பிற

தெலுங்கானா – மறக்கடிக்கப்படும் வரலாறு!

வரலாறு‍, அது‍ எப்போதும் எழுதப்படுபவர் சார்ந்த அரசியல், சூழல், மற்றும் அவரது‍ விருப்பத்திற்கு‍ ஏற்றார் போல் தான் எழுதப்பட்டது, எழுதப்படுகிறது, எழுதப்படும். வரலாறு‍ திரிக்கப்படுவது‍ என்பதற்கு‍ மோடி‍ அவர்களின் சமீபத்திய பேச்சுக்களே உதாரணங்கள். வரலாறு எப்போதும் ஒரே மாதிரியாக எழுதப்பட்டதும் கிடையாது. அதேபோன்று‍ சில வரலாறுகள் (அதாவது‍ நிகழ்வுகள்) மக்களிடமிருந்து விலக்கி வைப்பதற்காக திட்டமிட்டு‍ மறைக்கப்படும். அப்படி மறைக்கப்பட்டு‍ பெருவாரியான மக்களுக்கு தெரியாமலேயே போய்விட்ட ஒரு‍ வரலாறை நினைவு கூர்வதற்கான ஒரு‍ முயற்சி இது‍.

இந்த வரலாற்றை முதன் முதலில் ஒருவர் சொல்ல கேட்கும் போது‍ ஆச்சர்யப்பட்டேன், ஆயுதம் ஏந்திய போராட்டமா? அதுவும் 5 ஆண்டுகளா? என்று‍. பின் அன்றிலிருந்து‍ அவ்வரலாறை படிப்பதற்கான வாய்ப்புகள் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. முடிவில் அந்த வாய்ப்பும் கிடைத்தது..

வரலாறு

அகிம்சா நெறியின் விளைநிலம், நமது இந்திய திருநாடு. நமது தேச விடுதலை கூட கத்தியின்றி ரத்தமின்றி பெறப்பட்டது. நமது வரலாறும் இப்படித்தான், நாம் விடுதலை பெற்றதும் இப்படித்தான். நம்மை மற்ற நாடுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் அம்சம் இதுதான் என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கலாம். ஏன் நமது வரலாற்று பாடப் புத்தகங்களில் கூட அப்படித்தான் கூறப்பட்டிருக்கிறது.

இந்த கூற்றுகள் எவ்வளவு அபத்தமானவை? இது உண்மைக்குப் புறம்பானது. வரலாற்றையே திருத்திக் கூறுவதாகும். நமது விடுதலைப் போராட்டம் அப்படிப்பட்டதா? இல்லை. ஆயுதமேந்திய நீண்ட போராட்டங்கள் மற்றும் மகத்தான பல தியாகங்கள் தான் நாம் சுதந்திரம் பெறுவதற்கு‍ வழிவகுத்தது‍.

ஆயுதமேந்தி போராடி, அடக்கு முறைகளைச் சந்தித்து, உயிர்த் தியாகங்கள் – ரத்தம் சிந்தித்தான் நமது விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு வரியும் எழுதப்பட்டுள்ளது.

1857 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் கழகத்தில் ஆரம்பித்து 1946 பிப்ரவரி பம்பாய் கப்பற்படை வீரர்களின் எழுச்சி வரை ஆயுதமேந்திய போராட்டங்களும் உயிர்த்தியாகங்களும் நம்மிடையேயுள்ள இரத்த சாட்சியங்களாகும்.

அப்படி‍ ரத்தம் சிந்தி, ஆயுதம் ஏந்தி போராடிய ஒரு வீர வரலாறு‍ மறைந்து‍ கொண்டிருக்கிறது (மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது).

இந்த வரலாற்று‍ உண்மையை இன்றைய இளைய தலைமுறையினரும் சமூக மாற்றத்தை காண விழைபவர்களும்  தெரிந்து‍ கொள்வது‍ அவசியம்.

இந்திய வரலாறு ஆயுதம் தாங்கிய பல எழுச்சிகளைச் சந்தித்துள்ளது. நமது வரலாற்றின் வீரம் மிக்க அத்தியாயங்களை வரலாற்றாசிரியர்கள் மூடி மறைத்த பேரூண்மைகள் ஏராளம். அதில் ஒன்று இன்று மறக்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தெலுங்கானா விவசாயிகளின் ஆயுதப் போராட்டம். இன்றைக்கு‍ பிரிவினை கோரும் தனித் தெலுங்கானா போராட்டம் போன்றதல்ல.

இந்திய வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய நாட்கள், பல படிப்பினைகளை கம்யூனிச இயக்கத்திற்கு கற்றுக் கொடுக்க இருந்த நாட்கள். அப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்கது‍ தெலுங்கானா விவசாயிகளின் ஆயுதப் போராட்டம்.

இந்தியாவில் நிலப் பிரச்சனைக்குத் தீர்வு காணுகிற கண்ணோட்டம் தேசத்தின் தந்தை என்றழைக்கப்படும் காந்தியடிகளிடத்திலோ அவரது‍ காந்தியத்திலோ அறவே இல்லை. அதனால் தான் தீர்வு காணப் பெறாத இந்த விவசாயப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற வரலாற்றுக் கட்டாயம் உண்டானது.

அப்படி‍ ஒரு‍ கட்டாயத்தை ஏற்படுத்தியது‍ தெலுங்கானா, புண்ணப்புற வயளார், தேபாகா ஆகிய  போராட்டங்கள். இந்த போராட்டங்கள் தேசத்தில் ஒரு‍ பெரிய தாக்கத்தை ஏற்படு்த்தியது‍. ஆனால், தெலுங்கானா விவசாயிகளின் ஆயுதமேந்திய போராட்டம் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஒரு‍ பெரிய தாக்கத்தை உண்டு‍ பண்ணியது‍ என்றே கூறலாம் (அதற்கு‍ இந்திய கம்யூனிச வரலாறே சாட்சி). ஆயுதப் போராட்டத்தின் பல்வேறு‍ வடிவங்கள் பற்றியும், இந்திய அரசின் வர்க்கத் தன்மை என்ன? என்பது‍ பற்றியும், ஒரு‍ ஆழமான கருத்து‍ மோதலையும் கம்யூனிச இயக்கத்தில் தோற்றுவித்தது. பிற்காலத்தில் இதே நிகழ்வு கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபடுவதற்கு‍ம் இட்டுச் சென்றது.

வடக்கே காஷ்மீர் சமஸ்தானத்திலிருந்து‍ தெற்கே திருவிதாங்கூர் சமஸ்தானம் வரை மன்னராட்சி நடைபெற்றது‍. இந்த மன்னராட்சி நடைபெற்ற இடங்களில் பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக மட்டுமல்லாமல் தங்களை ஆண்ட மன்னர்களுக்கு‍ எதிராகவும் நிலப்பிரபுத்துவத்துக்கு‍ எதிராகவும் போராட வேண்டிய சூழல் நிலவியது.

சூழ்ச்சி

இந்தியாவில் பிரிட்டிஷ் தனது‍ அதிகாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள இரண்டு‍ ஆயுதங்களைப் பயன்படுத்தியது‍. ஒன்று‍ மக்களின் வேற்றுமையை கூர் சீவி மக்களை ஒருவருக்கொருவரை அவர்களுக்குள்ளேயே மோதவிடுவது, மற்றொன்று‍ சுதேசி மன்னர், பிரிட்டிஷ் ஆட்சிக்கு‍ கப்பம் செலுத்தும் விசுவாசமானவர்களாக மாற்றுவது.

இந்தியா விடுதலை அடையும் போது‍ மன்னராட்சி நடைபெற்று‍ வந்த சுதேசி சமஸ்தானங்கள் தொடர்பாக பிரிட்டிஷார் ஒரு‍ திட்டத்தை அறிவித்தது‍. இத்திட்டத்தின்படி‍ சுதேசி சமஸ்தானங்கள், இந்தியாவோடு‍ இணைவதா? பாகிஸ்தானோடு‍ இணைவதா? அல்லது‍ தனியாக இயங்குவதா என்று‍ முடிவு செய்யும் உரிமை மன்னர்களுக்கே வழங்கப்பட்டதாகும். பிரிட்டிஷ் அரசு‍ இந்தியாவிற்கு‍ சுதந்திரம் வழங்க ஒப்புக் கொண்ட நேரத்திலும் கூட, நாட்டை பிரிவினை செய்ததோடு, சுதேச சமஸ்தானங்களையும் தனியே பிரித்து‍ வைக்கச் சதி செய்தது.

அப்படி‍ மன்னராட்சி நடைபெற்று‍ இந்தியாவோடு‍ இணைய மறுத்தது‍ ஐதராபத் நிஜாம். 1947 ஆம் ஆண்டு‍ அக்டோபர் மாதம் இந்தியாவோடு‍ இணைய மறுத்து‍ ஏற்கனவே இருந்த மன்னராட்சி நிலை அப்படியே தொடரும் என்ற ஒப்பந்தத்தை ஐதராபாத் நிஜாம் இந்திய அரசோடு‍ செய்து‍ கொண்டார்.. சுயேட்சையாகவே ஆசாத் ஐதராபாத் ஆக செயல்படுவது‍ என்று‍ நிஜாம் முடிவு செய்தார். தொடர்ந்து, ஐதராபாத் மாநிலத்தை இந்தியாவோடு‍ இணைக்க வேண்டுமென்று‍கோரி ஒன்றுபட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ஆந்திர மகாசபை, காங்கிரஸ் கட்சி ஆகிய மூன்றும் இணைந்து‍ ஒரு‍ போராட்டத்தை துவக்கின.

தெலுங்கானா விவசாயிகளின் எழுச்சிமிக்க ஆயுதப் போராட்ட வரலாறு‍ வரலாறு‍ (1946-1948)

இந்திய மண்ணில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தனது ரத்தத்தால் இட்டு நிரப்பிய தெலுங்கானா மண்ணில் எக்காளம் முழங்கிய நாட்கள்

Telangana Rebellion

1947 முதல் 1951 வரை தெலுங்கானா விவசாயிகளின் ஆயுதப் போராட்டக் குழுக்கள் வசமிருந்த இடங்கள்)

ஐதராபத்தை இந்தியாவில் இணைப்பது, மன்னனுக்கெதிராக மக்களை அணி திரட்டுவது, ஆயுதமமேற்திப் போராடுவது‍ எனும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டது. கம்யூனிஸ்டுகளுக்கும், காங்கிரசுக்கும் சில விசயங்களில் ஒருமித்த கருத்து‍ இருந்தது. நிஜாமை எதிர்ப்பது‍ ஐதாராபத்தை இந்தியாவோடு‍ இணைப்பது‍ போன்றவை. ஆனால் முக்கியமான விசயங்களில் காங்கிரஸ் வேறுபட்டது. அது‍ நிலப்பிரபுக்ளுக்கு எதிரான போராட்டத்தை அவர்கள் ஆதரிக்க மறுத்ததாகும். நில உச்சவரம்பு விசயத்தில் காங்கிரசார் 500 ஏக்கர் ஒருவர் வைத்திருக்கலாம் என்றனர். ஆனால், 10 ஏக்கர் மட்டும் போதும் என்பது‍ கம்யூனிஸ்டுகளின் வாதம்.

ஆனால், மக்களின் மனோபாவம் வேறாக இருந்தது. நிஜாமை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றே விரும்பினர். நிஜாமிற்கு‍ எதிராக இயக்கம் மேலும் வலுவடைந்தது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நடுத்தர வர்க்க மக்கள், அறிவு ஜீவிகள், வளர்ந்து‍வரும் முதலாளிகள் என அனைவரும் நிஜாமுக்கு‍ எதிராக கிளம்பினர்.

நிலப்பிரபுத்துவத்துக்கு‍ எதிராக நிஜாமின் ஆட்சிக்கெதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னிலும் அதிக வீரியத்தோடு‍ ஒருமுகப்படுத்தின. தெலுங்கானா பகுதி முழுவதும் போராட்டம் வெடித்தது. நிஜாம் ஆண்ட பிரபுத்துவ ஐதராபத் சமஸ்தானத்தில் இந்தப் போராட்டம் விவசாயிகளின், மக்கள் எழுச்சியாக மாறியது.

10 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட கிராம ஸ்கு‍வாடுகள், சகலவிதமான பயிற்சிகளும் பெற்ற நிரந்தரமான ஒரு‍ கொரில்லா படையும் அமைக்கப்பட்டது. எண்ணற்ற மோதல்களால் இக்காலத்தில் மட்டும் 200 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் அதைவிட பல மடங்கு‍ எண்ணிக்கையில் நிஜாமின் ராணுவத்தினர், போலீசார், நிலப்பிரபுக்கள் கொல்லப்பட்டனர். பல நூற்றுக்கணக்கான கிராமங்கள் விவசாயிகள் வசமானது. நில விநியோகம், கல்வி, சுகாதாரம் மற்றும் இதர கிராம சேவைகள் அனைத்தும் கம்யூனைச் சேர்ந்த மக்கள் குழுக்களாலேயே நிர்வகிக்கப்பட்டன.

இந்தியாவிலிருந்து‍ ஐதராபாத் பிரிவதையும் விவசாயிகள் இயக்கம் ஆந்திராவில் முழுமையாகப் பரவுவதையும் தடுக்கிற நோக்கோடு‍ இந்திய அரசு‍ராணுவததை 1948 இல் நிஜாமுக்கு‍ எச்சரிக்கை விடுக்கிறது.

1948 செப்டம்பர் 13 இல் இந்திய ராணுவம் ஐதராபாத்தை கைப்பற்றியது. இந்திய ராணுவத்தின் வருகையால் உற்சாகம் அடைந்த மக்கள், நிஜாமின் கூலிப்படைகளையும் நிலப்பிரபுக்களின் வீடுகளையும் இடித்து‍த் தரைமட்டமாக்கினர். வெறியாட்டம் நடத்திய நிலப்பிரபுக்களையும் தண்டனையளித்துக் கொன்றனர். இந்திய ராணுவம் நுழைந்த 5 ஆவது‍ நாளில் நிஜாம் சரணடைந்தார்.

1948-1951

நிஜாம் மன்னனுக்கும், நிலப்பிரபுக்களுக்கும் எதிரான அவர்களின் போராட்டத்தை நிலப்பிரபுக்களின் நலன்களுக்காக அழித்து ஒழித்தது இந்திய அரசு. இதனால் ஆயுதப் போராட்டம் நீடிக்க வேண்டியதாயிற்று.

நிலப்பிரபுக்கள் அனவைரும் அரசதிகாரிகளுடன் கைகோர்த்துக் கொண்டனர். இந்திய இராணுவம் மக்கள் படையின் மீது‍ தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தது. மன்னராட்சிக் எதிரான போராட்டத்தை விட சொந்த தேசத்தின் இராணுவமே மக்களுக்கு‍ எதிராக செயல்பட ஆரம்பித்தது. பின் அரசு‍ பேச்சுவார்த்தைக்கு‍ அழைத்தது. அரசு‍ நிலங்களை மக்களுக்கு‍ பிரித்துக் கொடுக்க ஒப்புதல் தெரிவித்தது, மற்றும் போராட்டங்களில் கலந்து‍ கொண்டவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இறுதியில் தெலுங்கானா விவசாயிகளின் போராட்டம் 1951 அக்டோபர் 21 இல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இப்போராட்டம் நான்கு‍ வகையில் பார்க்கப்படுகிறது..

 1. பகிரங்க விரோதிகளால்: இப்போராட்டம் கம்யூனிச வன்முறை, கொள்ளை, அராஜகம் என்று‍ குறை கூறுகிறது‍.
 2. வலது‍ கம்யூனிஸ்டுகள் (இன்றைய சிபிஐ): இந்தப் போராட்டத்தை குறிப்பாக 1949-1951 காலத்திய கொரில்லா போராட்டத்தை குறுங்குழுவாதம். வறட்டுச் சூத்திரவாதம், தனிநபர் பயங்கரவாதம் என்றது‍.
 3. நக்சலைட் (நக்சல்பாரி, மாவோயிஸ்டுகள்): தெலுங்கானா போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டதை துரோகம் என்கின்றனர். இன்று‍ம் ஆந்திர மாநிலத்தில் கரீம் நகரில் நக்சல்/மாவோயிஸ்டுகள் இருப்பது‍ குறிப்பிடத்தக்கது‍.
 4. இடது‍ கம்யூனிஸ்டு‍ (இன்றைய சிபிஐ(எம்)): இப்போராட்டத்தை ஆதரித்தவர்களில் பெருவாரியானவர்கள் பின்னாளில் கம்யூனிஸ்ட் கட்சியின் பிளவின் போது‍ இந்திய கம்யூனிஸ்டு‍ கட்சி (மார்க்சிஸ்ட்) இல் இணைந்து‍ செயல்பட்டனர்.

இந்தப் போரட்டத்தின் பெருமைக்குரிய சாதனைகள்

 • போராட்டம் 16,000 சதுர மைல் (கிமீ) சுமார் 30 லட்சம் மக்களை உள்ளடக்கி, மூன்று‍ மாவட்டங்களில் 3000 கிராமங்களில் கிராம இராஜ்ஜியம் அமைப்பதில் வெற்றி பெற்றது.
 • மக்கள் குழுக்களில் வழிகாட்டலின் அடிப்படையில் 10 லட்சம் ஏக்கர் நிலம் விவசாயிகளிடம் மறுவிநியோகம் செய்யப்பட்டது (இந்தியாவில் மேற்கு‍ வங்கம், கேரளா, திரிபுரா மாநிலங்களில் மட்டும் தான் நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் மூலம் நிலம் மக்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது‍).
 • கட்டாய உழைப்பு முறை ஒழிந்தது, விவசாயத் தொழிலாளர்களின் கூலி உயர்ந்தது.
 • முதன் முறையாக இலட்சக் கணக்கான விவசாயிகள் தினமும் இரு‍ முறை சாப்பிட முடிந்தது.
 • நிலவுடமைப் புரட்சி (Agrarian Revolution) முன்னுக்கு‍ வந்தது.
 • காங்கிரஸ் வேண்டா வெறுப்பாக நிலச் சீர்திருத்த சட்டத்தை அமல்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டது. இந்த சமயத்தில் தான் நில உச்சவரம்புச் சட்டமு‍ம் இயற்றப்பட்டது.
 • 1956 இல் இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் உருவாவதற்கு‍ வழிகோலியது.
 • இந்திய வரைபடத்தை மொழிவழியில் அதாவது‍ தேச நலனுக்குகந்த வழியில் ஜனநாயக வழியில் திருத்தி வரைவதற்கு‍ ஈடிணையற்ற பங்கைச் செலுத்தியது..
 • 1952 பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்டு‍ கட்சி தனிப்பெரும் எதிர்க்கட்சியாக மலர வழிகோலியது..
 • இறுதியாக தெலுங்கானா போராட்டம் இந்திய கம்யூனிச இயக்கத்தின் மக்கள் ஜனநாயக புரட்சியின் நடைமுறை உத்தி மற்றும் தந்திரம் குறித்த அடிப்படையான தத்துவ-சிந்தாந்தப் பிரச்சனைகளை முன்னிறுத்தி விஞ்ஞான ரீதியில் எதார்த்திற்கான நடைமுறைத் தீர்வுகளை கோரி நின்றது.

இந்தப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள் மற்றும் உழவர்கள் 4000 பேர் கொல்லப்பட்டனர். 10000 க்கும் மேற்பட்டவர்கள் 3-4 ஆண்டுகளில் சிறையிலடைக்கப்பட்டனர்.

இந்திய புரட்சி எத்தகையது?

மக்கள் தொகையில் 1 சதவிகிதம் மட்டுமே இருக்கும், வளர்ச்சி குன்றிய பிற்பட்ட நாட்டில் தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறைவேற்றுவதில் கம்யூனிஸ்டு‍ கட்சியின் பங்கு‍ என்ன? இது‍ போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உட்கட்சி விவாதத்திற்கு‍ இட்டுச் சென்றது. குறிப்பாக, கடைசி இரண்டு‍ வருடங்களில் கம்யூனிஸ்டு‍ கட்சி இரு‍ முகாம்களாக பிளவுபட்டது.

 1. ஒரு‍ முகாம் விவாசயிகளின் ஆயுதப் போராட்டத்தை ஆதரித்தது.
 2. மற்றொன்று‍ பயங்கரவாதம் என்று‍ குறை கூறியது.

அரசியல் சித்தாந்த ரீதியிலான கடுமையான பிளவு இயக்கத்தை கூர்மைப்படுத்தவும் அனுபவத்திலிருந்து‍ பாடம் கற்கவும் வழிகோலியது.

இந்திய கம்யூனிச இயக்கத்தை கணிக்க, தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தை மையமாகக் கொண்டு‍ எழுந்த பல்வேறு‍ உட்கட்சி சர்ச்சைகளை அலட்சியம் செய்தால் கம்யூனிஸ்ட் கட்சியின் பிளவின் மூலக் காரணத்தை அறிய முடியாது.

அன்றைய தெலங்கான போராட்டம் என்பது‍ ஒன்றுபட்ட, மொழிவழி மாநிலங்களை உருவாக்க பாடுபட்டது. இன்றைய தனித் தெலுங்கானா போராட்டம் பிளவுக்கு‍ இட்டுச் செல்கிறது. தீர்வை நோக்கி மக்களை ஒன்றுபடுத்துவதற்கு‍ பதிலாக பிரித்தாழுவது‍ மக்களை அனைவருக்கும் உள்ள பொதுவான பிரச்சனைகளில் ஒன்று‍ சேர்ந்து‍ போராடவிடமால் தடுக்கும் சூழ்ச்சியாகும்..

அன்றைய தெலுங்கானா ஆயுதப் போராட்டம் மொழிவழி மாநிலங்களுக்கு‍ வழிகோலியது‍. இன்றைய தனித் தெலங்கான போராட்டம் பல மேலும் மாநிலங்களை கூறுபோடுவதற்கு‍ இட்டுச் சென்று‍ கொண்டிருக்கிறது.

வரலாற்றில் ஒரு‍ அழுத்தமான முத்திரையைப் பதித்தது‍தான் ஐதராபாத் மன்னனுக்கெதிராகத் தெலுங்கானா மக்கள் நடத்திய ஆயுதப் போராட்டம்.

இந்த வரலாற்றைப் பற்றி எழுத்துக்கள் சுருக்கமாகக் கூட இல்லை. இப்போராட்டம் முடிவுக்கு‍ வந்து‍ 20 ஆண்டுகளுக்கு‍ பின் 1972 இல் பி.சுந்தரய்யா எழுதிய வெளிவந்த வீரத் தெலுங்கானா – ஆயுதப் போராட்டமும் அதன் படிப்பினைகளும் (Telangana People’s Struggle and Its Lessons) என்ற ஒரு‍ புத்தகம் தான் இன்றும் அழியாப் புகழ் பெற்ற அந்த வரலாறை காக்கும் ஆவணமாகத் திகழ்கிறது.

 

telangana people's struggle and its lessons

English Version

telangana people's struggle and its lessons

Tamil Version

 

 

 

 

 

 

 

 

மேலும் படிக்க

1. பி.சுந்தரய்யா அவர்கள் எழுதிய கட்டுரை

2. “வீரத் தெலுங்கானா – ஆயுதப் போராட்டமும் அதன் படிப்பினைகளும்” புத்தகம்

Related Posts