அரசியல் சமூகம்

ஜூலை 23: தாமிரபரணியில் மூழ்கிச் செத்த நீதி …

கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுப் பாலத்தைக் கடக்க நேர்கிற ஒவ்வொரு தருணத்திலும், கரை புரண்டோடும் ஆற்றின் அழகை ரசிப்பதற்காக ஒரு நொடியாவது நின்று விட வேண்டும் என்கிற நினைப்பும், மன உறுதியும் ஒவ்வொரு முறையும் தகர்ந்தே போயிருக்கிறது. எப்போதும் சலனமற்று அழகாக ஓடிக்கொண்டிருக்கும் ஆறு அன்று அந்த கொடூரத்தை உள்வாங்கி கொள்ளும் என்று யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க வாய்ப்பில்லை. அந்த நாள் 1999 ஜீலை 23.

எல்லோரையும் போல மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் அது சாதாரண விடியலாகவே இருந்தது. மாஞ்சோலை அழகான தேயிலை தோட்டம். அந்த அழகின் பின்னால் ஒளிந்திருப்பது பல ஆயிரம் உழைக்கும் மக்களின் உறிஞ்சப்பட்ட ரத்தம். அந்த உழைக்கும் வர்க்கத்திலும் பெரும்பகுதி தலித்துகள். கொத்தடிமைகளாய், கொடுத்த கூலிக்கு வேலை பார்க்க நிர்பந்திக்கப்பட்டவர்களாய் வாழ்ந்து வந்தவர்கள். பல்வேறு தொழிற்சங்கங்களில் இணைந்து கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்க தொடங்க, வழக்கம் போல் இல்லாமல், முதலாளிகளின் அடி வயிறு கலங்கித்தான் போனது. ”நீயெல்லாம் கூலி கேட்கிறதே தப்பு இதில சங்கத்துல வேற சேர்ந்துட்டியா?” என்ற சாதி ஆதிக்க மனோபாவமும் ஒரு சேர விழித்துக்கொண்டது. பல நூறு தொழிலாளர்கள் சிறைச்சாலைகளில் தள்ளப்பட்டார்கள்.

சிறையில் அடைக்கப்பட்ட சொந்தங்களை விடுவிக்க வேண்டும், கூலி உயர்வு, வேலை உத்திரவாதம் வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகமும், த.மா.கா, இடதுசாரிக் கட்சிகள், முஸ்லீம் அமைப்பினர் என அனைத்து தொழிற்சங்கங்களின் தலைமையில் மக்கள் குடும்பத்துடன் சாரை சாரையாய் புறப்பட தயாராகிறார்கள். தன்னுடைய ஒன்றரை வயது சிறுவன் விக்னேசுக்கு பவுடர் பூசி, தலை வாரி அழகாய் இருக்கட்டும் என கன்னத்தில் சின்னதாய் ஒரு திருஷ்டி பொட்டும் வைத்து விடுகிறாள் அம்மா ரத்தினமேரி.

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் துவங்கிய பேரணி விண்ணைப்பிளக்கும் கோஷங்களுடன், கட்டுப்பாட்டுடன் நகர்ந்து நகர்ந்து தேவர் சிலை, கொக்கிரகுளம் பாலம் தாண்டி கலெக்டர் அலுவலகத்தை நெருங்குகிறது. தலைவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவீர்கள் என வழக்கம் போல் போலிஸார் வாக்குவாதத்தை துவங்க, அமைதியாய் சென்று கொண்டிருந்த ஊர்வலத்தில் திடீரென கற்கள் பறந்து வந்து ஒவ்வொருவர் மண்டையையும் பதம் பார்க்க துவங்குகிறது, கலவர பூமியாக மாறுகிறது அந்த இடம். போலிஸ் ஒவ்வொரு நபராக தேடித் தேடி அடிக்க துவங்குகிறார்கள். முத்துராமலிங்கத் தேவர் சிலை துவங்கி கலெக்டர் அலுவலகம் வரை மூன்று புறமும் மிக சாமர்த்தியமாக போலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டத்தில் தப்பித்துப் போக இருந்த ஒரே வழி ஆற்றில் குதிப்பதுதான். ஆற்றில் நீர் வரத்து குறைந்து போனதால் முட்டி அளவு தண்ணீரே ஓடிக்கொண்டு இருக்கிறது. போலிஸாரின் லத்தி ஒவ்வொருவர் மண்டையாகப் பதம் பார்க்க தொடங்குகிறது.

ஏன் இத்தனை வன்மம் போலீஸாருக்கு? ஒரு பெண் போலீஸின் சட்டை பாக்கெட்டில் கை விட்டு, என்ன இருக்கிறது என்று கேட்டான் ஒருவன் என்கிறது போலிஸ் தரப்பு. நம் சாதிய மனசாட்சியும் ஆமா இவனுங்கதானுங்க, கேட்டாலும் கேட்டிருப்பானுங்க என்று சமாதானம் சொல்லிக்கொண்டது. உண்மையில் காவல்துறை என்றுமே முதலாளிகளுக்கும், ஆளும் வர்க்கத்திற்கும் சேவை செய்கின்ற ஒரு அடியாள் கூட்டம் என்பதை பட்டவர்த்தனமாக காட்டிய தினம் அன்று.

தாக்குதல் தொடங்குகிறது, வரலாற்றின் வழி நெடுக வஞ்சிக்கப்பட்ட மக்கள், தோல்வியை மட்டுமே பரிசாக பெற்று வாழ்க்கையை ஒதுக்குப்புறமாக வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள் சிதறி ஓட துவங்குகிறார்கள். வரிசையாக பிணங்கள் மிதக்க துவங்குகிறது. மொத்த எண்ணிக்கை 17 என கணக்கு சொல்லி, வெறியாட்டத்தை முடித்து ஓய்ந்து நிற்கிறது காவல்துறை. 18வதாக சேர்ந்திருக்க வேண்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய நெல்லை மாவட்ட செயலாளர் பழனி மண்டை பிளக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்து வீடு திரும்புகிறார்.

தான் செத்தாலும் பிரச்சனையில்லை தன் 1 ½ வயது மகன் விக்‌னேசாவது பிழைத்துக்கொள்ளட்டும் என்று ஆற்றிலிருந்து கரைக்கு தூக்கி வீசுகிறார் ரத்தினமேரி அந்தக் குழந்தையைப் பிடித்து திரும்ப ஆற்றில் வீசி கொல்லுமளவிற்கு போலிஸ் வன்மத்துடன் தாக்கியது. இது வெறுமனே போலீஸ் – பொதுமக்கள் பிரச்சனையல்ல. இதில் நுட்பமாக வர்க்க அரசியலோடு, சாதி ஆதிக்கமும் இணைந்து செயல்படுகிறது.

அன்றைக்கு தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களிடம் கலவரத்திற்கு காரணமான அன்றைய மாவட்ட ஆட்சியர் மீதும், போலிஸ் உயரதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க சொல்லி வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட்து. அப்படி நடவடிக்கை எடுத்தால் பிற்படுத்தப்பட்ட மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமே என்பதுதான் அநீதிக்கு அவர்கள் முன்வைத்த நியாயம். இந்த மாவட்ட ஆட்சியரும், போலிஸ் அதிகாரியும்தான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் ஒட்டு மொத்த பிரதிநிதிகளா? இல்லை தலித்துகளுக்கு ஒரு அநீதி நடக்கும் போது ஒதுங்கி வேடிக்கை மட்டுமே பார்க்க பழக்கப்படுத்தப்பட்ட பிற்பட்ட மக்களின் சாதிய உணர்வை அரசு நயவஞ்சகமாக தூண்டிவிட்டதா?

திமுகவானாலும், அதிமுகவானாலும் உழைப்பாளர், தாழ்த்தப்பட்டோர் விரோத போக்கு அவர்களின் பாரம்பரியங்களில் ஊறிப்போன ஒன்றுதான். இந்த சம்பவத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி மோகன் அவர்கள் தலைமையில் அரசு ஆணையம் அமைத்தது. அத்தனை விஷயங்களையும் பொறுமையாக விசாரித்த நீதிபதி ”மக்கள் அவர்களாக ஆற்றில் குதித்து இறந்து போனார்கள், இதில் போலிஸாரின் தவறு எதுவும் இல்லை” என்று தன் அறிக்கையை முடித்தார். முழங்கால் அளவிற்கு ஓடிக் கொண்டிருந்தது தாமிரபரணி. ஆனால், அந்த அளவு நீரில், நீதி மூழ்கடித்து சாகடிக்கவும்பட்டது.

வரலாறு எப்போதுமே உழைக்கும் மக்களுக்கு, அதிலும் தலித் மக்களுக்கு சுகமானதாய் இருந்த்தில்லை கீழவெண்மணியில் துவங்கி, வாச்சாத்தி, கொடியன்குளம், ராமநாதபுரம், நத்தம் காலனி வரையிலும் நீங்கள் அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டியவர்களே, சம உரிமை என்பது நீங்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க கூடாத ஒன்று என்பதை மீண்டும் மீண்டும் நினைவுறுத்திக்கொண்டே இருக்கிறது. தாமிரபரணி படுகொலைகள் நிகழ்ந்து இன்றுடன் 15 ஆண்டுகள் கடந்து விட்டது. தாமதிக்கப்பட்ட நீதியே அநீதி என்றால்? இங்கே தரப்படாத நீதியை எந்த வகையில் சேர்ப்பது.

இந்த நிலை மாற வேண்டுமானால், தேவை ஒரு வீறு கொண்ட போராட்டம். உழைக்கும் வர்க்கம் தன் எதிரியை சரியாய் இனம் கண்டு, சாதி மறுத்து, மதம் தொலைத்து, மனிதத்தை உயர்த்திப் பிடித்து உரிமையை வென்றெடுப்பதிலேயே விடுதலை என்பது அடங்கி இருக்கிறது.

(பின் குறிப்பு: இப்போராட்டத்திற்கு பிறகான காலங்களில் தோட்டத் தொழிலாளர்களின் தினக்கூலி ரூ.40 என்ற நிலையிலிருந்து ரு.180 ஆக உயர்ந்திருக்கிறது. ஆனால், சம உரிமைக்கும், அடிமைத் தளைகளை எதிர்த்ததுமான போராட்டம் வெல்ல வேண்டுமானால், அது நம் ஒவ்வொருவரின் கையிலும்தான் இருக்கிறது)

Related Posts