அரசியல்

பாஜகவின் சமூகப் பொறியியலும் (SOCIAL ENGINEERING) தந்திர உபாயங்களும்

தமிழக பாஜக தலைவராக, தேசியஎஸ்.சி /எஸ்டி ஆணையத்தின் துணைத்தலைவரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான எல் முருகன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் தமிழகத் தலைவராக இருந்த, டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பரில் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆறுமாதங்களாகக் காலியாக இருந்த இப்பதவிக்கு, வானதி ஸ்ரீனிவாசன், எச் ராஜா, சி பி ராதாகிருஷ்ணன், கே டி ராகவன் உள்ளிட்ட பலருள் ஒருவர் நியமிக்கப்படுவார் எனப் பேச்சு இருந்தது. இந்த நிலையில், எல் முருகன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். திரு எல்.முருகன் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்.

பாஜகவில் ஏற்கனவே, பட்டியலின வகுப்பைச் சேர்ந்த திரு கிருபாநிதி
அவர்கள் 2000 ங்களில் தமிழகத் தலைவராக இருந்ததைத் தொடர்ந்து, பாஜக இரண்டாம் முறையாக, பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவரைத் தலைவராக நியமித்துள்ளது.

வேறெந்த தளத்தையும் விட, அரசியல் தளத்திலேயே சாதி அதிகமாகத் தொழிற்படும்.

சாதி எதிர்ப்பை, ஒழிப்பை முன்வைத்து சீர்திருத்தம் பேசிவரும் தமிழகத்தில் அனைத்து சாதியினரின் பிரதிநிதித்துவம் ஏதோவொரு வகையில் நடைமுறைப்படுவதை நாம் காணமுடியும். பெரும்பான்மையாக உள்ள சாதியைச் சேர்ந்தவரையே, வாக்கரசியல் கட்சிகள் அனைத்தும் நிறுத்தும். தனித்தொகுதியில் கூட, பட்டியல் சாதியின் பெரும்பான்மைச் சாதியினரே நிறுத்தப்படுகிறார்கள். சாதி மைய அரசியல் தமிழகத்தில் ஆழமாகவும், நேர்மறை எதிர்மறை அம்சங்களில் விமரிசிக்கப்படக்கூடிய அளவிலும் இருக்கிறது.

திமுக, அதிமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகளும், இடதுசாரிகட்சிகளும், விசிக உள்ளிட்ட சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான கட்சிகளும், பாமக, கொங்கு நாடு மக்கள் கட்சி உள்ளிட்ட சாதிக்கட்சிகளும் தங்களுக்குள் அணிசேர்வதில் “சாதி” முக்கியமான பங்குவகிக்கிறது.

அவை சாதி அரசியலைக் கோட்பாட்டளவில் எதிர்த்தும் (அ) ஏற்றும், நடைமுறையில் பின்பற்றியும் வருகின்றன.

சாதிகுறித்த, அசல் அரசியல் பார்வையையும், சாதி ஒழிப்பு பற்றிய இயங்கியல் பார்வையையும் இன்னும் தீவிரமாக வைக்கமுடியாத நிலையில், சீர்திருத்த, கலக வாதங்கள் சாதி ஒழிப்புத் தரப்பாகவும், சாதி ஆதிக்கமும், சாதி மேலாதிக்கச் சிந்தனையும் சாதி ஆதரவு தரப்பாகவும் எதார்த்தத்தில் களத்தில் இருக்கின்றன.

சாதியை உளவியல் சிக்கலாகவும், சாதியைப் பார்ப்பனச் சிந்தனையாகவும், சாதியைச் சுயம்பாகவும், சாதியை ஒழிக்கவே முடியாததாகவும் என, பலவாறு சாதி இங்கே அரசியல் மையமாக நீடிக்கிறது. மேற்கு மண்டலத்தில் கவுண்டர், வடகிழக்கே வன்னியர், தென்மாவட்டங்களில் முக்குலத்தோர், தென்கோடியில் நாடார், இன்னும் சில இடங்களில் நாயுடு என, தமிழகம் சாதி மண்டலமாகவே இவ்வாக்கரசியல் கட்சிகளால் பகுக்கப்பட்டு, நிர்வகிக்கப்படுகிறது.

தொண்ணூறுகள் தொடங்கி இன்றுவரை, வன்னியர் வாக்குவங்கியை மையப்படுத்திய பாமக, தலித் அரசியல் தலைமைகள், இஸ்லாமியக் கட்சிகள், கொங்கு அரசியல் கட்சிகள் என திராவிட அரசியல் களம் பலவாறாகக் கிளைத்திருக்கிறது.

பாஜக 99 ,2001 தேர்தல்களில் திமுக அணியில் நாடாளுமன்ற, சட்டமன்றப் பிரதிநிதிகளைப் பெற்று, தமிழகத்தில் கால்பதித்தது பாஜக. தொடர்ந்த அரசியலில், பல்வேறு அரசியல் செய்தும் 2011 வரைகூட, பாஜக மீண்டும் பிரதிநிதித்துவம் பெறவில்லை.

2014 ல் நாடுமுழுவதும் ஊதிப்பெருக்கப்பட்ட மோடி பிம்பமும், காங்கிரசின் 10 ஆண்டுகால அவல ஆட்சியும் பாஜகவை அறுதிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்க வித்திட்டன. ஐந்து முனை போட்டி நிலவிய தமிழகத்தில், தருமபுரி, கன்னியாகுமரி ஆகிய இரண்டு தொகுதிகளில் பாஜக கூட்டணி வென்றது. தருமபுரியில் சாதி ஆதிக்கமும், குமரியில் மதவாதமும் வென்றது. பாஜக உறுப்பினர் பொன் ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சரானார்.

ஆனால், 2001ல் காலூன்றிய பாஜக அதன்பிறகு, தேர்தல்களில் வெற்றிபெறவில்லையே தவிர, சமூகத்தளத்தில் தன்னை நிறுவிக்கொண்டது.

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஏபிவிபியாக, பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களிடம் ஆர்எஸ்எஸ் ஆக, பார்ப்பனச் சங்கங்களாக, இடைநிலைச் சாதியினரைக் குறிவைத்த இந்து முன்னணியாக, தலித் மக்களைக் குறிவைத்த இந்து மக்கள் கட்சியாக, பாஜக வளர்ந்தது.

வடக்கே, பாஸ்வான், அந்வாலே போல, தமிழகத்தில் புதிய தமிழகம் கிருஷ்ண சாமி, புரட்சிபாரதம் மூர்த்தி, நாடாளும் மக்கள் கட்சி சரத்குமார், ஜான் பாண்டியன் போன்றோரை வளைத்துப்போட்டது.

சமணப் படுகைகளில் உள்ள கோயில்கள் உள்ளிட்ட பல கோயில்களின் பூசாரிக்குடும்பங்களை இந்து முன்னணி வளைத்துப்போட்டது.

இந்துமுன்னணியின் “ஜெய் காளி” முழக்கம், உள்ளூர் முளைப்பாரி, கோயில் திருவிழாக்களில் காவிக்கொடியுடன் ஒலித்தது.

சாதி இந்துக்களின் சாதிய புத்தியை மிகக் கச்சிதமாகக் கையாள பாஜக தொடங்கியது.

2014 தேர்தலில் மோடியை, பட்டிதொட்டி எல்லாம் கொண்டுசேர்த்த மதிமுக, பாமக, தேமுதிக போன்றவை பாஜகவின் அரசியல் வளர்ச்சிக்குக் காரணமென்றால், ஆதிக்கச்சாதி சங்கங்கள், கட்சிகள், தலித் கட்சிகளின் தேசியவாதம், என்ஜிஓ அரசியல் மையங்கள், சீர்திருத்தவாதத்தின் தேக்கம், இடதுசாரிகளின் நடைமுறைத் தவறுகள் போன்றவற்றால் பாஜக சமூகத்தளத்தில் வளர்ந்துவருகிறது.

இந்நிலையில் தான் அருந்ததிய சமூகத்தை சார்ந்த எல் முருகனை, பாஜக தான் தமிழகத் தலைவராக நியமித்துள்ளது.

அருந்ததிய சமூக அரசியல், வளர்ச்சி பெற்று வருகிற 2020ல் இச்சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைத், தலைவராக நியமித்திருப்பது பாஜக வின் மிகத்தேர்ந்த தந்திரம்.

“கொங்கு மண்டலத்தில் அதிகம் இருக்கிற அருந்ததிய மக்களின் அரசியல் எழுச்சியைக் கபளீகரம் செய்யலாம். சமீபமாக இஸ்லாம் ஏற்ற அவர்களுக்கு, அதிகார ஆசையைக்காட்டி, அவர்கள் மதமாற்றத்தைத் தடுக்கலாம். பாஜகவை, சமரசமின்றி எதிர்க்கும் விசிகவுக்கு எதிரான அரசியல் செய்யலாம்.


பார்ப்பனக்கட்சி என்ற பிம்பத்தை உடைக்கலாம். சனாதனத்தைத் தக்கவைக்க, சாதி அரசியலைக் கையாள இப்படி அரசியல் செய்யலாம். திமுக, அதிமுக, இடதுசாரிகள் செய்யாததை நாங்கள் செய்திருக்கிறோம் என அரசியல் செய்யலாம். பட்டியலின தேவேந்திரகுலத்தின் ஒரு பிரிவினரை, கிருஷ்ண சாமி, ஜான்பாண்டியன் மூலமும், பறையர் சமூகத்தின் ஒரு பிரிவினரை ரஞ்சித் + ரஜினி சினிமா கூட்டணி மூலமும், இன்று அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்தவரைத் தலைவராக்கியதன் மூலம் அச்சமூகத்தையும் தன்பிடிக்குள் வைக்க முயற்சிக்கிறது பாஜக.”

மொத்தத்தில், சாதிய அரசியலைக் கையில் எடுத்து, பகுதிக்குத் தகுந்தாற்போல, குறிப்பிட்ட சாதியைக் கையாண்டு தமிழகத்தை வெற்றிபெற பாஜக அரசியல் கணக்குப்போடுகிறது.

அந்த வகையில் பலகாய்களை வீழ்த்த, எல் முருகன் அவர்களைத் தலைவராக்கி, தன்னைப் பேசுபொருளாகவே வைத்திருப்பதில் பாஜக முன்னேறிச் செல்கிறது.

தமிழிசை, தெலுங்கானா ஆளுனராக நியமிக்கப்பட்டபோது, “அன்பு மகள் தமிழிசைக்கு வாழ்த்துகள்” எனச் சொல்லி, திராவிடர் கழகம் தன், சீர்திருத்த அரசியலை வெளிப்படுத்தியது. தமிழிசையைப் பெண்ணாக, நாடார் சமூகப் பிரதிநிதியாகப் பார்த்ததன் அரசியல் இது.

ஒருவர் ஏற்றுக்கொண்ட சித்தாந்தமே ஒருவரின் முதன்மை அடையாளம். அந்தவகையில், தமிழிசையோ,
எல் முருகனோ மனிதகுல விரோத ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை ஏற்ற, பாஜகவினர். இவர்களின் சாதியப் பின்புலத்தை வைத்து, பொலிட்பீரோவில் தலித் இல்லை என்கிற, வாதங்கள் அர்த்தமற்றவை. இருபெரும் இடதுசாரிக் கட்சிகளும் அம்பேத்கர், பெரியார் சிந்தனைகளோடுதான் செயல்தளத்தில் இயங்குகின்றன. தலித் பிரதிநிதித்துவமும் இல்லாமல் இல்லை.

பாஜக வின், இந்த அரசியல் கணக்கு அதற்கு வெற்றியைத் தர, பல வருடங்கள் ஆகலாம். ஆனால் தனது சனாதனக் கருத்தியல் மேலாண்மைக்கும், இந்துப்பெரும்பான்மைவாதத்தைத் தக்கவைக்கவும், இந்த அரசியல் கண்டிப்பாக அதற்கு உதவும்.

எல் முருகனோ, இல கணேசனோ யாராக இருந்தாலும் கொடூர பாஜகவின் வெவ்வேறு முகங்களே! அதன் அரசியல் கணக்குகளைப் பொய்யாக்க, சமூகத் தளத்தில் இடதுசாரிகள் தீவிரமாகச் செயலாற்ற வேண்டும். ஒடுக்கப்பட்ட அனைத்துத்தரப்பு மக்களுக்கும், இடதுசாரிகளைவிட உற்ற தோழமை இல்லை என்பதைத் தொடர்ந்து விளக்க வேண்டும். சாதிவாதச்சிக்கலை, தாராளவாத அணுகுமுறையால் தீர்க்க முடியாது என்பதை இடதுசாரிகளை நோக்கிவருவோர்க்கு விளக்க வேண்டும்.

பாஜக வின் மாய்மாலங்களைத் தோலுரித்து அரசியல் சமூகத்தளத்தில் அதனை அடியோடு வீழ்த்த அணியமாவோம்.

ரபீக் ராஜா

Related Posts