அரசியல் விவசாயம்

தாமிரபரணி எங்கள் ஆறு . . . . . தண்ணீரை விற்க நீ யாரு . . . . ?

காவேரி தென்பெண்ணை பாலாறு
வையை கண்டதோர் பொருநை நதி – என
மேவிய யாறுபல வோடத் – திரு
மேனி செழித்த தமிழ்நாடு

என பாரதி பாடிய ஆறுகள் பலவும் நீரின்றி வறண்டு கிடக்கிறது. உலகின் பறவைகள் எல்லாம் தங்கிச் சென்ற வேடந்தாங்கலும், கூந்தங்குளமும் தண்ணீரின்றி காய்ந்து கிடக்கிறது. முப்போகம் விளைந்த நெல்லைச்சீமையில் ஒருபோகமும் இல்லாமல் கழனியெல்லாம் பொட்டல் காடாய் காட்சியளிக்கிறது. குளங்களும், கன்மாய்களும் வானம் உதிர்க்கும் ஒரு சொட்டு மழை நீருக்காக வாய் பிளந்து கிடக்கிறது. புல், பூண்டின்றி ஆடுகளும், மாடுகளும் தவித்து கிடக்கின்றன. எங்களூர் அம்மாக்களும், அக்காக்களும் ஒரு குடம் தண்ணீருக்காக பல மைல் வேகாத வெயிலில் அலையும் அவலம் கண்களை கசிய வைக்கிறது.

வறட்சி நமக்கு; வளர்ச்சி யாருக்கு?

தண்ணீரின்றி நாம் தவியாய் தவித்துக்கிடக்க, பன்னாட்டு கம்பெனிகள் கொக்கோ கோலாவிற்கும் பெப்சிக்கும் தடையின்றி தண்ணீர் போகிறது. ‘தண் பொருந்தப் புணல் நாடு என நதியின் பேரால் அழைக்கப்பட்டது நெல்லைச்சீமை’ என சீவலப்பேரியில் 1013-ல் முதலாம் ராஜராஜனால் வெட்டப்பட்ட கல்வெட்டு கூறுகிறது. அந்த இடத்தில் இருந்து தனியாய் குழாய் அமைத்து இலட்சம் இலட்சமாய் தண்ணீர் போகிறது கம்பெனிகளுக்கு. அதைத் தான் பாட்டிலில் அடைத்து விலைக்கு விற்கிறான் வெள்ளைக்காரன். வறட்சி நமக்கு, வளர்ச்சி அவனுக்கு.

தண்ணீருக்கு விலை; கார்ப்பரேட்டுக்கு சலுகை:

நாமும் வீட்டு வரியைப் போல தண்ணீருக்கு வரி கட்டுகிறோம். ஆனால் கோலா பெப்சிக்கு ஆயிரம் லிட்டர் தண்ணீர் 37 பைசாவுக்கு கொடுக்கிறது அரசாங்கம். அவன் ஒரு லிட்டரை இருபது ரூபாய்க்கு விற்கிறான். இரண்டு கம்பெனிகளுக்கும் 70 ஏக்கர் நிலத்தை ஆண்டுக்கு ஒரு ரூபாய்க்கு 98 வருடத்திற்கு குத்தகைக்கு கொடுத்துள்ளது அரசாங்கம். ‘வயலுக்கு வந்தானா, நாத்து நட்டனா, எங்குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தானா, மாமனா, மச்சானா மானங்கெட்டவனே’ என்று அந்நியனைப் பார்த்துக் கேட்ட கட்டபொம்மன் இன்று நம்முடன் உயிருடன் இல்லை. நாம் தான் கேட்க வேண்டும்.

இயற்கை எங்கள் அன்னை; வளங்களை சுரண்டும் கூட்டு களவானிகள் :

ஆற்று மணல் கொள்ளை போகிறது. தாதுமணல் கொள்ளை போகிறது. நீதிமன்றங்கள் தலையிட்டும் நின்றபாடில்லை கொள்ளைகள். விசாரணைக் கமிசன் அறிக்கைகள் அரசாங்க அலமாரியில் தூசிபடிந்து கிடக்கிறது. கிரானைட் கொள்ளை குறித்த அறிக்கைக்கும் அதே கதிதான். நாட்டுக்கும், மக்களுக்கும் பல கோடி இழப்பு. கொள்ளையைத் தடுக்க முடியாத அரசாங்கத்தால் அரசு பள்ளிக்கூடங்களில் கக்கூஸ் கட்ட துப்பில்லை. கஜானா காலி என வீதிக்கு வீதி டாஸ்மாக்கை திறக்கும் அரசாங்கம் இயற்கை வளங்களை சூறையாட தனியாரை, கார்ப்பரேட்டை ஏன் அனுமதிக்கிறது? இங்கு தான் கூட்டுக்கொள்ளைக்கான சூத்திரம் உள்ளது. தனியார்மயம், தாராளமயம் என்பது இயற்கை வளங்களை அதிகாரிகளும், ஆளும் அரசியல்வாதிகளும், பெருமுதலாளிகளும் கூட்டாக கொள்ளை அடிப்பது தான். வளர்ச்சி என்ற புருடா எல்லாம் முழுபூசணியை சோற்றில் மறைக்கும் வேலை.

பொதிகை மலை எங்கள் மலை, தாமிரபரணி எங்கள் ஆறு :

ஆறு, மணல், தாதுமணல், கிரானைட் கொள்ளை வரிசையில் தண்ணீரும், தாமிரபரணியும் வந்திருக்கிறது. பொதிகை மலையின் அடர்ந்த வனப்பகுதியில் சிற்றோடைகளும், பாம்பாறு, காரியாறு, உள்ளாறு, பேயாறு என ஆறுகள் பலவும் இணைந்து தாமிரபரணி உருவாகி பாணதீர்த்த அருவியாய் நம் வயலுக்கு வருகிறது. மணிமுத்தாறு, ராமநதி, கடனாநதியும் இணைந்து பெருவெள்ளமாய் உருவெடுக்கிறது. குற்றாலத்தில் உருவாகி ஒடிவரும் சிற்றாறும் சீவலப்பேரியில் சேருக்கிறது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 120 கிலோமீட்டர் தூரம் பாய்ந்தோடும் தாமிரபரணி 86,000 ஏக்கர் விளைநிலங்களை உயிர்ப்பிக்கிறது. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் என 4 மாவட்ட 70 லட்சம் மக்களின் தாகம் தணிக்கிறது. தண்ணியில்லா காடு என பெண் கொடுக்க மறுத்த அத்திப்பட்டிக்கும், சங்கரன்கோவிலுக்கும் கூட்டு குடிநீர் திட்டங்களால் தாமிரபரணி வந்து சேர்ந்தது.

மடை மாற்றப்படுகிறது தாமிரபரணி :

தாமிர சத்து நிறைந்த தாமிரபரணி பற்பல கூட்டு குடிநீர் திட்டங்களால் 4 மாவட்டங்களுக்கு பல மைல் தூரம், பல நூறு கிராமங்களுக்கு செல்கிறது. மானூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் 400 வழியோர கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் தண்ணீர் கிடைக்கிறது. கடையநல்லூர் – புளியங்குடி கூட்டு குடிநீர் திட்டத்தில் 84 வழியோர கிராம மக்களின் தாகம் தீர்ந்துள்ளது. ஆனாலும், பல பகுதிகளுக்கு குடிநீர் சீராக வழங்கப்படுவதில்லை. வாரம் ஒரு முறை, 10 நாட்களுக்கு ஒரு முறை என விநியோகம் செய்யப்படுகிறது தண்ணீர். இந்நிலையில், பன்னாட்டு கம்பெனிகளுக்கு தாமிரபரணியை மடைமாற்றம் செய்தால் பல லட்சம் மக்கள் தண்ணீரின்றி தவிக்க நேரும். ஊர் பாலைவனமாகும்.

தண்ணீர் மண்ணின் உயிர்த் துளி; உயிரின் ஜீவநாடி:

அது இயற்கை தந்த கொடை, காற்றைப் போல, சூரிய ஒளியைப் போல அனைவருக்கும் பொதுவானதாக இருந்த தண்ணீரின் மீது , கார்பரேட் நிறுவனங்களின் பார்வை பட்டவுடன் அதுவும் விற்பனை சரக்காக மாறி சந்தைக்கு வந்து விட்டது. எண்ணைக்கு இணையான இலாபத்தை தண்ணீரும் வாரி வழங்கும் என்பதை உணர்ந்த கார்பரேட்  நிறுவனங்கள் , ஏழை நாடுகளின் மீதும் , இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் மீதும் படையெடுக்கத் தொடங்கிவிட்டன. பொது விநியோக முறையிலிருந்து அரசை ஒதுங்கிக் கொள்ளும்படி உலகவங்கி ஆணையிட்டுள்ளது. “தண்ணீர் தனியார்மயம்” என்ற நிபந்தனைக்கு உட்படுகிற நாடுகளுக்கு மட்டுமே கடனை உலக வங்கி வாரி வழங்குகிறது. அடுத்த சில ஆண்டுகளில் தண்ணீர்க்கான தனியார் முதலீடு 620 விழுக்காடு உயர வேண்டும் என்று உலகவங்கி இலக்கு நிர்ணயத்துள்ளது.
எனவே, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் நாடுகளிலுள்ள கோக், பெப்சி,  தேம்ஸ் வாட்டர் , சூயஸ், பெக்டெல் , விவேண்டி, விவோலியா போன்ற நிறுவனங்கள் உற்சாகத்தோடு இங்கேயும் கால்பதிக்கத் தொடங்கியுள்ளன.  இவர்களின் லாபவெறியால் பூமி மலடாகிப் போனது. பூமியின் ஆழம் வரை சென்று ராட்சதக் குழாய்கள் அமைத்து நீரை உறுஞ்சுவதால் நிலத்தடிநீர் அதல பாதாளத்திற்கு சென்று விட்டதோடு , அவைகள் வெளியேற்றும் கழிவு நீரால் மண் வளமும் செத்துவிட்டது. இனி மழை கொட்டோ கொட்டென்று கொட்டினாலும் நிலத்தடிநீர் உயர வாய்ப்பில்லை என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.
தாகத்திற்குத் தண்ணீர் என்ற நிலை மாறி லாபத்திற்குத் தண்ணீர் என்ற நிலை உருவாகிவிட்டது. இனி காசு உள்ளவனுக்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கும். தண்ணீர்க்கான செலவு பலமடங்கு கூடும். பொது இடங்களில்  “WATER ATM”  பொருத்தப்படும். இதனால் கார்பரேட் நிறுவனங்களின் லாபம் விண்ணைத் தொடும்.

கடந்த 5 ஆண்டுகளில் ஜெர்மனியின் RWE, பிரிட்டனின் தேம்ஸ்வாட்டர்  நிறுவனங்களின் வியாபாரம் 9786 விழுக்காடு உயர்ந்துள்ளது. சூயஸ் நிறுவனத்தின் தண்ணீர் வருமானம் ஆண்டுக்கு 60 பில்லியன் டாலர். 2001 ஆம் ஆண்டில் மட்டும் தண்ணீர் நிறுவனங்கள் அடைந்த லாபம் 160 சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய். தண்ணீர் பாட்டில் மூலம் அடைந்த  லாபம் 22 பில்லியன் டாலர். ஆண்டுக்கு 10 விழுக்காடு வளர்ச்சியோடு தண்ணீர் வியாபாரம் முன்னேறிக் கொண்டுள்ளது.

குளங்கள் பிளாட்டுகளானது; வாய்க்கால்கள் வறண்டு போனது :

தண்ணீர் பூமியின் ரத்தம். பூமி நீரை சேமிக்கும் தொட்டி. ஆனால் இன்று என்ன நிலை? 2500 குளங்களை கொண்டது நெல்லை மாவட்டம். தூர் வாரப்படாமல் தூர்ந்து போய் கிடக்கிறது. தாமிரபரணியில் 8 அணைக்கட்டுகளும், 11 கால்வாய்களும் உள்ளது. இவையும் மராமத்து செய்யப்படாமல் ஓடைகளாக ஒடுங்கி கிடக்கிறது. இதனால் கடைமடையில் உள்ள கிராமங்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. ஆனால் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது அதைத்தான் பன்னாட்டு கம்பெனிகளுக்கு கொடுக்கிறோம் என அரசாங்கம் நயவஞ்சகமான அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. ஊருக்கு இளைத்தவன் விவசாயி என்று நினைக்கிறது அரசாங்கம், அதனால் தான் எல்லா வகையிலும் விவசாயி வயிற்றில் அடிக்கிறது. விவசாயத்தை சீரழிக்கிறது.

நதி நீர் கொள்கையா ; கொள்ளையா:

குடிதண்ணீரோ, ஆற்று நீரோ, நிலத்தடி நீரோ, அதை ஒரு வரி விதிப்புக்குள்ளாகும் பொருளாக மட்டுமே பார்க்க வேண்டும் என்கிறது மத்திய அரசு. அதாவது, ஒரேயடியாக மக்களின் பாரம்பரிய உரிமையும், மாநிலங்களின் உரிமையையும், உள்ளாட்சி அமைப்புகளின் உரிமையும் ஒருங்கே பறிக்கிறது மத்திய அரசின் புதிய தேசிய நீர்க் கொள்கை முன்வரைவு.

இதன்படி கிராமங்களில் ஒரு நபருக்கு ஒரு நாளுக்கு 40 லிட்டருக்கு மிகாமலும், நகரத்தில் ஒரு நபருக்கு 80 லிட்டருக்கு மிகாமலும் குறைந்தபட்ச விலையில் வழங்கவும், அதற்குமேல் உபயோகப்படுத்தப் படும் நீருக்கு அடுக்கு முறையில் வரி விதிக்கவும் மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தில் மாற்றம் ஏற்படும். விவசாய நிலங்களுக்கு பாய்ச்சும் நீரின் அளவு அல்லது பயன்படும் மின்சாரத்திற்கு வரி வசூலிக்கப்படும். நீங்கள் தினசரி பயன்படுத்தும் நிலத்தடி நீரின் அளவை ஒரு இயந்திரத்தைப் பொறுத்தி கணக்கிட்டு ஒவ்வொரு மாதமும் வரி வசூலிக்கப்படும்.

ஒரு நாளுக்கு 40 லிட்டருக்குக் குறைவான நீரை ஒரு மனிதன் எப்படிப் பயன்படுத்த முடியும். இந்த நாகரீக உலகில், இந்தியர்களின் உணவுப்பழக்கம் மற்றும் கழிவறை பழக்கங்களைக் கொண்டு சராசரி இந்தியனுக்கு ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 66 லிட்டர் நீர் தேவை என்று உலக சுகாதர நிறுவனம் சொல்கிறது. மேலும் ஒரு மனிதனின் குடிநீர், உணவு, சுகாதார நடவடிக்கைகள், தொழில் உபயோகங்கள் இவற்றை கருத்தில் கொண்டால் ஒரு மனிதனின் தண்ணீர்ப் பயன்பாட்டுத் தேவை 185 லிட்டர் ஆகும் இதுவே டில்லியில் எடுக்கப்பட்ட ஆய்வு 240 லிட்டர் என்று தெரிவிக்கிறது. 40 லிட்டருக்கு மேல் செலவாகும் தண்ணீருக்கு வரி கட்டினால் மட்டுமே நீரைக் குடிக்கவோ, கழிவறையில் சுத்தம் செய்யவோ முடியும். வரி கட்ட முடியாதவர்கள் நீர் உபயோகிப்பதை சட்டம் போட்டு தடுப்போம் என்கிறது மத்திய அரசு.

தண்ணீர் அத்தியாவசிய பொருள் அல்ல; அது வர்த்தக பண்டம்:

ஆண்டுதோறும் தூய குடிநீர் கிடைக்காமலும் சுகாதார வசதி இல்லாமலும் உலகெங்கும் ஐந்து வயதுக்கும் குறைவான 21 லட்சம் குழந்தைகள் மாண்டு போகின்றன. மிகக்கொடிய இரு பெரும் நோய்களான எயிட்ஸ் மற்றும் மலேரியாவினால் கொல்லப்பட்டவர்களை விட, தூய குடிநீர் கிடைக்காமல் மாண்டவர்களின் எண்ணிக்கை அதிகம். ஐ.நா.வின் கணக்கீட்டின்படி, உலகில் ஏறத்தாழ 200 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். உலகின் 88 கோடியே 40 லட்சம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்வசதி இல்லை. 260 கோடி மக்களுக்குக் கழிப்பறை வசதி இல்லை. இவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல், இந்திய தண்ணீர் சந்தையை உலகப் பெருநிறுவனங்களுக்கு திறந்து விடுவது எப்படி நியாயமாகும்?

எழுவீர்; அணிதிரள்வீர்; ஆர்ப்பரிப்பீர்:

உப்புக்கு வரி விதித்து, மக்கள் உப்பை பயன்படுத்த தடை விதித்தான் வெள்ளைக்காரன். இன்று பன்னாட்டு கம்பெனிகளுக்கு சேவகம் செய்யும் மத்திய, மாநில அரசுகள் மக்களின் தண்ணீர் உரிமையை பறிக்கிறது. சட்டிஸ்கர் மாநிலத்தில் ஓடும் நதியை 23 கிலோமீட்டருக்கு தனியாரிடம் ஒப்படைத்துள்ளது மத்திய அரசு. தாமிரபரணியவும் களவாட துடிக்கிறது. விவசாயத்தை சீரழித்து, குடிநீர் உரிமையை பறிக்கும் அரசின் செயலை எதிர்த்து நிற்போம்.
அந்த இரு நிறுவனமா, 70 லட்சம் மக்களா, எது பெரிது என்பதை அரசுக்கு உணர்த்தும் காலம் வந்து விட்டது. நதி நம் நாட்டின் இறையாண்மை. நமது உரிமை. இதை பறிகொடுக்க அனுமதிக்க மாட்டோம்.
– K.G. பாஸ்கரன்.

Related Posts