சினிமா தமிழ் சினிமா மாற்று‍ சினிமா

தங்க மீன்கள் – சினிமா மொழியை தவறவிட்ட இயக்குனர் ராம் !

(தங்க மீன்கள் திரைப்படத்தை வாழ்த்தி வரவேற்கும் குரல்கள் கேட்கின்றன. ஆனால், இயக்குனர் ராம் – மேம்பட, அவரின் படைப்புகள் மேம்பட வாழ்த்துகள் மட்டும் போதாதே. தங்க மீன்கள் திரைக்கதையிலும், கதையிலும் உள்ள குறைபாடுகளை இந்த விமர்சனம் முன் வைக்கிறது. அதுவும் இயக்குனர் ராம் என்பதால் உருவான எதிர்பார்ப்பிலிருந்து இந்த விமர்சனம் அவரின் அடுத்த இயக்கமான ‘தரமணி’யை மேம்படுத்த உதவுமென, நம்புவோம்)

Thanga_meenkal

 

Image Courtesy : Wikimedia

தங்க மீன்கள் – இது நான் வியந்த ராமின் படம் அல்ல,மனோன்மணியம் சுந்தரனார் பலகலைக்கழகத்தில் பேசிய ராமின் படமல்ல.. இது ஏதோ ராம் சார் இயக்கிய படம் . “கற்றது தமிழ் படம் பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் இது ராமின் படம் இல்லை என்று.” கண்டிப்பாக இது மாற்று சினிமா இல்லை . வில்லனும், ஹீரோயின் இடுப்பு ஷாட்களும் இல்லை என்பது மட்டுமே மாற்று சினிமாவிற்கான தகுதி ஆகிவிட முடியாது.

கற்றது தமிழ் படத்தோடு சில கருத்து வேறுபாடு இருந்தாலும் அதன் சினிமா மொழி அட்டகசாமாக இருக்கும் . ஆனால் தங்க மீன்கள், சினிமா மொழி என்பதை மதித்ததாய் தெரியவில்லை.

தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் திரை மொழி பாலுமகேந்திரா செப்பனிட்டுக் கொடுத்தது தான். அனால் அவரது சீடரான ராம் அதை விட்டு புதிய ஒரு சினிமா மொழியை உருவாக்கவில்லை என்றாலும் கூட பரவாயில்லை. சில உலகப் படங்களின் பாதிப்பில் நன்றாக உருவாகும் ஒரு சீனைக் கூட ஏதாவது செய்து உடைத்து விடுகிறார். ஒரு வேளை ஓவர் பெர்பெக்ஷனாக இருக்கவேண்டும் என்று நினைத்ததில் ஏற்பட்ட சறுக்கலாக இருக்கலாம்.

எதைச் சொல்ல வருகிறார்?

ராமுக்கு படத்தை என்னவாக எடுக்கலாம் என்பதில் பெரிய குழப்பமே ஏற்பட்டுவிட்டது. மகளுக்காக பொருள் தேடி அலையும் ஒரு அப்பனின் வலியைக் காண்பிப்பதா ? இல்லை தனியார் பள்ளிகளின் கொடுமைகளைக் காண்பிப்பதா ? இல்லை கல்வியாலும் பெரியவர்களாலும் புரிந்து கொள்ள முடியாத குழந்தைகளின் உலகத்தைக் காண்பிப்பதா ? என்று யோசித்து எல்லாவற்றையும் கலந்து எதுவுமே முழுமையாக இல்லாமல் அரைகுறையாக அடித்து கிழித்திருக்கிறார்.

இன்னொரு பெரிய குறை படத்தின் இரு முக்கிய கதாபாத்திரங்கள். கற்றது தமிழில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் உள்ளும் புறமும் அழகாக விளக்கப்பட்டிருக்கும். ஜீவாவில் இருந்து படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே வரும் ஜீவாவின் பி பி ஓ நண்பன் வரை முழுமை பெற்றிருக்கும். இதில் கூட எவிடா மிஸ்ஸின் கணவன் கதாப்பாத்திரம் ஐந்து நிமிடங்களுக்குத் தான் வரும் அப்படி இருந்தும் அந்த கதாப்பாத்திரம் முழுமையாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும்.

இதுவரை அவன் என்ன நினைத்துக் கொண்டிருந்தான் இனிமேல் என்ன நினைப்பான் என்பது எல்லாம் தெளிவாக பார்ப்பவனுக்குப் புரியும். ஆனால் இதில் மிக முக்கியமாக கதையின் நாயகனாகிய கல்யாணியின் கதாபாத்திரமே பயங்கர குழப்பத்தோடு காண்பிக்கப்படுகிறது. குழந்தை மனதுக்காரனாக ஒரு காட்சியில் (மகளுக்கு மரணத்தைப் பற்றி சொல்லும் போதும், உணர்ச்சி வசப்பட்டு டீச்சரைத் திட்டும் போதும் ) , இயலாதவனாக ஒரு காட்சியில் (ஸ்கூல் பீஸ் தேடி அலையும் போது ) , அறிவுஜீவியாக ஒரு காட்சியில் (மகளுக்கு டபிள்யூ கற்றுக் கொடுக்கும் போது ) , பொறுப்பற்றவனாக ஒரு காட்சியில்(படிப்பையும் , வேலையையும் விட்டுவிட்டு அலைவது ) , மிகவும் பக்குவப்பட்டவனாக ஒரு காட்சியில் (தனது தந்தையுடன் காரில் அனுப்புவது ) என்று குழம்பி குழப்புகிறார்.

அவரது மனைவி கதாப்பாத்திரம் பனிரெண்டாவது படிக்கையில் கதாநாயகனை நம்பி வந்தவள். அவளுக்கு அவனின் செயல்பாடுகளில் மேல் எந்த அதிருப்தியும் ஏற்படவே இல்லை. இயல்பாக வெளிப்படும் மாமியார் வெறுப்பு கூட இல்லை. இத்தனைக்கும் மாமியார் கதாப்பாத்திரம் அவரை சீண்டுவதாகத் தான் இருக்கிறது. ஆனால் அதற்கு ஏற்ற ரியாக்சனை அந்த மருமகள் கதாப்பாத்திரம் செய்வதில்லை.

தன் மகளின் படத்தைக் கழட்டும் போது கூட மாமியார் விழுந்து விடாமல் இருக்க டேபிளைத் தாங்கிப் பிடிக்கிறார் . மிக மிக நல்லவள் கதாப்பாத்திரம் . நமது மனைவி இப்படி இருக்க மாட்டாளா என்று ஆண்கள் ஏங்கும் ஒரு அடிமைப் பாத்திரம் . பொதுவாக சீரியலில் இது போன்ற கதாப்பாத்திரங்கள் வரும். ஆனால் எதார்த்தம் இது இல்லை. மகள் வயதுக்கு வருவதைப் பற்றி கேட்கும் போது இயலாமையால் ஏற்படும் கோபம் தவிர வேறு எந்த எதார்த்த உணர்ச்சியும் அக்கதாப்பாத்திரம் வெளிப்படுத்தவில்லை.

யூகித்து மட்டும் பார்க்க முடியுமா?

செல்லம்மாவின் கதாப்பாத்திரத்தின் முழுமையை நாமே யூகித்துதான் கண்டு பிடிக்க முடிகிறது. அப்படி மற்ற பாத்திரங்களை யூகிக்கமுடியவில்லை அது என்னைப் போன்ற பார்வையாளனின் போதாமையாக கூட இருக்கும். செல்லம்மாளுக்கு நண்பர்கள் என்று யாரும் இல்லை. ஆரம்ப காட்சியிலேயே மற்ற சிறுவர்கள் விலையாடிக் கொண்டிருக்க அவள் மட்டும் தங்க மீன்களைத் தேடி போகிறாள்.

அவளுக்கு ஒரே ஒரு தோழி தான் இருக்கிறாள் அவள் பெயர் நித்யஸ்ரீ. எனக்குத் தெரிந்து எல்லாம் மிகச் சரியாக படைக்கப்பட்ட ஒரு பாத்திரம் நித்யஸ்ரீ தான். அவள் தான் எதார்த்தமான ஒரு குழந்தை .அவள் அளவு தான் ஒரு குழந்தையால் யோசிக்க முடியும் என்பது என் கருத்து. செல்லம்மாவிற்கு இருக்கும் அனைத்துப் பிரச்னைகளும் அவளுக்கும் இருக்கிறது . படிப்பு ஏறவில்லை , அம்மா திட்டுகிறாள் ஆனால் செல்லம்மா தனது பிரச்னைகளுக்கு தீர்வு தேடுவது போல் நித்யஸ்ரீ தீர்வு தேடுவதில்லை.

குழந்தைகள் பிரச்னைகளுக்குத் தீர்வு தேடுவார்களா என்பது எனக்குக் கேள்விக் குறியாய் இருக்கிறது. நித்யஸ்ரீ க்கு பூரி கிடைப்பதே அந்த பிரச்னையில் இருந்து விடுபடப் போதுமானதாக இருக்கிறது . உண்மையில் குழந்தைகளுக்குத் தங்களது பிரச்னைகளில் இருந்து வெளிவர தீர்வு தேவையில்லை .

செல்லம்மா மற்ற குழந்தைகள் போல் இல்லை என்பதால் தீர்வு தேடுகிறாள் என்று நினைக்கலாம் . ஆனால் கடைசியில் பக் நாய் வந்தால் போதும் என நினைக்கிறாள். அது கிடைக்காத பட்சத்தில் தனது தந்தை ஏமாற்றிவிட்டார் என்பதற்காக தங்க மீனாக மாற நினைக்கிறாள் .இரண்டாவது படிக்கும் பிள்ளைக்கு படிப்பில் டபிள்யூ போடுவது தான் பிரச்னையாக இருக்குமா ?.

அதுக்கு முன்னாடி ப்ரிகேஜி, எல்கேஜி ,யூகேஜி , ஒன்னாம் வகுப்புன்னு இவ்ளோ இருக்கு. குறைந்த பட்சம் ஒரு வார்த்தைக்கான ஸ்பெலிங் தெரியவில்லை என்றாவது சொல்லியிருக்கலாம். கிளைமேக்சில் “என் பொண்ணுக்கு சாவப்பத்தி கூடத் தெரியாத அளவுக்கு லூசா ?” என்று கல்யாணி கேட்கும் போது அதுவரை கட்டி வைத்திருந்த செல்லமா பாத்திரம் ஞே என்று ஆகிவிடுகிறது.

அப்பாவிடம் இருந்த கவனம்

கல்யாணத்தின் அப்பா பாத்திரமும் சரியாக விளக்கப்பட்டிருந்தது. கல்யாணத்தின் அப்பா, நல்லாசிரியர் விருது பெற்றவர். ஒரு அப்பாவாகவும் தாத்தாவாகவும் மாமனாராகவும் மிக கச்சிதமாக செய்யப் பட்டிருக்கும் பாத்திரம். இதே கவனத்தை எதார்த்தத்தை மற்ற பாத்திரங்களிலும் செலுத்தியிருக்கலாம் .

படத்தில் சில சீன்கள் தொடர்பற்று வருகின்றன . ஒரு வேளை எடுத்து நீளம் காரணமாக வெட்டி எடுத்துவிட்டார்களா என்று தெரியவில்லை. எப்போதும் சில்வர் மேனாக தனது மகளை குஷி படுத்தும் கல்யாணி அந்த வேடத்தை துறக்கும் போது அந்த குழந்தையின் ரியாக்ஷன் என்னவென்றே தெரியவில்லை. அப்போதே செல்லம்மாவுக்கு தனது தந்தையின் பிம்பத்தின் மேல் ஒரு சீறு கிரலாவது விழுந்திருக்கவேண்டும் ஆனால் அதைப் பற்றி எந்த தகவலும் இல்லை.

அதே போல் கேமரா ஆங்கில்கள் எல்லாம் மிக அழகாக நேர்த்தியாக உலகத் தரத்திற்கு வைக்கவேண்டும் என்று வைத்திருக்கிறார்கள். பல உலக சினிமாக்கள் என்று சொல்லப்படுபவையில் இருப்பது போல் இருக்கிறது. ஆனால் எதுவுமே படத்தோடு ஒட்டவில்லை . இது போன்ற படத்திற்கு கேமரா எங்கே இருக்கிறது என்று தெரியாத அளவுக்கு கதையோடு ஒன்றி இருக்கவேண்டும் என்று தோன்றியது .

கற்றது தமிழ் படத்தில் ரயில் ஒரு அற்புதமாக இருக்கும் ஆனால் இதில் ரயில் ஒரு பெரும் மண்டை வலி. திடீர் திடீர் என்று வந்து பயமூட்டுகிறது. சில இடங்களில் குறியீடாக வருகிறது . குறிப்பாக கல்யாணமும் மனைவியும் பேசி விட்டு நடக்கும் போது வரும் ரயில் மிகக் கொடுமையாக இருக்கிறது . அதை கிராபிக்சில் பண்ணியிருப்பார்கள் போல மொத்தமாக ஒட்டவே இல்லை.

எனக்கு படத்திலேயே பிடித்த இரண்டு காட்சிகள் ஒன்று எவிடா மிஸ் வீட்டுக்கு கல்யாணி போவது அதில் மிக நுட்பமாக எவிடா மிஸ்க்கும் அவர் கணவருக்குமான உறவு . பின் இன்னொரு காட்சியில் போனில் பேசும்போது எவிடா மிஸ் அவரது கணவனைப் பார்த்து புன்னகைப்பது. அதில் தான் ராம் இருந்தார்(அதில் மட்டும் தான் என்பது வருத்தமான விஷயம் )

அடுத்தது செல்லம்மா எவிடா எனும் சிறுமியைப் பற்றி சொல்லும் கதை. மற்ற எல்லா சீன்களும் எங்கோ பார்த்த கேட்ட சீன்கள் தான்.

ஒரே ஜீன் ?:

படத்தில் வரும் எல்லோருமே ராம் போலவே நடிக்கிறார்கள். முதல் வரிசையில் உட்கார்ந்து பார்த்தால் எது ராம் எது ராமின் அப்பா எது செல்லம்மா என்று கன்பியூஸ் ஆகவேண்டியிருக்கும். எல்லோரும் ஒரே குடும்பம் அதனால் ஒரே ஜீன் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம் . (நன்றி கேஸ்ட்ரோ கார்த்தி ).

ஒரு படைப்பாளிக்கு வெற்றி வெவ்வேறு விதமான கதாப்பாத்திரங்கள் உருவாக்கும் போது தான் கிடைக்கும். கற்றது தமிழில் ஜீவா மட்டும் தான் ராமாகத் தெரிவார் . அனால் இதில் எங்கு நோக்கினும் ராம் தான் . ராம் நடித்துக் காட்டியதை அப்படியே நடித்திருக்கிறார்கள் நடிகர்கள். யுவன் சங்கர் ராஜாவும் பின்னணி இசையில் பல வருடங்களுக்கு முன் அவரது அப்பா செய்ததை செய்துள்ளார்.

சோக சீன்களில் வயலினை எடுத்து வைத்துக் கொண்டு தேய் தேய் என்று தேய்க்கும் போது ஷ்ஷ்ஷ்ஷ்ப்ப்பப்ப்ப்பா……….. முடியல. சோக சீன்களில் இனி வயலின் பயன்படுத்தக் கூடாது என்று உறுதி ஏற்கச் சொல்லவேண்டும். உறுதியை மீறுபவர்களின் படத்தில் டைம் டூ லீட் என்பது போல் வசனம் இருக்கிறது என்று அரசாங்கத்திடம் போட்டுக் கொடுத்து தடை செய்ய வைத்து விடவேண்டும் .

பாடல்களும் காட்சிகளும் அருமையாக இருக்கின்றன என்பது ஒரு ஆறுதல் குறிப்பாக எந்த ஸ்கூலும் பிடிக்கல பாடல் அதையே இரண்டரை மணி நேரத்திற்கு போட்டிருந்தால் கூட சலிப்பு தட்டாமல் பார்க்க முடியும் என்று தோன்றியது.

கல்யாணத்தை எது மாற்றியது?

ஆரம்பத்திலேயே செல்லம்மா அரசுப் பள்ளியில் சேர்க்கச் சொல்லும் போது மறுக்கும் கல்யாணி கடைசியில் ஏன் அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அதற்கான ஒரு உறுதியான காரணம் இல்லை . எவிடா மிஸ் அங்கே வேலைக்குச் சேர்ந்திருக்கிறார் என்பது மட்டும் தான் காரணமாகச் சொல்லப்படுகிறது . எவிடா மிஸ் ஒரு தனியார் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்திருந்தால் அங்கே கொண்டு போய் தான் சேர்த்திருப்பார். கடைசியில் சம்மந்தமே இல்லாமல் படத்தில் ஒப்புக்கு கூட காட்டியிராத அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நன்றி சொல்லி வெறுப்பேத்தி இருப்பார்.

இது கெளதம் மேனன் தயாரித்த இன்னொரு கௌதம்மேனன் படம் . கௌதம்மேனன் எப்படி காதலன் காதலிக்கு இடையே ஒரு வித மான உறவை தொடர்ந்து காண்பித்து பாதிக்கு மேற்பட்ட காதலர்களை கையைத் தூக்கிக் கிறுக்குத் தனம் செய்யவைத்தாரோ. அது போலவே இந்த படத்தைப் பார்த்துவிட்டு இதுவரை அவர்கள் மகளின் அருகில் இருக்கும் போது காமத்தைப் பற்றியே யோசித்திராத அப்பன்களும் “முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று ” மனசுக்குள்ளேயே சொல்லிக் கொண்டு முத்தம் இடலாம்.

“ஏன் வானம் நீலமா இருக்குப்பா ?” என்கிற மகளின் கேள்விக்கு “யாரோ இங்க் பாட்டில கொட்டிட்டாங்க செல்லம் ” என்று குழந்தைத் தனமாக பதில் சொல்வதாய் நினைத்துக் கொண்டு பிள்ளைகளை மழுங்கடித்துக் கொண்டிருக்கலாம்.

மாற்று சினிமாவை நோக்கி நகருங்கள்:

உண்மையான மாற்று சினிமா எடுக்க விரும்பும் நண்பர்களுக்கு சிங்கம் மாதிரியான படங்களை மட்டும் இல்லாமல் தங்க மீன்கள் மாதிரியான படங்களையும் கடந்து வரவேண்டிய பெரும் சவால் இருக்கிறது. எப்படிடா நீ சிங்கத்தையும் தங்கமீன்களையும் கம்பேர் பண்ணலாம் என்று சிங்கம் படத்தில் வரும் அடியாட்கள் மாதிரி ஒரு க்ருப் கிளம்பி வரலாம் சிங்கத்தோட கம்பேர் பண்ணவில்லை சிங்கம் மாதிரி இதுவும் ஒரு கமர்ஷியல் சினிமா என்று  தான் சொல்கிறேன். சிங்கம் சாராயம் விக்கிறவன்  என்றால்  தங்க மீன்கள் குளிர்பானம்  விக்கிறவன். ரெண்டு பேருமே வியாபாரி அவ்வளவு தான்.

கற்றது தமிழில் இளநீர் வியாபாரியாக இருந்த ராம் இதில் குளிர்பான வியாபாரியாக சரிந்திருப்பது தான் சினிமாவின் நஷ்டம். கமல் ஆரம்பத்தில் நல்ல முயற்சிகளை எடுக்க ஆரம்பித்தார் எல்லோரும் புகழ்ந்தே அவரை அழித்து விட்டார்கள். அதே ராமிற்கும் நடந்து விடுமோ என்பது தான் அச்சம் . ஒரு ரசிகனாக ராம் சாரின் படைப்பை அல்ல நான் ராமின் படைப்பையே எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

Related Posts