மேற்குத் தொடர்ச்சி மலை , பரியேறும் பெருமாளுக்கு பிறகு அப்படி முழுவதுமாய் ஆக்கிரமித்து , மனதின் மூலைகளிலெல்லாம் ரீங்காரமிட்டு எழுத உந்தித் தள்ளிய ஒரு படம் ‘Super Deluxe ‘ . Its simply a Master Brilliance !
ஒன்றுக் கொன்று நேரடித் தொடர்பில்லாத ஒரு தற்செயல் நிகழ்ச்சி இன்னொரு நிகழ்ச்சியை பாதிப்பதும், அந்த நிகழ்ச்சி மற்றொரு நிகழ்ச்சியை பாதிப்பதும் என இந்த நிகழ்ச்சிகளின் சங்கிலித் தொடர் தான் உலக இயக்கமும் , வரலாறும் . ஏன் பிரபஞ்ச வரலாறுமே அதுதான் ! இப்படி நேரடி தொடர்பில்லாமல் ஒரு நிகழ்ச்சி மற்றொரு நிகழ்ச்சியை பாதிப்பது தான் Butterfly effect !
இந்த தாத்பரியத்தில் தமிழில் ஏற்கனவே ஒரு திரைக்கதை வந்திருக்கிறது, அது ‘தசாவதாரம்’ . மலையாளத்தில் சமீப வருடத்தில் வெளியான ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் ஆரம்ப காட்சிகள் இந்த Chain reactions of relation-less incidents ஐ மையமாக கொண்டிருக்கும்.
சரி , சூப்பர் டீலக்ஸுக்கு வருவோம். இந்த தற்செயல் நிகழ்வுகள் – சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் விழுமியங்கள் , நியதிகளோடும் மோதுவதன் விளைவு தான் சூப்பர் டீலக்சின் திரைக்கதை ! இதனுள் அடங்கியும் அடங்காமலும் ஒரு பெண்ணியக் குரல் ஒலிக்கிறது.
1 – வேம்புவின் (கள்ள ) காதலன் இறந்து போவது ஒரு தற்செயல் நிகழ்வு , அந்த நிகழ்வு மனைவிகளின் பாற் இச்சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் நியதிகளோடு மோதுகிறது. வேம்பு – முகிலின் கதை நகர்கிறது.
2 – தாய் ப்ளூ ஃபிலிமில் நடித்ததை இளைஞன் பார்க்க நேர்வது ஒரு தற்செயல் நிகழ்வு , அந்த நிகழ்வு மீண்டும் குடும்ப பெண்களின் பாற் இச்சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் நியதிகளோடு மோதுகிறது. அசோக் – லீலாவின் கதை நகர்கிறது.
3 – மாணிக்கம் திருநங்கை ஷில்ப்பாவாக மாறுவது ஒரு இயற்கையான தற்செயல் நிகழ்வு. இந்த நிகழ்வு திருநங்கைகளின் பாற் சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் விழுமியத்தோடு மோதுகிறது. ஷில்ப்பா – ராசுக்குட்டியின் கதை நகர்கிறது.
4 – அற்புதம் சுனாமியின் போது கல்லை பிடித்து தப்பித்தது ஒரு தற்செயல் நிகழ்வு. இந்நிகழ்வு , இப்படியான தருணங்களுக்கு சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் நம்பிக்கையோடு மோதுகிறது. அற்புதத்தின் கதை நகர்கிறது.
இந்த 4 கதைகளும் கால வரிசை மாற்றலாக Non – Linear ஆக நகர்கிறது. இந்த 4 கதைகளையும் இணைக்கும் புள்ளி sub inspector பெர்லின். அசோக்கின் தாய் ப்ளூ ஃபிலிமில் நடித்த நிகழ்வு , எப்படி வேம்பு – முகிலை ஒரு பெரும் இக்கட்டிலிருந்து காப்பாற்றும் Butterfly Effect ஐ புரிகிறது என்பதே திரைக்கதையின் முத்தாய்ப்பு !
இந்த ஒவ்வொரு தற்செயல் நிகழ்வுக்கும் பின்னிருக்கும் உந்துதல் ஆசை – காமம். பிரபஞ்ச தோற்றத்தில் அணுக்களுக்கு இடையேயான காமம் big-bang வெடிப்பை ஏற்படுத்தியது. பூமியில் சுமர் 350 கோடி வருடங்களுக்கு முன் சிந்திய அமினோ அமிலங்களுக்கிடையேயான காமம் உயிரின வரலாற்றை எழுதியது.
பிரபஞ்சத்தின் அனைத்து தற்செயல் நிகழ்வுகளுக்கும் பின்னிருப்பதும் ஒரு காமம் / உந்துதல். இந்த உந்துதல் சங்கிலித்தொடர் நிகழ்ச்சிகளை உருவாக்கி இத்தனை வருட பூமி வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறது.
இந்த இயற்கையான நிகழ்வுகளுக்கு உள்ளாகும் மனிதர்கள் சமூக விழுமியங்களோடு போராடுவதும் , குறிப்பாக ஆண் மைய மனித சமூகம் வகுத்து வைத்திருக்கும் நியதிகள் சக பாலினத்தவரை துன்புறுத்தி தானும் வாழ்வின் ரம்மியங்களை தொலைக்கிறது. இதுவே திரைக்கதையின் தாத்பரியம்.
சம காலத்தின் மிக அற்புதமான படம் ‘சூப்பர் டீலக்ஸ்’ என்று சொன்னால் அது மிகையல்ல !
இன்னொரு வார்த்தையில் சொன்னால் , நிர்வாண மனங்களுக்கும் , அரிதாரம் பூசிய கூட்டு மனங்களுக்குமான மோதலே திரைக்கதையின் சாரம் எனலாம்.
1) எல்லா பெண்களையும் வேட்டையாடத் துடிக்கும் ஆண் மைய சிந்தனையின் பிரதினிதியாக வரும் sub inspector பெர்லின் .
2) ஒரு முறை நிகழ்ந்த extra marital affair க்காக வேம்புவிடம் விவாகரத்து கோரும் முகில் , பின்னர் இக்கட்டிலிருந்து தப்பிக்க வேம்புவை பெர்லினிடம் ஒத்துழைக்கக் கோருவது !
3) ப்ளூ ஃபிலிமின் பார்வையாளனாய் இருந்து விட்டு , பின்னர் அதே ப்ளூ ஃபிலிம் நாயகியான தன் தாயை கொல்ல அசோக் முனைவது ..
என பொது புத்தியாய் மாறி போன ஆண் வக்கிர சிந்தனைகளை தோலுரித்து வெளுத்திருக்கிறார் இயக்குனர்.
பட ஆக்கம்:
பட ஆக்கத்தை பற்றி actually பலப் பல பத்திகளை எழுத வேண்டும். சுருக்கமாக சொன்னால்…
நுணுக்கமான ராவான கதாபாத்திரமைப்பு , கதாபாத்திரமைப்பால் காட்சிகள் தோறும் விளையும் வித்தியாசமான Nuances , மெல்லிய நையாண்டி , காட்சிகள் நிகழும் location , கச்சிதமான ஷாட் கோணங்கள் , அழகியலான சீன் ப்ளாக்கிங் என ஒவ்வொரு காட்சியையும் முடிந்தளவு வித்தியாசமாக conceive செய்த விதம் , ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு freshness ஐ அளிக்கின்றது.
தியாகராஜன் குமாரராஜாவின் டிரேட் மார்க்கான சந்துகளில் வைக்கப்படும் wide shots , window shots , long single shots களுக்கும் குறைவில்லை.
பல காட்சிகளில் புனைவும் நிஜமும் இயைந்து கலந்த விதம் , சில காட்சிகளில் இருக்கும் மிகை புனைவு dramatise செய்யப்பட்ட விதம் அனைத்தும் மிக மிக ஈர்க்கிறது.
ஒரு இயக்குனராய் பிரமிக்க வைக்கிறார் தியாகராஜன் குமாரராஜா ! என்னா டைரக்சன்யா Awesome !
ஒலியமைப்பும் , இசையும் உள்ளபடியே படத்திற்கு பலம்.
சமந்தா , விஜய் சேதுபதி , ஃபகத் ஃபாசில் , பகவதி பெருமாள் , காயத்ரி , மிஷ்கின் , குட்டிப்பையன் ராசுக் குட்டி , சும்மா ஒரு சில காட்சிகளில் வரும் நடிகர்கள் என அனைவரும் மிக மிக சிறப்பான Performance வழங்கியுள்ளனர் ! பகவதி பெருமாள் ( sub inspector பெர்லின் ) தன் மொத்த ஆகிருதியை இப்படத்தில் காட்டியிருக்கிறார் என்றால் மிகையல்ல.
வெகுஜன படங்கள் என்பது இப்படியான Creative tough கொண்டிருப்பவையாக இருக்க வேண்டும். மலினமான க்ளிஷேவாக இருத்தல கமர்ஷியல் என்ற பெயரை அவப்படுத்தும்.
சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்கள் தமிழ் கமர்ஷியல் சினிமாக்களின் பெருமையை மறு வரையறை செய்யும். எதார்த்த சினிமா என்ற பெயரில் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் , உள்ளதை உள்ளபடி அப்படியே documentation செய்யும் படங்களை விட சூப்பர் டீல்கஸ் போன்ற படங்களின் திரைக்கதை ஆக்கத்திற்கு creative ம் , உழைப்பும் அதிகம் வேண்டும். இத்தகைய படங்களை அனைத்து தரப்பு வெகுமக்களும் கொண்டாடும் நாட்களும் வெகு அருகிலேயே உள்ளது.
சில குறைகள்:
சாதி குறித்து முகில் பேசும் கருத்து உண்மையில் கண்டனத்திற்குரியது . பிரபஞ்ச இயக்கம் வரை புரிதலுள்ள இயக்குனர், பெண்ணியக் குரல்களை வெளிப்படுத்தும் இயக்குனர் சாதியின் இயக்கம் குறித்து புரிய இன்னும் சற்று வாசிக்கலாம். தேசிய இன அடையாளமும் , சாதி அடையாளமும் ஒன்றல்ல . சாதி அடையாளம் தன்னளவிலே வன்மமும், ஒடுக்குமுறையும் கொண்டது.
அதே போல எந்த அரிதாரமும் இல்லாத உண்மை மனிதி என சமூகத்தில் நாம் திருநங்கையர் தோழிகளை கூறலாம். திரைக்கதையின் மொத்த உரையாடலும் திருனங்கை ஷில்ப்பாவிடம் மையம் கொண்டு இறுதியில் உடைப்பை ஏற்படுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமெனத் தோன்றியது .
முத்தாய்ப்பு:
எப்படியாகினும் மலையாளிகளும் , பெங்காலிகளும் , பாலிவுட்டும் பார்த்து பிரமிக்கும் ஒரு தமிழ் படைப்பை தியாகராஜன் வழங்கியுள்ளார் என்றால் அது மிகையல்ல. தமிழ் சினிமாவின் குண்டு சட்டிக்குள்ளிருந்து கட்டுடைத்து வெளியேறிய ஒரு எட்டுக் கால் பாய்ச்சல் தான் ‘சூப்பர் டீலக்ஸ்’ . இதன் விளைவு இன்னும் எத்துனை பாய்ச்சல்களை கொடுக்கிறதென பார்க்கலாம்.
– அருண் பகத்
Recent Comments