அரசியல்

சிரியாவின் போரினால் யாருக்கு இலாபம்? – 2

ஈராக் போரும் அமெரிக்கா எதிர்பாராத விளைவும்:

அமெரிக்காவின் ஒரே போட்டியாளராக இருந்த சோவியத் யூனியன் அழிந்துவிட்டது என்பதால், உலகை ஆக்கிரமித்து அமெரிக்கப் பேரரசின் கீழ் கொண்டுவருவதற்கு இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று சொல்லிக்கொண்டு அமெரிக்காவில் ஒரு இயக்கம் உருவானது. அமெரிக்காவின் சில அறிவுஜீவிகள் எல்லாம் இணைந்து உருவாக்கிய அவ்வியக்கித்தின் பெயர் “புதிய அமெரிக்க நூற்றாண்டிற்கான திட்டம்” (பிநேக்) ஆகும். ஏற்கனவே பல அமெரிக்க அரசியல் ஆய்வாளர்கள் சொன்னபடி மெதுவாக முயற்சித்தால் அமெரிக்கா அவ்வளவு சீக்கிரத்தில் பேரரசாக முடியாது என்றும், ஒரு சில நாடுகளில் நேரடியாக நுழைந்து ஆட்சி அதிரடியாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவ்வியக்கம் அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்தியது. அதன் தொடர்ச்சியாகவே அமெரிக்கா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்குள் 2001க்குப்பிறகு நுழைந்து போர்புரிந்தது. அமெரிக்காவின் பேரரசுக் கனவின் தந்தை என்று அழைக்கப்படுகிற கென்னன் (1947இல் அதற்கான ஆவணத்தை எழுதியவர்), ஈராக் போரின் துவக்கத்தின்போது 92 வயதில் இருந்தார். அவரே ஈராக் மீதான அமெரிக்காவின் போரை எதிர்த்துக் குரல் கொடுத்தார். இப்போரினால் அமெரிக்கா பலமிழந்த நாடாகத்தான் மாறும் என்றும் இப்போருக்குப் பின்னால் அமெரிக்காவிற்கு சமமான எதிரிகள் உருவாகும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன என்றும் அவர் அமெரிக்காவை எச்சரித்தார்; ஈராக் போரை எதிர்த்தார். ஆனால் பினாக்கோ அவருக்கு மறுப்பு தெரிவித்தது. போரினை நிறுத்திவிட்டு, மித்திய கிழக்கை வேடிக்கையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றது. “அகண்ட மத்திய கிழக்கை” அமெரிக்கா வெகு சீக்கிரத்தில் உருவாக்கி தனது கட்டுக்குள் வைக்கவேண்டிய நேரமிது என்றது பினாக் குழு. அகண்ட மத்திய கிழக்கு என்பது ஆப்கானிஸ்தானில் துவங்கி ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளை உள்ளடக்கியது. இன்னும் சொல்லப்போனால், மேற்கு ஆப்பிரிக்காவையும் இதிலே இணைக்கும் கனவையும் கொண்டிருந்தது “அகண்ட மத்திய கிழக்கு” திட்டம். அங்கெல்லாம் தான் உலகின் மிக அதிகமான எண்ணை வளங்கள் புதைந்துகிடக்கின்றன. உலகில் பெட்ரோல் தேவைப்படாத நாடே இருக்கமுடியாது என்பதால், பெட்ரோல் கிடைக்கிற எல்லா நாடுகளையும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டாலே அமெரிக்கா பேரரசாவது உறுதி என்றது பினாக் குழு.

எல்சினுக்குப் பிறகு ரஷியாவின் அதிபராக புடின் பதவியேற்றார். புடின் பதவியேற்ற காலகட்டத்திலும் மிகப்பெரிய கடனில்தான் இருந்தது ரஷியா. 200 பில்லியன் டாலர் கடனோடு, திவாலான தேசமாகவே இருந்தது. உலகிலேயே மிக அதிகமான இயற்கை வளங்களைக் கொண்டிருந்தாலும், ஏழை தேசமாக இருந்தது. சோவியத் உடைந்தததற்கும் புடின் அதிபரானதற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அமெரிக்காவிற்கு மறைமுகப் போட்டியாக ஐரோப்பாவில் ஜெர்மனி வளர்ச்சியடைந்திருந்தது. பொருளாதார வல்லமை பெற்ற நாடாக ஜெர்மனி உருவாகியிருந்தது. சோவியத் யூனியன் காலத்தில் கிழக்கு ஜெர்மனியில் புடின் பணியமர்த்தப்பட்டிருந்தார். புடினால் சரளமாக ஜெர்மன் மொழியும் பேசமுடியும் என்பதால் ஜெர்மனோடு நெருங்கிய உறவு இருந்தது. அதன் காரணமாக அதிபராவதற்கு முன்னரே, ரஷிய-ஜெர்மன் கூட்டக் குழுவின் இணைத்தலைவராக புடின் இருந்துவந்தார். அதனால் ஜெர்மனியொடான உறவினை மேலும் நெருக்கமாக்கினால் அது ரஷியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும் என்பதை புடின் புரிந்துவைத்திருந்தார். அரபுலக நாடுகளின் எண்ணை வளத்தை அமெரிக்கா நேரடியாகவும் மறைமுகமாகவும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்பது உலகறிந்த உண்மை. அமெரிக்காவின் ஆதிக்கத்தின் காரணமாகவும், டாலரால் மட்டுமே வர்த்தகத்தை மேற்கொள்ளமுடியும் என்பதாலும், அரபுலகத்தில் கிடைக்கும் பெட்ரோல் உள்ளிட்ட எண்ணைப் பொருட்கள், “டாலர் ஆயில்” என்றே அழைக்கப்படுகின்றன. ஜெர்மனிக்கு டாலரைப் பயன்படுத்தி வர்த்தகம் மேற்கொள்வதில் விருப்பமில்லை. தனக்கென தனியான எரிசக்தித் திட்டம் வேண்டுமென்று வெகுநாட்களாகவே ஆசைப்பட்டுக்கொண்டிருந்தது ஜெர்மனி.

ஜெர்மனியின் விருப்பம் ஒரு பக்கமிருக்க, ரஷிய அதிபரான புடினோ அதனை சாதகமாக்கிக்கொள்ள மறுபுறம் சரியான சந்தர்ப்பத்திற்காக காத்துக்கொண்டிருந்தார். அவ்வப்போது ஜெர்மனியோடு சிலப்பல பேச்சுவார்த்தைகளையும் நடத்தியும் வந்தார். 2003இல் அமெரிக்க இராணுவம் ஈராக்கில் நுழைந்து நிகழ்த்திய போர் குறித்து நாம் அறிவோம். எண்ணை வளமிக்க மத்திய கிழக்கு நாடான ஈராக்கை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காகத்தான் அமெரிக்கா அப்போரினை நடத்தியது. அப்போரினால் அமெரிக்காவே எதிர்பார்க்காத ஒரு விளைவு ஏற்பட்டது. அதுதான் ரஷியாவின் வளர்ச்சி. அதெப்படி சாத்தியமானது? ஆம், ஈராக் போரின்போது பெட்ரோலியப்பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்தபோது, சர்வதேச சந்தையில் ஒரு பேரல் பெட்ரோலின் விலை 35 டாலராக இருந்தது. ஈராக்கின் ஃபல்லுஜாவில் அமெரிக்காவின் கப்பல்களை ஈராக்கியப்படையினர் தாக்கிய அதே நாளில், 75 டாலராக பெட்ரோலின் விலை உயர்ந்தது. ஈராக்கை மிக எளிதாக வீழ்த்திவிடலாம் என்று நினைத்த அமெரிக்காவிற்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது.

கடுமையான மற்றும் நீண்ட எதிர்ப்பினை அமெரிக்கா சந்திக்க வேண்டியிருந்தது. ஈராக் போரினால், உலகில் எண்ணை உற்பத்தி செய்யும் பல நாடுகள் இலாபமடைந்தன என்பது அமெரிக்காவே எதிர்பார்க்காத திருப்பம். ஈராக் போருக்கு முன்னர், வெனிசுவேலா, லிபியா, அல்ஜீரியா போன்ற பல நாடுகள் மிகப்பெரிய கடனில் திவாலாகிக்கிடந்தன. ஈராக் போருக்குப்பின்னர் அவர்களது இமாலயக் கடன்கள் தீர்ந்தன. தன்னுடைய சுயநலத்திற்காக அமெரிக்கா நடத்திய ஒரு போரினால், ரஷியா என்கிற திவாலாகியிருந்த நாடு மீண்டெழுந்தது. பெட்ரோலியப் பொருட்களை ரஷியாவிடமிருந்து ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் வாங்கின. சர்வதேச சந்தையில் விலையும் அதிகரித்தமையால், ரஷியாவிற்கு பெருத்த இலாபம் கிடைத்தது. பொருளாதார சரிவிலிருந்து ரஷியாவும் மீண்டது. ஈராக் போரின் உச்சகட்ட ஆண்டுகளான 2003 முதல் 2008 வரையில் மட்டுமே ரஷியா தனது கடன்களை அடைத்துவிட்டது. சோவியத் யூனியன் சிதைவுண்டபின்னர் எல்சின் காலத்தில் ரஷியா என்கிற நாடு இருக்கிறதா என்று கேட்கும் அளவிற்கு இருந்தது. கடன்சுமையும், வறுமையும் ஆட்கொண்டிருந்தமையால், ஒருங்கிணைந்த தேசமாக செயல்படமுடியாமல் இருந்தது. ஆனால் புடின் காலத்தில், ஈராக் போரின் எதிர்பார்க்காத விளைவாக, ரஷியா என்கிற தேசம் ஒருங்கிணைந்து செயல்படத்துவங்கியது.

டாலர் ஆயிலிலிருந்து பெறவேண்டும் என்கிற புள்ளியில் ரஷியாவும் ஜெர்மனியும் இணைந்துவிட்டன. ரஷியாவிலிருந்து ஐரோப்பிய யூனியனுக்கு எரிவாயுவையும் எரிசக்தியையும் எடுத்துச்செல்ல ஏராளமான குழாய்கள் பூமிக்கடியில் போடப்படப்பட்டன. அதில் பல குழாய் இணைப்புகள் உக்ரைன் வழியாக செல்கின்றன. உக்ரைனில் எதற்காக குழப்பங்கள் ஏற்படுத்தப்படுகின்றன, ரஷியாவுக்கு எதிராக உக்ரைனை மாற்ற அமெரிக்கா எதற்காக முயற்சிக்கிறது என்பதையெல்லாம் இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம். ரஷியாவுக்கு மத்திய கிழக்குப் பகுதியில் இருக்கும் ஒரே நட்பு நாடான சிரியாவின் வழியாகவும் மற்றொரு குழாய் இணைப்புத்திட்டம் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதனையும் நாம் இணைத்தே சிரியாவின் பிரச்னையை அணுகவேண்டும். 2007 ஆம் ஆண்டின் கணக்குப்படி, 39% இயற்கை எரிவாயுவையும் (100 மில்லியன் டன்), 33% எரிசக்தி எண்ணையையும் (185 மில்லியன் டன்) ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்திருக்கிறது ஐரோப்பிய யூனியன். இதில் பெரும்பகுதியினை ஜெர்மனிதான் இறக்குமதி செய்து பயன்படுத்தியிருக்கிறது.

ரஷியாவின் எதிர்பாராத வளர்ச்சி ஒருபுறமிருக்க, அமெரிக்கா இழந்ததோ ஏராளம். தன்னுடைய மக்களின் 75 ஆண்டுகால சமூகப் பாதுகாப்பு நிதியத்தின் பணத்தை, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் செலவு செய்து இழந்திருக்கிறது அமெரிக்கா. ஈராக்கிலோ அமெரிக்காவிலோ பெருமைப்பட்டுக்கொள்கிற வெற்றியையும் அமெரிக்கா பெறவில்லை. போருக்கு முந்தைய நிலையைவிட மிகமோசமான அளவிற்கு குழப்பங்களும் தீவிரவாத செயல்களும் நடைபெறுகிற தேசங்களாகத்தான் அவை மாறியிருக்கின்றன. ஈராக்கையும் ஆப்கானிஸ்தானையும் போர் மூலம் ஆக்கிரமித்துவிட்டால், அகண்ட மத்திய கிழக்கு தனது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும் என்றும் உலகின் பேரரசாக அமெரிக்கா உருவாகிவிடும் என்று கணக்குப்போட்ட அமெரிக்காவிற்கு தோல்விதான். ரஷியாவும் தலைதூக்கத்துவங்கிவிட்டது.

சீனாவும் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்திருந்தது. சீனா ஒரு ஆமையைப்போன்று முன்னேறியது. ஆமையென்றாலே மிகவும் மெதுவாக மட்டுமே முன்னேறும் என்றொரு கருத்து இருக்கிறது. ஆனால், ஆமை தான் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் முன்னால் கவனமாக இருபுறமும் பார்க்கும். ஏதாவது பிரச்சனை தென்பட்டால், ஓரடி பின்னால் சென்று தன்னுடைய திசையினை மாற்றிக்கொண்டு, மீண்டும் கவனமாக நடைபோட்டு முன்னேறும். பனிப்போர், வியட்நாம் போர், ஈராக் போர், ஆப்கானிஸ்தான் போர் என்று தவறு மேல் தவறாக செய்துகொண்டிருந்த காலகட்டத்தில், ஆமை போல மிகக்கவனமாக அடிமேல் அடியெடுத்து முன்னேறி, சீனா மிகப்பெரிய பொருளாதார பேரரசாக உருவெடுத்துவிட்டது. இதனையும் அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை. இன்றைக்கு ஆசியப் பொருளாதாரம்தான் உலகின் மிகப்பெரிய பொருளாதாரப் பகுதியாக மாறியிருக்கிறது. சீனா, இந்தியா, கொரியா என அந்த பட்டியல் நீளமாகியிருக்கிறது. அதற்குள், பிரேசிலும் இன்னபிற தென்னமெரிக்க நாடுகளும் மெல்ல மெல்ல விழுத்துக்கொண்டு முன்னேறத்துவங்கிவிட்டன.

மத்திய கிழக்கை மட்டுமே கவனத்தில் வைத்துக்கொள்வது போதாது என்றும், ஒட்டுமொத்த ஆசிய கண்டத்தில் ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்பதை அமெரிக்கா விளங்கிக்கொண்டது. அதிலும் அமெரிக்காவிற்கு பெரிய போட்டியாளர்களாக உருவாகியிருக்கும் ரஷ்யாவையும் சீனாவையும் சுற்றிவளைப்பதும் அவர்களை மேலும் வளரவிடாமல் தடுப்பதும் அவசியம் என்றும் தீர்மானித்தது அமெரிக்கா. ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில், ஈராக்கிலிருந்தும் ஆப்கானிஸ்தானிலிருந்தும் தனது படைகளை திரும்பப் பெற்றுக்கொண்டது அமெரிக்கா. சீனாவுக்கு அருகில் தனது படைகளை தென்கொரியாவில் அதிகரித்ததும், கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிக்கொண்டிருந்த தென்-வட கொரிய நாடுகளுக்கிடையில் சண்டையினை அதிகரித்ததும், அதனைத்தொடர்ந்து தென்கொரியாவில் அமெரிக்கப் படைகளை அதிகரித்ததும் சீனாவைக் குறிவைத்தே நடத்தப்பட்டன. ரஷ்யாவைக் குறிவைப்பதற்காக நேட்டோவை ஐரோபாவிய நாடுகள் பலவற்றிலும் விரிவாக்கம் செய்துகொண்டே ரஷ்யாவின் எல்லைவரை கொண்டுசென்றது அமெரிக்கா. ரஷியாவின் மற்றொரு எல்லையில் இருக்கும் ஜார்ஜியாவுக்கு நேட்டோவைப் பரவச்செய்து அங்கேயும் நேட்டோவின் ஏவுகணைத் தளத்தை அமைத்தது அமெரிக்கா. அதனால் நிகழ்ந்த முரண்பாடுகளினால், ரஷிய-ஜார்ஜியா எல்லையில் இருக்கும் இரண்டு பகுதிகளில் தனிநாடு கோரிய அம்மக்களின் கோரிக்கைகளை ரஷியா அங்கீகரித்தது. அப்காசியா மற்றும் தெற்கு ஒஸ்சசேசியா ஆகிய அந்நாடுகளை இன்றுவரை ஜார்ஜியாவோ அமெரிக்காவோ அங்கீகரிக்கவில்லை.

2008இல் துவங்கிய வங்கித்துறை நெருக்கடிகளினால், அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. அதன் விளைவாக, ரஷியா உள்ளிட்ட எண்ணை தயாரிக்கும் பிற நாடுகளும் பாதிப்புக்குள்ளாயின. அக்காலகட்டத்தில் யூரோ-ஆசியப் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கான ஏராளமான ஆலோசனைகளை நடத்திவந்தது ரஷியா. அமெரிக்கா ஆட்டங்கண்டால், யூரோ-ஆசியக் கண்டத்து நாடுகளும் பாதிக்கப்படும் நிலை தொடர்ந்துகொண்டிருப்பதை தடுத்துநிறுத்தும் நோக்கிலேயே இப்படியான யூரோ-ஆசியா திட்டம் விவாதிக்கப்பட்டு வந்தது. அதேகேற்றாற்போல் மெதுமெதுவாக வளர்ந்துவந்த ஷாங்காய் கார்ப்பரேசனை ரஷியா நன்கு பயன்படுத்திக்கொண்டது. ரஷியா, சீனா உள்ளிட்ட 6 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ கூட்டமைப்புதான் ஷாங்காய் கார்ப்பரேசன். 2015 ஜூலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானும் இவ்வமைப்பில் இணைந்திருக்கின்றன. ஆப்கானிஸ்தான், ஈரான், மங்கோலியா உள்ளிட்ட நாடுகள் பார்வையாளராக தற்போது இருக்கின்றனர். இலங்கை, நேப்பாளம், கம்போடியா, துருக்கி உள்ளிட்ட பல நாடுகளும் இதில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்திருக்கின்றன. நேட்டோ, ஐ.எம்.எப்., உலக வங்கி மற்றும் ஐ.நா.சபை போன்ற பல அமைப்புகளுக்கு போட்டியான ஓரமைப்பாக இது உருவாகிவிடுமோ என்கிற அச்சம் அமெரிக்காவிற்கு உருவாகியிருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. ஐரோப்பிய யூனியனைப் போல் ஆசிய யூனியனாக இது உருவெடுத்துவிடுமோ என்கிற பயமும் அமெரிக்காவிற்கு இருக்கிறது.

தொடரும்…

-முகமது ஹசன்

(முன்னாள் எத்தியோப்பிய தூதர்)

-இ.பா.சிந்தன்

முதல் பகுதி: https://maattru.com/syrianwar1

இரண்டாம் பகுதி: https://maattru.com/syrianwar2

மூன்றாம் பகுதி: https://maattru.com/syrianwar3

Related Posts