குறும்படங்கள் சினிமா

குறும்படங்களும் – பட்ஜெட் மிரட்டல்களும்

தம்பி வினோத் மற்றும் அவர் நண்பர்கள் தங்கள் குறும்படம் தொடர்பாக ஏற்பட்ட சிக்கலை சொல்லி இருந்தார்கள். தங்கள் குறும்படம் on process இல் இருப்பதாகவும் , இதுவரை 1.70 லட்சம் செலவாகி உள்ளதாகவும் , இன்னமும் செலவு கோருவதாகவும் , எப்படி முடிக்க எனத் தெரியவில்லை என்றும் சொல்லி இருந்தார்கள்..

குறைந்தது இத்தகையதொரு கேள்வியைக் கேட்கும் நான்காவது குறும்படச் சகோதரர் வினோத்.

குறும்படம் என்பது குறித்து நான் கொண்டுள்ள பிரக்ஞை , எனது அனுபவங்களிலிருந்து சொல்ல விரும்புவது..

மிக எளிய பொருட்செலவில் , வாழ்வில் இறைந்து கிடக்கும் பல நுட்பமான கதைத் தருணங்களை தேடிப்பிடித்து , எளிய அழகிய திரைமொழியில் , புதிய அணுகுமுறையில் சொல்வது தான் குறும்படம் என நான் நம்புகிறேன். பேராசான் பாலுமகேந்திரா மாற்று சினிமாவிற்கான பல மேடைகளில் இந்த எளிமையைத் தான் வலியுறுத்தி பேசியதாக ஞாபகம். குறும்பட முன்னோடி எடிட்டர் பி.லெனின் அவர்களும் இந்த எளிமையைத் தான் வலியுறுத்துவார்.

சினிமா என்பது பெரும் பணம் கோரும் கலை என்பதிலிருந்து விடுவித்து , பணமற்ற சாமான்யர்களும் சினிமா கலையை பிரயோகிப்பதற்கான ஒரு தளமாகவும் குறும்படத் தளம் உருவானது. பெரும் பொருட்செலவை நிராகரித்து , பிரம்மாண்டங்களின் வீண் அலப்பரைகளை தவிர்த்து உதிர்த்து , எளிமையை நோக்கி நகரும் போதே.. ஒரு குறும்படம் நிஜத்திற்கு நெருக்கமாக , போலித்தனம் இல்லாத திரைமொழியைக் கொண்டு நிற்கிறது.

உதாரணமாக : சமீபத்தில் ஹீரோ என்ற ஒரு முழுநீளப் படம் வெளியானது. மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்காத தனியார்மயக் கல்வியை விமர்சித்தது அந்தப் படம். நல்ல விஷயம் தான், நல்ல கதைக்களம் தான். ஆனால் , பிரம்மாண்டம் செய்கிறேன் பேர்வழி என அதீத அபத்த புனைவுகளையும் , அபத்த நாயக சாகச தீர்வுகளையும் கொண்டு கதைக்களத்தை வீணடித்தது அப்படம்.

இதே நம் கல்விமுறை , கல்வி தனியார்மயம் குறித்த கதைக்களத்தை ஒரு குறும்படம் கையாண்டால்.. இயல்பாகவே நிஜத்தின் ஆன்மாவிற்கு நெருக்கமாக பயணிக்க முடியும். வீண் பிரம்மாண்டங்களை தவிர்ப்பதன் விளைவு அது. ‘ ஆயிஷா ‘ குறு நாவல் ஒரு நல்ல படமாக வந்து பல விருதுகளையும் பெற்றிருப்பதாக அறிகிறேன்.

ஆனால் , இன்று நிறைய பேர் வணிக சினிமாவின் மினியேச்சர்களாக குறும்படத்தை கையாள்கிறார்கள். நண்பர் ஒருவர் ஒரு யூ ட்யூப் சேனலுக்கு தனது குறும்படத்தை அனுப்பி இருந்தார் ( அது நல்ல படம் ) . அந்த யூட்யூப் சேனல் படத்தை நிராகரித்து.. தங்கள் எதிர்பார்ப்பு என்ன என்பதற்கு சில உதாரண குறும்படங்களை அனுப்பியது.

அனுப்பிய 4 படங்களில் 3 படங்களின் Thubmnail உம் விரசமான still களை கொண்டிருந்தது. படங்களின் பெயர்களும் அவ்வித கிளர்ச்சியை தூண்டி விடக் கூடியது.. அந்த சேனலின் பிரதான எதிர்பார்ப்பே அது தான் போலும் !! நான்காவது படத்தை பார்த்தேன்..

அதில் நாயகன் நீதிமன்ற கூண்டில் நின்று கண்கள் சிவக்க , நரம்பு புடைக்க வீர வசனம் பேசுகிறார் , குழுவாக ஒரு பெரும் நடனம் ஆடுகிறார்கள் , ஒரு சம்மர் ஷாட் ஃபைட் செய்கிறார் , வில்லனைப் பார்த்து பன்ச் வசனங்கள் பேசுகிறார். சகட்டு மேனிக்கு தேவையற்ற டிரோன் ஷாட்டுகள் , கிரேன் ஷாட்டுகள்.

தமிழ் சினிமாவின் கடந்த கால அபத்தங்களோடு புணர்ந்து பெற்ற குட்டிகள் தான் இவைகள். இவைகள் எவ்வகையிலும் குறும்படம் ஆகாது. சினிமாவின் மினியேச்சர் என்பதை விட சினிமா அபத்தங்களின் மினியேச்சர் என்பதே இதற்கு பொருந்தும். இப்படத்திற்கான செலவு 1.75 லட்சமாம்.

யூ டியூப் சேனல்கள் சில குறும்படம் என்ற பெயரில் இத்தகைய அபத்தங்களுக்கான மார்க்கெட்டை உருவாக்கி வருகின்றன. இதற்குத் தான் மார்க்கெட் இருப்பதாகவும் சப்பைக் கட்டு கட்டுகின்றன. Main stream சினிமாவில் நல்ல படங்களுக்கான வெளியை வணிக பகாசுரரகள் அருகிப் போகச் செய்ததை போன்று.. குறும்பட தளத்திலும் நல்ல குறும்படங்களுக்கான வெளியை இத்தகைய சில மலினமான சேனல்கள் அருகிப் போகச் செய்கின்றன. குறும்படம் என்ற கலை வடிவத்திற்கே இது ஆபத்து.

( அதே சமயம் குறும்படம் என்றால் அது பார்வையாளர்களின் பொறுமையை , entertainment எதிர்பார்ப்பை சோதிக்கும் வகையில் தான் இருக்க வேண்டும் என்பதிலும் நான் மாறுபடுகிறேன் . நல்ல குறும்படங்கள் நம்மை நல்லவிதமாக entertain செய்யக் கூடியவைகள் )

முதலில் ஒரு குறும்படத்திற்கு ஏன் எப்படி 1.75 – 2 லட்சம் வரையிலெல்லாம் செலவு ஆகிறது என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. ஹைக்கூ பாணி குறும்படங்கள் , சிறுகதைப் பாணி குறும்படங்கள் !! இவ்விரு வடிவங்களுக்குமே இவ்வளவு செலவு ஆகாது என்பது எனது திண்ணமான கருத்து. ( ஒரு வேளை periodic film போன்றதொரு கதைக்களத்திற்கு செலவு ஆகலாம் )

( விதி விலக்காக சில படங்கள் அமையலாம்.. தோழர் பிரின்ஸ் என்னாரெஸ் பெரியாரின் ‘ திற ‘ குறும்படம்.. ஒரு செலவு கோரும் குறும்படம். அது சினிமாவின் ஒரு பகுதி என்று சொல்லலாம். தமிழின் மிக நல்ல அவசியமான படம் ‘ திற ‘ )

பைலட் ஃபிலிம் என்பதும் , ஷார்ட் ஃபிலிம் என்பதம் வேறு.. தயாரிப்பாளர்களை அணுகுவதற்கு செய்யும் படம் பைலட் ஃபிலிம். இது கூட குறும்பட வகையில் வராது.

எனது ‘ தாகம் ‘ குறும்படத்தின் மொத்த செலவு 2,500 ரூபாய் தான். ‘Sir 2 minutes ‘ இன் செலவு 15,000 ரூபாய் . நண்பர் துருவன் ராஜபாண்டியின் அழகானதொரு குறும்படம் ‘ தாய் ‘ . இதற்கான செலவும் மிகக் குறைவு தான். ’On duty’ என்றொரு அட்டகாசமான குறும்படம். அதன் செலவு அதிகபட்சம் 25,000 த்தை தாண்டியிருக்காது என நினைக்கிறேன். நண்பர் நாதனின் நேர்மையான நல்ல குறும்படம் ‘மாசிலன் ஆதல் ‘ அதன் செலவு 30,000 தான் இருக்கும். ‘உள்ளங்கை நெல்லிக்கனி ‘ என்றொரு சிறப்பான குறும்படம் .. சிறுகதையிலிருந்து வந்த குறும்படம். அதன் செலவும் மிகக் குறைந்த அளவிலேயே ஆகியிருக்கும்.

இப்படி பல படங்களை சொல்ல முடியும். இன்று பல ஸ்டூடியோக்களில் தரமான 5டி கேமராக்கள் குறைந்த வாடகைக்கு கிடைக்கின்றன. சரியான திட்டமிடலில் 4 – 5 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க முடியும். சரியான திட்டமிடலில் எடிட்டிங்கை 2 – 4 நாட்களில் முடிக்க முடியும். டப்பிங் , ஒலிக்கலவை , இசை , கலர் கரெக்‌ஷன் ஆகியவற்றையும் சிறிய negotiations மூலமாக குறைந்த செலவிலேயே முடிக்க முடியும். படம் பிடித்திருக்கும் பட்சத்தில் நமது regular sound engineer மற்றும் இசையமைப்பாளர் நமக்கு குறைந்த செலவில் வேலையை முடித்துத் தருவார்.

எனது நண்பர் ஒருவர் குறும்படம் தயாரித்தார். மிகத் தரம் , உலகத்தரம் என்றெல்லாம் பல பில்டப்புகளை இயக்குனர் கொடுத்ததை நம்பி இதுவரை 4 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாகவும் , இன்னும் பட வேலைகளை முடியவில்லை என்றும் அந்த தயாரிப்பாள நண்பர் வருந்தி 2 வருடங்கள் ஆகி விட்டது. 4 லட்ச ரூபாயைத் தின்ற குறும்படத்தை இன்னமும் தயாரிப்பாளரே கண்ணில் முழுதாக பார்க்கவில்லை.

தரம் என்பது அள்ளி இறைக்கும் பணத்தினால் வந்து விடாது , பட்ஜெட் மிரட்டல்களினால் வந்து விடாது , தேவையற்ற டிரோன் , கிரேன் ஷாட்டுகளால் வந்து விடாது , vfx ஐயும் , கிரஃபிக்சையும் இஷ்டத்துக்கு படர விடுவதால் வந்து விடாது , கருத்துகளாக குவிப்பதாலும் வந்து விடாது.

தரம் என்பது வாழ்க்கையில் , சமூக இயங்கியலில் ஒளிந்துக் கிடக்கும் நுணுக்கங்களை கண்டடைவதிலும் , அவற்றை கலை வடிவப் படுத்துவதிலும் இருக்கிறது. கதைத் தருணத்தின் ஆன்மாவிற்கு ஒரு படைப்பாளி தன்னளவில் நேர்மையாய் இருப்பதில் இருக்கிறது தரத்தின் சூட்சுமம் . கையாளும் கலையின் வடிவத்திற்கு மரியாதையாய், உண்மையாய் இருப்பதில் இருக்கிறது தரம்.

கதையின் ஆன்மாவுக்கு மீறிய பிரம்மாண்டத்தை நோக்கி ஒரு படத்திற்கு கேன்வாஸ் செய்யப்படும் போது.. அது பாவனை செய்கிறது , போலியாய் உருவெடுக்கிறது. பிரம்மாண்டம் எனும் போலித் தனத்தாலும் , கருத்து எனும் பூச்சுகளாலும் , கதையின் ஆன்மாவிற்கு ஒட்டாத தொழில்நுட்ப மிரட்டல்களாலும் ஒரு போதும் தரத்தை கொடுத்து விடமுடியாது.

குறும்பட ஆர்வலர்களுக்கும், சகோதரர்களுக்கும் என்னால் சொல்ல முடிந்தது.. என்னிடமெல்லாம் உரையாடுவதை விட , மாற்று சினிமாவுக்காக , நல்ல சினிமாவுக்காக , நல்ல குறும்படங்களுக்காக நீண்ட காலம் உழைத்துக் கொண்டிருக்கும் தோழர்கள் எடிட்டர் பி.லெனின் , நிழல் திருநாவுக்கரசு , அஜயன் பாலா , காஞ்சனை சீனிவாசன் , தமிழ் ஸ்டூடியோ அருண் போன்ற சிறந்த முன்னோடிகள் நம்மிடையே இருக்கிறார்கள்.

குறும்படங்கள் எடுக்கத் திட்டமிடுமுன் இவர்களிடம் உரையாடுங்கள். காதல் , போலீஸ் சாகசம் , கேங்ஸ்ட்டர் , கிட்னாப் , தீயவர்களை கடத்தும் நாயகன் , சமூகத்துக்கு மெசேஜ் சொல்லும் நாயகன் etc etc என தமிழ் வணிக சினிமாவின் பழைய குண்டு சட்டியிலிருந்து வெளியேறி , புதிய , எளிய , வலிய குறும்படங்களைக் கொடுங்கள்.

இன்று குறும்படங்களுக்கான நிறைய விழாக்கள் இந்திய மற்றும் உலக அளவில் இருக்கின்றன. நல்ல குறும்படங்களை அங்கீகரிக்க அவர்கள் நிச்சயம் தவறுவதில்லை.

அருண் பகத்

Related Posts