இலக்கியம்

ஸ்பைடர் பையன் – 1

                                                         

spider manஇன்று காலையில் இருந்து தான்,அவனது மூக்கிலிருந்து,வலை வருவது நின்றிருந்தது.கடந்த இரவில் கட்டிலில் படுத்துக் கொண்டே,கைக்கெட்டாத தூரத்தில் சார்ஜ் ஏறிக்கொண்டிருந்த மொபைலை எடுக்க கையை நீட்டினான்.சிலந்தி வலையானது அவன் கையிலும்,மூக்கிலும்(சளியைப் போல),கொஞ்சம் கண்ணிலிருந்தும் வந்தது.மொபைலும் கைக்கு வந்தது.தனக்குக் கிடைத்தது சக்தியா,இல்லை நாம் அழியப் போகிறோமா என்று பலவாறு குழம்பிப் போய்க் கொண்டே தூங்கிப் போனான்.மொபைல் மெல்ல கைநழுவி மெத்தையில் விழுந்து பிழைத்தது.

அவனுக்கு இப்படி ஒரு எக்ஸ்ட்ரா பவர் கிடைத்து இரண்டு வாரங்கள்,ஒரு நாள் ஆகிறது.அந்தப் பவரை,எப்படி எதிர் கொள்வதென்றே அவனுக்கு விளங்கவில்லை.உலகில் கோடி கோடி மக்கள் இருக்க தன்னை மட்டும் இயற்கை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?புரியவில்லை.தான் எந்த விதத்தில்ல் பொறுந்திப் போனேன்??கடந்த வாரத்தில்,லெபாரட்டரியில்,அந்த சிலந்தியின் அருகிலிருந்த ஒரு கரப்பான் பூச்சியையும் தானே தொட்டுப் பார்த்தோம்?அது ஏன் நமக்கு மீசையை அளிக்கவில்லை?இல்லையென்றாலும் தன்னுடைய பதினாறறை வயதுக்கு,இயல்பாகவே வளர்ந்திருக்க வேண்டுமே?இயற்கை இப்படி அத்யாவிசயமான ஒரு தேவையைப் அளிக்காமல்,தேவையில்லாத ஒரு பவர்(அது பவர் தானா?) கொடுத்து என்ன செய்யப் போகிறது என்று குழம்பிப் போனான்.

குழப்பம்…குழப்பக்கடலானது…

ஒரு வாரம் கடந்த நிலையில்,அவனது பவர் ப்ரயோகிக்கும் திறமை சற்றே முன்னேற்றமடையத் துவங்கியிருந்தது.சக்தியை தனது குணமாகவே உணரத் துவங்கினான்.சகித்துக் கொள்ளத் துவங்கினான்..இப்பொழுதெல்லாம் வலை மணிக்கட்டின் அடியில்,நடுப்பகுதியில் இருந்து மட்டுமே  வந்தது.டீ டம்ளரை பத்தடி தூரத்திலிருந்தே பிடித்து எடுக்கத் துவங்கியிருந்தான்.ஆனால் டீ சிந்திப் போய்விடுவதுமாகவும்,கடைசியில் அம்மாவிடம் திட்டு வாங்கிக் கொண்டே மறுமுறை டீ வாங்கிக் குடிப்பதுவுமாயிருந்தான்..

இரண்டாவது வாரத்திலிருந்து,சுவற்றில் ஏறுவதற்குப் பழகியிருந்தான்.உயரமான சுவர் ஒன்றில் இவன் ஏறியதைப் பார்த்து விட்ட உரிமையாளர்,சத்தம் போடவே,வேண்டுமென்றே கீழே விழுந்து சாதுர்யமாக தனக்கிருக்கும் சக்தியினை மறைத்து விட்டான்.உரிமையாளரிடம் கிரிக்கெட் பந்தை தேடி வந்ததாக,அப்பாவியான முகம் வைத்து சமாளித்தான்.விழுந்தது வலிக்கவேயில்லை.தனது சாமர்த்தியத்தை மெச்சிக் கொண்டான்.

மூன்றாவது வாரத்தில்..இப்பொழுது அவனால் டீ டம்ளரைச் சிந்தாமலேயே எடுத்துவிட முடிந்தது.சட்டையை ஹேங்கரில் தொங்க விட்டான்.அம்மா இல்லாத போது ஹாலில் அமர்ந்த படியே சமையலறைச் சம்புடத்திலிருந்து சில்லரை திருடினான்.தான் படித்துக் கொண்டிருந்த ,தஸ்தாவெஸ்கிக்கு சிறிய வலையை விரல் நீளத்திற்கு செய்து புக் மார்க்காக்கினான்.

மூன்றாவது வார்த்தின் ஆறாவது நாளில் ,வலையைப் ப்ரயோகிப்பதில் விற்பன்னன் ஆகிவிட்டான்…வீட்டில் எல்லோரும் தூங்கிய பின் ,அறையின் மூலையில் ஒரு சிலந்தி வலை தூளியைச் செய்து அதில் சிலந்தியைப் போலவே படுத்துக் கொண்டான்.சிலந்திப்பூச்சியாகவே தன்னை உணர்ந்து கொண்டான்.நீங்கள் காமிக்ஸிலோ,திரைப் படத்திலோ பார்த்திருப்பீர்களே அந்த ஸ்பைடர் மேனைப் போலவே சகல வலிமையும் பெற்று விட்டான்.நீங்கள் பார்த்த ஸ்பைடர் மேனை அவன் பார்க்கவில்லை.காரணம் அந்த ஸ்பைடர் மேனே அவன் தான்.

இரண்டு கால்கள்,இரண்டு கைகள் கொண்ட சிலந்திப்பூச்சியாக வாழ்வது அவனுக்குப் பிடித்திருந்தது.மனதுக்குள் பெருமையாக இருப்பினும் அதை துளியளவேனும் கூட பிரகடனப் படுத்தாமல் இருப்பது சிரமமாகவேயிருந்தது.ஒரு முறை ,எல்லோர் முண்ணனியிலும் பஸ்ஸிலோ சாலையிலோ வைத்து, ‘நான் ஒரு சிலந்திப் பூச்சிடா’ என்று உரக்கக் கத்த வேண்டுமென நினைத்தான்.அந்த நாளுக்காகக் காத்திருந்தான்.

அலெக்சாண்டர் மெக்யூனைப் பற்றி விக்கிக் கொண்டிருந்தான்.விக்கி தரும் தகவல்களைப் பார்க்கப் பார்க்க மெல்லிய ஆச்சர்யம்,சிகரெட் புகையென மனதில் பரவியது.தனக்கு இந்த சக்தியும் வந்து விட்டால் எப்படி இருக்கும்??அற்புத சக்தியின் புள்ளியைக் லேப்டாப்பின் எல்லா மூலை முடுக்குகளிலும் தடவித் தடவித் தேடிப்பார்த்தான்.அதைத் தொட்ட கணத்தில் சக்தி வந்திட வேண்டுமென்று ஆவேசம் காட்டினான்.நான் தான் உலகின் மிகச் சிறந்த அறிவாளி சிலந்திப் பூச்சியாக இருப்பேன்.ஹ்ம்ம்ம்..!!!

பைக்கைப் பார்க்கும் போதும்,ஃபேனைப் பார்க்கும் போதும்,பெண்ட்ரைவ்,ஃபிரிஜ்,கூழாங்கல்.5.1 சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம்,ஸ்கின் லோசன்,என எதை பார்த்தாலும் அவற்றை ஒரு அந்நிய விதமாய் அணுகினான்.அவனடு தொடுதல் புதுமையான தொடுதலாக இருந்தது.எதாவது ஒரு மூலையில் ,ஏதாவது ஒரு புள்ளியிலிருந்து சக்தி தனக்குள் பரவி விடாதா என்று ஏங்கினான்.இப்பொழுது அவனுக்குளிருந்த சிலந்தியுணர்வு கொஞ்சம் விடுபட்டு இருந்தது.பூவொன்றைத் தடவித் தடவிப் பார்த்தான்.பூக்களின் வாசம் தனக்கும் வந்துவிடும் என்று உறுதியாக நம்பிக் கொண்டே தீவிரமாகினான்.ஏதும் ஆகாததை உணர்ந்து கொண்டு,பூவைக் கசக்கி வீசியெறிந்து,காலில் மிதித்தான்.பூவை தனது இயலாமையாகவும்,இயற்கை தனக்களித்த ஏமாற்றத்தின் மொத்த உருவமாகவும் பார்த்தான்.

இப்படியாக,ஒரு சூப்பர் ஹிரோ தன்னை உணர்ந்து கொள்ளாமல்,சமூகத்தில் தனக்கான தேவையை உணராமல் கொஞ்ச சுற்றிக் கொண்டிருந்தான்.

-(தொடரும்)

Related Posts