சினிமா தமிழ் சினிமா

தங்க மீன்கள் – சாதாரணமானவர்களின் வாழ்க்கை …

Thanga Meengal

தங்க மீன்கள் – பள்ளிக்கூடங்கள் குறித்த கதை என்று மேம்போக்காக சொல்லிவிடலாம். ஆனால், இந்தக் கதையில் அது ஒரு பகுதி மட்டுமே.

20 ஆம் நூற்றாண்டில், நம் சமகாலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஏராளமான அப்பன்களின் கதை இது. தன் வாழ்க்கையில் 2 திரைப்படங்கள் மட்டுமே இயக்கிய ஒரு சாதாரண மனிதனின், அசாதாரணமான படைப்பு தங்க மீன்கள்.

எல்லோரும் பாராட்டுவதைப் போலவே ‘செல்லம்மாவின்’ நடிப்பும், அவள் அப்பாவாக கல்யாணியின் உணர்வுகளும், தாத்தாவின் இறுக்கமும் – இன்னும் பூரி நித்யஸ்ரீ வரை கதையின் மாந்தர்களான ஒவ்வொருத்தரும் பிசிறு தட்டாமல் வாழ்ந்திருக்கிறார்கள். இசையிலும், பின்னணியிலும் யுவன் ஷங்கர் ராஜா வார்த்தெடுத்துள்ளார்.

இடத் தேர்வு, வசனங்கள், திரைக்கதை பின்னல்  என எல்லாம் நம்மோடு ஒரு விவாதம் செய்கின்றன. தரமான, மக்களுக்கான சினிமா இது.

***

“மனுசனுக்கு மட்டுமா வயசாகுது, தொழிலுக்கும் வயசாகுதில்ல?”

நசிந்துபோன பாத்திரப் பட்டறைத் தொழிலின், கடைசித் தொழிலாளியாக, தன் சம்பள பாக்கியைக் கேட்டு அலுத்துப்போன கல்யாணிக்கு, பட்டறை உரிமையாளரின் ஒற்றை நியாயம் அந்த வசனம்.

அத்துக் கூலிகள் அதிகரித்துவிட்ட சமகாலத்தில் வாழ்க்கையின் அன்றாடத் தேவைகளுக்காக, உழைப்பை விற்க வாய்ப்புக் கேட்டு, நாடோடியாய், பிறந்த இடம் மறந்து அலையும் – நம் சக மனிதர்களில் ஒருத்தனாக வருகிறார் கல்யாணி.

1992 ஆம் ஆண்டுக்கு பின்னர், இந்தியா ‘காட்’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஒரு கையெழுத்து, நம் தலையெழுத்தையெல்லாம் எப்படி கிறுக்கலாக்கிவிட்டது?.

அரசுப் பள்ளி தலைமையாசிரியராக இருந்த கல்யாணியின் அப்பா, ‘ஓய்வூதியம், பிஎஃப், இஎஸ்ஐ உள்ளிட்ட சட்ட சலுகைகளை அனுபவித்த நமக்கு முந்தைய தலைமுறையின் பிரதிநிதி’. அந்தக் கால மில் தொழிலாளர்கள் ஆகட்டும், ஆசிரியர், அரசு ஊழியர்கள் ஆகட்டும் – சட்டப்படியான சமூகப் பாதுகாப்பு, ஓய்வூதியம் – இன்றுவரைக்கும் அவர்களை தலை நிமிர்ந்தே வாழ வைத்திருக்கிறது.

”டிவி விளம்பரத்துல காட்டுற பொருளுக்கெல்லாம், விலையை போட்டா காட்டுறீங்க?. அதைப் பார்த்து குழந்தை ஆசைப்படுறா… கிடைக்கலனா அவ ஏங்கிடுவா இல்ல …” என ஆற்றாமையிலும், ஆத்திரத்திலும் ஒரு அப்பா பொருமும் காட்சி … சினிமா மட்டுமல்லவே!

”12 ஆம் வகுப்பு படிக்கும்போது, வா என அழைத்ததும் வந்து நின்றேன். உங்க மேல நம்பிக்கை இல்லாமலா?. இப்போ அது முடியல … நான் ஒரு பொண்ணுக்கு அம்மா” வீட்டைவிட்டு வெளியேறலாம் வா என்று ஒரு கணவன் அழைக்கும்போது, தயங்கி, உடன் வராமல் போன மனைவி சொல்லும் நியாயம் அது.

உண்மையில், அப்படித்தான் நடக்கும். பொருளாதார நிச்சயமற்ற வாழ்க்கையில், இருக்கும் ஒரு புகலிடமான வீட்டை விட்டு, தெருவுக்கு வந்து, வாழ்க்கையை முதலில் இருந்து தொடங்குகிற சவாலை காதலர்கள் ஏற்கலாம், ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு, குடும்பத் தலைவி அப்படியொரு அக்கினிப் பரீட்சையை ஏற்பது சாத்தியம் குறைவுதான்.

நமது சினிமாக்களில் இந்த யதார்த்தம் வெளிப்பட்டதில்லை. ”நட்சத்திர ஜன்னலில், வானம் எட்டிப் பார்க்குது” என ஒரே பாடலில், பெரும் பணக்காரராக மாறிக் காட்டும் கதை மாந்தர்களின் மத்தியில், சில ஆயிரங்களுக்காக, குடும்பம், உறவுகளைப் பிரிந்து வாடும் மனிதர்கள் இடம் பிடித்ததே பெரும் வெற்றி.

—-

சமீபத்தில் பார்த்த ஒரு தொலைக்காட்சி செய்தியில் – சங்கிலி திருடனை, மக்கள் விரட்டி விரட்டி அடித்தது காட்சியாக இருந்தது. கோவையில், ஒரு வட மாநில இளைஞன், மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது அறியாமல், கட்டி வைத்து அடித்ததில், அவன் செத்துப் போன செய்தியும் சில நாட்கள் முன்புதான் வந்தது.

சலனமற்று கடந்துபோன அந்தச் செய்திகளெல்லாம் மனசுக்குள் எழுந்து உறுத்தின. எங்கோ, எர்ணாகுளத்தின் ஒரு வீதியில், கல்யாணியையும், சிலர் துரத்திப் பிடித்து அடிக்க – இரத்தக் காயங்களோடு அவனை சிலர் மீட்கும் காட்சியை பார்க்கும்போது அந்த உணர்வு, ஒவ்வொருவருக்கும் வரலாம்.

கல்விமுறை குறித்து – 2 விவாதங்கள் இந்தப் படத்தில் நடக்கின்றன. தேர்வுகளும், தேர்ச்சியும் – சமூகத்தில், ஒரு குழந்தையினுடைய அறிவின் அடையாளமாக மாறிப் போக, அறிவார்ந்த சிந்தனையோ, அதிகபிரசங்கித் தனமாகவும், சகிக்க முடியாத குற்றமாகவும் மாறிப் போகிறது.

செல்லம்மா பள்ளிக்கு சென்று திரும்பும் காட்சிகளின் பின்னணியில், புதிய வகுப்பறைக் கட்டங்கள் உயர்வது – அதன் பொருளாதாரச் சுரண்டலையும் காட்டுகிறது.

”குறைந்த சம்பளத்தில் ஆசிரியர்கள், அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் என்றிருக்கும்போது, ஆசிரியர்களால் எப்படி நன்றாக கவனம் செலுத்த முடியும்” என ஒரு காட்சியின் நடிகை பத்மபிரியா  சொல்லிவிட்டு, கடக்கிறார். நல்ல ஆசிரியருக்கு உதாரணமாக அவர் தோன்றும் காட்சிகள், மிகவும் குறைவு. (மோசமான ஆசிரியரைக் காட்டிய அளவுக்கு, சிறந்த ஆசிரியரையும், மனதில் பதியும் வண்ணம் காட்டியிருக்கலாம்.)

பெண் குழந்தையின் பெற்றோர் என்ற முறையில் ‘வயதுக்கு வருவது’ குறித்த அச்சத்தில் அம்மாவின் கோபம், பாட்டியாக, தாத்தாவாக செல்லம்மாவை சுற்றி பின்னப்பட்டுள்ள எல்லா உறவுகளும் யதார்த்தமாய் பேசுகிறார்கள்.

“அவன் கொஞ்சம் கெட்டவனாகட்டும் … “ என கல்யாணியின் அப்பா சொல்வது, – நல்ல மனிதர்களெல்லாம் ‘பிழைக்கத் தெரியாதவர்களாக’ அடையாளப்படுத்தப்படும், அயோக்கிய நிலையை குத்தலாக எடுத்து வைக்கிறது.

தங்க மீன்கள் – படமும், அது முன்வைக்கும் வாதங்களும் அதிகாரமற்றவர்களுடையவை, வாழ்க்கையின் வெள்ளப்பெருக்கில், தனக்காகவும், சக உறவுகளுக்காகவும், எதிர் நீச்சல் போடும் மாந்தர்களுடையவை.

தங்க மீன்கள் – ஒவ்வொரு மனிதனுக்குமான படம். பார்க்காமல் இருந்துவிடாதீர்கள்.

Related Posts