அரசியல்

பதட்டத்தில் பாலஸ்தீனம்…

உலகெங்கிலும் அப்பாவி மக்கள் மீது வன்முறையை ஏவிவிட்டுக் கொல்கிற, பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிக்கிற பயங்கரவாதத்தை எதிர்ப்பதிலும் கண்டிப்பதிலும் மக்களுக்கு ஒருமித்தக் கருத்திருக்கிறது. ஆனால் எதுவெல்லாம் பயங்கரவாதம்? யார் செய்வது மட்டும் பயங்கரவாதம்? என்கிற பொதுக்கருத்தை நம்மிடம் விதைப்பதில் சர்வதேச ஊடகங்களும், ஆட்சியாளர்களும், இலாப நோக்கோடு அதனைத் திட்டமிடுகிற பெருமுதலாளிகளும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இலட்சக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களைக் கொன்றபின்னும், இலங்கை அரசும் அதன் அதிபரும் பிற நாடுகளோடு இணக்கமான உறவைத் தொடரமுடிகிறது. இரண்டாம் உலகப்போருக்குப்பின்னால் ஈராக், ஆப்கன், வியட்நாம், பனாமா, போர்டோரிகோ, சிலி என ஏராளமான நாடுகளுக்குள் நுழைந்து கோடிக்கணக்கான மக்களைக் கொன்றிருக்கிற அமெரிக்க அரசும் அதன் ஆட்சியாளர்களும் இன்னமும் உலகளாவிய மரியாதையோடு வலம் வரமுடிகிறது. 10 இலட்சம் அப்பாவி மக்களைக் கொன்ற இந்தோனேசிய ஆட்சியாளர்கள், இன்றும் அதனை பெருமை பொங்க பேசமுடிகிறது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக பாலஸ்தீன மக்களையும் அவர்களது நிலங்களையும் ஆக்கிரமித்து வைத்துக்கொண்டு, அனைத்துவிதமான வன்முறைகளையும் அவர்கள்மீது செலுத்துகிற இஸ்ரேல் அரசும் அதன் இராணுவமும் எவருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லாமலும் இருக்கிறது.

“அரசு” என்கிற அடையாளத்தோடு நிகழ்த்தப்படுகிற வன்முறைகளும் பயங்கரவாதமே என்கிற எண்ணம் நம்மிடம் உருவாக வேண்டும். சர்வதேச அளவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான சூழல் உருவாகிறபோதெல்லாம், அதனைத் தகர்ப்பதற்கு இஸ்ரேல் அரசும் அதன் இராணுவமும் எவ்வளவு பெரிய பயங்கரவாத இயக்கமாக செயல்படுகிறது என்பதை கடந்த ஒரு மாத நிகழ்வுகளைக் கொண்டு விவரிக்க முற்படும் கட்டுரை இது…

இஸ்ரேல்-பாலஸ்தீன நிலவரம்…..

ஜூன் 11 நிலவரம் 1:

பாலஸ்தீனத்திற்குள் சகோதர யுத்தம் நடத்திக்கொண்டிருந்த ஃபட்டா மற்றும் ஹமாஸ் ஆகிய இரண்டு இயக்கங்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன. பாலஸ்தீனர்களிடம் ஒற்றுமை இல்லை என்று எப்போதும் பாலஸ்தீனர்களையே குறை சொல்லிக்கொண்டிருந்த அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும், இனி என்ன செய்யப்போகிறது என்று பார்க்கவேண்டிய காலகட்டமிது. இப்போது பதிலளிக்க வேண்டியது பாலஸ்தீனர்களல்ல; மேற்குலகமும், இஸ்ரேலும்தான் என்கிற நிலை. இது இஸ்ரேலுக்கு பெரிய நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது.

ஜூன் 11 நிலவரம் 2:

1967 லிருந்து இன்றுவரை, 8 இலட்சம் பாலஸ்தீனர்களை அரசியல் காரணங்களுக்காகவே சிறைக்குள் தள்ளியிருக்கிறது இஸ்ரேல் அரசு. பெரும்பாலானவர்கள் மீது வழக்கு கூட போடாமல் விசாரணைக் கைதிகளாகவே மாதக்கணக்கில்/வருடக்கணக்கில் சிறையில் வைப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறது இஸ்ரேல். இதனை எதிர்த்து, சிறைக்குள்ளிருக்கும் கைதிகள் சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தை துவங்கினர். அதில் 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீன சிறைக்கைதிகள் 100 நாட்களைத்தாண்டி அப்போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இப்போராட்டம், சர்வதேச அளவிலான கவனத்தை ஈர்க்கத்துவங்கியிருக்கிறது. இதனை முடிவுக்குக் கொண்டு வரமுடியாமல், இஸ்ரேல் திணறிக்கொண்டிருக்கிறது.

இச்சூழலில்…….

காணாமல் போன 3 இஸ்ரேல் இளைஞர்கள்:

கடந்த ஜூன் 12 ஆம் தேதி, வெஸ்ட் பேங்க்கில் கட்டப்பட்டிருக்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குடியிருப்புகளுக்கு அருகே, மூன்று இஸ்ரேலிய இளைஞர்கள் லிப்ட் கேட்டு காத்துக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு லிப்ட் கொடுத்த வாகனம், அம்மூவரையும் கடத்திச்சென்றதாக செய்தி கசிந்தது. அப்போதிருந்து அவர்கள் மூவரையும் காணவில்லை. பாலஸ்தீன போராளிக்குழுவான ஹமாஸ் தான், அம்மூன்று இஸ்ரேலிய இளைஞர்களையும் கடத்திச்சென்றுவிட்டதாக தன்னிச்சையாக அறிவித்து இராணுவம் தன்னுடைய பணியினைத் துவங்கியது. ஆனால், இச்சம்பவத்திற்கும் தங்களுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்று ஹமாஸ் இயக்கம் அறிவித்தது.

இருப்பினும், “ஆப்பரேசன் பிரதர்ஸ் கீப்பர்” என்னும் பெயரில் வெஸ்ட் பேங்க்கில் பெரிய தேடுதல் வேட்டையினை நடத்தத்துவங்கியது இஸ்ரேல். வெறுமனே அம்மூன்று இளைஞர்களை தேடுவதோடு மட்டுமல்லாமல், அதனூடே பாலஸ்தீன ஆதரவு குழுக்களை குறிவைத்து தாக்குவதும் அவர்களை கைது செய்வதுமாக இருந்தது இஸ்ரேல் இராணுவம். மூன்று இஸ்ரேலியர்களை தேடும் அத்தேடுதல் வேட்டையில், 500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை கைது செய்ததோடு, 9 பாலஸ்தீனர்களைக் கொலையும் செய்தது[ref]http://www.dci-palestine.org/documents/15-year-old-boy-shot-dead-israeli-forces-raid-west-bank[/ref] இஸ்ரேல் இராணுவம். ஒட்டுமொத்த வெஸ்ட் பேங்க்குமே இஸ்ரேல் இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு, ஒவ்வொரு வீடும் கடும் சோதனைகளுக்கும் சேதங்களுக்கும் உள்ளானது.

வெறுப்பை பரப்பிய இஸ்ரேல் அரசும் இராணுவமும்:

இந்நிலையில், காணாமல் போன மூன்று இளைஞர்களின் சடலங்களை வெஸ்ட் பேங்க்கின் ஹெப்ரோன் நகரில் ஜூன் 30 ஆம் தேதியன்று கண்டெடுத்ததாக அறிவித்தது இஸ்ரேல் அரசு.

“அவர்களைக்கொன்றவர்கள் மனித மிருகங்கள்.”

என்றும்,

“இதனைச்செய்தது ஹமாஸ் தான். இதற்கான விலையை அவர்கள் கொடுத்தேயாகவேண்டும்”

என்றும் இஸ்ரேலியப் பிரதமர் ஊடகங்களில் தெரிவிக்கிறார்.

இஸ்ரேலிய முன்னாள் சட்ட அமைச்சரான மைக்கேல் பென்னோ,

நம்முடைய வலியினை எதிரிகளுக்கு திருப்பிக் கொடுக்கவேண்டும். ரம்ஜான் மாதத்தை அவர்களுக்கு சோகமான மாதமாக மாற்றுங்கள். எதிரிகளுக்கு இனிமேல் சாவுதான்”

என்று மக்களை உசுப்பேத்திவிடுகிறார். இடையிடையே பாலஸ்தீன சிறுவர்களை தீவிரவாதிகள் என்றும் குறிப்பிடுகிறார்.

 

ஹமாஸ் தலைவர்களுக்கு மரணதண்டனை தான் வழங்கவேண்டும். அதோடு, பாலஸ்தீனர்கள் வாழும் பகுதிகளில் புதிய யூதக் குடியிருப்புகள் நிறைய அமைக்க வேண்டும்.

என்று இஸ்ரேலின் வீட்டு வசதித்துறையின் தற்போதைய அமைச்சர் டிவிட்டரில் தெரிவிக்கிறார்.

 

பதிலுக்கு கடவுளே அவர்களது இரத்தத்தை எடுக்கட்டும்

என்று பேஸ்புக்கில் இஸ்ரேலின் கலாச்சார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான லிமோர் தெரிவிக்கிறார்.

 

இன்றிரவுக்குப்பின்னர் எத்தனை ஹமாஸ் தலைவர்கள் உயிரோடு இருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை

என்று முன்னாள் இஸ்ரேலிய கேபினட் அமைச்சரான ஹனெக்பி டிவிட்டரில் ஆரூடம் சொல்கிறார்.

 

ஹமாஸ் மீது இஸ்ரேல் போரினை அறிவிக்க வேண்டும்

என்கிறார் இஸ்ரேலிய இணை அமைச்சரான ஹோடோவெலி.

 

இப்போது பேச்சுக்கு நேரமில்லை. செயலில் இறங்கவேண்டிய நேரமிது.

என்கிறார் இஸ்ரேலிய நிதியமைச்சர் பென்னட்.

என்று பாலஸ்தீனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறார் இஸ்ரேலிய விவசாயத்துறை அமைச்சர்.

இஸ்ரேலிய ஆட்சியாளர்களும், இராணுவமும் பாலஸ்தீனர்கள் மீது இத்தனை பெரிய வெறுப்பினை இஸ்ரேலிய மக்களிடத்தில் ஒரே நாளில் விதைத்தார்கள். இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேலின் சமூக வலைத்தளங்களில் தீவிர வலதுசாரிகளின் பரப்புரையின் பேரில், தேசபக்தியில் ஈர்க்கப்பட்டவர்கள் அனைவரும், பாலஸ்த்தீனர்களை கொலைகாரர்களாக சித்தரிக்கத் துவங்கினர். அதன் விளைவாக, இஸ்ரேல் தெருக்களில், போராட்டங்களும் எதிர்ப்புக் குரல்களுமாக கேட்கத் துவங்கின. இஸ்ரேலில் பாலஸ்தீனர்கள் பணிபுரிந்த இடங்களில் எல்லாம் கலவரத்தில் ஈடுபட்டனர்.

2000 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை, (மூன்று நாட்களுக்கு ஒருவர் வீதம்) 1400 க்கும் மேற்பட்ட பாலஸ்தீன சிறுவர்களைக் கொன்றிருக்கிறது இஸ்ரேலிய இராணுவமும் அவர்களது ஆக்கிரமிப்புப் குடியிருப்புகளும். அதற்கு ஒருமுறைகூட கண்டனம் தெரிவிக்காத அமெரிக்க அதிபர் ஒபாமா, இம்முறை மூன்று இஸ்ரேலிய இளைஞர்களின் மறைவுக்கு, தன்னுடைய கடுமையான கண்டனங்களைத் தெரிவிக்கிறார்.

இஸ்ரேலிய இளைஞர்களின் சடலங்களைக் கண்டுபிடித்ததாக அறிவித்த சில நிமிடங்களிலேயே, குற்றவாளிகளின் வீடுகள் எனச்சொல்லி சில வீடுகளை தாக்கியது இஸ்ரேலிய இராணுவம். மிகப்பெரிய காவல்துறை பட்டாளத்தையே வெஸ்ட் பேங்க்கில் குவித்தது இஸ்ரேல்.

அன்றிரவே இஸ்ரேல் பிரதமரின் தலைமையில் அமைச்சரவை கூடி, அறிக்கையொன்றினை வெளியிட்டது.

“போரில் ஒருபுறம் தீவிரவாதிகளை இரக்கம் காட்டாமல் கொள்ளவேண்டும்; மறுபுறம் சியோனிசத்தை நிலைநாட்டவேண்டும்”. பாலஸ்தீனர்களை தாக்கி அழிக்கவேண்டுமென்றும், அங்கே யூதக் குடியிருப்புகளை அமைக்கவேண்டுமென்றும் ஒரு நாட்டின் அரசு அறிக்கையாக பொதுவில் வெளியிடுகிறது.

 

எரித்துக்கொல்லப்பட்ட பாலஸ்தீனச் சிறுவன்:

மூன்று இஸ்ரேலிய இளைஞர்கள் எவ்வாறு இறந்தார்கள் என்கிற விசாரணையை நடத்தாமல், பாலஸ்தீனத்தின் ஹமாஸ்தான் கொலைசெய்தது என்று ஒரு நாட்டின் அரசே முன்முடிவு செய்து, வெஸ்ட் பேங்கிற்குள் நுழைந்து அட்டூழியங்களை நடத்தத்துவங்கியது.

இதனிடையே, இஸ்ரேலின் பகுதியான ஜெருசலம் நகரில், ஒரு பாலஸ்தீன சிறுவனின் சடலம் பாதி எறிந்த நிலையில் காணப்படுகிறது என்கிற செய்தி வருகிறது.

“அந்த பாலஸ்தீன சிறுவன் ஓர் இனச் சேர்க்கையாளன். அதனால், அவனுடைய குடும்பத்தாரே, அவனை கவுரவக் கொலை செய்திருக்கிறார்கள்”

என்று இஸ்ரேல் காவல்துறையே பொய்யானதொரு செய்தியினை ஊடகங்களுக்கு வழங்குகிறது. இடதுசாரி எண்ணங்கொண்ட இஸ்ரேலிய வலைப்பதிவரான ரிச்சர் சில்வேர்ஸ்டன், இதனை பொய்யென்றும், இஸ்ரேலிய தீவிர வலதுசாரிகள் தான் அச்சிறுவனை கடத்திக்கொண்டுவந்து கொலை செய்திருக்கின்றனர் என்று தன்னுடைய வலைத்தளத்தில் சொல்கிறார். அதே வேளையில், முகம்மது என்கிற சிறுவனை பாலஸ்தீனர்கள் தங்களது பகுதிகளில் தேடிக்கொண்டிருந்தார்கள். சில இஸ்ரேலியர்கள் ஒரு காரில் வலுக்கட்டாயமாக அச்சிறுவனை கடத்திக்கொண்டு செல்வதை ஒரு பாதுகாப்பு கேமராவில் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தப்பட்ட முகம்மதுதான், ஜெருசலத்தில் எரிக்கப்பட்ட சிறுவன் என்று உறுதியானபோது, இஸ்ரேல் இராணுவத்தால் மேலும் பொய்யினை தொடரமுடியாமற்போயிற்று.

முகமதின் சடலத்தை வாங்கச் சென்ற தந்தையிடம், தன்னுடைய மகன் குடும்பத்தகராறிலேயே இறந்துவிட்டதாக எழுதிக்கொடுத்துவிட்டு சடலத்தை எடுத்துக்கொண்டு கொள்ளலாமென்று காலை 6 மணிமுதல் மாலை 4 மணிவரை அவரை இஸ்ரேலிய காவல்துறை வற்புறுத்தியிருக்கிறது.

முகமதின் சடலத்தைப் பெற்றபின்னர், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. முகமது கடுமையாகத் தாக்கப்பட்டதும், அவன் உயிரோடு இருக்கும்போதே எரித்துக்கொல்லப்பட்டதும், பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சிசிடிவி கேமராவில், முகமதை கடத்திச்சென்றவர்களில் இருவரின் முகம் நன்றாக தெரிவதால், அதனையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள் பாலஸ்தீன மக்கள். அதனால், எல்லா ஆதாரங்களும் பொதுவில் வைக்கப்பட்டிருப்பதால், வேறு வழியின்றி தீவிர வலதுசாரிக் குழுவைச்சேர்ந்த 6 பேரைக் கைது செய்திருக்கிறது இஸ்ரேல் இராணுவம். அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.

யூசுப் என்கிற மற்றொரு 16 வயது சிறுவனை, நேருக்கு நேர் நெஞ்சில் சுட்டு கொலை செய்திருக்கிறது இஸ்ரேலிய இராணுவம். அச்சிறுவனது புகைப்படத்தை 70000 பேருக்கும் மேல் பின்தொடர்கிற தீவிர வலதுசாரி பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டாடியிருக்கின்றனர்.

 

Copyright - electronicintifada.net

Copyright – electronicintifada.net

துன்புறுத்தப்படும் சிறுவர்கள்:

இஸ்ரேலிய தீவிர வலதுசாரிக்குழுவால் கடத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டு உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட முகமதின் மைத்துனனான தாரிக் அமெரிக்க குடியுரிமை பெற்ற 15 வயது சிறுவன். அவன் அமெரிக்காவிலிருந்து பாலஸ்தீனத்திற்கு விடுமுறையைக் கழிக்க வந்தவன். முகமதின் மறைவுக்குப்பின்னர், ஒரு நாள் தாரிக்கை இரண்டு இஸ்ரேலிய காவல்துறையினர் மிகக்கடுமையாகத் தாக்கிவிட்டு, அவனை கைது செய்து கொண்டுசென்றனர். அவர் தாக்கப்பட்ட வீடியோ ஆதாரமும் ஒரு பாதுகாப்புக் கேமராவின் மூலம் கிடைத்திருக்கிறது. எவ்வித வழக்கும் பதிவு செய்யாமல் கடுமையான காயங்களை ஏற்படுத்திவிட்டு தாரிக்கை சிறையில் அடைத்தது இஸ்ரேலிய காவல்துறை. இஸ்ரேலிய மனிதவுரிமைக் குழுவொன்றின் முயற்சியிலேயே, மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு, பின்னர் நீதிமன்றத்திற்கு சென்று, அச்சிறுவன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளான். அவன் ஒரு அமெரிக்க குடியுரிமை பெற்றவன் என்பதாலேயே உயிரோடு வெளிவர முடிந்தது.

“அவர்கள் என்னை அடித்தார்கள். அடித்துக்கொண்டே இருந்தார்கள். பின்னர் மயங்கிவிட்டேன். கண்விழித்துப் பார்க்கையில் மருத்துவமனையில் இருந்தேன்.”

என்று சிறையிலிருந்து வெளியேவந்த தாரிக் தெரிவித்தான். அன்று தாரிக் வசித்த தெருவில் மட்டுமே, தாரிக் உள்பட 11 சிறுவர்களை அடித்துத்துன்புறுத்தி சிறையில் அடித்திருக்கிறது இஸ்ரேல் காவல்துறை.

வீடியோ ஆதாரத்தை வெளியிட்டபோதும், அதனை பொய்யான வீடியோ என்று மறுப்பு தெரிவித்தது இஸ்ரேல் இராணுவம். ஆனால், தாரிக்கின் முகமே வீங்கி, அவன் யாரென்றே அடையாளம் தெரியாத அளவிற்கு உருமாறியிருக்கிறது என்பதை பொய்யென்று யாரும் மறுக்கமுடியாது.

மூன்று இஸ்ரேலிய இளைஞர்கள், பாலஸ்தீன மக்கள் வாழும் பகுதிக்கு அருகில் இறந்தார்கள் என்கிற ஒரே காரணத்திற்காக, எவ்வித விசாரணையும் நடத்தாமல், ஒட்டுமொத்த பாலஸ்தீனர்கள் மீதும் வன்முறையைத் திணிக்கிறது இஸ்ரேல் அரசு. சிறுவர்கள் உள்ளிட்ட 9 பாலஸ்தீனர்களைக் கொன்றும், 500கும் மேற்பட்டோரை வழக்கின்றி கைதுசெய்தும், எண்ணற்ற வீடுகளை இடித்துத்தள்ளியும், கண்ணில்பட்டவர்களை எல்லாம் கடுமையாகத் தாக்கி அடித்தும், மிகப்பெரிய அராஜகச் செயலைச் செய்துகொண்டிருக்கிறது இஸ்ரேல் என்கிற நாட்டின் அதிகாரப்பூர்வ அரசு. நமது மீடியாக்கள் சொல்லாதவை.

கேன்சர் நோய் உள்ளிட்ட கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட, அவசர சிகிச்சைக்காக எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லக் காத்துக்கொண்டிக்கும் 10000 த்திற்கும் மேற்பட்ட பாலஸ்த்தீனர்களை தடுத்து நிறுத்தியிருக்கிறது இஸ்ரேல்.

ஜூலை 7 நிலவரம் 1:

இஸ்ரேலிய சிறுவர்களின் மரணத்திற்கு ஹமாஸ் தான் காரணம் என்று சர்வதேச சமூகத்தை நம்பவைத்துக்கொண்டிருப்பதால், ஃபட்டா மற்றும் ஹமாஸ் இணைந்து உருவாக்கியிருக்கும் ஒருங்கிணைந்த பாலஸ்தீன அரசின் நம்பகத்தன்மையினை வீழ்ச்சியடைச் செய்ய முயன்று கொண்டிருக்கிறது இஸ்ரேல் அரசு. (2000 ஆம் ஆண்டிலிருந்து 1400 பாலஸ்தீன சிறுவர்களை இஸ்ரேல் இராணுவம் கொன்றதை ஊடகங்கங்கள் மறைப்பது, இஸ்ரேல் அரசுக்கு மேலும் உதவியாக இருக்கிறது)

ஜூலை 7 நிலவரம் 2:

பாலஸ்தீனத்திற்குள் நுழைந்து அதிரடியாக தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறது இஸ்ரேல் இராணுவம். ஏராளமானோரை கைது செய்து சிறையில் அடித்துக்கொண்டும் இருக்கிறது. இதனால், ஏற்கனவே சிறையில் இருப்பவர்கள் நடத்திக்கொண்டிருந்த உண்ணாவிரதத்திற்கு வெளியில் ஆதரவு கொடுக்கமுடியாத நிலையில் இருக்கின்றனர் பாலஸ்தீன மக்கள். அதன் காரணமாக, 100 நாட்களுக்கும் மேலாக நடத்தப்பட்டுக்கொண்டிருந்த உண்ணாவிரதத்தை வேறுவழியின்றி நிறுத்திவிடுவதாக அறிவித்திருக்கிறார்கள் உண்ணாவிரதத்தை மேற்கொண்ட பாலஸ்தீன கைதிகள்.

ஜூலை 7 நிலவரம் 3:

வெஸ்ட் பேங்க்கிற்குள் நுழைந்து ஏற்கனவே வாழ்கிற பாலஸ்தீன மக்களின் சொத்துக்களை அடித்து நொறுக்குவதன் மூலம், அவர்களை அங்கிருந்து விரட்டுவது எளிதாகிவிடும் என நினைக்கிறது இஸ்ரேல் அரசு. அப்பகுதிகளை பெரியளவில் ஆக்கிரமித்து, அங்கே ஏராளமான இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் குடியிருப்புகள் கட்டுவதற்கும் தயாராகிவருகிறது இஸ்ரேலிய அரசு.
எப்பொழுது என்னவாகுமோ என்கிற பதட்டத்தில், தங்களுடைய வாழ்விடங்களை விட்டு வெளியேறவும் முடியாமல் சுற்றிவளைக்கப்பட்டு, வதைபட்டுக்கொண்டிருக்கிறார்கள் பாலஸ்தீன மக்கள். இக்கட்டுரையை எழுதி முடித்ததற்கும் வெளியிடுவதற்குமான இடைவெளிக்குள்ளாகவே, வான்வழித்தாக்குதலின் மூலம் 17 பாலஸ்தீனர்களைக் கொன்றிருக்கிறது இஸ்ரேல் அரசும் இராணுவமும். 40000 இஸ்ரேல் இராணுவப்படையை “ஆப்பரேசன் ப்ரொடக்டிவ் எட்ஜ்” என்கிற பெயரில் பாலஸ்தீனைத் தாக்கும் நடவடிக்கைக்கு அனுப்ப இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. அதற்கு முன்பாகவே, காசா மீது கடுமையான வான்வழித்தாக்குதலை நடத்தத் துவங்கிவிட்டது இஸ்ரேல் இராணுவம்.
ஐ.நா. சபையே 2014 ஆம் ஆண்டை, சர்வதேச பாலஸ்தீன மக்கள் ஆதரவு ஆண்டாக அறிவித்திருக்கிறது. சர்வதேச சமூகம் குரல் கொடுக்கவும் கைகொடுக்கவும் இஸ்ரேலிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் வேண்டிய நேரமிது என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.
Copyrighted - United Nations

Copyrighted – United Nations

மேலும் விவரங்கள் அறிய:
http://electronicintifada.net
http://www.intal.be
http://972mag.com

Related Posts