதானம் பேசுவதற்காக தாக்குதலை நிறுத்தினர். அதிபர்     ஆலெண்டே பொதுச் செயலாளர் ஃபுலோரல் மற்றும்  துணைப் பொதுச் செயலாளரை டேனியல் வெர்கரா ஆகியோரை தன் சார்பாக அனுப்பி வைத்தார். சமாதானப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்து திருப்பிவந்து கொண்டிருந்த இருவரையும் துப்பாக்கியால் சுட்ட கலகக்காரர்கள் பின் அதிபரை மீண்டும் சரணடையுமாறு “கெஞ்சினார்கள் “.

1:30PM:          பெரும்பாலான அரசு ஆதரவாளர்கள் கொல்லப்பட்ட நிலையில், மாளிகையின் தரைத் தளத்தை கைப்பற்றிய இராணுவத்துடன் இரண்டாவது தளத்திலிருந்து போராடிக்கொண்டிருந்தார் ஆலெண்டே.

2:00PM:          இரண்டாவது தளத்தையும் ஆக்கிரமிக்கத் துவங்கியது இராணுவப் படை. இத்தாக்குதலில் அதிபரின் வயிற்றிலும் மார்பிலும் குண்டுகள் துளைத்தது. நிலைகுலைந்து விழுந்த அதிபரின் உடலை தாங்கிச் சென்ற அவரது ஆதரவாளர்கள், அதிபர் அலுவலக இருக்கையில் அமரவைத்தனர். அவர் மேல் சிலியின் தேசியக் கொடியை போர்த்தி மரியாதை செய்தனர். அதே நேரத்தில் தங்களது எதிர் தாக்குதலை தொடர்ந்து தொடுத்துக்கொண்டிருந்தனர்.

4:00PM:          அதிபரின் ஆதரவாளர்கள் மேலும் இரண்டு மணி நேரம் கடுமையாகப் போராடினார்கள். பீரங்கிகள், போர்விமானம், 200 பேருக்கு அதிகமானோர் கொண்ட படை என பலம் வாய்ந்த இராணுவப் படை வெறும் 40 பேர் கொண்ட அதிபரின் படையுடன் மோதி ஏழு மணி நேரத்திற்க்குப் பிறகே அதிபர் மாளிகையை கைப்பற்றியது. இது ஆலெண்டே மற்றும் அவரது ஆதரவாளர்களின் மன உறுதியையே காண்பிக்கிறது.

பாசிஸ்டுகள் அமெரிக்க ஆதரவுக் கூட்டுப்படைகளுடன் இணைந்து 4 ஆண்டுகளுக்கு முன்னரே திட்டமிட்டு, திட்டமிட்டதை விட நேர்த்தியாக கலவரத்தை நிகழ்த்தி அகஸ்டோ பினோசட் தலைமையில் ஒரு பாசிஸ அரசு நிறுவப்பட்டது.

ஜனநாயக முறைப்படி உருவாகி, சட்ட திட்டத்திற்கு உட்பட்டு சோசலிசத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஒரு அமைதியான அரசைக் காக்க ஆயுதமேந்தி போராட வேண்டிய நிலையை உள்நாட்டு பாசிஸிடுகளும், அமெரிக்க மத்திய புலனாய்வு முகமையும் (CIA) ஏற்படுத்தின

எங்கே ஒரு அரசு ஏழை எளிய மக்களுக்கு ஆதரவான அரசாக அமைகிறதோ அவ்வரசை எல்லா வகையிலும் தகர்க்க முதலாளித்துவம் சதி செய்கிறது. அச்சதியின் உச்சகட்டம் 9/11 ல் சிலியில் நடைபெற்ற இராணுவக் கலவரத்தின் மூலம் மக்களுக்கான அரசை தூக்கியெரிந்ததாகும். அமெரிக்க நிறுவன முதலீடுகளை பாதுகாப்பது, ஆலெண்டே தலைமையிலான ஜனநாயக அரசை வீழ்த்துவது மட்டும் முக்கியமல்ல, கியூபாவை அடுத்து லத்தீன் அமெரிக்காவில் சோசலிசத்தை நோக்கி நடைபோடத் தயாராகிக் கொண்டிருந்த சிலியில் பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்துவதன் மூலம் மற்ற உலக நாடுகளுக்கு ஒரு அச்சுறுத்தலை உண்டாக்க வேண்டும் என்பதும் இன்னுமொரு மறைமுகக் காரணம்.
அத்தகைய இன்றைய தினத்தை அமெரிக்க மற்றும் ஆளும் வர்க்க ஊடகங்கள், அமெரிக்க ஆதரவுடன் உருவான தீவிரவாதிகளின் தாக்குதலை மட்டுமே மையமாக வைத்தே நமது சிந்தனையை வளர்த்துவருகிறது. மாற்று சிந்தனையுள்ள நாம் இன்றைய தினத்தை “ஏழை எளிய மக்களுக்கு ஆதரவாக ஜனநாயக அரசை அமைப்பதற்கான நாளாகவும், அத்தகைய அரசைக் காப்பதர்க்கானதான நாளாகவும், சால்வடார் ஆலெண்டேவின் தியாகத்தை நினைவு கூறும் நாளாகவும்”  மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

 

 

Related Posts