அரசியல்

பஞ்சாயத்து சொம்பு ஏன் சிரியாவுக்கு போகுது?!?

“இதனை ஏதோ காட்டுத்தனமான போர் என்று நினைக்கவேண்டாம். இது மனிதகுல விடுதலையினை மீட்டெடுக்கிற போராட்டம்”
வியட்நாம் போர் குறித்து அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன், 1964

WAR & CONFLICT BOOK ERA:  VIETNAM

Image courtesy : Wikimedia

“ஆப்கானை மீட்கவந்த போராளிகளுக்கு நாம் ஆதரவு தரவேண்டும்”
முஜாகிதீன்களாக இருந்த தாலிபான்கள் குறித்து அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன், 1985

“ஜனநாயகத்தையும் மனிதவுரிமைகளையும் நிலைநாட்டுவதற்காகவும், பனாமாவில் வாழ்கிற அமெரிக்கர்களின் உயிரைக் காப்பாற்றவுமே பனாமாவோடு போருக்குச் செல்கிறோம்.”
– அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் (அப்பா)

“ஈராக்கானாலும் சரி, ஆப்கானிஸ்தான் ஆனாலும் சரி, தீவிரவாதிகளிடமிருந்து மக்களுக்கு விடுதலை வாங்கித்தருவது எங்களது கடமையாகவே கருதுகிறோம். அமைதியை நிலைநாட்டுவதற்காக மட்டுமே நாம் போர் புரிகிறோம் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும்”
– அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் (மகன்)

“சதாம் உசைனிடம் இராசயன ஆயுதங்கள் இருக்கின்றன”
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் (மகன்)

“தாலிபான்களை வரவிடக்கூடாது என்கிற ஆப்கானிஸ்தான் மக்களின் எண்ணங்களுக்கு உதவ நினைக்கிறோம்”
-ஹிலாரி கிளிண்டன்

இவையெல்லாம் ஒவ்வொரு போரையும் துவக்குவதற்கு முன்னர் அமெரிக்க பெருந்தலைவர்கள் உதிர்த்த வைரவார்த்தைகள். ஆனால் அப்போர்களின் காரண காரியங்கள் என்ன என்பதும் போர்களுக்குப் பின்னால் நிகழ்ந்தது என்ன என்பதுவும் உலகமே அறிந்தவைதான். பொய்களைச் சொல்லியே வியட்நாம் போரினை நடத்தியவிதத்தை, டேனியல் எல்ஸ்பர்க் வெளியிட்ட “பென்டகன் பேப்பர்ஸ்” காட்டிக்கொடுத்தது. புதிதாகத்தயாரித்த லேசர் குண்டுகளை பரிசோதித்துப் பார்க்கவே பனாமாவிற்குள் நுழைந்து போர்புரிந்ததை, பனாமா மக்கள் கொல்லப்பட்ட விதத்திலிருந்து வெளியானது. சோவியத்திற்கு எதிராக புதிய நண்பர்களை உருவாக்கி, பின்னர் அவர்களையே தீவிரவாதிகள் எனச்சொல்லி 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானில் போர்புரிந்து பல இலட்சக்கணக்கான மக்களை கொன்றுகுவித்துவிட்டு, அவர்களுடனேயே தற்போது பேச்சுவார்த்தையும் நடத்திவருவது நாம் அனைவரும் அறிந்ததே. ஒரு போரில் சதாம் உசைனிற்கு அணுகுண்டுகள் வழங்கி ஆதரித்து, சில ஆண்டுகள் கழித்து அதே சதாம் உசைனைப் பிடித்து தூக்கில் போட்டதையும் கண்கூடாகப் பார்த்தோம்.அந்த வரிசையில் தற்போதைய வைரவரிகள்,

“இராசயன குண்டுகள் வீசிய சிரியா மீது இராணுவத் தாக்குதல் நடத்துவோம்” – அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஒபாமா.

என்ன நடக்குது சிரியாவில்?

சிரியாவில் அரபு சோசலிச பாத் கட்சியின் தலைவர் ஆசாத்தின் தலைமையிலான ஆட்சி 2000இல் இருந்து நடந்துவருகிறது. 2011இல் சில மத்திய கிழக்கு நாடுகளில் துவங்கிய “அரபுலக வசந்தம்” என்கிற ஆட்சியாளர்களுக்கெதிரான கிளர்ச்சியானது, துனிசியா, எகிப்து என மெல்லப் பரவி சிரியா வரை சென்றது. அரபுலக வசந்தத்தின் தொடர்ச்சியென்று சொல்லப்பட்டாலும், கிளர்ச்சியாளர்களின் குறிக்கோள் சரியாக வரையறுக்கப்படவுமில்லை; வகைப்படுத்தப்படவுமில்லை. அல் கொய்தாவுடன் மறைமுகமாக தொடர்பிலிருக்கிற குழுக்களின் ஆதிக்கம் மிக அதிகமாகவும் இருந்துவருகிறது. சிரிய அரசை எதிர்க்கிற கிளர்ச்சியாளர்களை சவுதி அரேபிய அரசும் அல் கொய்தாவும் ஆதரிப்பதோடல்லாமல் ஆயுதங்களும் வழங்கி உதவுகின்றன. அதே கிளர்ச்சியாளர்களை அமெரிக்காவும் ஆதிரிக்கிறது. அமெரிக்கா, அல் கொய்தாவை எதிர்த்தல்லாவா ஆப்கானிஸ்தானில் சண்டைபோட்டுக்கொண்டிருந்தது? சற்றே தலைசுத்துகிற சங்கிலிக் கூட்டணி இது. “ஆப்கானை மீட்க வந்தவர்கள்” என்று தாலிபான்களை ஆதரித்த அதே அமெரிக்காதான், பின்னாளில் அவர்களை எதிரியென்று அறிவித்து ஆப்கனை ஆக்கிரமித்தது. ஆக, எதிரிகளை உருவாக்குவதற்கு ஒரு போரும், அதன்பின் அவர்களை அழிப்பதற்கு ஒரு போரும் என்கிற கணக்கில் ஒரு நாட்டுக்குள் நுழைவதற்கு இரண்டு போர் வீதம் என்கிற கணக்கினை அமெரிக்கா உருவாக்கி செயல்படுத்திவருவதைத் தெளிவாக நாம் அறியமுடியும். யார் யாரை ஆதரிக்கிறார்கள்? எதற்காக நடக்கிற உள்நாட்டுப் போர் இது என்கிற குழப்பத்திற்கு நடுவிலேயே, கடந்த இரண்டாண்டுகளில் 10 லட்சம் பேர் குழந்தைகள் உட்பட 20 லட்சத்திற்கும் மேலான சிரிய மக்கள் தங்களது சொந்த நாட்டைவிட்டு வெளியேறி அகதிகளாக்கப்பட்டிருக்கின்றனர்.

இதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி, டமாஸ்கஸ் என்னும் பகுதியில் குண்டுகள் வீசப்பட்டு 1400க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுவிட்டனர். அது தொடர்பாக எவ்வித விசாரணையையும் துவக்காமலும், எந்த ஒரு அமைப்பும் அதற்கு பொறுப்பேர்க்காத நிலையிலும், சிரிய அரசுதான் காரணம் என்று முன்பே எழுதி வைத்திருந்ததைப்போன்ற அறிக்கையினை வெளியிட்டது அமெரிக்க அரசு. சிரியா மீது போர்தொடுக்கவும் தயாராகிவிட்டதாக அறிவித்து, அதற்கான ஆதரவையும் கோரியது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் அனுமதி கிடைக்காது என்பதனை ரஷ்யாவும், சீனாவும் உறுதிபடுத்திவிட்டன. பிரிட்டன் பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் சிரியாவின் மீது இராணுவத்தாக்குதல் நடத்துவதற்கான கோரிக்கையும் எம்.பி.க்களால் நிராகரிக்கப்பட்டது. இந்தியா , பாகிஸ்தான், ஐரோப்பிய யுனியனின் பல நாடுகள், இலத்தின் அமெரிக்க நாடுகளும் அதனை நேரடியாகவோ மறைமுகமாகவோ வழிமொழிந்தன.
இப்படியொரு சூழலில் சிரியா மீது இராணுவத்தாக்குதல் நடத்தினால் எந்தெந்த நாடுக்களுகெல்லாம் அரசியல் மற்றும் பொருளாதார பலன்கள் கிடைக்குமென்று கணக்குப்  போட்டு அவற்றையெல்லாம் கூட்டு சேர்க்கிற பணியில் இறங்கியது அமெரிக்கா. பாலஸ்தீன ஆதரவு நிலையினை கொண்டிருக்கிற சிரியாவின் தற்போதைய அரசைக்  கவிழ்ப்பதில் இஸ்ரேலுக்கிருக்கிற ஆர்வம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. மத்திய கிழக்கு ஆசியாவில் அமெரிக்காவின் உறுப்பு நாடு போலவே செயல்பட்டுவருகிற சவுதிஅரேபியாவும், அமெரிக்காவுடன் உடன்படுகிறது. பூமியிலும், கடலுக்கு அடியிலும் எண்ணெய் குழாய் அமைத்து சவுதிஅரேபியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு மிகக்குறைந்த செலவில் பெட்ரோல் கொண்டுசெல்கிற திட்டத்திற்கு சிரியாவில் ஒரு பொம்மை அரசு அமைய வேண்டியதை அவசியமாகக் கருதுகிறது சவுதி அரசு. இதுபோக நேட்டோவில் அங்கம் வகிக்கிற பிரான்ஸ் மற்றும் துருக்கி அரசு போரின் மூலம் கிடைக்கப்போகிற பொருளாதார பலன்களை குறிவைத்தே அமெரிக்காவிற்கு ஆதரவு கரம் நீட்டுகின்றன.

யார் நிகழ்த்திய (இராசயன?!?) குண்டுவெடிப்பு அது?

ஆகஸ்ட் 21இல் நடந்த குண்டுவெடிப்பு  ஏராளமான கேள்விகளை நமக்கு விட்டுச்சென்றிருக்கிறது.

  • குண்டுவெடிப்பை நிகழ்த்தியது யார்?
  • அக்குண்டுவெடிப்பினால் யாருக்கு பலன்?
  • அக்குண்டுவெடிப்பை மேற்கொண்டால், சர்வதேச சக்திகள் தன்னைக் தாக்கும் என்று தெரிந்தே சிறிய அரசு இதனைச் செய்திருக்குமா? 1000 பேரைக் கொல்வதைத்தவிர, சிரிய அரசுக்கு வேறன்ன கிடைத்துவிடப் போகிறது இதனால்?
  • இரசாயன குண்டுகள்தான் பயன்படுத்தப்பட்டன என்பதை யாரால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது?
  • குண்டுவெடிப்பிற்கு தேவையான பொருட்கள் எங்கிருந்து வந்தன? யார் அதனை உற்பத்தி செய்தார்கள்?
  • சிரிய கிளர்ச்சியாளர்கள் கூட, குண்டுவெடிப்பு நடந்து 1.5 மணி நேரம் கழித்துதான் வெளியே சொல்லியிருக்கிறார்கள். இந்த இடைவெளிக்கு என்ன காரணம்?
உள்ளிட்ட ஏராளமான கேள்விகள் இன்னமும் விடைதெரியாமல் தான் உலவிக்கொண்டிருக்கின்றன.
வெகுகாலமாக சவுதியின் அமெரிக்கத் தூதராகவும் அமெரிக்காவுடன் மிகநெருங்கிய தொடர்புடையவருமான பிரின்ஸ் பின் சுல்தானை, சவுதி அரேபியாவின் எஸ்.ஐ.ஏ (அமெரிக்காவின் சி.ஐ.ஏ. வைப்போன்றது) அமைப்பின் புதிய தலைவராக 2012 இல் நியமித்திருக்கிறார்கள். சிரியாவில் ஆட்சியைக் கவிழ்க்கிற பணியைத் தலைமையேற்று நடத்துவதற்காகவே அப்பணி அவருக்கு வழங்கப்பட்டதாக வால் ஸ்ட்ரீட் பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது (http://online.wsj.com/article/SB10001424127887323423804579024452583045962.html). சிரியாவின் ஆட்சியைக் கலைப்பதற்கு ரஷ்யா உதவினால், சவுதி அரேபியாவின் சார்பில் மிகக்குறைந்த விலைக்கே ரஷ்யாவிற்கு பெட்ரோல் தரப்படும் என்றும் உறுதியளித்து ஒரு மறைமுகப் பேச்சுவார்த்தையையும் துவக்கியிருக்கிறார் பிரின்ஸ் பின் சுல்தான். சவுதி அரேபியாவிற்கு ஒத்துழைப்பு தந்தால், ரஷ்யாவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக்கில் செசன்ய தீவிரவாதிகள் தாக்காமல் பார்த்துக்கொள்வோம் என்றும் பிரின்ஸ் பின் சுல்தான் உறுதியளித்திருக்கிறார். சிரிய ஆட்சியினைக் கலைக்க ஆதரவு தரவில்லையெனில், ஒலிம்பிக்ஸில் கலக்கம் ஏற்படுத்துவோம் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் (http://www.telegraph.co.uk/finance/newsbysector/energy/oilandgas/10266957/Saudis-offer-Russia-secret-oil-deal-if-it-drops-Syria.html). அமெரிக்காவின் வழிகாட்டுதலின்படி, ஜோர்டான் உட்பட பல அரபு லீக் நாடுகளை சிரியாவிற்கு எதிராகத் திருப்பியதும் இதே பிரின்ஸ் பின் சுல்தான் தான். சிரிய போராளிக்குழுக்களுக்கு சவுதி அரேபியாவிலிருந்து ஆயுதங்களை வழங்குவதும் பிரின்ஸ் பின் சுல்தானின் ஆணைப்படிதான்.

இத்தகவலுக்கு மேலும் வலுசேக்கும் விதமாக, அமெரிக்காவிலிருந்து இயங்கிவரும் “மின்ட் நியூஸ்” என்ற செய்திநிறுவனம், தன்னுடைய கிழக்காசிய நிருபர் “கவ்லக்” என்பவற்றின் மூலமாக குண்டுவெடிப்பு குறித்த கள ஆய்வினை மேற்கொண்டு அறிக்கையாக வெளியிடப்பட்டிருக்கிறது. சிரிய அரசினை நோக்கித் தாக்குவதற்காக போராளிக்குழுவிற்கு சவுதி அரேபியாவின் பிரின்ஸ் பின் சுல்தான் வழங்கியதே அந்த இரசாயன குண்டுகளும் ஆயுதங்களும் என்றும், அதனைப் பயன்படுத்தத் தெரியாமல் தவறுதலாக வெடித்துச் சிதறி அப்பாவி மக்களைக் கொன்றிருக்கிறது என்றும் “மின்ட் நியூஸ்” ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
ஆய்வறிக்கைக்காக அவர்கள் சந்தித்த போராளிகள் எல்லோரும், தங்களுக்கு சவுதி அரேபிய அரசுதான் ஊதியம் வழங்குவதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

குண்டுவெடிப்பில் சில கிளர்ச்சியாளர்களும் இறந்திருக்கிறார்கள். கவ்தா என்னும் ஊரில், அபு அப்தெல் மொநேம் என்பரின் மகனும் ஒரு போராளிக்குழுவில் செயல்பட்டிருக்கிறார். அவருடைய மகனும் மேலும் சில நண்பர்களும் அக்குண்டுவெடிப்பில் இறந்திருக்கின்றனர்.

அபு அப்தெல் மொநேம் :

“குண்டு வெடிப்பிற்கு 2 வாரங்களுக்கு முன்தான் என்னுடைய மகனும் அவனது 12 நண்பர்களும் சில புதிய வகை ஆயுதங்களை சுமந்துகொண்டு சென்றார்கள். அவை என்னவென்றுகூட அவர்களுக்கு சரியாகத் தெரியவில்லை. மிகப்பெரிய குழை வடிவில் சில ஆயுதங்களும், ஏதோ நிரப்பப்பட்ட பெரிய கண்ணாடி பாட்டில்களும் நிறைய இருந்தன.”

அப்புதிய வகை ஆயுதங்களை சுரங்கப்பாதைகளில் ஒளித்துவைக்கப்பட்டிருந்ததாக கவ்தா ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

“அது என்னவகை ஆயுதங்கள் என்றும் அதனை எப்படிப் பயன்படுத்துவதென்றும் அவர்கள் (சவுதி அரேபியா) எங்களுக்குச் சொல்லவில்லை. அவை இரசாயன ஆயுதங்கள் என்றும் எங்களுக்கும் தெரியாது. இரசாயன ஆயுதங்களாக இருக்குமென்று நானும் நினைத்தும் பார்க்கவில்லை. பிரின்ஸ் பின் சுல்தான் இது போன்ற ஆயுதங்களை கொடுக்கையில், அதனைப் பயன்படுத்தத் தெரிந்தவர்களிடமே கொடுக்கவேண்டும்.”
மற்றுமொரு சிரியப் பெண்போராளியான “கே”.

சவுதி அரேபியா வழங்கிய இரகசிய ஆயுதங்களை பயன்படுத்தியது “ஜபாத் அல் நுஸ்ரா” என்கிற போராளிக்குழுதான் என்றும், அவர்கள் மற்று போராளிக்குழுக்களோடு எதனையும் கலந்தாலோசிப்பதில்லை என்றும் பிற போராளிக்குழுக்களில் உள்ளவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
“ஜபாத் அல் நுஸ்ரா மற்று போராளிக்குழுக்களோடு இணைந்து பணியாற்றுவதே இல்லை. அவர்களுக்குக் கிடைக்கிற இரகசியத் தகவல்களையும் எங்களுக்குப் பகிர்ந்துகொள்வதில்லை. அப்புதிய ஆயுதங்களை எடுத்துச்செல்லவும் பயன்படுத்தவும், ஆயுதங்களைப் பற்றிய அதிக விவரமறியாத சாதாரண போராளிகளைஏ பயன்படுத்தியிருக்கின்றனர். அந்த ஆயுதங்கள் குறித்து நாங்கள் அதிக ஆர்வத்தில் இருந்தோம். ஆனால் சில போராளிகள் தவறாக கையாண்டதில் எதிர்பாராதவிதமாக வெடித்து தவறான இலக்கைத் தாக்கிச்சிதறியது.”
-கவ்தாவில் மிகப்பிரபலமான போராளி “ஜே”

யாருக்கான போரிது?

இப்படியாக ஒவ்வொரு நாடாகச் சென்று போரிற்காக நெருக்கடியான சூழலை உருவாக்கி, அதற்கு உலக நாடுகளின் ஆதரவை வேண்டியோ/வற்புறுத்தியோ பெற்று ஒரு போரினைத்துவங்குவதில், அரசியல் இலாபத்துடன் மற்றுமொரு மிகமுக்கிய காரணமும் இருக்கிறது. போர் என்பது இரு நாடுகளுக்கிடையிலான வெற்றியினை நோக்கிய போராட்டம் மட்டுமல்ல. போரென்பது அதையும் தாண்டிய வியாபாரம்;விற்பனை;இலாபம்; 2011 ஆம் ஆண்டில் உலகின் முதல் 100 போராயுதங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மட்டுமே 30 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு போராயுதங்களை விற்பனை செய்திருக்கின்றன. இவற்றில் முதல் 10 நிறுவனங்கள் மட்டுமே 15 லட்சம் கோடி ருபாய் அளவிற்கு வர்த்தகம் மேற்கொண்டிருக்கின்றன. ஆனாலும் முந்தைய ஆண்டுகளைவிடவும் இது குறைவானதே. 

கடும் நிதிநெருக்கடியிலும் வேலையில்லாத் திண்டாட்டத்தினாலும் தவித்துக்கொண்டிருக்கிற இன்றைய அமெரிக்காகூட, தனது ஒட்டுமொத்த பட்ஜெட்டில் 50% அளவிற்கு போருக்கும் போர் தொடர்பான செலவுகளுக்குமே ஒதுக்கிவருகிறது. போரை நம்பியே இருக்கிற நூற்றுக்கும் மேற்பட்ட மிகப்பெரிய நிறுவனங்கள் அடுத்த போர் எப்போது வருமென்று காத்துக்கொண்டே தங்களது கடைகளை திறந்துவைத்திருக்கின்றனர். கடந்த ஓரிரு ஆண்டுகளில் பெரியளவில் வீரியமான போர் எதுவும் உலகில் நடைபெறவில்லை. அப்பெரிய நிறுவனங்கள் கொடுத்த பணத்தால் தான் அமெரிக்காவின் உயர்பதவிகள் நிரப்படுகின்றன. அதனால் அவர்களுக்கேற்றவாரே சட்டங்களும் போடப்படுகின்றன; போர்களும் தொடுக்கப்படுகின்றன.

போரை நம்பியே தொழில் செய்கிற சில நிறுவனங்களின் விவரங்கள்…..

நிறுவனம் ஆயுத விற்பனை மட்டும்
மேலதிக விவரம்
 யுனைடட் டெக்னாலஜிஸ்  78000 கோடி ரூபாய் (2011) இராணுவ ஹெலிகாப்டர்கள், சீஹாக் ஹெலிகாப்டர்கள், ப்ளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள், எஞ்சின்கள் போன்றவற்றை தயாரிக்கிறது இந்நிறுவனம். நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் ஆயுதவிற்பனை மட்டும் 20% ஆகும்.
 எல்3 கம்யூநிகேசன்  85000 கோடி ரூபாய் (2011) மின்னணு போராயுத கருவிகள், போர் கண்காணிப்புக் கருவிகள், பாதுகாப்புக் கருவிகள் போன்றவற்றை தயாரிக்கிறது இந்நிறுவனம். நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் ஆயுதவிற்பனை மட்டும் 83% ஆகும்.
ஃபின்மெக்கானிகா  1 லட்சம் கோடி ரூபாய் (2011) பீரங்கிகள், எஞ்சின்கள், மின்னணு போர்க்கருவிகள், போர் வாகனங்கள், ஏவுகணைகள், இராணுவ ஹெல்காப்டர்கள் போன்றவற்றை தயாரிக்கிறது இந்நிறுவனம். இந்திய இராணுவத்திடமிருந்து 5000 கோடி ரூபாய்க்கு 1.2 கோடி இராணுவ ஹெலிகாப்டர்களுக்கான ஒப்பந்தத்தை பெறுவதற்காக, சில நூறு கோடிகள் லஞ்சம் கொடுத்ததாக இந்நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டும் வைக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. குற்றச்சாட்டிற்குப் பிறகு, விசாரணையிலிருந்து தப்பிக்க நிறுவனத்தின் உயரதிகாரிகள் பலரும் மாற்றப்பட்டுள்ளனர்.
 இ.ஏ.டி.எஸ்.  1,10,000 கோடி ரூபாய் (2011)  ஏவுகணைகள், மின்னணு போர் ஆயுதங்கள் போன்றவற்றை தயாரிக்கும் நெதர்லாந்தைச் சேர்ந்த் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 24% போராயுதம் தொடர்பானவையாகும்.
 நார்த்ரோப் க்ரும்மன்  1,44,000 கோடி ரூபாய் (2011)  ஏவுகணைகள், போர்க்கப்பல்கள், மின்னணு போராயுதங்கள் தயாரிக்கிறது இந்நிறுவனம். இந்நிறுவனத்தை பி.ஏ.இ.சிஸ்டம்சுடன் இணைப்பதற்கு நடந்த முயற்சி இறுதியாகத் தோல்வியடைந்தது.இவ்வாண்டு மிகப்பெரிய போரினை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கிறது இந்நிறுவனம்.
 ரேதியோன்  1,52,000 கோடி ரூபாய் (2011)  ஏவுகணைகள் செய்வதை முக்கியமான தொழிலாகக் கொண்டிருக்கும் இந்நிறுவனத்தின் ஆயுத விற்பனைமட்டும் ஒட்டுமொத்த விற்பனையில் 90% ஆகும். 2013இல் மிகப்பெரிய அளவில் இலபமீட்டாவிட்டால் இந்நிறுவனம் தாக்குப்பிடிப்பது கடினம் என்கிற நிலையில், சிரியாவுடன் அமெரிக்கா போர் தொடுக்கும் என்ற செய்தி வெளியான மறுநாளே, இந்நிறுவனத்தின் பங்குகள் வரலாறு காணாத அளவிற்கு பலமடங்கு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
 ஜெனரல் டைனமிக்ஸ்  1,60,000 கோடி ரூபாய் (2011) போர்க்கப்பல்கள், சிறியவகை போராயுதங்கள், போர் டாங்கிகள், போர் வாகனங்கள் போன்றவைதான் இந்நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்கள். 2011 இல் மட்டும் 18000 வர்த்தக பரிவர்த்தனைகளை மேற்கொண்டு அமெரிக்காவில் மூன்றாவது பெரிய ஆயுத விற்பனை நிறுவனமாக விளங்குகிறது. எம்1ஏ1 ரக பீரங்கி டாங்குகள் தயாரிக்கத் தேவையான உதிரிபாகங்களை விற்றே கோடிக்கணக்கில் இலாபம் பார்த்த நிறுவனமிது. 2011இல் கூட 2500 கோடி ரூபாய் அளவிற்கு எகிப்திற்கு போராயுதங்களை அனுப்புவதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்க அரசு இந்நிறுவனத்திற்கு வழங்கியது. 2012இல் மீண்டும் 250 கோடி ரூபாய் மதிப்பிலான எம்1ஏ1ரக பீரங்கி டாங்கி உதிரிபாகங்களை விற்கிற ஒப்பந்தம் பெற்றது.
 பி.ஏ.இ. சிஸ்டம்ஸ்  1,97,000 கோடி ரூபாய் (2011) அமெரிக்க நிறுவனமல்லாத உலகின் மிகப்பெரிய போர் ஆயுத உற்பத்திநிறுவனம் இது. நிலத்தில் சண்டையிடத்தேவையான போர் வாகனங்களை உற்பத்திசெய்வதில் முன்னணியில் இருக்கிறது இந்நிறுவனம். இந்நிறுவனத்தின் மொத்த உற்பத்தியில் 95% ஆயுத விற்பனைதான்.
 போயிங்  2,15,000 கோடி ரூபாய் (2011) போர் ஆயுதங்களுக்கான மின்னனுபாகங்கள், ஏவுகணைகள், லேசர் கருவிகள் மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் தயாரிக்கிறது இந்நிறுவனம். இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில், 46% ஆயுத விற்பனைதான். நாசாவிடமிருந்து ஏராளமான ஒப்பந்தங்கள் இந்நிறுவனத்திற்கு தொடர்ந்து கிடைக்கின்றன.
லாக்ஹீட் மார்டின்  2,45,000 கோடி ரூபாய் (2011) ஏவுகணைகள், உளவு பார்க்க உதவுகிற கருவிகள், போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள் போன்றவைதான் இந்நிறுவனத்தின் முக்கியமான தயாரிப்புகள். இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில், போர் ஆயுத விற்பனை மட்டுமே 78% ஆகும். பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஆட்குறைப்பு நிகழ்த்தும் எண்ணத்தை, அமெரிக்க அரசே தலையிட்டு நிறுத்திவைத்தது. எகிப்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிற இராணுவக் குழப்பங்களுக்கு இந்நிறுவனத்தின் போராயுதங்கள் பெருவுதவி செய்துகொண்டிருக்கின்றன. எகிப்து அரசிற்கு இராணுவ உதவிகளாக 16,000 கோடி ரூபாயினை தருவதாக உறுதியளித்திருந்த அமெரிக்க அரசு, அப்பெரும்பணத்தினை இந்நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாகச் செலுத்திவிட்டது. எகிப்தில் மோர்சி அரசு இப்போதுதான் கவிழ்க்கப்பட்டது; ஆனால் அதற்கான ஆயுதங்களை வழங்க சென்ற ஆண்டே ஒப்பந்தம் போட்டாகிவிட்டது இந்நிறுவனத்திடம்.
 ஹல்லிபுர்டன் 1,10,000 கோடி ரூபாய் (2003-2006) இராணுவத் தளவாடங்கள் அமைப்பது, எண்ணைக் கிணறுகளை புணரமைப்பது போன்ற பணிகளின்மூலம் கோடிக்கணக்கில் பணம்சேர்த்த நிறுவனமிது. குறிப்பாக ஈராக் போரின்போது, இந்நிறுவனம் அதிகளவில் செயல்பட்டது.
 டின்கார்ப் 9300 கோடி ரூபாய் (2011) போர்ப்பகுதிகளில் அமெரிக்காவிற்கு ஆதரவான கூட்டத்திற்கு போர்ப் பயிற்சி கொடுக்கிற பணியினை செய்தே, மக்கள் பணத்தை அள்ளிச்சுருட்டியது இந்நிறுவனம்
 வாஷிங்டன் குரூப் இன்டர்நேஷனல் 6000 கோடி ரூபாய் (2006) ஈராக்கில் இடித்துத் தள்ளப்பட்ட எண்ணை நிலையங்களை சீர்செய்கிற ஒப்பந்தத்தைப் பெற்று, பெரும்லாபம் சம்பாதித்தது இந்நிறுவனம்.
 என்விரோன்மெண்டல் கெமிக்கல் 5000 கோடி ரூபாய் (2006) போரினால் உருவான இரசாயன கழிவுகளை அகற்றுவதற்கென்று இந்நிறுவனத்திற்கு வாய்ப்பு தரப்பட்டு, ஈராக்கில் தன்னுடைய தொழிலை பெரியளவிற்கு வளர்த்துக்கொண்டது கலிபோர்னியாவைத் தலைமையிடமாகச் செயல்படும் இந்நிறுவனம்.
 ஏகிஸ் 2700 கோடி ரூபாய் (2006) தனியார் பாதுகாப்பு நிறுவனமான இந்நிறுவனம் பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. அமைதிக்கான சர்வதேச செயல்பாடுகள் சங்கத்தில் உறுப்பினராவதற்கான இந்நிறுவனத்தின் விண்ணப்பம் கூட நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கண்ட்ரோல் ரிஸ்க் 250 கோடி ரூபாய் (2011) அமெரிக்க இராணுவம் அரையும் குறையுமாக இடித்துத் தள்ளிய கட்டிடங்கள் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கின்றனவா எனப் பரிசோதிக்கிற நிறுவனம். புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு ஆகிற செலவின் அளவிற்கு இந்நிறுவனம் பணத்தை கரந்துவிடும்.
காகி 1500 கோடி ரூபாய் (2011) போர் மற்றும் இராணுவம் தொடர்பான மென்பொருள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நிறுவனமிது.
பெச்டேல் 40,000 கோடி ரூபாய் (2011) இரண்டாம் உலகப்போர் காலத்திற்கு முன்பிலிருந்தே, போர் புணரமைப்பில் மிகப்பிரபலமான நிறுவனமிது.
கஸ்டல் பேட்டில் 2000 கோடி ரூபாய் (2011) இந்நிறுவனம் ஈராக் போரின்போது துவக்கப்பட்ட நிறுவனம். செய்யாத வேலைக்கு கோடிக்கணக்கில் கணக்கு காண்பித்து, ஈராக் மக்களின் பணத்தையும் சுருட்டிக்கொண்டு முகவரி இல்லாத நிறுவனமாக காணாமல் போய்விட்டது இந்நிறுவனம். மற்றொரு போரில் வேறொரு பெயரில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நூர் யு.எஸ்.ஏ. 2600 கோடி ரூபாய் (2011) ஈராக் போர் தொடங்கியவுடன் முளைத்த நிறுவனம் இது. துவங்கியவுடனேயே 2600 கோடி ரூபாய் அளவிற்கு ஒப்பந்தங்களைப் பெற்றது இந்நிறுவனம்.
ஜெனரல் எலெக்ட்ரிக் 1,30,000 கோடி ரூபாய் (2003-2011) தகவல்தொடர்பு மின்னணு போர்க்கருவிகள் தயாரிப்பதில் முன்னணியில் இருக்கிறது இந்நிறுவனம். அவர்கள் தயாரித்த ஐபிஎல் 5100 என்கிற கருவியை பீரங்கிகளில் பொருத்தினால், 360 டிகிரியிலும் எதிரிகளை கண்காணிக்கலாம்.

 

2006 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை, 13000000 கோடி ருபாய்க்கும் மேல் போர் ஆயுத வியாபாரம் நடந்திருக்கின்றன. 2013 இல் மட்டும் அதில் 10% அளவிற்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கின்றன. ஆனாலும் 2013 ஆம் ஆண்டின் வர்த்தகம், கடந்த சில ஆண்டுகளைக் கணக்கிற்கொண்டால் மிகக்குறைவு.

 

 

ஈராக் போர் ஏறத்தாழ முடிவடைந்துவிட்டது, ஆப்கானிஸ்தானிலிருந்தும் அமெரிக்க படைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. தென்னமெரிக்காவிலும் பல நாடுகளில் முன்புபோல குழப்பங்கள் விளைவித்து ஆயுதங்களை விற்கமுடிவதில்லை. வடகொரியா, ஈரான் போன்ற நாடுகள் போருக்கு வருமா வராதா என்கிற தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. அதனால் போராயுதங்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக ஒரு புதிய போரினை துவக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது அமெரிக்க கார்ப்பரேட் அரசு. ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமல்லாது, போர் புணரமைப்பு நிறுவனங்களும் மற்றுமொரு போரினை எதிர்நோக்கியிருக்கின்றன.

ஏராளமான ஆதாரங்கள் கொட்டிக்கிடக்கிற அளவிற்கு இனப்படுகொலைகளையும், போர்குற்றங்களையும் நிகழ்த்திய இலங்கை, ருவாண்டா,, இந்தோனேசிய போன்ற எண்ணற்ற அரசுகளை எதிர்த்து ஒரு கேள்விகூட கேட்காத அமெரிக்காதான் வியட்நாம், அர்ஜென்டினா, கொலம்பியா, பனாமா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், மற்றும் பல நாடுகளுக்குக் கொண்டு சென்ற அதே பஞ்சாயத்து சொம்பை சிரியாவிற்கும் கொண்டு செல்கிறது. அமெரிக்காவின் பஞ்சாயத்து சொம்பு இதுவரை சென்ற இடமெல்லாம் குழப்பங்களும் போர்களும் பேரழிவுகளுமே மிஞ்சியிருக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்ற ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற ஆக்கிரமிப்பு போர்களைப் போன்றல்லாமல், சர்வதேச சமூகம் இப்போதுதான் போருக்கு முன்பே மிகப்பெரிய குரலெழுப்பிக்கொண்டிருக்கிறது. உலகின் குடிமக்களாகிய நாம், சிரிய மக்களுக்கு ஆயுதங்களால் அல்லாமல், அரசியல் தீர்வினால் ஒரு விடுதலை கிடைக்க உரக்கக் குரலெழுப்பிஅமெரிக்க தாதாயிசத்தை முடிவுக்கு கொண்டுவருவோம்…

 

 

 

Related Posts