சமூகம்

#ஸ்வாதி – கொலை, வெறுப்பை எப்படி வீழ்த்துவது?

இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஸ்வாதி என்ற இளம்பெண், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். செய்தியைக் கேள்விப்பட்ட எவருக்கும் மனது பதபதைக்கும். ஐந்து நிமிடத்திற்கு ஒரு ரயிலில் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் பரபரப்பான ரயில் நிலையத்தில் கொலையுண்ட உடல் அப்படியே கிடந்திருக்கிறது. உணர்வுப் பூர்வமான பதிவுகள் பலவற்றை இணையத்தில் பார்க்க முடிகிறது.

சிலர் பரபரப்பான வாழ்க்கையில் நம் மனித நேயம் எங்கே தொலைந்து போனதென்று கேட்கிறார்கள். சிலர் காவல்துறையின் சட்ட ஒழுங்கு பராமரிப்பை கேள்வி எழுப்புகின்றனர். இன்னும் சிலருக்கு சிசிடிவி இல்லாதது பிரச்சனையாகப் படுகிறது. சிலர் ஸ்வாதியின் பின்னணி, கொலைக்கான காரணம் பற்றி கதைக்கிறார்கள். ஸ்வாதியின் அப்பா விடுத்திருக்கும் வேண்டுகோள், இவை எல்லாவற்றையும் விட முக்கியமானதாகப் படுகிறது. “ஸ்வாதியின் உயிரை இனி யாரும் கொண்டு வரப்போவதில்லை. பிறகு ஏன் அவளது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும், நடத்தைப் படுகொலை செய்ய வேண்டும்?”

கொலைகளை எப்படிப் பார்க்கிறோம் நாம்?

#ஸ்வாதி கொல்லப்பட்டதற்கான காரணம், கொலைகாரனைப் பிடிப்பது ஒரு குறிப்பிட்ட வழக்கு சார்ந்த பிரச்சனை. ஆனால், கொலைகள், மனித உயிரை இன்னொரு மனிதன் பறித்தெடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன. ஒரு வேளை அங்கே சிசிடிவி காமிரா இருந்திருந்தால் – தொலைக்காட்சி சானல்களுக்கு துடிக்கத் துடிக்க கொல்லப்பட்ட சில நிமிட வீடியோக்கள் கிடைத்திருக்கலாம். சிசிடிவி காமிராக்கள் கண்டறியும் முன்னரே கொலைகள் நடந்திருக்கின்றன. காவலர்களும், சட்டம் ஒழுங்கு பராமறிப்பும் இருந்திருக்கிறது. பலிக்கு பலி என்ற குரூர எண்ணம் எத்தனை நாட்களுக்கு தொடருமோ? மனித மாண்புகளின் பொருள் எங்கெல்லாம் சிதைக்கப்பட்டிருக்கிறதோ – அங்கெல்லாம் கொலைகள் தொடர்கின்றன. கொலைகளை எப்படி நிறுத்தப்போகிறோம், பாதுகாப்பான சமூக சூழலை எப்படி உருவாக்குவது? என்ற கேள்விகள் நம் மனதில் விதைகொள்ள வேண்டும்.

ஸ்வாதியின் சாதி பிரச்சனையா?

ஆனால் இங்கே திசைதிருப்பல் விவாதங்கள் ஏராளம் கிடைக்கின்றன. ஸ்வாதியின் சாதியைக் குறிப்பிட்டு இரண்டு விதமான பதிவுகள் காணப்படுகின்றன. “அவர் மட்டும் ……. ஆக இருந்திருந்தால் இங்கே போராட்டம் வெடித்திருக்கும்” என ஒரு பகுதியினர் எழுதுகின்றனர். “அந்த இடத்தில், கொல்லப்பட்டது …. ஆக இருந்திருந்தால் இந்த அளவு செய்திகள் வருமா?”. அவர் மனுசியாகத்தானே இருக்கிறார்? பதிவுகள் போடும் அந்த நபர்களால் மனித நேயம் என்ற புள்ளியில் ஏன் நிற்க முடியவில்லை. எல்லாவற்றையும் ஒரே அளவுகோலில் நிறுத்த முடியுமா என்ன?

இங்கே சில கொலைகள், தற்கொலைகள், மரணங்கள் சாதியின் காரணமாகவே நடக்கின்றன. அங்குதான் சாதி குறித்து பேச வேண்டும். இப்போது நடந்திருக்கும் கொலைக்கு சாதி அடிப்படை இருப்பதாக்த் தெரியவில்லை. கொலைகாரன் யார் என்பதும் தெரியவில்லை. ஆனால், கொடூரமான கொலை அது, கொலையுண்ட உடலை 2 மணி நேரங்கள் இந்த சமூகம் கையாண்ட விதம் இன்னும் மோசமானது – இரண்டுமே நாம் எத்தனை இயந்திரமயமாகியிருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. நானுண்டு என் வேலையுண்டு என்று இருந்தாலும், இங்கே சமூக நிலை சீராக இல்லாவிட்டால், ஒரு அமைதியான சூழல் சாத்தியமில்லை என்பதை எடுத்துக் கூறுகிறது. இவற்றை பேச முடியாத மொன்னைகளாக – குறுகலான அரசியல் பார்வை நம்மை மாற்றுகிறது.

இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்தால் என்ன?

மேலும் சில நண்பர்கள் இருக்கிறார்கள். மிகவும் நுணுக்கமான பார்வை கொண்டவர்கள். ‘ஸ்வாதி இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றுபவர் என்பதால் ஊடகங்கள் இதனைப் பேசுவதாக’ எழுதியிருக்கின்றனர். ஆம், அதில் உண்மை இருக்கலாம். இங்கே வாங்கும் சக்தி அதிகமுள்ள குழுவின் பிரச்சனைதான், ஊடகங்களுக்கு முக்கியமான ஒன்று. ஆனால், கிடைத்திருக்கும் வெளிச்சத்தைப் பயன்படுத்தி – அனைவருக்கும் பாதுகாப்பான சமூகத்தின் தேவையை வலியுறுத்துவோமா? அல்லது வெளிச்சம் ஏன்? என்று கேள்வி எழுப்புவோமா? இன்போசிஸ் உயிராக இருந்தாலும்,  புனிதா, வித்யாவின் உயிராக இருந்தாலும் மனித நேயம் பேசுவோருக்கு ஒரே தராசுதானே? நுணுகி ஆராய்ந்து அறிவு மேதமையை நிலைநாட்டும் இடம், இதுவல்லவே!

பாலினம் சார்ந்த தாக்குதல்கள்:

ஸ்வாதி ஒரு சக மனிதர். சுயமாக உழைத்து சம்பாதிக்கும் இளம்பெண். அதன் காரணமாகவும், அவள் கொலையின் பின் சில கதைகள் கட்டப்படுகின்றன. ஆளும் கட்சிப் பிரமுகர் ஒருவர், காவல்துறை விசாரணை தொடங்கவேயில்லாத சமையத்தில் ஸ்வாதியின் நடத்தை பற்றி கேள்வியெழுப்புகிறார். சில ஊடகங்கள் வேண்டுமென்றே காதல் கதை கட்டுகிறார்கள்.

அவர் பெண் என்பது இங்கே கவனிக்கத்தக்கது. ஒரு நூற்றாண்டு காலத்தில்தான் பெண்கள் சுயமாக உழைத்து சம்பாதிக்கின்றனர். அவர்களின் வாழ்வுரிமையும், தேர்வுரிமையும் விவாதப் பொருளாகியிருக்கிறது. சம உரிமையுள்ள குடிமக்களாக, சுதந்திர இந்தியாதான் அங்கீகரித்தது. ஒரு பெண்ணுக்கு இந்த சமூகம் பாதுகாப்பானதுதான் என்று உணர்த்த வேண்டிய கூடுதல் முக்கியத்தை அது ஏற்படுத்துகிறது. சக பெண்களோடு, சக மனிதராக அனைவரும்  உடன் நிற்கவேண்டிய நேரத்தில் – அவரின் நடத்தையைக் கொல்வது, அவரை மீண்டுமொருமுறை கொல்வதாகும். அதைச் செய்திட இங்கே பலருக்கும் தயக்கமில்லை.

கடைசியாக …

மேற்சொன்ன எல்லா விவாதங்களும் – ஸ்வாதியின் உடலின் மீது வீசப்படும் மேலும் சில கத்திகள், கூர் வாள்கள் என்றே கருத வேண்டியுள்ளது. சில நிமிட மெளனமும், ஆழ்ந்த சிந்தனையும் தேவைப்படுகிறது. என்னிடமிருப்பதெல்லாம் ஒரு கேள்விதான்.

அன்பு நண்பர்களே, நீங்களோ நானோ நுங்கம்பாக்கத்தில் ரயில் நிலையத்தில் அந்தக் கொலை நடந்தபோது நிற்கவில்லை. ஆனால், ஸ்வாதி என்றொரு பெண் கொல்லப்பட்டு, 2 மணி நேரங்கள் பரபரப்போடு கடந்து செல்லப்பட்ட சமூகத்தின் ஒரு அங்கமாக நாமும் இருந்திருக்கிறோம். கொலைகளும், கூலிப்படைகளும், பலிக்குப் பலி என்ற மனநிலையும் நிறைந்திருக்கும் சமூகத்தில் வாழ்கிறோம். ஒரு கொலையின் மீதான விவாதத்தில் கூட, மனிதமோ, மனித நேயமோ சக உயிர்கள் மீதான அக்கறையோ காணக் கிடைக்காத அளவுக்கு – வெறுப்பு நிறைந்திருக்கிறது. இந்த வெறுப்பை வீழ்த்தாமல்… கொலைகளை எப்படி வீழ்த்துவோம்? வெறுப்புக்கு எதிரான சிந்தனையைத் தூண்டுவது நம்மால் முடியும்தானே?

Related Posts