சினிமா தமிழ் சினிமா

தற்காப்பு – திரைப்பட விமர்சனம்

சிறிய அளவில் தாதாயிசத்தில் ஈடுபடும் நபர் ஒருவரோடு உரையாடுவேன்.. தனிப்பட்ட முறையில் அவரது வேறு சில பரிமாணங்கள் மீது எனக்கு மரியாதை உண்டென்பதால்.

அப்போது அவர் சொல்லுவார்…

போலீஸ் தாண்டா தம்பி முதல் ரெளடி.. நாங்கெல்லாம் ஒன்னும் கிடையாது. எங்கள வேண்டாம்னு மேலிடம் முடிவு பண்ணுச்சுனா எப்போ வேணாலும் எங்கள போட்ருவானுங்க. என்று.

கெளதம்மேனனின் காட்சிகள் முரண் நினைவுகளாக மனதில் நிழலாடுகிறது. காவல்துறையினர் மக்களுக்காக உயிரை விடவும் தயாராக இருப்பர் , சூன்யத்திலிருந்து ஒரு ரெளடி உதித்து.. கொலைகள், கடத்தல்கள் செய்வதை மட்டுமே வாழ்வாக கொண்டிருப்பான்.. காவல்துறையைச் சேர்ந்த நமது நாயகன் அவரின் உயிரை பணயம் வைத்து ரெளடியைக் கொல்வார்.

ரெளடிகள் உதித்தது எப்படி? வளர்வது எப்படி?

ரெளடிகளின் வளர்ச்சியிலும், அதிகாரப் பரவலிலும் உடந்தையாய் இருப்பது யார்?

ரெளடிகளின் கொலைகளும், கொள்ளைகளும் யாருக்காக?

ரெளடிகள் கூலிப்படையினர் எனில் அவர்களுக்கு கூலி கொடுப்பது யார்?

அந்தக் கூலியில் பங்குகள் யார் யாருக்கு?

இப்படி எந்த விசாரணைக்கும் செல்லாத மொட்டையான ,தட்டையான படங்களே கெளதம் மேனனின் படங்கள், ( ஆனால் அபாரமான காட்சி மொழியை கெளதம் கையாள்வதை மக்கள் படைப்பாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் ) பல வருடங்கள் ஒரு ரெளடியை வளர விடும் இந்த system ஒரு கட்டத்தில் அவரை காலி செய்து விடுகிறது. வளர விடுவதிலும் யாரோ ஆதாயம் அடைகிறார்கள் , காலி செய்வதிலும் யாரோ ஆதாயம் அடைகிறார்கள்.

இப்படி கெளதம்மேனன் படங்கள் பேசாத அல்லது பேச மறுத்த நிஜத்தின் பக்கங்களையெல்லாம் திரட்டி நம் முன் வைக்கிறது ’தற்காப்பு’ திரைப்படம்.

காவல்துறை உண்மையில் யாருக்காக இயங்குகிறது ? அவர்கள் நிகழ்த்தும் போலி என்கவுண்ட்டர்கள் யாருக்காக ? என காவல்துறையின் உண்மை முகத்தையும் அவர்களுக்கு பின் இயங்கும் வலைப்பின்னலையும் தோலுரித்து காட்டி பொது புத்தியில் ஒரு அதிர்வை ஏற்படுத்துகிறது தற்காப்பு.

காவல்துறையினர் மக்களை காக்கும், தீமையை அழிக்கும் நாயகர்கள்.. அவர்கள் இந்திரனின் வாரிசுகள், ராமனின் படையினர்…. ஆதியிலிருந்து இருக்கும் தீமையை தற்காலத்தில் அழிக்கும் கடவுளின் பிரதிநிதிகளே காவல்துறையினர் என்றே பொது புத்தி நம்புகிறது. நம்ப வைக்கப்பட்டிருக்கிறது.காவல்துறையில் இருக்கும் நேர்மையான சில அதிகாரிகளும் ஆரம்பத்தில் காவல்துறையை இப்படியே நம்புகின்றனர்.

சரி தான் , ஆதியிலிருந்தே தீமை இருக்கிறது.. அந்தத் தீமை…

4000 வருடங்களுக்கு முன் ஆண்டான்களாகவும்

2000 வருடங்களுக்கு முன் அரசர்களாகவும்

தற்பொழுது முதலாளிகளாகவும்

இருக்கிறது..

அந்தத் தீமையை காப்பாற்றும் முதல் அடியாள் கடவுள், இரண்டாவது அடியாள் மதம், மூன்றாவது அடியாள் காவல்துறை… நான்காவது அடியாள் அந்த தீமையின் விளைவாக உருவெடுத்து அந்தத் தீமையால் வளர்த்தெடுக்கப்பட்டு , பின்னர் அந்தத் தீமையாலேயே வீழ்த்தப்படும் ரெளடிகள்.

ஆம், ராமனும், இந்திரனுமே அந்தத் தீமைகள்…

இப்போது அந்த தாதா நண்பர் சொன்ன வரிகளை இங்கு பொருத்துவோம்..போலீஸ் தாண்டா தம்பி முதல் ரெளடி.. நாங்கெல்லாம் ஒன்னும் கிடையாது. எங்கள வேண்டாம்னு மேலிடம் முடிவு பண்ணுச்சுனா எப்போ வேணாலும் எங்கள போட்ருவானுங்க.

சமூக மனசாட்சியை உலுக்கி சிந்திக்க வைப்பதும், கேள்வி கேட்க வைப்பதும் ஒரு படைப்பின் முக்கிய பணிகள்.. அந்தப் பணியை திறம்பட செய்திருக்கும் தற்காப்பு திரைப்படம் பாராட்டுக்குரியது.

நல்ல திரைக்கதை உத்தியை, சிறப்பான திரைமொழியுடன் வழங்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ரவி. நாயகன் வசனங்களாக பேசி ,போலி என்கவுன்ட்டரைப் பற்றி பிரச்சாரம் செய்யாமல் படம் காட்சிகளின் ஊடாக பிரச்சினையின் தீவிரத்தை நமக்குள் உரையாடுகிறது , உணர்த்துகிறது ,சிந்திக்க வைக்கிறது. பிரச்சாரங்கள் சில மணித்துளிகளில் காற்றோடு கலந்து கடந்து போகும்… காட்சிகளின் உறவாடல் இதயத்தில் ஆழ நிற்கும். ‘காக்கா முட்டை’ திரைப்படத்தைப் போல்.

அதனால் தான் காட்சிகளின் மொழி வேண்டும் என்று சினிமா நேசர்கள் படித்து படித்து சொல்கிறார்களே அன்றி ,அது மக்களிடமிருந்து அன்னியப்பட்டு நிற்கும் மேதமையோ மேட்டிமையோ அல்ல. மக்களை இன்னும் இன்னும் வென்றெடுப்பதற்கே சிறப்பான திரைமொழி தேவைப் படுகிறது.

திரைக்கதை உத்தி, ஷாட்டுகளின் தேர்வு, கூர்மையான எடிட்டிங் என அனைத்தும் கச்சிதமாக இருக்கும் படத்திற்கு திருஷ்டிப் பொட்டாய் இருக்கிறது கதாபாத்திரத் தேர்வும், அவர்களது நடிப்பும் மற்றும் இரண்டு கிளைக்கதைகளும்.

சமுத்திரக்கனி, ரியாஸ்கான், அரசியல்வாதி கதாபாத்திரம் தவிர வேறு யாரும் கதாபாத்திரத்துக்கு ஒட்டவேயில்லை. நாயகன் சக்தி வாசு சிறப்பாக நடிக்க முயற்சித்திருந்தாலும் காவல்துறை ஆய்வாளர் பாத்திரத்துக்கு அவர் சிறிதும் பொருந்தவில்லை.

கதாபாத்திரத் தேர்விலும் , நடிப்பை வாங்கிய விதத்திலும் , கிளைக்கதைகளிலும் சீரிய கவனம் செலுத்தியிருந்தால் ’ தற்காப்பு ‘தமிழின் முத்திரைப் படங்களில் ஒன்றாகியிருக்கும்.

– அருண் பகத்

Related Posts