அரசியல்

ஸ்மிருதி ராணி படிக்க வேண்டிய ‘குட்டன் பர்க்’ வரலாறு !

கார்ல் தியோடர் ஜு குட்டன்பர்க் (Karl Theodor Zu Guttenberg) என்பவர் ஜெர்மனியை சேர்ந்தவர். முனைவர் பட்டம் பெற்ற அரசியல்வாதி. 2002 முதல் 2011 வரை ஜெர்மனி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். 2009ல் இருந்து 2011 வரை ராணுவ மந்திரியாகவும் இருந்திருக்கிறார். அவர் பதவியிலிருந்த காலம் வரை மிகுந்த செல்வாக்கோடு இருந்தார். நாடெங்கும் அவர் புகழாகவே இருந்தது. அவர் தான் ஜெர்மனியின் அடுத்த chancellor என்றே அனைவரும் பேசிக்கொண்டனர்.

ஆனால், இப்படி செல்வாகோடு இருந்த அவர், ஒருநாள், தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு chancellor கனவையும் கைவிட வேண்டிய சூழ்நிலை ஒன்று வந்தது.

அப்படி என்ன தான் நடந்தது?

அவர் முனைவர் பட்டம் பெறுவதற்காக கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த பொது, எழுதிக்கொடுக்கப்பட்ட தீஸீசில் ஒரு சில பகுதிகளை இன்னொருவருடைய தொகுப்பிலிருந்து அவர் பெயர் குறிப்பிடாமல் காப்பியடித்து விட்டார். இந்தத் தவறுக்காக, எதிர்ப்பு வலுத்து அவர் தனது அனைத்துப் பதவிகளையும் ராஜினாமா செய்ய வேண்டி வந்தது.

நம் நாட்டில் தர்போதைய மனித வளத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் ஸ்மிருதி இரானி என்பவர், 2004ல் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த முன்மொழிவில், 1996ல் தான் BA முடித்துவிட்டதாக கூறியுள்ளார். தற்போது 2014ல் அவர் கொடுத்த முன்மொழிவில், 1994ல் தான் முதலாம் ஆண்டு காமர்ஸ் டிகிரி முடித்திருப்பதாக சொல்லியிருக்கிறார். ஆனால் அவர் படித்ததாக சொல்லிய டெல்லி பல்கலைக்கழகம் இதை பிழயானது (discrepancy) என்கிறது.

கல்வித்தகுதியற்றவர்கள் அமைச்சர்களாகக்கூடாது என்பதை நான் ஆதரிப்பதில்லை. அவர் ஐந்தாம் வகுப்பே படித்திருந்தாலும் சமூகத்தின் மீது அக்கறையும் திறமையும் இருந்தாலே அமைச்சராகும் தகுதி வந்து விட்டதாக நான் நினைப்பேன். கல்வியறிவற்ற காமராஜரை விட யாரும் பெரிதாக கல்விக்கு சேவை செய்யவில்லை. ஆனால், தான் என்ன படித்திருக்கிறோம் என்பதில் கூட பொய் சொல்லும் ஒருவர், ஒரு தேசத்தின் அமைச்சராகும் தகுதியை இழக்கிறார் அல்லவா?

தன்னை ஆளும் அரசியல்வாதி, கல்லூரியில் படிக்கும் பொது கூட காப்பி அடித்தவராக இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள் ஜெர்மானியர்கள். நமது மந்திரியாக இருப்பவர்கள், தனது கல்வித் தகுதியைப் பற்றியே முன்னுக்குப் பின் முரணாக பொய்த் தகவல்கள் கொடுத்தாலும் அதைப் பற்றி ஒரு வார்த்தை நாமோ அல்லது நமது மீடியாவோ கேட்காது என்ற சூழ்நிலையில் இருந்துகொண்டு ஐரோப்பா போல முன்னேறிய நாடாக இந்தியாவை மாற்றுவோம் என்று பேசிக்கொண்டிருப்பது எவ்வளவு விந்தையான விஷயம் என்பதை நாம் சிந்திக்க வேண்டுமல்லவா?

இந்தக் கட்சி என்று மட்டும் இல்லை, இந்தியாவிலிருக்கும் பெரும்பாலான கட்சிகள் இதைத் தான் செய்கின்றன. முன்னேறிய நாடு என்ற இடத்தை அடைய, நாம், நமது அரசியல்வாதிகள் மீதான விமர்சனங்களை இன்னும் கூராக்க வேண்டும் என்பதையும், இன்னும் கொஞ்சம் சொரணை உடையவர்களாக மாற வேண்டும் என்பதையும் Mr. Guddenberg ன் சம்பவத்திலிருந்து புரிந்துகொள்ள வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.

Related Posts