பிற

கொக்ககோலா கழுத்தும், வெக்கமில்லாத நுகர்வும் !

தேர்தல் முடிந்தவுடன் தலைவர்கள் எல்லாம் ஓய்வெடுக்க கொடநாடோ வெளிநாடு சென்றுவிடுகிறார்கள். நாமும் ஓட்டுப் போட்டுவிட்டு அதை போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போட்டுவிட்டு நமது பணி முடிந்துவிட்டது என்று தினசரி வேலைகளைப் பார்க்கச் சென்றுவிடுகிறோம். உண்மையில் அரசியல் என்பது தேர்தலோடு நின்றுவிடுவதில்லை, தேர்தலைத்தாண்டி பல அம்சங்கள் அதில் உள்ளது. ஊழல் என்பது அரசியல் கட்சிகள் மற்றும் அரசு ஊழியர்கள் சம்மந்தபட்டது எனும் “சிந்தனை ஊழல்” இங்கே வேரூன்றியுள்ளது. பெரும்பலான அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் “வளர்ச்சி” என்பது பொருளாதார வளர்ச்சி, ஏசி காரில் போவது, ஏசி பஸ்சில் பயணிப்பது, மேலை நாட்டு உணவுகளை தங்கள் வீட்டு கதவருகே வரவழைப்பது, பெரிய பெரிய மால்களில் ஷாப்பிங் செல்வது என்ற எண்ணம் 1990 களுக்குப் பிறகு உருவான புதிய நடுத்தர வர்க்க(Neo Middle Class) மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் திணிக்கப்பட்டுவிட்டது.

உண்மையான வளர்ச்சி என்பது அரசின் திட்டங்களும் பயன்களும், ஒவ்வொரு தனிமனிதனுக்கும், சமூகத்தின் கடைக் கோடியிலுள்ள ஏழை மக்களுக்கும் சென்று சேர வேண்டும், ஒரு மனிதன் தன் சக மனிதனை எவ்வாறு அணுகுகிறான். ஒரு ஆண் எவ்வாறு ஒரு பெண்ணை இச்சமூகத்தில் நடத்துகிறான், போன்ற “சிந்தனை” சார்ந்த முற்ப்போக்கு வளர்ச்சியை இச்சமூகம் ஒருபோதும் கருத்தில் எடுத்துக்கொள்வதில்லை.

நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்புணர்ச்சி, அமில வீச்சு போன்ற சம்பவங்கள் செய்தியாக வெளிவரும் போது இரு அறிவுஜீவிகள் கூட்டம் வெளிப்படுகிறது. ஒரு கூட்டம் பெண்களின் நடை, உடை என அனைத்தும் வன்புணர்வைத் தூண்டும் வகையில் உள்ளது என்று பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறது. மற்றொரு அறிவுஜீவிகள் கூட்டம் குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை வழங்க வேண்டுமென்றும், அரபு நாடுகளில் உள்ளது போன்று கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென்றும் கூறுகின்றது. இவையனைத்தையும் தாண்டி பண்பாட்டுரீதியாக பெண் எவ்வாறு பார்க்கப்படுகிறாள் என்பதையும் அதையொத்த சிந்தனையையும் இந்த ஆணாதிக்க சமுதாயம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள ஒருபோதும் தயாராக இல்லை என்பதை தெளிவாகத் தெரிவிக்கிறது.

அண்மையில் தமிழ் சினிமா பெண்களை எவ்வாறு ஒரு கவர்ச்சி பொருளாகவே பாவித்து திரையில் காண்பிக்கிறது என்று “சிந்தனை: தமிழ் சினிமாவின் வன்கொடுமை” என்னும் கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது. சினிமா மட்டுமின்றி ஒரு நிமிடத்திற்க்கும் குறைவாகவே ஒளிபரப்பப்படும் விளம்பரங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. நுகர்வு கலாச்சாரத்தில் சிக்கியுள்ள இந்த சமூகம், சந்தைக்காகவும், நுகர்விற்காகவும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்றாகிவிட்ட காலகட்டம் இது. விளம்பரங்கள் பெண்களை எவ்வாறு இழிவுபடுத்துகிறது என்பதை பல நூறு விளம்பரங்களைக் கொண்டு ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும். அவ்வாறு நிரூபிப்பது ஒன்றும் கடினமான காரியமல்ல. உதாரணத்திற்க்கு இரண்டு விளம்பரங்களை மட்டும் இங்கே பார்ப்போம்.

கொக்ககோலா விளம்பரம்
இன்று தண்ணீர் குடித்து தாகத்தை தனிப்பதை விட பெப்சி, கோக் குடித்து தாகத்தை தனித்து கொள்பவர்கலே அதிகம். சமீபத்திய கொக்ககோலா விளம்பரத்தில் இந்தி நடிகை தீபிகா படுகோன் நடித்திருப்பதை பார்த்திருப்பீர்கள். திரும்பி நின்றவாறு கொக்ககோலா பானத்தை குடிக்கும் பெண் பார்வையாளர்களை நோக்கி “என் கழுத்த ஏ பாக்குற, பாட்லோட கழுத்துல சரியான வில போட்ருக்கு பாரு” என்பார். சாதாரணமாக பார்த்தால் குளிர்பானத்தின் விலை எங்கே அச்சிடப்பட்டுள்ளது என்பதை தெரிவிப்பதற்கான விளம்பரமாகவே தெரியும். ஆனால் சற்று சிந்தித்துப் பார்த்தால் சக மனுஷியாக கருத வேண்டிய பெண் சாதாரண குளிர்பானத்துடன் ஒப்பிடப்படுகிறாள், மேலும் ஒவ்வொரு பெண்ணும் தன் கழுத்தில் விலைப்பட்டியலை தங்கியுள்ளாவாரு சித்தரித்து “பெண்ணை ஒரு பண்டமாகவே” பார்க்கும் கலாசாரத்தை நம்மிடையே வளர்த்தெடுக்கின்றன இன்றைய கார்பரேட்டுகளும், ஊடகங்களும். இதை பார்க்கும் நமக்கு கோபம்தான் வருவதில்லை, ஒரு சிறு வருத்தம் கூட வராதவாரு நம் சிந்தனை மழுங்கடிக்கப்பட்டுவிட்டது.

Axe விளம்பரம்
இன்று மத்தியதர வர்க்க இளைஞர்களின் அத்தியாவசியப் பொருட்களின் ஒன்றாக வாசனைத் திரவியங்கள் உள்ளன. அத்தகைய வாசனை திரவியங்களின் விளம்பரங்களில் குறிப்பாக Axe விளம்பரங்கள் நம்மை உச்சகட்ட ஏரிச்சலுக்கு ஆளாக்குகின்றன என்பதில் பலருக்கு மாற்று கருத்து இருக்காது. Axe ஐ உபயோகிக்கும் ஆணைநோக்கி வேற்று கிரகத்திலிருந்தெல்லாம் பெண்கள் ஓடோடி வருவதாகவும், சாதாரண வாசனைத் திரவியத்திற்க்கு ஒட்டுமொத்த பெண் இனமும் மயங்கிவிடுவது போலவும், இவ்விளம்பரங்கள் தொடர்ந்து பெண்களை கவர்ச்சி பொருளாகவே சித்தரித்து வருகிறது.

மேலோட்டமாக பார்த்தால் இத்தகைய விளம்பரங்கள் அந்தந்த பொருட்களை விளம்பரபடுத்துவதற்க்காக மட்டுமே எடுக்கப்படுவது போலவே தெரியும். ஆனால் இவ்விளம்பரங்கள் மக்களின் ஆழ்மனதில் விதைத்து செல்லும் ஆணாதிக்க விசத்தை நாம் கண்டுகொள்ளாமல் இருப்பது இச்சமூகத்தை பண்பாட்டு, கலாசார ரீதியாக முன்னோக்கி எடுத்துச் செல்ல இயலாமல் மேலும் பின்னோக்கியே இழுத்துச் செல்லும்.

வீட்டிற்குள் அடைந்து கிடந்த பெண் வெளியே வந்துவிட்டதால் மட்டுமே பெண் விடுதலை அடைந்துவிட்டால் என்று எண்ணுவது தவறு. இத்தகைய ஊழல் நிறைந்த சிந்தனையாலும் தான் இன்று நம் சமூகத்தில் நிர்பயாக்களும், உமா மகேஸ்வரிகளும், வினோதினிகளும், வித்யாக்களும் இன்னும் எண்ணற்ற பெண்கள் இச்சமூகத்திலிருந்து வேரருக்கப்படுகின்றனர். அத்தோடு மட்டுமல்லாமல் பெண் தொடர்பான நம் சிந்தனை பிற்போக்குத்தனமாகவே இருக்குமாறு கார்பரேட் நிறுவனங்களும், பெரும்பான்மையான ஊடகங்களும், சினிமாக்களும் செயல்படுவதால் தான் “ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை உளவு பார்க்க ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் தவறாக பயன்படுத்தியவரையும், தனது வாழ்கைத் துணையை பழமைவாத பிரம்மச்சரியத்தோடு வைத்து ஒரு பெண்ணை ஏமாற்றியவரையும், ஊட்டச்சத்து குறைபாடுடன் ஏன் பெண்கள் உள்ளனர் என்ற கேள்விக்கு ‘அவர்கள் தங்கள் அழகை பேணுவதற்க்காக குறைவாகவே உணவு எடுத்துக்கொள்கின்றனர்’ என்று கூறிய பிற்போக்கு பெண்ணியவாதியை நம் நாட்டின் பிரதமர் பதவியில் அமர வைக்கவேண்டும் என்ற எண்ணத்தை நம்மிடையே வளர்த்தியுள்ளது”. இத்தகைய ஊழல் சிந்தனைக்கு எதிராக போராடி “முற்போக்கு சிந்தனையை” வளர்த்தெடுக்க வேண்டிய காலகட்டமிது.

வெறும் பொருளாதார வளர்ச்சியை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதால், ஒவ்வொரு சமூகக் கொடுமை நிகழும் போதும் நம் சக மனிதர்களின் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் சடலங்களை பாடையில் எடுத்துச் செல்வதற்கு பதிலாக குளிர்சாதன வசதி கொண்ட நவீன மோட்டார் வண்டியில் எடுத்து சென்று மின்சார சுடுகாட்டில் இரண்டு நிமிடங்களில் “நவீன வசதியுடன்” தகனம் செய்யவே அத்தகைய பொருளாதர வளர்ச்சி உதவும். மேலும் மொத்த மக்கட் தொகையில் 48 சதவீதமுள்ள பெண்களின் பாதுகாப்பையும், வளர்ச்சியையும் உதாசினப்படுத்தி நாம் அடைய விரும்பும் வெறும் பொருளாதார வளர்ச்சி என்பது சமூக வீழ்ச்சியே.

Related Posts