அரசியல்

அப்ப இவளும் ஏழாங்கிளாஸ்தானே படிக்கனும்?

அன்றைய கூட்டு வழிபாடு முடிந்தது. குழந்தைகள் வகுப்புகளுக்கு சென்றுவிட்டனர். தலைமை ஆசிரியர் அறைக்கு வருகிறேன். ஆசிரியர் வருகைப்பதிவேட்டினை முடித்து வைத்தல் உள்ளிட்ட வழக்கமான சில பணிகள் முடிந்தன. வகுப்புகளை ஒரு சுற்று நோட்டமிட்டு வரலாம் என்று எழுந்தேன்.

ஒரு வயதான தாய் அறைக்குள் தனது பேத்தியோடு நுழைகிறார். வரலாமா என்றெல்லாம் கேட்கவில்லை. நாகரிகத்தின் மாசு கொஞ்சமும் அண்டவே அண்டாத தூய வெகுளிக் கிழவி.

எழுந்தவன் அப்படியே அமர்ந்து விட்டேன்.

”வா தாயி வா, என்ன வேணும்?”

”எம் பேத்திக்கு ஏழாங்கிளாசுல சீட்டு கொடு”

“கொடுத்துடலாம். ஆறாங்கிளாஸ் எங்க படிச்சா?”

“அவ ஆறாங்கிளாசெல்லாம் படிக்கல சாமி”

என்னதான் படிச்சிருக்கா? என்று கேட்கிறேன். கொஞ்சமும் யோசிக்காமல் ”மூனாங்கிளாஸ்தான் படிச்சிருக்கா” என்கிறார்.

அந்தக் குழந்தையின் கைகளில் இருந்த ரெகார்ட்ஷீட்டை வாங்கி என்னிடம் நீட்டினார்.

வாங்கிப் பார்க்கிறேன். குழந்தை மூன்றாம் வகுப்பையே முடித்திருக்கவில்லை. மூன்றாம் வகுப்பில் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கு சென்றிருக்கிறாள்.

அதன் பிறகு நான்கு ஆண்டுகள் பள்ளிக்கே செல்லவில்லை.

“ஏம்மா மூனாங்கிளாசே முடிக்கல. ரெண்டு மாசம்தான் போயிருக்கா. ரெண்டாங்கிளாஸ் முடிச்சவளுக்கு ஏழாங்கிளாஸ் கேக்கறியே உனக்கே நியாயமா படுதா?”

”ஏம் பேத்திக்கூட மூனாங்கிளாஸ் படிச்சவ இப்ப ஒங்க பள்ளிக்கூடத்துல ஏழாங்கிளாஸ் படிக்கிறா. 

அப்ப இவளும் ஏழாங்கிளாஸ்தான படிக்கனும்”

“இந்த வெவரமெல்லாம் சரியாதான் இருக்கு. புள்ளைய பள்ளிக்கூடத்துக்கு அனுப்பனுங்கறது மட்டும்தான் கிழவிக்கு இல்லாமப்போச்சு” 

என்று சொல்லியவாறே ஒரு புத்தகத்தை அந்தக் குழந்தையிடம் நீட்டுகிறேன். வாங்கிக் கொள்கிறாள். ஒரு பாராவைக் காட்டி வாசித்துக் காட்ட கேட்கிறேன். 

இதைக் கேட்டதும் அவருக்கு அப்படி ஒரு கோவம் வந்துவிட்டது. இஷ்டம் இருந்தா குழந்தையை சேர்த்துக் கொள்ளுமாறும் இல்லாது போனால் விட்டு விடுமாறும் சொன்னார். அதைவிடுத்து பிள்ளையைப் எழுதப் படிக்கச் சொல்லி சோதித்தால் என்னைப் பிடித்து போலீசிடம் கொடுத்துவிடுவதாகவும் மிரட்ட ஆரம்பித்துவிட்டார்.

சிரித்து விட்டேன்.

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள பள்ளிக் கல்வி குறித்த சட்டம் குறித்து தெரியாதவர்களுக்கு இந்த உரையாடல் வியப்பாக இருக்கக் கூடும். அதிலும் இரண்டு விஷயங்கள் எற்றுக் கொள்ளவே முடியாதவையாக இருக்கும்.

  1. மூன்றாம் வகுப்பே தேர்ச்சி பெறாத குழந்தைக்கு ஏழாம் வகுப்பில் இடம் கேட்க முடியுமா?
  2. மூன்றாம் வகுப்புகூட முடிக்காமல் ஏழாம் வகுப்பில் இடம் கேட்கும் ஒரு குழந்தைக்கு எழுதப் படிக்கத் தெரியுமா என்று சோதிக்க்க் கூடாதா? 

இதில் முதல் ஐயத்திற்கான விடை,

அமாம். மூன்றாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத குழந்தைக்கும் அவளோடு ஒன்றாகப் படித்த குழந்தைகள் யாரேனும் இப்போது ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தால் இவளுக்கும் ஏழாம் வகுப்பில் இடம் கேட்க உரிமை உண்டு.  

இன்னும்கூடத்  தெளிவாகக் கூறலாம். ஒன்றாவது மட்டுமே படித்திருக்கிறாள் ஒரு குழந்தை. அவளுக்கு இப்போது ஏழாம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கான வயது. எனில், அந்தக் குழந்தைக்கு ஏழாம் வகுப்பில் இடம் கேட்பதற்கான உரிமை இருக்கிறது.

இரண்டாவது ஐயத்திற்கு வருவோம்.

பள்ளியில் இடம் கேட்டு வருகிறான் ஒரு குழந்தை. அவனுக்கு இடம் கொடுப்பதற்காக அவனுக்கு எழுதப் படிக்கத் தெரியுமா என்று சோதித்துப் பார்ப்பது குற்றம். நிர்வாக தண்டனைக்கு உரிய குற்றம்.

போக, இதுமாதிரி வரும் குழந்தைகளை அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நிராகரித்துவிட முடியாது. அப்படி நிராகரித்தால் அது பெரும் குற்றம்.

நான் அந்தக் குழந்தைக்கு ஏழாம் வகுப்பில் இடம் கொடுத்தேன். இந்த ஆண்டு அவள் எட்டாம் வகுப்பில் படிக்கிறாள். 

இந்தக் காலாண்டுத் தேர்வில் அவள் எப்படி செய்திருக்கிறாள் என்று அவளது வகுப்பாசிரியரை அழைத்துக் கேட்டேன். இரண்டு தாள்களில் அவள் தேர்ச்சி பெற்றிருக்கிறாள்.

இனிதான், இதில் இருந்துதான் நமக்கு உரையாட நிறைய இருக்கிறது.

இரண்டாம் வகுப்பு மட்டுமே படித்திருக்கக்கூடிய குழந்தை. இரண்டாம் வகுப்பு முடித்த கையோடு தன் பாட்டியோடு நான்காண்டுகளாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு குழந்தை. மீண்டும் படிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததும் தன்னை நிரூபிக்க ஆரம்பித்திருக்கிறாள்.

காலாண்டில் இரண்டு தாள்களில் தேர்ச்சி என்பது  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைப் பொறுத்தவரை சராசரிக்கும் சற்று அதிகமான மேல்நிலை.

இன்னும் அரையாண்டு நிலவரத்தை நான் கேட்டறியவில்லை. இப்போதும்கூட அவள் அதே நிலையில் இருக்கலாம். அல்லது சற்றே தனது உசரத்தைக் கூடியிருக்கலாம். அல்லது சற்றே சரிந்தும் இருக்கலாம். இது சீர் பெறலாம்.

இப்போதிருக்கும் நிலவரப்படி இந்தக் குழந்தை பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று விடுவாள் என்று உறுதியாக நம்பலாம்

மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து தேர்ச்சி பெறவும் கூடும். நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு பள்ளியில் சேர்ந்திருக்கிறாள். அதுவும் நான்கு வகுப்புகளைத் தாண்டிய ஒரு வகுப்பில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்திருக்கிறாள். அந்த நிலையிலும் அவளால் இவ்வளவு முடிகிறது. எனவே அவள் தனது மேல்நிலைக் கல்வியை இன்னும் கூடுதல் சிறப்போடு நிறைவு செய்ய இயலும் என்று நம்பலாம். 

மூன்றாம் வகுப்பில் இடைநின்று நான்காண்டு கழித்து ஏழாம் வகுப்பில் சேர்ந்த அந்தக் குழந்தை கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெறவும் கூடும். முதுகலையும் முடிக்கக் கூடும். 

போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டு ஒரு அதிகாரியாக வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது. 

யார் கண்டது, அந்தக் குழந்தை ஒரு கல்வித்துறை அதிகாரியாக வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. 

வேறு மாநிலங்களில் எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் இதுபோன்ற இடைநின்ற குழந்தைகளும் தங்களது கால விரயமின்றி தங்களது கல்வியைத் தொடர்வதற்கும் வாழ்க்கையை வளமாகக் கட்டமைத்துக் கொள்வதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

அருள்கூர்ந்து மீண்டும் அந்த்த் தாயோரோடான நமது உரையாடலை மீள அசைபோட அழைக்கிறேன்.

ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் ஒரு எளிய தாயார். ஏறத்தாழ நான்காண்டு காலம் தனது பேத்தி பள்ளிக்குப் போகாததன் விளைவுகள் குறித்துகூட அறியாதிருந்தவர்.

  1. தனது பேத்திக்கு ஏழாம் வகுப்புதான் வேண்டும் என்கிறார்
  2. தன் பேத்தியோடு மூன்றாம் வகுப்பில் படித்த குழந்தை இப்போது ஏழாம் வகுப்பில் படிப்பதால் தனது பேத்தியும் ஏழாம் வகுப்பைக் கோர உரிமை இருப்பதைத் தெரிந்து வைத்திருக்கிறார் 
  3. பள்ளிக்கு குழந்தைகளை சேர்க்க வரும்போது அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியுமா என்று சோதித்து அறிவது தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறார்

இது எப்படி சாத்தியம்? 

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள கட்டாயக் கல்வியின் கூறுகள் இவை.

பள்ளிக்கு செல்லவேண்டிய ஒரு குழந்தை தெருவில் திரிந்து கொண்டிருந்தாலோ

பள்ளிக்கு செல்லும் வயதுடைய குழந்தையை யாரும் வேலைக்கு அனுப்பினாலோ

அல்லது கண்டுகொள்ளப்படாமல் வீட்டிலேயே இருந்தாலோ

இதுகுறித்து யாரேனும் அக்கறை உள்ள ஒருவர் 1098 என்ற எண்ணிற்கு அழைத்து தகவலைக் கூறினால் போதும் அந்தக் குழந்தையை ஏதோ ஒரு அருகமைப் பள்ளியில் சேர்த்துவிடக்கூடிய ஒரு நடைமுறை இங்கு இருக்கிறது.

”வட்டார வள மையங்கள்” இதுமாதிரி இடைநிற்றல்களை இல்லாமல் செய்வதற்கான தொடர் கண்காணிப்பில் இயங்கிக் கொண்டு இருக்கின்றன.

வாட்டார வளமையத்தில் இருந்தோ அல்லது வேறு யாருமோ இந்தத் தாயைத் தெளிவுபடுத்தி இருக்கலாம்.

இவை எல்லாம் சொல்வது இதுதான்,

தமிழ்நாட்டு பள்ளிக் கல்வியில் “சிஸ்டம் பெருமளவிற்கு சரியாகவே இருக்கிறது”

தெரிந்தோ தெரியாமலோ இப்படி இந்த அளவிற்கு சிஸ்டம் சரியாக இருப்பதன் விளைவாக சில நல்லதுகள் நடந்துள்ளன.

கல்வியின் ஒளிச்சுவடே அறிந்திராத ஒடுக்கப்பட்ட திரளில் இருந்து சிலர் கல்வி பெற்றனர். பையப் பைய இந்த ‘சிலர்’ என்பது ‘பலர்’ ஆனது.

இதையே மேட்டுக் குடிகளால் சகித்துக் கொள்ள முடியாமல் போனது. தோலின் சகல துவாரங்களில் இருந்தும் சன்னமாக புகை வரத் தொடங்கியது.

கிடைத்த வாய்ப்பு ஒடுக்கப்பட்டத் திரளில் இருந்து பலரை ஆளுமைகளாக்கியது

நான்காம் வகுப்பு பணிகளே ஆயினும் அரசுப் பணிகள் அவர்களுக்கும் கிட்டியது

இது புகைச்சலை இன்னும் அதிகம் ஆக்கியது

சிலர் கடும் உழைப்பின் உதவியோடு உயர் பதவிகளுக்கும் வரத் தொடங்கினார்கள்

மேட்டுக் குடிகள் “சிஸ்டம் சரியில்லை” என்று புலம்பத் தொடங்கினார்கள்

வெறும் கலை மற்றும் அறிவியல் பட்டங்களும் சட்டப் படிப்பும் ஒடுக்கப்பட்ட இனத்தை தூக்கிவிடாது. நிர்வாகப் பணிகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் அமர வேண்டும் என்றால் விஞ்ஞானத் தொழில் நுட்பத்திலும் மற்ற துறையிலும் அவர்கள் தேற வேண்டும் என்ற தந்தை அம்பேத்கரின் மந்திரத்தை அவர்கள் புரிந்துகொண்டபோது மேட்டுக் குடியினர் உசாராகத் தொடங்கி விட்டார்கள்.

இனி இவர்கள் விடமாட்டார்கள். எனவே இவர்கள் வருவதைத் தடுக்க வேண்டும். வந்தபிறகு தடுப்பதில் பிரச்சினை இருக்கிறது.

பன்னிரண்டு கடக்கும் வரை அனிதாக்களை எதற்கு வளர விட வேண்டும். மூன்றில் சில அனிதாக்களையும், மீறித் தப்புகிற அனிதாக்களில் சிலரை ஐந்திலும் மிச்சத்தை எட்டிலும் கத்தறித்துவிட முடிவெடுத்துவிட்டார்கள்.

அது கடந்தும் அவர்கள் நகர்ந்தால் இருக்கவே இருக்கிறது நுழைவுத்தேர்வு. 

இப்படியாக ஒடுக்கப் பட்டத் திரளை பள்ளியில் இருந்து அப்புறப்படுத்துவதுதான் இவர்களின் நோக்கம். எப்படியாவது பள்ளி வயதுக் குழந்தைகளை பள்ளியில் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் கல்வியின் நோக்கம்.

UNESCO  கூறுகிறது,

“THE PURPOSE OF EDUCATION IS TO INCLUDE THE EXCLUDED”

பள்ளிக்கு வர இயலாத பஞ்சைகளையும் பராரிகளையும் பள்ளிக்குள் வைத்திருப்பதே கல்வியின் நோக்கம் என்றும் இதை மொழியாக்கலாம். படிக்கச் செய்தல், தேர்ச்சி பெற வைத்தல் என்பதெல்லாம் இரண்டாம் பட்ச நோக்கங்கள்தாம். மொழி தவிர, கணிதம் தவிர, அறிவியல் தவிர, சமூக அறிவியல் தவிர கற்றுக் கொள்வதற்கு பள்ளியில் ஏராளம் இருக்கிறது.

சாதி தவிர்த்தல், மானுடம் ஒழுகுதல், பெண்மையைப் போற்றுதல், பொய் பேசாதிருத்தல், சக மனிதனின்மீது அக்கறை கொள்ளுதல், அநியாயத்தைக் கண்டு பொங்குதல், மொழி மீதும் மண் மீதும் பற்றோடு இருத்தல் என்று ஐந்து பாடங்களைக் கடந்தும் ஏராளம் இருக்கிறது பள்ளியில்.

இந்தத் தேர்வு மாணவனை பள்ளியில் இருந்து அப்புறப் படுத்தும் என்பதால்தான் பதறுகிறோம்.

அவர்கள் கேட்கிறார்கள், 

“தேர்வு எப்படி மாணவனை பள்ளியில் இருந்து அப்புறப் படுத்தும்?”

இந்த ஆண்டு எட்டாம் வகுப்பு படிக்கும் பிள்ளைகளில் ஐந்துபேர் தேர்ச்சி பெறவில்லை என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் மீண்டும் எட்டாம் வகுப்பு படிக்க வேண்டும்.அப்போது சென்ற ஆண்டு ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த இவனைவிட சின்னக் குழந்தைகளோடு அமர வேண்டும். இது தரும் மன அழுத்தமே அவனை பள்ளியில் இருந்து அப்புறப் படுத்தும்.

இப்போது சிலர் சொல்கிறார்கள்,

“தேர்வுதானே வைக்கிறார்கள். பாஸ் பெயில் எல்லாம் இல்லையே?”

ஆமாம். ஆனால் இது மூன்று ஆண்டுகளுக்கு மட்டும்தானே. அதன் பிறகும் பிள்ளைகளுக்கு அழுத்தம் வரும்தானே.

இன்னொன்றையும் சொல்ல வேண்டும்.

தேர்வு வைக்கிறீர்கள். பெயிலான ஐந்து பேரையும் ஒன்பதாம் வகுப்பிற்கு அனுப்புகிறீர்கள். அங்கு அவர்களை சக மாணவர்கள் கிண்டல் செய்ய மாட்டார்களா? அது பிள்ளைகளுக்கு அழுத்தம் தராதா?

படிக்கத் தெரியாதவனை எல்லாம் மேலே மேலே கொண்டு போக வேண்டுமா என்று கேட்கும் அறிவு ஜீவிகளுக்கு எம் பள்ளி சம்பவத்தை நினைவு படுத்துகிறோம்.  

ஒருக்கால் ஐந்தாம் வகுப்பே படிக்காதவள் என்பதற்காக இந்தக் குழந்தைக்கு கல்வி மறுக்கப் பட்டிருக்குமானால் அவள் தனது பாட்டியோடு ஆடு மேய்த்துக் கொண்டிருப்பாள்.

முடிந்தவரை முட்டிப் பார்ப்போம்.

  • இரா.எட்வின், பெரம்பலூர்.

Related Posts