இலக்கியம் காதல்

குறுந்தொகை – The compilation of miscellaneous feelings in love

அழகன் முருகனைப் பற்றிய கடவுள் வாழ்த்துடன் துவங்கும் குறுந்தொகை முழுக்க முழுக்க காதல் தான். இருந்தாலும் எல்லா இடங்களிலும் அவர்கள் காட்டும் காதலை ரசிக்க முடியவில்லை.’ இவங்களுக்கு காதலிக்குறத தவிர வேற வேலையே இல்ல போல என்று சலிக்கும் படியாக இருந்தது. முக்கியமாக, வளையல் கையை விட்டு நழுவுவது, பிரிவால் உடல் மெலிவது, தேமல் தோன்றுவது போன்ற உவமைகள் பல இடங்களில் ரிப்பீட் ஆகும் போது…. பல வரிகள் உண்மையாகவே மனதை வருடும் படியாக இருந்தது.

காமம் சார்ந்த சொல்லாடல்கள், உடல் உறுப்புகள் எல்லாம் சர்வ சாதாரணமாக கையாண்டிருக்கிறார்கள்.. அந்த சமூகம் நிச்சயமாக கற்பழிப்புகள், பெண்களுக்கு பாதுகாப்பான சமூகமாகத் தான் இருந்திருக்க வேண்டும். நாம் தான் நமது உடல் அங்கங்களைக் குறிக்கும் வார்த்தைகளையே உபயோகிக்க கூச்சப்படுபவர்களாக, பிறரை நிந்திக்கப் பயன்படும் வார்த்தை ஆயுதங்களாக ஆக்கிவிட்டோம். இது பெரிதாக விவாதிக்கபடவேண்டியது. ஆனாலும் அந்த சமூகத்தில் ஆணாதிக்கம் இருந்திருக்கத்தான் செய்திருக்கிறது.பல பாடல்களில் தெரிகிறது.

‘செம்புலப்பெயல்நீர் போல’ , ‘அணிலாடும் முன்றில் போல’, ‘கொங்குதேர் வாழ்க்கை’

போன்ற அனைவரும் ரசித்த வரிகளைத் தாண்டி என்னைக் கவர்ந்த சில வரிகள் சில…

பூ இடைப்படினும் யாண்டு (ஆண்டு) கழிந்தன்ன.. காதலருக்கு நடுவே ஒரு பூவை வைத்தாலும், ஒரு வருடம் பிரிந்ததைப் போல வருந்துவார்களாம்.(பாடல்-57)

காதலில் சின்னச் சின்ன விசயங்களையும் பெரிதாக எடுத்துக் கொண்டு கொண்டாடுவார்களே! அது போல கவிதை… தனது தலைவனுக்குச் சொந்தமான மலையில் முந்தினம் பெய்த மழையில் காந்தள் மலர்கள் அடித்துக் கொண்டு நதியில் வருகிறது. தலைவி அதை எடுத்து அணைத்துக் கொள்கிறாள். தன் வீட்டில் நட்டு வைக்கிறாள் இதையெல்லாம் அறிந்தும் அவளது தாய் அவளை கடிந்து கொள்ளவில்லை. தாயின் இந்த செய்கையால் தாய்க்கு சொர்க்கமே கூட போதாது. அதைவிடவும் உயர்வானது வேண்டுமென்று தோழியிடம் இன்புறுகிறாள். ‘அன்னைக்கு உயர்நிலை உலகமும் சிறிதால்’(கபிலர்-361)

சங்ககால தேவதாஸ் ஒருவன் சொல்கிறான்… ’ஞாயிறு காயாது ’மரநிழல் பட வேண்டுமாம்.. மலையில் கற்கள் இல்லாமல் மணலாக இருக்க வேண்டுமாம்..தன்னைப் பிரிந்து வேறொருவனுடன் செல்லும் தன் நாயகியின் பயணம் சுகமாக..(கயமனார்-378)

ஒரு beautiful family-மாலையில் தெரியும் பசுவெண் நிலவினடியில் குறுங்கட்டிலில் பூக்கள் தூவியிருக்க, பள்ளி யானையைப் போல பெருமூச்சு விட்டுக் கொண்டே விறலவன் (தலைவன்) தன் புதல்வனைத் தழுவுகிறான். புதல்வனின் தான் தலைவனைத் தழுவுகிறாள்..(பேயனார்-359)

கொடிய பிரிவால் வாடும் தலைவி- ‘பெருங்குளம் ஆயிற்று என் இடைமுலை நிறைந்தே’(நன்னாகையார் -325).visualize செய்யும் போது பிரிவை நறுக்கென்று சொல்லிவிட்டது போல இருக்குமல்லவா அந்தக் காட்சி? #நேர்த்தி

இந்தப் பெண் தான் எத்தனை அழகு பாருங்கள்… கொல்லைப் புறத்தில், திணை விதைத்த நிலத்தை கிளிகளிடமிருந்து காவல் செய்து கொண்டிருக்கிறாள் ஒரு பெண். ஒரு சின்ன பொருளைக் கொண்டு சப்தமெழுப்பி கிளிகளை விரட்டுகிறாள். அந்த இனிமையான சப்தம், அவளது குரல் தானென்று நினைத்து கிளிகள் பறக்காமல் இருந்தனவாம். அதைப் பார்த்து இவள் அழுது விடுகிறாள் (அது புலந்து அழுத கண்ணே), இவளது கண்ணீர் படிந்த முகம் குளிர்ந்த நீர் சொட்டுக்கள் படிந்த குவளை மலரைப் போல இருந்ததாம் (தண் துளிக்கு ஏற்ற மலர் போன்றவ்வே). (கபிலர்-291)

இது கொஞ்சம் பிற்போக்குத்தனமான அழகான கவிதை- என்னதான் தோட்டத்தில் இருக்கும் மலர்களையெல்லாம் உழவர்கள் விளையாட்டுக்குப் பிடுங்கி எறிந்தாலும், ‘கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவோம் என்னாது’அங்கேயே மீண்டும் மீண்டும் மலரும்.அது போலத் தான் நானும் தலைவா! (உரையூர் சல்லியன் குமாரனார்-309)

பெண்ணின் மனதை கவிதையில் புனைய நினைக்கும் ‘கொல்லன் அழிசி’யின் மனதில் இருக்கும் வக்கிரத்தைப் பாருங்கள். கன்றும் உண்ணாமல், மற்றோர் கறக்கவும் செய்யாமல், நிலத்தில் வழிந்து கெடும் மாட்டின் பாலைப் போல, தனக்கும் இல்லாமல், தன் தலைவனுக்கும் உதவாமல், பசலை பிடித்து வீணாகிறதாம் அந்த பெண்ணின் பெண்மை. பெண் என்பவள் ஆணின் ஒரு commodity என்ற அர்த்தம் தொணிக்கிறதா (பாடல்-27)

காமத்தைக் கையாள்வதைப் பற்றி தலைவன் நண்பனிடம் சொல்கிறான்…. ‘ஞாயிறு காயும் வெவறை மருங்கில் / கை இல் ஊமன் கண்ணின் காக்கும் வெண்ணெய் உணங்கல் போல’வாம் காமத்தை அடக்குவது. அதாவது பாறை வெயிலில் உருகிக் கொண்டிருக்கும் வெண்ணெய்க் காப்பாற்ற கையில்லாத ஊமை ஒருவன் படும் பாட்டைப் போன்றதாம்..(58-வெள்ளிவீதியார்)

‘வான் தோய்வற்றே, காமம்’..(102-ஓளவையார்).நம் காலத்தில் ஒரு பெண்ணால் இப்படிச் சொல்லிவிட முடியுமா? என் காமத்தை என்னால் அடக்க முடியவில்லையென்று.

இது அல்டிமேட்…பாடல் எண் 231, பெருங்கடுங்கோ. ‘ஒரு ஊர் வாழினும் சேரி வாரார்’ கீழ்சாதிப் பெண்ணின் காதல் போல… ஒரு ஊரில் வாழ்ந்தாலும், எங்கள் சேரிக்கு வரமாட்டார். வந்தாலும் என்னைக் கட்டித் தழுவமாட்டார். அயலாரின் சுடுகாட்டைப் பார்க்காது தவிர்ப்பதைப் போல என்னைத் தவிர்த்து விடுவார். ஆனால் அறிவை இழந்துவிட்ட இந்தக் காமம் வில் உமிழும் கணையாய் பாயும்.

ஒரு அழகான காட்சி… பெரிய யானை ஒன்று வேங்கை மரத்தை மிதித்து தள்ளிவிடுமாம். அப்படி கீழே விழாமல் சாய்ந்திருக்குமாம். அப்படிச் சாய்ந்திருப்பது குறப்பெண்கள் மலர்களை நின்றபடியே பறிக்க ஏதுவாய் இருக்குமாம்..

தலைவனை இப்படி குற்றம் சுமத்துகிறாள் தோழி..visualize செய்து பாருங்கள்.. பாலைவனம்… அதில் கள்ளிச் செடி இருக்கிறது… வெப்பம் தாளாமல் கள்ளிக் காயென்று வெடிக்கிறது அந்த சத்ததால் பயந்து போன புறா ஜோடியொன்று பறந்து செல்கிறது.அத்தனை கொடிய பாலைவனத்தில் கூட துணிந்து சென்று பணம் தேடுகிறாரென்றால். இவ்வுலகில் காதலை விட பணம் தான் முக்கியம் என்று புலம்புகிறாள் .#காட்சிச்சுவை (174-வெண்பூதி)

இது ஒரு லாஜிக்கல் க்வெஸ்ட்டின்..கிழக்கு கடற்கரையில் சிறகொடிந்த நாரை ஒன்று சேரனின் தொண்டித் துறைமுகத்தில் (extreme west direction) இருக்கும் அயிரை மீனுக்காக ஏங்குவது போல ஏங்குகிறாய் நெஞ்சே! (128-பரணர்)

இது செம்ம கவிதை…நாரையிடம் இருந்து குளத்துள்ளே எஸ்கேப்பான மீன் ஒன்று வெள்ளைத் தாமரைகளையும் நாரையென்றே நினைத்துப் பயப்படுமாம். அது போல தலைவனின் பாணன் ஒருவன் பொய்யான தகவலொன்றைச் சொல்ல..பின் எந்த பாணன் சொல்வதையும் உணமையென்று மனம் ஏற்க மறுக்கிறதாம் தலைவனைப் பிரிந்த தலைவிக்கு.

என் காதலி கெட்டிக்காரி, முந்தைய இரவில் நான் சூடிய பூக்களை, காலையில் உதிர்த்து எண்ணையெய்யில் கலந்து தலைக்குப் பூசிவிட்டு எதுவும் நடக்காதது போல தன் சுற்றத்தோடு சேர்ந்து கொள்கிறாள்.

(பி.கு) இந்தக் கவிதைகளில், தலைவி தோழியிடம் புலம்புவது போன்ற கவிதைகள், தோழி தேற்றிச் சொல்லும் கவிதைகள், தலைவியின் சுயபுலம்பல் போன்றவற்றை ஒதுக்கிவிட்டு, மற்ற கவிதைகளை மட்டுமே இங்கே பகிர்ந்திருக்கிறேன். அவையும் அழகான கவிதைகள் தான். ஒரே ஒரு சேம்பிள்.. வண்டுகள் மொய்க்கும் கொடியை கொன்றைப் பூக்களுக்கு நடு நடுவே வைத்து கட்டிய மலர் கதம்பம், இது கார்காலம் என்று அறிவித்தாலும் நான் நம்பமாட்டேன் அவர் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். கார் காலத்தில் திரும்பிவிடுவேனென்று (21-ஓதலாந்தையார்)

Related Posts