தான் தொழுத அந்த அல்லாவோ… தன் கணவர் வணங்கிய முப்பத்து முக்கோடி தேவர்களோ இன்று இயேசு வடிவில் வந்து தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் உதவுவதாக தாஜ் நினைத்துக்கொண்டாள்.
“இன்னா இலாஹி வ இன்இலைகி ராஜுவூன்” என்று துவங்கும் இந்நாவல் மதத்தின் பெயராலும், சாதியாலும், கடவுளின் துணைகொண்டு இந்த ஆண்களால் இழைக்கப்படும் அநீதிகளைத் ஒரு பெண் தன் வாழ்வில் கற்ற அனுபவம் என்ற பேராயுதத்தின் துணைகொண்டு வெட்டுகின்றது.

உருது பேசும் இஸ்லாமிய குடும்பத்தின் வாழ்க்கையை படமாக்கிக் காட்டும் இந்த நாவல் திருவண்ணாமலையை மையமாகக் கொண்டு துவங்குகிறது.

“கொழந்தைங்களுக்கு தாய், தகப்பன் படுற கஷ்டத்த சொல்லி வளக்கனும்” என்று ஒரு சாராரும்,
“என் கொழந்தைங்க கஷ்டம் தெரியாம வளத்துட்டேன்” என்று ஒரு சாராரும் பேசுவதை கேட்டிருப்போம்.

இதில் நான் சந்தித்த ஆயிஷா முதல் ரகம். தக்க சமயம் கிட்டும் போதெல்லாம் தன் குழந்தைகளுக்கு, தன் வாழ்க்கை அனுபவத்தைச் சொல்லிவிடுவாள். இறைவன் ஒருவனே என்ற கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தும், எந்நிலையிலும் தன் குழந்தைகளின் விருப்பு/வெறுப்புகளில் தலையிடாத எதார்த்தவாதி. திருவண்ணாமலையை மையமாகக் கொண்டு நகரும் இந்தக் கதையின் நாயகியும் இவளே.

எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் செய்துவைக்கப்பட்டவள். தன் கணவன் இறந்த செய்தியைக் கேட்டு எந்த விதமான சலனமும் இல்லாமல் தன் வேலையைச் செய்துகொண்டிருந்தாள் என்று வாசிக்கும்போது, இதுவரை நான் பார்த்திராத ஒரு பெண்ணைக் கொண்டுவந்து என்முன்னே ஆயிஷா என்ற பெயர் கொண்டு நிறுத்துகிறது.

“நாளபின்ன ஜமாத்துல புருசன் செத்ததுக்கு கூட ஏண்டி வரலேன்னு கேட்டா என்ன பன்றது?” என்ற கேள்விக்கு “என் புருஷன் குடிச்சிட்டு வந்து மண்டைய ஒடச்சப்ப கூட ஆம்பளைன்னா அப்படிதாண்டி இருப்பான் அனுசரிச்சு போன்னு சொன்னவங்க தானே இந்த ஜாமாத்தானுங்க?… எவ்ளோ காலந்தான் ஊரு ஒலகத்துக்கு பயந்து காலந்தள்ளறது. நமக்குன்னு ஒரு நாயம் வானா…?” என்று சொல்லும்போது, தன் மதப்பற்றையும் அதே வேளையில் தன் அனுபவத்தையும் கொண்டு தனக்கான பாதையை வகுப்பதில் வியப்படைய வைக்கிறாள்.
“ஹும்… ஏதோ ஆபத்துக்குப் பாவமில்லேன்னு அன்னக்கி சோறு போட்டே… அவனும் நன்றியோட நெனச்சிப் பாக்குறான். அதுக்கு? நீங்கப் பொழங்கற சொம்புலயேவா அவங்களுக்கும் கொடுக்குறது? சரியில்ல பூமா… தரித்திரம் புடிச்சிக்கும்.

அடுத்த மொற அவெ வந்தா தனியா டப்பா எதுலயாவது கொடு. திண்ணயில எல்லாம் ஒக்கார வக்காதே.” என்று தான் சார்ந்த மதத்தின் (வர்ணாசிரம)தர்மத்தை ஆயிஷாவிடத்தே திணிக்கும்போது… “ஆமா… தீட்டு வந்து ஒட்டிக்குமாக்கும். ஒம் புள்ளங்க கூடத்தான் அவெங் கையால சீவன பனங்காய உறிஞ்சி உறிஞ்சி தின்னாங்க. அவங்க கொடலே தீட்டாயிடுச்சே… என்னா பன்னுவே? வவுத்துல கீற கொடல உருவி வண்ணானுக்கா போடுவே… என்று சக மனிதனை மனிதனாக மதிக்கக் கற்றுகொள்ளுங்கள் என்று உரையாடலை முடிக்கும் வேளையில் தனது தரப்பு வாதத்திற்கு பராசக்தி திரைப்படத்தின் ஒரு காட்சியைத் துணைக்கு அழைக்கும்விதம், எங்க வீட்டுப் பிள்ளையில் எம்.ஜி.ஆர் அடிவாங்கும்போது துடித்த பாமர ரசிகர்களை நினைவூட்டிவிடுகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் ஒரு திருமண புகைப்படம் பரவலாகப் பகிரப்பட்டது. அதில் மணப்பெண் இஸ்லாமியர் என்றும் மணமகன் இந்து என்றும் கூறி மதம் மாறாமல் நடக்கும் இந்தத் திருமணம் விபச்சாரம் என்று சில இஸ்லாமிய அடிப்படைவாத ஜமாத்துக்களாலும், சில இஸ்லாமிய அடிப்படிவாதிகளாலும் பகிரப்பட்டது. உண்மையில் அந்தக் காதல் திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றதே.
தன் மகள் காதலனை மணக்க மதம் ஒரு தடையாக வரும்போது தன் இயலாமையை உணர்ந்து எந்தவித தயக்கமுமின்றி ஆயிஷா முன்வைக்கும் வாதம், இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும் அவர்தம் அடிப்படைவாத கருத்துகளுக்கும் கொடுக்கும் சவுக்கடி.

“அல்லா எங்கேயு இருக்கறவெ… என் கூரெ வூட்டுல இருக்கமாட்டானா? பத்துமாசம் சொமந்து பெத்தவளவுட ஜமாத்தாரு ஆரும் பெரியவங்க இல்ல. எம் முன்னாடி எம் பொண்ணெ நல்லா பாத்துக்குவேன்னு வாக்கு குடுத்துட்டு… எம் பொண்ணெ கூட்டிப் போயி குடும்பந் நடத்துங்க…”
சாந்திக்கும், தாத்ரேயருக்கும்(கூர்க்கா) பிறந்த குழந்தையான சதா என்கிற சதாசிவம் நடத்தும் உரையாடல்கள் ஒருபக்கம் நகைப்பூட்டுவதாக இருந்தாலும், அவையாவும் இன்று விவாதத்துக்கு உட்பட்டே தீரவேண்டியதாக இருக்கிறது.

தான் இந்துவா? முஸ்லீமா?. சதா என்கிற பெயர்தான் பிரச்சணையா? பெயரை முஸ்லீம் பெயராக மாற்றிகொண்டால் எல்லாரும் தன்னை முஸல்மானாகா(இஸ்லாமியனாக) ஏற்றுக்கொள்வார்களா? தன் பாட்டி ஆயிஷாவுடன் நடத்தும் உரையாடலுக்கும் பின் தான் இப்லீஷ்(சாத்தான்/லூஸிபர்) கட்சியினனாக இருப்பதுதான் சரியானது என்று உணரும் தருணம், மனிதன் தெரிந்தே செய்யும் தவறுகளுக்கு நியாயம் புகட்ட “சாத்தான்” மீது பழிசுமத்திவிட்டு செல்லும் போக்கை நகைப்புக்குள்ளாக்குகிறது.

கட்டியிருக்கற பொடவையில் பாதிய கழிச்சி கொடுத்துட்டு மீதிய தாவனியா கட்டியாற மனசு யாருக்கு வரும். ஓ அம்மாவுக்கு அந்த மனசு இருந்துச்சு….
அவெ மார்க்கத்த வுட்டு வெளியே போனவத்தான், “அல்லா என்னய என்னா சீரா வச்சிருக்கான்…? நா எதுக்கு நமாஸு படிக்கனும்” ன்னு கேப்பா…
“ஏ ஒழைப்புல நான் முன்னேறுனேன். என்னால முடிஞ்சத நா நாலு பேருக்கு செய்யறேன்.” அப்படீன்னு சொல்லுவா… அவ தொழுது, துவா கேட்டு நாம் பாத்தது இல்லே…
எங்கள் காப்பாத்த குடும்பத்துக்காக ஒழச்சே உயிர வுட்டா… அவ அல்ப ஆயுசுல போய் சேந்தது என்னவோ மெய்தான். ஆனா இன்னிக்கி அவெ குடும்பமே அவெ புருசன் வூட்டுல நிம்மதியா’ காலங் கழிக்கறோம்.

அவெ தங்கச்சிங்களும் தம்பி காதரும் ஒன்ன தாயில்லா கவல தெரியாம பாத்துக் கறாங்க. இதெ விட சொர்க்கம் னு தனியா எங்க இருக்கு. இப்ப அவெ சொர்க்கத்துல தான்டா இருக்கா… சொர்க்க நரகம் எல்லாம் நம்ம நடந்துகற மொறயிலத்தான் கெடைக்கும்.
இப்படி சில மேற்கோள்களிட்டோ அல்லது ஒரு சில வரிகளில் சுருங்க சொல்லிவிட்டோ கடந்துவிடுமுடியாது. நாவலில் ஆயிஷாவும்-சதாவும் முன்வைக்கும் வாதங்கள் அத்தனையும் மதம், தூய்மைவாதம் பேசும் இஸ்லாமியர்களைக் குடைந்தெடுக்கும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.

உருது முஸ்லீம்களின் மொழியையும், நடுநாட்டின் வட்டார மொழியையும் கலந்துகட்டி அமைக்கப்படுள்ள இந்த நாவலில் பெரும்பாலான உரையாடல்கள் யாவும் ஜாமாத்துகள் என்று பேரில் கட்டபஞ்சாயத்து செய்யும் ஆணாதிக்கவாதிகளையே கூண்டிலிருத்துகிறது.
தனக்கென அங்கீகாரம், சுற்றத்தாரிடம் மரியாதை, சமுதாயத்தில் மதிப்பு இந்தப் போதைதான் மக்களைச் சாதி மதம் என்ற புதை குழிக்குள் சிக்க வைக்கிறது. உண்மையில் சாதி மத அடிப்படையிலான சமுதாயக் கட்டமைப்புகள் மனிதனை மனிதானக வாழவிடாது, ஆக்டோபஸின் கால்களைப் போல வளைந்து நெளிந்து இறுக்கிப்பிடித்துக் கொண்டே இருக்கும்.

ஒரு தலைமுறை கலப்பு திருமணம் புரிந்து போராடி வெளிவந்தாலும், அவர்களின் அடுத்த தலைமுறைகள் மீண்டும் அந்த மாய வலைக்குள் சிக்கிக் கொள்ளும் என்பதற்கு சாதி, மதம், கடவுள், சடங்குகள் போன்ற எந்தக் கட்டுகளுக்குள்ளும் சிக்காமல் சுதந்திரப் பறவையாக வாழ்ந்து காட்டிய ஆயிஷாவும் அவள் மூத்த மகள் சாந்தி (எ) நஜமுன்னிசாவுமே சான்று…
பிறரின் நம்பிக்கைகள் எதுவாகினும் சரி… لَـكُمْ دِيْنُكُمْ وَلِىَ دِيْنِ (லகும் தீனுக்கும் வலிய த்தீன் (குர்-ஆன் 109:6)) உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம் என்பதுதான் ஆயிஷாவின் மூலமாக நமக்குச் சொல்லப்படும் செய்தி.

சந்தியா பதிப்பகம் வெளியீட்டில் தா. சக்தி பகதூர் அவர்களின் முதல் நாவலாக உருகொண்டுள்ளது “சாந்தி என்கிற நஜமுன்னிஷா”.

கலீல் ஜாஹீர்.

Related Posts