பிற

பெருச்சாளிகளும், போலீசாரும் உலவிய ஒரு நாள் இரவின் கதை!

சேப்பாக்கம் – ரயில்வே பாலத்தின் அருகில், ஆட்கள் யாருமில்லாத நேரத்தில் காவல்துறையின் வாகனம் வந்து நின்றது. சுமார் ஐம்பது ஊனமுற்றவர்களில், அவர்களில் பெரும்பகுதி தவழ்ந்து செல்லும் நிலையில் உள்ளோர். சாலையின் மத்தியிலேயே இறக்கிவிட்டுவிட்டு புறப்பட்டார்கள் காவல்துறை அதிகாரிகள்.

“சார், இது என்ன இடம்?, எங்களுக்கு வசதியான இடம் இருக்கென சொன்னீங்க?”

“இதுதான் அந்த இடம்”

“இங்க எந்த வசதியும் இல்லையே?”

“அப்ப, கலைஞ்சு போங்க!”

“இல்ல நாங்க போராடுவோம். ஊனமுற்றோரை காவல் துறை இப்படித்தான் நடத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவு எங்க கைல இருக்கு.”

போடா… என்பது போல அசட்டையாக கையசைத்துவிட்டு, அங்கிருந்து கிளம்பியது வாகனம்.

***

மதுவிலக்கு கேட்டு தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில், ஊனமுற்ற தோழர்களும் இணைந்தார்கள். அவர்களிடம் காவல்துறை காட்டிய ’கண்ணியத்தின்’ ஒரு பகுதிதான் மேற்சொன்னது.

தீபக், சேப்பாக்கம் பாலத்தின் அடியிலேயே உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்வதாக முடிவெடுத்தார். மதுவிலக்குடன் சேர்த்து, காவல்துறையின் மனித நேயமற்ற நடவடிக்கைக்கு எதிராகவும் அவர்களின் போராட்டம் தொடர்கிறது.
மாலையில் அங்கு சென்றபோது, பாலத்தின் அடியில், சுகாதாரமற்ற ஒரு பகுதியில் மழைக்கு ஒதுங்கியபடி தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்துகொண்டிருந்தனர். இதுபற்றி கேள்விபட்ட தலைவர்கள் தொலைபேசியில் அழைத்து பேசினார்கள்.

***

“உண்ணாவிரதம் இருந்த எங்களை கைது செய்தது காவல்துறை. ஒரு சமுதாயக் கூடத்தில் அடைத்தார்கள். ஊனமுற்றோரைக் கைது செய்தால், அவர்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என நீதிமன்ற உத்தரவு இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் பார்வையற்றோரை கைது செய்து, சுடுகாட்டில் விட்டார்கள் காவல்துறையினர். அதனையும் குறிப்பிட்டு, நீதிமன்ற வழிகாட்டுதலையும் காட்டினோம். ‘அப்படியா… சரி வாங்க ஒரு இடம் இருக்கு’ என்று அழைத்து வந்த அதிகாரிகள், இங்கே இறக்கிவிட்டார்கள். எங்களை மனிதர்களாக மதிக்கக் கூட அவர்கள் தயாராக இல்லை. ”

ஊனமுற்ற சகோதரர்கள் தங்கள் நிலையை விளக்கிக் கொண்டிருந்தனர். சேப்பாக்கம் ரயில்வே பாலம் ஒழுகத் தொடங்கியது. மழை நீர் தரையை நனைத்து ஒதுக்க ஒரு துளியிடமும் இல்லாத நிலைமை.

தார்ப்பாய் ஒன்றை வாங்கிவந்து சாரல் தெரிக்காத வகையில் இளைஞர்கள் பிடித்து நின்றனர். சட்டக் கல்லூரி மாணவர்களும், மெட்ராஸ் பல்கலை மாணவர்களும், இன்னும் பல இயக்கத்தாரும் இணைந்து ஒரு தற்காலிக கூடாரம் தயார் செய்தார்கள். எப்படியும் அந்த இடம் பெரிதாக மாறவில்லை. ஓட்டைக் கூரைக்குக் கீழே தொடர்ந்தது போராட்டம்.
காவல்துறையின் சில நபர்கள் வந்து நடந்தவைகளைப் படம் பிடித்தனர்.

***

தொலைக்காட்சி நேரலையில், செய்திகளில் என போராட்டத் தகவல் பரவியது. கேள்விப்பட்டவர்கள், மனிதாபிமானம் மிக்கோர் வந்து உதவினார்கள். முக்கியத் தலைவர்கள் வந்தார்கள். அழைபேசியில் விசாரிப்புகள் தொடர்ந்தன. ஒவ்வொருவரின் அலைபேசியும் மின்சாரம் இழந்து உறங்கத் தொடங்கியது.

நேரம் நகர்ந்தபடியிருந்தது. ஒரு கூடாரத்தினுள் ஊனமுற்றோர் ஒருவரை ஒருவர் நெருக்கியபடி படுக்கத்தான் இடம் இருந்தது. பசியின் வலியுடன் உறங்கத் தொடங்கினர்.

தார்மீக ஆதரவுடன் சில மாணவர்களும், நண்பர்களும் அருகே அமர்ந்துகொண்டோம்.

***

இரவு செல்லச் செல்ல – மாடுகள் வந்து மழைக்கு ஒதுங்கின … அவை கூடாரத்தை நெருங்கியபோது விரட்டிவிட்டோம். கொசுக்கள் படையெடுத்தன. செய்வதற்கு ஒன்றுமில்லை. பூச்சிகள் உலவத் தொடங்கின. அதுவொரு நல்ல இரவல்ல. படுத்திருந்தோர் மீது பெருச்சாளிகள் உலவிக் கொண்டிருந்தன. விரட்டிவிட்டோம். அசந்தால் உயிரைக் கொல்லும் மிக மோசமான இடம் அதுவென்பதை எங்களுக்கு உணர்த்திக் கொண்டேயிருந்தது ஒவ்வொரு நிமிடமும். உணவின்றி மயங்கிக் கிடக்கும் தோழர்களை நினைத்து, மனம் பதபதைத்தது. அருகிலிருந்து ஒரு நிமிடமும் அகலத் தோன்றவில்லை.

நள்ளிரவில் சில காவலர்கள் முதலில் இருசக்கர வாகனத்தில் வந்தனர். அதன் பின் ஒரு ஜீப் வந்து திரும்பியது. இன்னும் சில மணி நேரத்துக்குப் பின் மூன்று காவலர்கள் மெல்ல நடந்து அருகில் வந்து நோட்டம் பார்த்துச் சென்றனர். அவ்வளவுதான், அவர்களின் காவல் பணி.

உறங்குவதுபோலும் நடித்துக் கொண்டிருக்கும் இந்த அரசுக்கு, உடலில் ஒரு கொசுக் கடித்த எதிர்வினை கூட இல்லை. போராட்டத்துக்கு காரணமான காவல் துறையின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை.

***

விடியல் நெருங்கும்போது – தூக்கம் விழித்த பிற தோழர்கள் பாதுகாப்பில் அமர வந்தனர். போராட்டம் தொடர்கிறது.

இந்த அனுபவத்தை எழுதிக் கொண்டிருக்கும் நொடி வரை – எதிர்க் கட்சிகளின் பல தலைவர்களும் அங்கே வந்து சென்றுள்ளனர். பத்திரிக்கைகள் தொடர்ந்து செய்தி வெளியிட்டுள்ளன. அறிக்கைகள் வெளியாகியுள்ளன. ஆனால், காவல்துறையின் அதிகாரிகளோ, அரசு தரப்பு நபர்களோ எந்த எதிர்வினையும் காட்டவில்லை.

தடிகொண்டு தாக்கிய அதே அரசு, மெளனத்தின் வழியாகவும் – கோரிக்கைகளை நசுக்க முடியும் என்று ஆணவத்துடன் அமைதிகாக்கிறது. மது அடிமைத்தனத்திற்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், மனித உரிமைகளுக்காகவும் நீளத் தொடங்கியுள்ளது.
நாம் யார் பக்கம் என்பதை முடிவு செய்யப் போதுமானது – அந்த ஒரு நாள் இரவின் கதை.

Related Posts