சினிமா

உதய கீதம் பாடுவேன் உயிர்களை நான் தொழுவேன் மரணம் கூட இறந்து போகும்……


இசை என்பது மொழிகளைக் கடந்தது. அதனால் தான் அர்த்தம் அறியாவிட்டாலும் நம்மால் எல்லா மொழிப்பாடல்களையும் ரசிக்க முடிகிறது.  தாலாட்டு, ஒப்பாரி என தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றியது பாடல்.  அதனால் தான்
எஸ்பிபி என்ற ஒரு பாடகர் இறந்து விட்டார் என்றவுடன் நம்மையறியாமல் நமக்குப் பதற்றம் தொற்றிக் கொள்கிறது.
எங்கோ பிறந்த அவர், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்களின் வாழ்வியலோடு கலந்திருந்தார்.  ஸ்ரீபதி பண்டிதராத்யுல பாலசுப்ரமணியம் என்ற எஸ்பிபியின்  சுவாசம் நின்று போய் விட்டது. ஆனால், அவர் குரல் மூலம் பாடிய பல்லாயிரக்கணக்கான பாடல்கள் நம்முடன் இருக்கின்றன. 

எப்படி அடையாளப்படுத்துவது?


அரசு மரியாதையோடு அந்த மகா கலைஞனுக்கு இறுதி மரியாதையை செய்யும் தமிழக அரசுக்கு கோடான கோடி எஸ்பியின் ரசிகர்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எஸ்பிபியை எப்படி அடையாளப்படுத்துவது? அவர் நல்ல புல்லாங்குழல் கலைஞர் என்றா? நல்ல ஓவியர் என்றா? நல்ல பாடகர் என்றா? நல்ல டப்பிங் கலைஞர் என்றா? நல்ல இசையமைப்பாளர் என்றா? நல்ல தயாரிப்பாளர் என்றா? நல்ல மேடைக்கலைஞன் என்றா? நல்ல மிமிக்ரி கலைஞர் என்றா? ஒரு கூட்டுக்குள் அடைந்து விடாத பறவை எஸ்பிபி.
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இசைப்பயணம் செய்த எஸ்பிபியின் முதல் பாடல் ஜெமினிக்கா, எம்ஜிஆருக்கா என்ற சர்ச்சை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இல்லை, எங்கள் தாத்தா எடுத்த படத்தில் தான் அவர் முதல் பாடல் பாடினார் என்று தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநரான தமிழிசை கூறுகிறார்.


சிறந்த மிமிக்ரி கலைஞர்

சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், முரளி, அர்ஜீன், சரத்குமார், பாண்டியராஜன், ராமராஜன் என எல்லா ஹீரோக்களும் அவரது குரல் பொருந்தியது. குறிப்பாக, மோகனுக்கு இவர் பாடிய பாடல்கள் அவரை புகழ் ஏணியின் உச்சத்தில் ஏற்றியது. இதன் காரணமாகவே மோகன் மைக் மோகன் என்றே அழைக்கப்பட்டார்.
அவரது படங்கள் அனைத்தும் வெள்ளிவிழா கொண்டாடின. காரணம் இசைஞானி இசையில் எஸ்பிபி பாடிய பாடல்கள். பாடுநிலா பாலு என எஸ்பிபி பெயர் பெற்றது இக்காலத்தில் தான். 

எஸ்பிபியின் குரலில் இருந்த தனித்துவம் ரஜினிகாந்த் மட்டுமின்றி சிரஞ்சீவிக்கும்  அறிமுகப்பாடலை பாட வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன் வைத்தது. அதற்காக புகழ்பெற்ற ஹீரோக்களுக்கு மட்டும் தான் அவர் பாடியிருக்கிறார் என்று எண்ணத்தை சுருக்கிக் கொள்ள வேண்டாம்.
காதல், சோகம்,வீரம் என அவர் குரல்களில் காட்டிய ஜாலம் தான் இசைரசிகர்களிடம் அவரை நெருக்கமாக வைத்திருக்கிறது. இரவு நேர பயணங்களில் எஸ்பிபியின் பாடல்கள் தான் பலருக்குப் பக்கத்துணை.

எஸ்பிபி மிகச்சிறந்த மிமிக்ரி கலைஞர். அவள் ஒரு தொடர்கதை படத்தில் மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன் இசையில் எஸ்பிபி பாடிய அற்புதமான பாடல்…

கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று…
இந்த பாடலில் அவருடன் நடிகர் சதன் பல குரல்களில் மிமிக்ரி செய்திருப்பார். ஆனால், இதே பாடலை பல மேடை நிகழ்ச்சிகளில் தனி ஒருவனாக மிமிக்ரி செய்தவாறு எஸ்பிபி பாடி சாதனை படைத்துள்ளார்.  அவரின் பலகுரல் திறமைக்கு பல பாடல்களை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
சங்கர் கணேஷ் இரட்டையர் இசையில் வசந்தகாலம் படத்தில் சுருளிராஜனுக்கு அச்சு அசலாக அவர் பாடிய இந்த பாடல் அதற்கு சான்று.

கொஞ்சம் ஒதுங்கு நான் தனியா பேசணும் உன்னோட சின்னச் சிட்டு வாடி
சுகம் அள்ளிக் கொஞ்சம் தாடி
சின்னக் கடை பன்னீரா சேர்ந்துகடி…

சூரக்கோட்டை சிங்கக்குட்டி படத்தில் இசைஞானி இசையில் எம்ஆர்.ராதா குரலில் ராதாராவிக்கு,

அப்பன் பேச்சைக் கேட்டவன் யாரு
இப்ப இங்கே இருக்கிறேன் பாரு…

என்ற பாடலை எஸ்பிபி மிக சிறப்பாக பாடியிருப்பார்.


காதல் உணர்வு பொங்கும் பாடல்கள்


மின்சாரக்கனவு படத்தில் இடம் பெற்ற தங்கத்தாமரை மகளே பாடலை பாடியதற்காக எஸ்பிபிக்கு தேசிய விருது கிடைத்தது.  காதல் பாடல்களை மிகவும் உள்வாங்கி ரசித்து பாடுவார். காதலின் தீபம் ஒன்று, உன்னை நெனைச்சேன் பாட்டுப் படிச்சேன் போன்ற பாடல்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இப்படி காதல் பாடலை அவர் மாய்ந்து மாய்ந்து பாடக்காரணம் உண்டு.
பெற்றோரின் எதிர்ப்பை மீறி விசாகபட்டினத்தில் உள்ள கோயிலில் காதல் திருமணம் செய்து கொண்டவர் எஸ்பிபி.

எம்ஜிஆர், சிவாஜிக்கு டிஎம்.சௌந்தராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பிபி.ஸ்ரீனிவாசஸ் பாடிக்கொண்டிருந்த நேரத்தில் இலங்கை வானொலியில்  பல டூயட் பாடல்கள் எஸ்பிபியின் குரலில்  ஒலித்தன. ஆனால், அவை எம்ஜிஆர், சிவாஜி பாடல்கள் இல்லை. அந்தப் பாடல்களின் சிறிய பட்டியலைப் பாருங்கள். அத்தனையும் எஸ்பிபி பாடிய முத்துக்கள்.


பொருந்திய குரல்


ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது ஓஹோ பாடலை எந்த ஹீரோ நினைவிற்கு வருகிறார்? அப்படி யாரும் யோசிக்க முடியாதபடி ஜெமினி கணேசனுக்கு இந்த பாடலைப் பாடியவர் எஸ்பிபி தான். முத்துராமனுக்கு சம்சாரம் என்பது வீணை,  கேட்டதெல்லாம் நான் தருவேன், நீயொரு ராக மாலிகை உன் நெஞ்சம், காத்திருந்தேன் கட்டி அணைக்க கன்னியிதழில் முத்து பதிக்க, கண்ணனை நினைக்காத நாளில்லையே, ஜெய்சங்கருக்கு பொன்னென்றும் பூவென்றும் தேன் என்றும் சொல்வேனோ,  அழகே உன் பெயர் தானோ அமுதே உன் மொழி தானோ , உள்ளத்தில் நூறு நினைத்தேன் உன்னிடம் சொல்லத்தவித்தேன், நிலவு வந்து வானத்தையே திருடிக்கொண்டது, முத்துக்கள் சிந்தித் தித்திக்கும்,  கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும், சிவகுமாருக்கு உன்னைத்தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது, தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே, ஓடம் கடலோடும் அது சொல்லும், காதல் விளையாட கட்டிலிடு கண்ணே, முள்ளில்லா ரோஜா முத்தாரம் பொன்னுஞ்சல், ஜெமினிகணேசனுக்கு  கற்பனையோ கை வந்ததோ, மங்கையரில் மகாராணி மாங்கனி போல், ரவிச்சந்திரனுக்கு மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி, தொடுவதென்ன தென்றலோ மலர்களோ, ஸ்ரீகாந்திற்கு தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ இப்படி எத்தனையோ ஹிட் பாடல்களை எஸ்பிபி பாடியுள்ளார். 

இசைஞானியின் 40 சதவீத பாடல்


இசைஞானியுடன் சினிமாவிற்கு முன்பே மேடை நிகழ்ச்சிகள் மூலம் அறிமுகமான எஸ்பிபி, குடும்பரீதியாக நண்பர். இருவரும் ஒருமையில் அழைத்துக் கொள்வதை பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறோம். 

ஆனால், இசைஞானி இசையமைத்த முதல் படத்தில் எஸ்பிபி பாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இரண்டாம் படத்திலும் அந்த வாய்ப்பு அவருக்கு கிட்டவில்லை. இசைஞானியின் மூன்றாவது படமான பாலூட்டி வளர்த்த கிளி படத்தில் தான் எஸ்பிபி முதல் பாடலைப் பாடினார்.

நான் பேச வந்தேன் சொல்ல தான்
ஓர் வார்த்தை இல்லை
உன் வாய் மொழி மணிவாசகம்
நீ சொல்லமல் என் நெஞ்சில் சொல்லில்லை…
எஸ்பிபி  இசைஞானி இசையில் பாடிய முதல் பாடலே டூயட் தான். எஸ்பிபியுடன் இணைந்து பாடியது எஸ்.ஜானகி. 

இளையராஜா   இசையில் 40 சதவீத பாடல்களை எஸ்பிபி பாடியுள்ளார் என்பதே மிகப்பெரிய சாதனை.
மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன் காலத்தில் டிஎம்.சௌந்தரராஜன், பி.சுசீலா பாடல்கள் மக்கள் மனங்களில் ஊடுறுவியதோ, அதே போல இசைஞானி காலத்தில் எஸ்பிபி, எஸ்.ஜானகி பாடல்கள் ரசிகர்கள் மனங்களில் பறவையென கூடு கட்டி விட்டன.
அசராத உழைப்புக்குச் சொந்தக்காரரான எஸ்பிபி ஒரே நாளில் 19 பாடல்களைப் பதிவு செய்து அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளார். பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளைப் பெற்றுள்ளார். சாகரசங்கமம், ஸ்வாதிமுத்யம் ஆகிய இரண்டு படங்கள் தவிர, கமல்ஹாசன் நடித்து தமிழில் இருந்து தெலுங்கிற்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட அனைத்துப் படங்களிலும் கமல்ஹாசனுக்கு குரல் கொடுத்தவர் எஸ்பிபி தான். சிறந்த டப்பிங் கலைஞருக்கான விருதையும் எஸ்பிபி பெற்றுள்ளார் . அதுமிட்டுமின்றி ரஜினிகாந்த் குரலில் பாடுவதில் எஸ்பிபி வல்லவர். அப்படியொரு பாடல், விஜய் ஆனந்த் இசையமைப்பில் வெளியான நான் அடிமை இல்லை படத்தில் இடம் பெற்ற  ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் பாடலைச் சொல்லலாம். அதில் ரஜினிகாந்த் போலவே எஸ்பிபி டயலாக்கும் பேசியிருப்பார்.

சிறந்த இசையமைப்பாளர்

திரையிசை திலகம் கேவி.மகாதேவன் இசையில் 1980ல் வெளியான படம் சங்கராபரணம்.சாஸ்த்ரீய இசையை அடிப்படையாகக் கொண்டிருந்த படம்.
ஆனால், சாஸ்தீரிய சங்கீதம் தெரியாத  எஸ்பி. பாலசுப்ரமணியம் இப்படத்தில் பாடிய பாடலுக்கு சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.
நல்ல இசையறிவு உள்ளவர் எஸ்பிபி என்பதற்கு அவர் இசையமைத்த பாடல்களைக் கேட்டால் புரியும். துடிக்கும் கரங்கள், தையல்காரன், மயூரி,  சிகரம், உன்னைச் சரணடைந்தேன் உள்ளிட்ட பல படங்களுக்கு எஸ்பிபி இசையமைத்துள்ளார்.

சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்
வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம்
விண்ணிலவு பாலூட்ட பெண்ணிலவு தாலாட்ட
நீலாம்பரி கேட்கலாம்…நீலாம்பரி கேட்கலாம்…
இந்த அற்புதமான பாடல் துடிக்கும் கரங்கள் படத்திற்காக எஸ்பிபி போட்ட மெட்டு. 

இதோ இதோ என் பல்லவி
எப்போது கீதமாகுமோ
இவன் உந்தன் சரணமென்றால்
அப்போது வேதமாகுமோ….  இது சிகரம் படத்திற்காக எஸ்பிபி போட்ட மெட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள எஸ்பிபி புதிய இசையமைப்பாளர்களுக்கு வழிகாட்டியாகவே இருந்துள்ளார். 

தமிழ் சினிமாவில் அறிமுக இசையமைப்பாளர்கள் படங்களில்  மிகச்சிறந்த பாடல்களை எஸ்பிபி வழங்கியுள்ளார்.


ஆபந்தபாந்தவர்


அறிமுக இசையமைப்பாளருக்கு  ஆபந்தபாந்தவர் எஸ்பிபி தான். 1979ம் ஆண்டு எம்ஏ.காஜா இயக்கத்தில் வெளியான ஒரு விடுகதை ஒரு தொடர்கதை    படம் தான் இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு முதல் படம். இப்படத்தில் எஸ். ஜானகியுடன் இணைந்து எஸ்பிபி பாடிய  விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
யார்கதை எது தான் நீ தான் அறிவாயோ பாடல் எப்போதும் கேட்க வைக்கும். இவர்களுடன் அசோக் என்ற பாடகர் இணைந்து பாடியிருப்பார்.
இளைஞர்கள் மத்தியில் இசைபுரட்சி ஏற்படுத்திய படம் ஒரு தலை ராகம். டி.ராஜேந்தர் என்ற மகத்தான கலைஞனின் அறிமுகம் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த படம். இன்று வரை தமிழ்சினிமாவில் முரண்களின் தொகுப்பாக எழுதப்பட்ட ஒரே பாடல் என்ற பெருமையைப் பெற்ற பாடலை எஸ்பிபி பாடினார். டி.ராஜேந்தர் எழுதி இசையமைத்த அந்த பாடல்,

இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்….


மேடைப்பயணம்

இன்றளவும் மேடைக்கலைஞர்களின் கொண்டாடும் ஒரே கலைஞன் எஸ்பிபி தான். அவருடைய பாடல்கள் தான் அவர்கள் பலருக்கு பல நேர உணவாக இருந்தது. நலிந்த இசைக்கலைஞர்களுக்கு தொடர்ந்து உதவி செய்து கொண்டிருந்த நல்லிதயம் எஸ்பிபி. 40 ஆண்டுகளுக்கும் மேலாக மேடையில் பாடிக் கொண்டிருந்த போதும் எந்த சலிப்பும் இல்லாமல் ரசிகர்களை மகிழ்விப்பதில் சளைக்காத கலைஞனாக திகழ்ந்தார்.
ஒரு தலை ராகம் படத்தில் எஸ்பிபி பாடிய மேடைப்பாடல் 

வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது
வைகை இல்லா மதுரை
இது மீனாட்சியை தேடுது…
அறிமுக இசையமைப்பாளரான டி.ராஜேந்தருக்கு எஸ்பிபி வழங்கிய கொடை இந்த பாடல் எனலாம். அதனால் தான் டிஆர் தனது படங்களில் எஸ்பிபிக்கு மிகச்சிறந்த பல பாடல்களை வழங்கியுள்ளார்.


புதிய முத்துக்கள்


1980ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் புதிய இசையமைப்பாளர்கள் பலர் பயணப்பட்டனர். அவர்களின் பாட்டுப் பயணத்தில் நல்முத்துக்களாய் எஸ்பிபி பாடிய பல பாடல்கள் நமக்கு கிட்டின.

மிகச்சிறந்த இசைக்கலைஞரான விஎஸ்.நரசிம்மன் இசையமைப்பாளராக அறிமுகமான படம் அச்சமில்லை அச்சமில்லை. கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1984ம் ஆண்டு வெளியான தேசிய விருது பெற்ற இந்த படத்தில் பி.சுசீலாவுடன் எஸ்பிபி இணைந்து பாடிய
ஆவாரம் பூவு ஆறேழு நாளா
நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு … பாடல் கிராமத்து சித்திரத்தை நம் கண் முன் கொண்டு வந்து விடுகிறது.
தேவேந்திரன் என்ற மிகச்சிறந்த இசையமைப்பாளர் அறிமுகமான படம் மண்ணுக்குள் வைரம். 1986ம் ஆண்டு வெளியான இப்படத்தில் எஸ்பிபி, எஸ்.ஜானகி பாடிய
பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்… பாடல் மிகச்சிறந்த இசைமெட்டு. இதே படத்தில் எஸ்பிபி, எஸ்.ஜானகி குழுவினர்  பாடிய
முத்து சிரித்தது முல்லை வெடித்தது
முத்திரையிட்டது சித்திரை வந்தது மானே மலைத்தேனே… மிகச்சிறந்த அடிப்பாடல்.


சங்கீத வானில் எஸ்பிபி


1987ம் ஆண்டு மெல்லிசையால் மனதை வருடிய எஸ்ஏ.ராஜ்குமார் அறிமுகமான படம் சின்னப்பூவே மெல்லப்பேசு. இப்படத்தில் வாணி ஜெயராமுடன் இணைந்து எஸ்பிபி பாடிய இந்த பாடல் காலத்தால் அழியாத காதல் பாடல்களில் ஒன்றாக உள்ளது.
சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில்
மௌனங்கள் தேடும் என் காதல் பூ மயிலே… இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் எழுதியது எஸ்ஏ.ராஜ்குமார் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.


பாடல்களுக்காக ஓடிய படம்


ஹம்சலேகா தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமான படம் பருவ ராகம். 1987ம் ஆண்டு வெளியான இந்த படத்தின் துள்ளல் பாடல்கள் இப்படத்தை வெற்றிப்படமாக்கியது. காரணம் எஸ்பிபி இப்படத்தில் பாடிய பாடல்கள். பூவே உன்னை நேசித்தேன்,  கிளிகளே ராகம் கேளுங்களேன், கேளம்மா கேளம்மா என் சொல்லை கேளம்மா,  அடியே அம்மா கண்ணு, ஏ மாமா வண்டி ஓட்டக்கொடு மாமா, ஒரு ஆணும் பெண்ணும், மோசக்காரனா நான் வேஷக்காரனா என பாடல்கள் அத்தனையும் சூப்பர் ஹிட் வகை. எஸ்.ஜானகியின் தேனூட்டும் குரல் இப்படத்தின் பாடல்களை இன்னும் ரசிக்க வைக்கின்றன.


காவடியில் இருந்து நம்ம ஆளு வரை


இந்தியாவின் மிகச்சிறந்த திரைக்கதை எழுத்தாளராக அறியப்பட்ட இயக்குநர் கே.பாக்யராஜ் முதலில் இசையமைத்த படம் காவடி சிந்து. இப்படத்தில்  எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடும் யாரோ சொன்னாங்க, என்னன்னு பாடல் புகழ்பெற்றது. ஆனால், படம் வெளியாகவில்லை. எனவே, இந்த பாடல் 1990ல் வெளியான பட்டணந்தான் போகலாமடி  படத்தில் பயன்படுத்தப்பட்டது. அதற்கு முன்பாக அதாவது 1988ல் கே.பாக்யராஜ் இசையமைப்பில் வெளியான படம் இது நம்ம ஆளு. எழுத்தாளர் பாலகுமாரன் இயக்கிய இப்படத்தில் சித்ராவுடன் எஸ்பிபி பாடிய அம்மாடி இது தான் காதலா பாடல் மிகச்சிறந்த காதல் பாடல். ஜானகியோடு காமதேவன் ஆலயம் என்ற டூயட் பாடலை எஸ்பிபி பாடினாலும், வாணி ஜெயராமுடன் சங்கீதம் பாட ஞானம் உள்ளவர்கள் வேண்டும் பாடலை சுரம் பாடாமல் அலட்டலாக பாடி அசத்தியிருப்பார் எஸ்பிபி.


தென்றலாய் தேவா


தேனிசை தென்றல் தேவா இசையமைப்பாளராக தீனதயாளன் இயக்கத்தில் 1989ம் ஆண்டு வெளியான மனசுக்கேத்த மகராசா படத்தில் அறிமுகமானார்.இப்படத்தில் பி.சுசீலாவுடன் எஸ்பிபி பாடிய ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே பாடல் உண்மையில் தேனிசை தான்.
தயாரிப்பாளர் தாணு மிகச்சிறந்த கவிஞர். அவர் இயக்குநர், இசையமைப்பாளர் என பல அவதாரம் எடுத்த படம் புதுப்பாடகன். 1990ம் ஆண்டு வெளியான இப்படத்தில் 11 பாடல்கள் இடம் பெற்றன. சித்ராவுடன் எஸ்பிபி பாடிய அதிகாலை நான் பாடும் பூபாளமே,மலையைக் குடைஞ்சு பாதையை வைச்சேன்,  ஜானகியுடன் எஸ்பிபி பாடிய அக்கம் பக்கம் யாரும் இல்ல பாடல்கள் மெல்லிசை.
மகரமணி தமிழில் அறிமுகமான படம் கே.பாலச்சந்தரின் அழகன். இப்படத்தில் வேக மெட்டாய் அமைந்த துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடலை சித்ராவுடன் எஸ்பிபி சிறப்பாக பாடியிருப்பார். இதே படத்தில் அவர் பாடிய சாதி மல்லிப்பூச்சரமே அழகிய ராகமாலை. மாலையும் நீயே வெயிலும் நீயே நிலவும் நீயே நெருப்பும் நீயே அடடா  என எஸ்பிபி பாடும் அழகில் சொக்கிப் போவோம். சித்ராவுடன் அவர் பாடிய
நெஞ்சமடி நெஞ்சம்
அது நெஞ்சமடி நெஞ்சம்
அன்று நான் கொடுத்தது
இதுதானா கணக்கு
நினைவில்லை உனக்கு
அது ஏன் மறந்தது….  எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

இசைப்புயல் வருகை

1992ம் ஆண்டு அமரன் படத்தின் மூலம் ஆதித்தியன் இசையமைப்பாளராக அறிமுகமானார். சவுண்ட் இன்ஜினியரான அவர் இப்படத்தில் பாடல்கள் செய்த ஒலி ஜாலம் ரசிக்க வைக்கும். வசந்தமே அருகில் வா நெஞ்சமே, சந்திரே சூரியரே நட்சத்திர நாயகரே என எஸ்பிபிக்கு அவர் போட்ட மெட்டு தாலாட்டு ரகம்.
இசைப்புயல் ஏஆர்.ரகுமான் 1992ல் அறிமுகமான படம் ரோஜா. அவரின் வருகை புதிய பாடகர்களை அறிமுகம் செய்து வைத்ததால் எஸ்பிபிக்கு வாய்ப்பு குறைந்து போனது என்ற பேச்சு உண்டு. ஆனால், தனது முதல் படத்திலேயே மிக அற்புதமான பாடல்களை எஸ்பிபிக்கு அவர் வழங்கினார்.

காலத்தால் அழியாத காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே பாடலுக்கு சுஜாதாவுடன் இணைந்து எஸ்பிபி காட்டிய பாவம், ரகுமானுக்கு மிகச்சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்றுத்தந்தது.

புற்றுநோய் கொடூரத்தால் நம்மை விட்டு நீங்கிய இசையமைப்பாளர் மகேஷ் 1994ல் நம்மவர் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். சித்ராவுடன் எஸ்பிபி பாடிய பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம் பாடல் மகேஷின் மிகச்சிறந்த பாடல். புலமைப்பித்தனின் உடையோடு பிறக்கவில்லை உணர்வோடு பிறந்து விட்டோம் பாடலை சுஜாதாவுடன் இணைந்து எஸ்பிபி அழகாக பாடியிருப்பார்.
ஏஆர்.ரகுமான் இசைக்குழுவில் இருந்த சுரேஷ் பீட்டர் இசையமைப்பாளராக 1995ல் அறிமுகமான படம் கூலி. இளையவர்களை எப்போதும் உற்சாகமூட்டும் எஸ்பிபி இந்த படத்தில் ஸ்வர்ணலதாவுடன் இணைந்து எஸ்பிபி பாடிய
பூ பூவாக பூத்திருக்கு  பூமி பூவை பாடல் வித்தியாசமான உணர்வு தரும்.

மரபு சார்ந்த கருவிகளைத் தொடர்ந்து தனது படங்களில் பயன்படுத்தி வரும் பரத்வாஜ் 1998ம் ஆண்டு காதல் மன்னன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். நடிகர் அஜித்குமாருக்கு கிடைத்த மிகச்சிறந்த பாடல் எனச்சொல்லப்படும், உன்னைப் பார்த்த பின்பு தான் நான் நானாக இல்லையே பாடலை எஸ்பிபி உயிர் கொடுத்து பாடியிருப்பார்.
1999ம் ஆண்டு பெரியண்ணா படத்தின் மூலம் பரணி இசையமைப்பாளராக அறிமுகமானார். தன்னானே தாமரைப்பூ. மாமா தள்ளாடும் தண்ணியில என அடிப்பாடலை சித்ராவுடன் இணைந்து எஸ்பிபி அதகளம் செய்திருப்பார்.

புதிய  இசையில் ராஜகீதம்

டப்பிங் படப்பாடல்கள் என ஒதுக்க முடியாத வகையில் எஸ்பிபி பாடிய பல பாடல்களைக் கொண்டடலாம். ராஜ்கோட்டி இசையில் ஹலோ பிரதர் படத்தில் இடம் பெற்ற இன்ப ராகங்கள் நெஞ்சுக்குள்ளே பொங்குகின்ற பொன் வேளை பாடலைச் சான்று சொல்லலாம். சித்ரா மற்றும் குழுவினருடன் இணைந்து இப்பாடலில் ஒரு புது வித மேஜிக்கை செய்திருப்பார் எஸ்பிபி. தமிழில் எஸ்பிபி பாடத இசையமைப்பாளர்களே இல்லயெனலாம். வி.தெட்சிணாமூர்த்தி இசையில்  நந்தா என் நிலா, வி.குமார் இசையில்  வாழ்வில் செளபாக்கியம் வந்தது, சங்கர் கணேஷ் இசையில் அவள் ஒரு மேனகை, சந்திரபோஸ் இசையில் நீலக்குயில்கள் ரெண்டு. வித்யாசாகர் இசையில் மலரே மௌனமா, மனோஜ் கியான் இசையில் ஆகாயம் ஏனடி அழுகின்றது, சங்கீதராஜன் இசையில் அன்பே ஒரு ஆசை கீதம், சிவாஜி ராஜா இசையில்  சின்னச் சின்ன மேகம்,  சௌந்தர்யன் இசையில் புத்தம் புதுமலரே, பாலபாரதி இசையில் வா வா எந்தன் நிலவே, லஷ்மிகாந்த் – பியாரிலால் இசையில் கவிதைகள்  விரியும் விழியிலே, பப்பிலஹரி இசையில் வாழும் வரை போராடு, சிற்பி இசையில்  காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா, கார்த்திக் ராஜா இசையில் கவிதைகள் சொல்லவா உன் பெயர், இனியவன் இசையில் பார்த்த பார்வையில், ஜிவி.பிரகாஷ்குமார் இசையில்  ஐய்யய்யோ நெஞ்சு,
பாலசேகரன் இயக்கிய லவ்டுடே படத்தில் ஷிவா இசையில் என்ன அழகு எத்தனை அழகு, சம்பத் செல்வம் இசையில் அமீர்ஜான் இயக்கத்தில் வெளியான ஓடங்கள் படத்தில் சந்தனப் பூவ சம்மதம் கேக்கப் போறேன், அதியமான் இயக்கத்தில் வெளியான ஸ்வர்ணமுகி படத்தில் ஸ்வரராஜ் இசையில் பூவும் மலர்ந்திட தேனும் வடிந்திட, திலீப் குமார் இயக்கத்தில் மனோரஞ்சன் இசையில் அபிராமி படத்தில்  கன்னித்தமிழோ கம்பன் கவியோ, அருண் இயக்கத்தில் அம்மாபொண்ணு படத்தில் ஏகாந்தன் இசையில் எந்தன் காதல் நாயகி, நாஞ்சில் கென்னடி இயக்கிய புதுவயல் படத்தில் அரவிந்த் இசையில்  ரவிவர்மன் ஓவியமோ நான் தினம் பாடும், சக்தி ராஜன் இயக்கத்தில் நாணயம் படத்தில் ஜேம்ஸ் வசந்தன் இசையில் நான் போகிறேன் மேலே மேலே போன்ற பல பாடல்களை எஸ்பிபி பாடியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என 45க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள எஸ்பிபி, புதிய பாடகர்களை உருவாக்குவதில் மிகுந்த அக்கறை செலுத்தினார். தொலைக்காட்சியில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் அதற்குச் சான்றாக உள்ளன.

எஸ்பிபியின் இத்தனைப் பாடல்களும் இப்படி கோடிக்கணக்கானவர்களால் கொண்டாடப்படுவதற்கு காரணம் என்ன என்பதற்கு அவரே பதில் சொல்கிறார். ” நான் பாடலாசிரியர்களுடன் அமர்ந்து, அவர்கள் அந்த பாடல் வழியாக என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை கேட்டு உள்வாங்கிக் கொள்வேன். அப்போதுதான் அந்த உணர்ச்சிகளை என்னால் வெளிப்படுத்த முடியும். என்னால் அதனை சரியாக உச்சரிக்க முடியாது என்று தெரிய வந்தால், நான் அந்த பாட்டில் இருந்து விலகிக்கொள்வேன்” என்றார்.  அது தான் எஸ்பிபி. 

உதய கீதம் பாடுவேன்
உயிர்களை நான் தொடுவேன்
உதய கீதம் பாடுவேன்
ஒலிகளில் பூத்தொடுப்பேன்
உலகமெல்லாம் மறந்து போகும்
மரணம் கூட இறந்து போகும்… என்று எஸ்பிபி பாடிய பாடல் உண்மையாகியுள்ளது. அவர் பாடல்களுக்கு ஏது மரணம்?

  • ப.கவிதா குமார்.

Related Posts