குறும்படங்கள்

அறியாமை எனும் இருள் போக்க…!!

சரத் அவர்கள் இயக்கி காம்ரேட் டாக்கிஸ் யூடியூப் சானலின் வெளியிட்ட “அறியாமையின் இருள்” எனும் குறும்படத்தை பார்த்தேன், சரத் பழவேற்காடு பகுதியை சேர்ந்தவர் என்பதால் அப்பகுதி மக்களின் பிரச்சணையை தான் கற்ற கலை வடிவத்தின் மூலம் சிறப்பாக வெளிபடுத்தியிருக்கிறார், சமூக அக்கறையுள்ளவர்களால் மட்டுமே இது போன்ற குறும்படத்தை தரமுடியும்.

பழவேற்காட்டிலிருந்து 60கிமீ தொலைவில் உள்ள சென்னை நகரத்திற்கு தினமும் வேலைக்கு செல்லும் இளைஞர்கள், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், மீன் வியாபாரம் செய்ய வெளியூர் செல்லும் தொழிலாளிகள், என சகல தரப்பினரும் காலை 6மணி முதல் பேருந்திற்காக பழவேற்காடு பேருந்து நிலையத்தில் காத்திருப்பார்கள் சராசரியாக மாதம் 5 அல்லது 6 நாட்கள் பேருந்து குறித்த நேரத்திற்கு வராது காலை 6மணிக்கு வர வேண்டிய பேருந்து 8மணிக்கெல்லாம் கூட தாமதமாக வந்திருக்கிறது,

சென்னைக்கு செல்ல பழவேற்காட்டிலிருந்து பொன்னேரி வரை பேருந்தில் சென்று அதற்கு பிறகு இரயிலேறி சென்னை செல்ல வேண்டும் பொன்னேரி-சென்னை இரயில் வசதியும் மிகக்குறைவு பழவேற்காட்டில் பேருந்து தாமதமானால் அரை நாள் விடுப்பு சர்வசாதாரணமாக நடந்துவிடும், இந்த பேருந்து தாமதத்தால் கிராமப் புறங்களில் ஏற்படும் பாதிப்புகள் அதிகம் என்பதை அரசும் அதிகாரிகளும் துளியும் உணரவில்லை.

வேலை செய்யும் இடங்களில் தொழிலாளிகள் ஏச்சும் பேச்சும் வாங்குவதோடு வேலையிழப்பும் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. பேருந்து வராத நேரங்களில் மக்கள் தன்னெழுச்சியாக போராடும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். அந்நேரத்தில் ஊர் நண்பர்கள் இளைஞர்கள் DYFI தோழர்களை அழைப்பார்கள் 100க்கணக்கான மக்களை மறியலில் நாங்கள் ஈடுபடுத்துவோம் தாமதமாக வரும் பேருந்தை சிறை பிடிப்போம்.

பொன்னேரி கிளை மேலாளரை நேரில் வரவழைத்து எழுத்து பூர்வமாக முறையாக பேருந்தை இயக்கிட நடவடிக்கை எடுக்கிறேன் என சொல்ல வைப்போம். இதெல்லாம் கடந்த காலத்தில் நடந்தவை வாக்குறுதிகள் வந்துகொண்டே இருக்கும் ஆனால் இன்றுவரை இந்த பிரச்சணையில் பழவேற்காடு பாதிக்கப்பட்டுக்கொண்டே தான் இருக்கிறது, இந்த பட்டியலில் மேலும் பல கிராமங்கள் இருக்கும். இது தமிழகம் முழுவதும் இருக்கும் ஒரு பொது பிரச்சணை.

இந்த பாதிப்பிலிருந்து தான் இயக்குநர் சரத் இந்த கதை களத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

படத்தின் துவக்கத்தில் அப்பா, மகன், மகள் மூவரும் வெவ்வேறு காரணங்களுக்காக ஒரே வீட்டிலிருந்து கிளம்புவது போல் காட்சி, அப்பா தன் கட்சி தலைவர் வருகைக்காக தயாராகுகிறார் அந்நேரத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கவுண்டமணியின் அரசியல் அல்லக்கை குறித்த விளக்கத்தை ஒரு குறியீடாக வைத்திருக்கிறார், அப்பா எப்படியான அரசியல் வாதி என்று கவுண்டமணியின் வாயிலாக புரிந்துகொள்ளலாம் பெரும்பாலான அப்பாக்கள் அண்ணன்கள் இப்படியான அரசியல் அறியாமையில் தான் இருக்கிறார்கள் இவர்கள் வெறும் அல்லக்கைகள் மட்டுமல்ல களத்தில் போராடுபவர்களை தடுக்கும் அடியாட் படைகளாகவும் சில நேரங்களில் மாறிவிடுவார்கள், வெள்ளைதாளை வைத்துக்கொண்டு அரசியல் நடவடிக்கையில் ஈடுபடும் இளைஞர்கள் ஒவ்வொரு ஊருக்கும் 4 பேர் இயல்பாக இருக்கத்தான் செய்கிறார்கள், நாங்களும் அப்படித்தான் இருந்தோம்.

சொந்த வீட்டிலேயே ஏளனமாக பார்க்கும் பார்வை ஊரார் பலர் பாராட்டினாலும் எதுக்கு தம்பி இதெல்லாம் என்ற கேள்விகளும் அந்த இளைஞர்கள் அதிகம் எதிர்கொள்வார்கள்
அல்லக்கை அரசியல்வாதிகளுக்கு இந்த கேள்வியெல்லாம் இல்லை.

எது குறித்தும் கவலையில்லாமல் இருக்கும் அவர்களின் அறியாமை அல்லது சுயநலம் சார்ந்த அரசியலால் தான் அவர் குடும்பமும் மொத்த ஊரும் பாதிக்கப்படுகிறது. சரத் இதைத்தான் அறியாமையின் இருளாக சுட்டிக்காட்டுகிறார். படம் துவங்கியது முதல் முடியும் வரை நேர்த்தியான காட்சிகளை கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார் முதல் படத்திலேயே ஒரு மெச்சூரிட்டி தெரிகிறது கேமரா வொர்க் நடிகர்கள் தேர்வு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது, பேருந்திற்காக காத்திருக்கும் பெண் செல்போனில் முதலாளியிடம் வாங்கிய திட்டிற்கு பிறகு படம் அப்படியே நிறைவடைந்திருக்க வேண்டும் இறுதியில் சொல்லும் மெசேஜை தவிர்த்திருக்கலாம் அதுதான் கொஞ்சம் நாடகத்தன்மையாக அமைந்துவிட்டது. மற்றபடி அனைத்தும் சிறப்பு  முதல் படத்திலேயே தான் வாழும் மக்களின் பிரச்சணையை கதை களமாக எடுத்து 5நிமிடத்தில் அதை பதிவு செய்திருப்பது பாராட்டப்பட வேண்டியது மேலும் பல படைப்புகளை இது போல் தந்து மக்களின் அறியாமையின் இருளை போக்க வாழ்த்துகிறேன்.

Related Posts