அரசியல் வரலாறு

சிரியாவின் போரினால் யாருக்கு இலாபம்? – 1

ஒரு ஐந்தாண்டுகளுக்கு முன்னர் சிரியா என்கிற நாடு குறித்து பெரிதாக நாம் அறிந்திருக்கமாட்டோம். ஆனால் இன்று சர்வசாதாரணமாக டீக்கடை விவாதங்களில்கூட சிரியா ஒரு பேசுபொருளாகியிருக்கிறது. அப்படி சிரியாவில் என்னதான் நடக்கிறது? சிரியாவின் உள்நாட்டுப்போருக்கு யாரெல்லாம் காரணம்? இப்போரினால் பாதிக்கப்படுவதும்/பாதிக்கப்படப்போவதும் யார்? இப்போரினால் இலாபம் அடையப்போவது யார்? சிரியாவில் தொடங்கிய போர் சிரியாவோடு முடிந்துவிடுமா அல்லது மூன்றாம் உலகப்போருக்கான ஆயத்தப்பணிகளா? இது போன்ற பல கேள்விகளுக்கு விடைகள் தேடும் முயற்சியே இக்கட்டுரைத்தொடர்….

உலகில் மனிதர்கள் தோன்றியது முதல் பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு காலகட்டங்களில் சண்டைகளும் போர்களும் ஏதாவதொரு பகுதியில் நடந்துகொண்டேதான் வந்திருக்கின்றன. ஆங்காங்கே சில பகுதிகளில் சில குழுக்களுக்குள்ளும் சில நாடுகளுக்குள்ளும் நடந்துகொண்டிருந்த சண்டைகள், 20 ஆம் நூன்றாண்டின் துவக்கத்தில் உலகின் சக்திவாய்ந்த நாடுகள் இருகுழுக்களாக நின்று சண்டையிட்டுக்கொண்ட முதலிரண்டு உலகப்போர்களையும் இவ்வுலகம் பார்த்திருக்கிறது. அப்போர்களுக்குப்பின்னர் அமைக்கப்பட்ட ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும், ஏராளமாக கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களும், உலக அரங்கில் அமைதியைத்தானே கொண்டுவந்திருக்கவேண்டும். ஆனால் அதற்கு மாறாக, அதே அமைப்புகளையும் ஒப்பந்தங்களையும் பயன்படுத்திக்கொண்டு, மீண்டும் தனது ஆதிக்கத்தை செலுத்த வலிமைபெற்ற நாடுகள் புறப்பட்டுவிட்டன.

இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் உலகின் பல நாடுகளை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து ஆதிக்கம் செலுத்திவந்த பிரிட்டன், பிரான்சு, ஸ்பெயின், ஹாலந்து, ஜப்பான், ஜெர்மனி போன்றவை இரண்டாம் உலகப்போரில் பெரும் இழப்புகளை சந்தித்தன. சில நாடுகள் போரில் தோற்றதால் வலுவிழந்தும், சில நாடுகள் போரினால் உண்டான பாதிப்பினால் வலுவிழந்தும் போயின. அப்போரில் வெற்றிபெற்றிருந்தாலும் மிகப்பெரிய இழப்புகளை சந்தித்த நாடு சோவியத் யூனியன் தான். சோவியத் யூனியனின் எல்லைகள் சுற்றிவளைக்கப்பட்டும், எல்லைப்புற நாடுகள் ஆக்கிரமிக்கப்பட்டும், இறுதியில் தனது எல்லைக்குள்ளேயும் நுழைந்துவிட்ட ஜெர்மனியை எதிர்த்து நேருக்கு நேராக சண்டையிடவேண்டிய கட்டாயத்தில் சோவியத் யூனியன் இருந்தது. அதற்கு நேர்மாறாக அமெரிக்காவுக்கோ இப்படியான பிரச்சனைகளையும் இழப்புகளையும் எதிர்கொள்ளவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அமெரிக்க நிலத்திற்குள் உலகப்போர்கள் நுழையவேயில்லை, அதனால் சிறியளவிலான படைகளை வைத்துக்கொண்டே பட்டும்படாமலும் தொட்டும்தொடாமலும் போர்புரிந்துகொண்டிருந்தது அமெரிக்கா. இன்னும் சொல்லப்போனால் அதிக பலம்வாய்ந்த ஜெர்மனியை போரில் நேருக்கு நேர் சந்திப்பதை அமெரிக்கா தவிர்த்தே வந்திருக்கிறது என்று கூட சொல்லலாம். உலகின் சக்திவாய்ந்த நாடுகள் அனைத்தும் உலகப்போர்களின் இழப்பிலிருந்து மீண்டுவருவது குறித்து ஆய்வுசெய்துகொண்டிருக்கும் வேளையில், அதிகம் பாதிப்படையாமலிருந்த அமெரிக்காவோ உலகப்பேரரசாகும் கனவு கண்டது.

உலகப் பேரரசாகும் அமெரிக்காவின் கனவு:

1947இல் அமெரிக்க அயல் துறை அதிகாரியாக இருந்த அரசியல் ஆய்வாளர் கென்னன், உலகை அமெரிக்காவின் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான ஆவணம் ஒன்றை தயாரித்தார். அதனை அமெரிக்காவின் அதிகார வர்கத்தில் உள்ளோரிடம் சமர்பித்தார். அதன்படி, “உலகின் மக்கள் தொகையில் வெறும் 6% தான் அமெரிக்காவில் வாழ்கின்றனர். ஆனால், உலகின் சொத்துக்களில் 50% அமெரிக்காவினுடையதாக இருக்கிறது. மீதமுள்ள 50% த்தான் மற்றனைத்து நாடுகளும் பங்குபோட்டுக்கொண்டிருக்கின்றன. அமெரிக்காவிற்கும் மற்ற நாடுகளுக்குமான இடைவெளி மேலும் அதிகரிக்க வேண்டும். 50% சொத்துக்கள் என்கிற எண்ணிக்கை மிக அதிகமாக அதிகரிக்க வேண்டும். அப்போதுதான், உலக நாடுகள் அமெரிக்காவைச் சார்ந்தே இருக்கும். அமெரிக்காவினால் உலகைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள அதுவே உதவும்” என்று எழுதினர். அக்காலகட்டத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய அறிவுஜீவி என்றெல்லாம் கென்னன் புகழப்பட்டார். இரண்டாம் உலகப்போருக்குப்பினால், உலகை ஆக்கிரமிக்க அமெரிக்கா புறப்பட்ட கதை நமக்குத்தெரியும். அதற்கு துவக்கப்புள்ளியாக இருந்தவர் அப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரூமன் ஆவார். ட்ரூமனின் கொள்கைகளைத்தான் அவருக்குப்பின்னால் வந்த அதிபர்கள் பின்பற்றினர். அப்படிப்பட்ட ட்ரூமனின் பல கொள்கைகளுக்கு விதையாக இருந்தது கென்னனின் ஆவணம்தான்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற அரசியல் ஆய்வாளரான ஃபுகயாமா, உலகம் எவ்வாறு இருக்கப்போகிறது என்று தன்னுடைய நூலான “தி எண்ட் ஆஃப் ஹிஸ்டரி”யில் குறிப்பிட்டிருக்கிறார். அதன்படி, “அமெரிக்காதான் இனி உலகின் ஒரே பேரரசு. அமெரிக்கா தான் தொடர்ந்து உலகின் பேரரசாக இருக்கும். இதில் அமெரிக்காவோடு முரண்படுகிறவர்கள், வரலாற்றிலிருந்து தள்ளியிருக்கிறார்கள் என்று பொருள். இந்த உண்மையை ஒப்புக்கொள்ளாதவர்கள் தற்கொலை செய்துகொண்டு சாகட்டும். ஒப்புக்கொண்டு அமெரிக்காவோடு அனுசரித்து இருப்பதே உலக நாடுகளுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு.” என்றார். ஃபுகயாமாவின் இந்நூல் மிகப்பிரபலமான நூலாகியது. உலகின் முற்போக்கு இயக்கங்கள் மற்றும் ஜனநாயக எண்ணங்கொண்டோர் அனைவரின் நம்பிக்கைகளை இந்நூல் சற்றே அசைத்துப்பார்த்தது என்றே சொல்லலாம்.

அமெரிக்காவின் மற்றொரு அரசியல் ஆய்வாளரான ஹன்டிங்க்டன் என்பவர், ஃபுகயாமாவின் நூலை மறுத்து மற்றொரு ஆய்வு நூலை வெளியிட்டார். அதன்படி, “அமெரிக்காதான் ஒரே உலகப் பேரரசு என்று முரண்பாடுகள் இல்லாத உலகமாக இருக்க வாய்ப்பே இல்லை. நிச்சயமாக முரண்பாடுகள் இருக்கும். ஆனால், இம்முறை தத்துவங்களின் அடிப்படையில் அவை இருக்காது. அதற்கு பதிலாக, பண்பாடு மற்றும் நாகரிகங்களின் அடிப்படையில்தான் முரண்பாடுகள் இருக்கும்.” என்று சொன்னார். உலகை ஏழு நாகரீகப் பகுதிகளாகப் பிரித்து, அவற்றுக்கு இடையில்தான் போட்டிகளும் சண்டைகளும் முரண்பாடுகளும் இருக்கும் என்றார். ஏழு நாகரீகங்களில் மிகவும் தீவிரமான நாகரீகமாக இசுலாமிய நாகரீகம் இருக்கும் என்றும் அந்நூலில் குறிப்பிட்டிருந்தார்.

The-grand-chessboard-29858[1]

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவர் பிரெசின்ஸ்கீ. அவர் “தி கிராண்ட் செஸ்போர்ட்” என்ற நூலை எழுதினார். அந்நூலில் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா எவ்விதமான தந்திரங்களைக் கையாண்டு உலகின் மிகப்பெரிய ஏகாதிபத்திய நாடாகத் திகழமுடியும் என்று மிகவிரிவாக எழுதியிருக்கிறார். தன்னுடைய நூலில், “அமெரிக்கா உலகையே ஆட்சி செய்வதற்கு, யூரோ-ஆசியா என்கிற புதிய தந்திரத்தை கையாள வேண்டும். யூரோ-ஆசியா தான் உலகின் மிகப்பெரிய மக்கள் தொகையைக்கொண்ட பகுதிகளாகும். உலகின் 80% மக்கள் அங்குதான் வாழ்கின்றனர். அதிலும் ஆசியாவில் மட்டுமே 60% மக்கள் வாழ்கின்றனர். அதனால், யூரோ-ஆசியாவை யார் ஆதிக்கம் செலுத்துகிறார்களோ, அவர்கள்தான் உலகை ஆளமுடியும். அதன்பிறகு, ஆப்பிரிக்காவும் லத்தீன் அமெரிக்காவும் கட்டுப்பாட்டில் தானாக வந்துவிடும். அதனால், யூரோ-ஆசியாவில் அமெரிக்காதான் மிகப்பெரிய சக்தியாக இருக்கவேண்டும். அமெரிக்காவுக்கு நிகரான மற்றொரு போட்டியாளர் அப்பகுதிகளில் உருவாகிவிடக்கூடாது. ஐரோப்பாவைப் பொருத்தவரையில், அமெரிக்கா கவனிக்கவேண்டிய நான்கு முக்கியமான நாடுகள் பிரான்சும், ஜெர்மனியும், போலந்தும், உக்ரைனும் ஆகும். இந்நான்கு நாடுகளை அமெரிக்கா தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டால், ரஷியா மீண்டுமொரு சக்தியாக உருவாவதைத் தடுக்கலாம்.” கடந்த சில நூற்றாண்டுகளாக மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா நடத்திய போர்களைப் புரிந்துகொள்ள நினைப்பவர்கள், இந்நூலை அவசியம் படிக்கவேண்டும்.  உலக நாடுகளின் மீது வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட ஒரு போர்ப்பிரகடனம் இந்நூல் என்றே சொல்லலாம்.

சோவியத் யூனியன்ரஷியாதிவால் வரலாறு:

கிழக்கு ஜெர்மனியையும் மேற்கு ஜெர்மனியையும் இணைப்பதற்காக, அமெரிக்காவும் நேட்டோவும், ஐ.நா.சபையும் சோவியத் யூனியனின் அதிபராக இருந்த கோர்பச்சேவுடன் பேச்சுவார்த்தை நடத்தின. ஜெர்மனியின் இணைப்பிற்கு சோவியத் யூனியன் சம்மதித்தால், மத்திய ஐரோப்பாவைத் தாண்டி நேட்டோ படைகள் விரிவாக்கப்படமாட்டாது என்று அமெரிக்கா அப்பேச்சுவார்த்தையில் வாக்குறுதி கொடுத்தது. பேச்சுவார்த்தையின் மிகமுக்கிய அம்சமாக இதுவே இருந்தது. ஆனால், கிழக்கு ஜெர்மனியை மேற்கு ஜெர்மனியுடன் இணைத்தபின்னரும், நேட்டோ படைகள் மத்திய ஐரோப்பாவைத் தாண்டி விரிவாக்கப்பட்டன. கார்பச்சேவுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. அதன்பிறகு சோவியத் யூனியன் உடைந்து போன வரலாறு நமக்கெல்லாம் தெரியும். அதிலிருந்து பிரிந்த நாடுகளுக்கும் நேட்டோ பரவியது. போலந்தில் நேட்டோவின் ஏவுகணைத் தளம் கூட அமைக்கப்பட்டது.

சோவியத் யூனியன் சிதறுண்டதால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் ஒரு புறம் அம்மக்களை வாட்டிக்கொண்டிருந்தது. மற்றொருபுறம், உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய சூறையாடல்கள் ரஷியாவில் நிகழ்த்தப்பட்டன. சோவியத் புரட்சி காலத்திலிருந்தே மக்களின் சொத்துக்களாக இருந்தவற்றையெல்லாம் மேற்குலக கொள்ளையர்கள் நுழைந்து, பல டிரில்லியன் டாலர்கள் மதிப்பிலான சொத்துக்கள் சூறையாடப்பட்டு ரஷியாவிலிருந்து எடுத்துசெல்லப்பட்டுவிட்டன. இவையெல்லாம் யெல்சினின் ஆட்சிக்காலத்தில் நடந்தன.

sovietsuiciderate

சோவியத் யூனியன் உடைக்கப்பட்டால் தேனாறும் பாலாரும் ஓடும் என்று நம்பவைக்கப்பட்ட மக்கள் ஏமாந்துபோயினர். ஒரு கோடி குழந்தைகளுக்கு மேல் பிறந்தும், ரஷியாவின் பிறப்பு இறப்பு விகிதம் பூஜ்ஜியமாக மாறியது. அதாவது, சோவியத் யூனியன் உடைந்ததிலிருந்து, ரஷியாவில் பிறப்பவர்களைவிடவும் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியது. வறுமையின் காரணமாக தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. அன்றிலிருந்து இன்றுவரை அதிலிருந்து ரஷியா மீளமுடியாமல் தவிக்கிறது.

அதே காலகட்டத்தில் ரஷியாவுக்கும் செசன்யாவுக்கு இடையில் நடந்த போரிலும், மேற்குலகின் பங்களிப்பு இருந்தன. இதனால், ரஷியா மேலும் வலுவிழந்து போனது. எல்சின் காலத்தில் ரஷியாவிற்குள் இரண்டு கோடி இசுலாமியர்கள் வாழ்ந்துவந்தனர். அவர்களை ஒட்டுமொத்தமாக ரஷியாவுக்கு எதிராக மாற்றவேண்டும் என்பதில் மேற்குலகம் குறியாக இருந்தது. அதனால் செசன்யப் போரில் முஜாகிதீன் இயக்கங்கள் களமிறக்கப்பட்டன.

இவையெல்லாமுமாக சேர்ந்து, ரஷியா என்கிற நாடே உலகவரைபடத்தில் இல்லாமல் போகிற நிலை ஏற்பட்டது. பொருளாதார மந்தநிலை, தேசிய சொத்துக்கள் சூறையாடல், ஓய்வூதிய நிதியம் சூறையாடல், இயற்கை வளங்கள் சூறையாடல், அறிவியல் ஆய்வுகள் உள்ளிட்டவை நிறுத்தம், இராணுவம் வலுவிழந்தநிலை, அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கக்கூட இயலாத நிலை என அழிந்துவிடும் நிலைக்கு ரஷியா தள்ளப்பட்டிருந்தது. அயல்நாட்டு கொள்ளையர்களுடன் இணைந்து பல சூறையாடல்களை நிகழ்த்திய உள்ளூர் கொள்ளையர்கள் ரஷியாவின் புதிய அதிகார சக்திகளாக உருவெடுத்தனர். அப்படியாக உருவானவர்கள் இயல்பாகவே அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் ஆதரவு சக்திகளாக இருந்தனர். ரஷியாவின் ஏழ்மை நிலைக்கு உதவி புரிவதாக சொல்லிக்கொண்டு, அமெரிக்காவிலிருந்து கிருத்துவ மிஷனரிகள் எல்லாம் வந்து குவியத் துவங்கினர்.

சர்வதேச அரங்கில் ரஷியாவின் மதிப்பும் மரியாதையும்கூட சரிந்து விழுந்தது. ரஷியாவின் நண்பர்களாக இருந்தவர்கள்கூட ரஷியாவிடமிருந்து தள்ளியிருக்கவே விரும்பினர். ஆப்பிரிக்காவில், மத்திய கிழக்கில் இருந்த எண்ணற்ற ரஷியாவின் நட்பு நாடுகள் அனைத்தும் ரஷியாவை விட்டு விலகிவிட்டன. ரஷியாவை மீட்டுக்கொண்டுவருவதற்கு சரியான ஆட்சியாளர்களும் இல்லை. பல நாடுகளில் இருந்த ரஷியாவின் தூதரகங்கள் கூட செயல்படாத நிலையில் இருந்தன. எவ்வித நோக்கமும் இல்லாத புதிய புதிய என்.ஜி.ஓ.க்களும் சிறுசிறு இயக்கங்களும் உருவாகின. ஆங்காங்கே அதிகாரத்தை அவர்களே எடுத்துக்கொண்டனர். ஒட்டுமொத்த ரஷ்யாவையும் கட்டுக்குள் கொண்டுவரும் அதிகாரம் யாரிடமும் இல்லாமல் போனது. சோவியத் யூனியன் உடைக்கப்பட்டு பல நாடுகள் பிரிக்கப்பட்ட பின்னரும், ரஷியா மிகப்பெரிய நாடாக இருக்கிறது என்று சொல்லியும், ஒவ்வொரு சிறுசிறு பகுதியும் தனிநாடு கோரும் கோரிக்கைகளை எழுப்பின. அவற்றை எழுப்பியவர்கள் அமெரிக்கா மற்றும் மேற்குலகின் ஆதரவு குழுக்களாக இருந்தனர் என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.

தொடரும்…

-முகமது ஹசன்

(முன்னாள் எத்தியோப்பிய தூதர்)

-இ.பா.சிந்தன்

முதல் பகுதி: https://maattru.com/syrianwar1

இரண்டாம் பகுதி: https://maattru.com/syrianwar2

மூன்றாம் பகுதி: https://maattru.com/syrianwar3

Related Posts