பாலியல் கல்வி எனும் தேவையுள்ள ஆணி . . . . . . . . . . . !

பாலியல் கல்வி (Sex Education) என்ற வார்த்தையை பார்த்தவுடன் பலருக்கும் ‘உவாக்’ என்றும் ‘இது தேவை இல்லாத ஆணி’ என்றும் நினைக்கத் தோன்றும். ஆனால் ஒரு சமூகத்தின் வளர்ச்சியை இந்த ஆணியைப் பற்றிய விவாதங்களையும் உள்ளடக்கியது தான் என்று கருதுகின்றேன். பாலியல் கல்வி என்றாலே ‘பலான விஷயங்களை’ எல்லாம் சொல்லிக் கொடுப்பாங்க என்றொரு பொதுபுத்தி நம் மனங்களில் பதியப்பட்டிருக்கிறது. அப்படி நினைக்கவேண்டியதில்லை. அது நம்முடைய அறியாமையே.

நான் பள்ளி பருவத்தைத் தொட்டு மாணவர் சங்கத்தோடு பயணித்த போது தான் வெளிவாசிப்பின் (out of syllabus) தேவைகளை உணர்ந்து எங்கள் பகுதியில் உள்ள ஒரு அரசு நூலகத்தில் உறுப்பினரானேன். எதை எதை வாசிப்பது என்று கூட தெரியாமல்,கண்டதை எல்லாம் வாசிக்க ஆரம்பித்தேன். எங்கள் ஊர் நூலகத்தில் பேப்பர் படிக்க தான் கூட்டம் வருமே தவிர,புத்தகம் படிக்க வெல்லாம் பெரிசா இருக்காது.அதனாலே எல்லா புத்தகங்களும் புத்தம் புதுசாகவே இருக்கும்.ஒன்றிரண்டு நபர்கள் படித்தாலே அது அதிசயம்.

ஆனால் அந்த நூலகத்தில் அடுக்கி வைத்திருந்த வரிசைகளில் ஒரேயொரு புத்தகம் மட்டும் கந்தல் கந்தலாக இருந்தது. அந்த புத்தகத்தை நானும் வாசிப்பதற்காக வீட்டுக்கு எடுத்துச் சென்றேன். அப்போது அந்த நூலகர் புத்தகத்தின் முன்னட்டையை பார்த்துவிட்டு என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார். என்னமோ இதுல வேறுபல சமாச்சாரங்கள் தான் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து படிக்க ஆரம்பித்தேன். மிருகங்கள்,பறவைகள்,மனிதர்கள் எல்லாரையும் பற்றிய சின்ன சின்ன பாலியல் கதைகளாக அதில் தொகுக்கப்பட்டிருந்தது. அப்புறம் தான் அந்த புத்தகத்தின் பெயர் ‘மறைவாய் சொன்ன கதைகள்’ என்று அச்சிட்டிருப்பதை பார்த்தேன். எழுதியவர் கி.ராஜநாராயணன் என்றிருந்தது. (தமிழ் இலக்கிய உலகம் சுருக்கமாக அழைக்கும் கி.ரா இவர் தான் என்பதை பின்னர் தெரிந்து கொண்டேன்.)

அதில் ஒரு கதை: ‘ஒரு காளையும் பசு மாடும் ஒரு ஓரமா ஒதுங்குச்சாம். அப்போ அந்த பசு மாட்டு மேல ஒரு காக்கை உக்காந்துட்டு இருந்துச்சாம். திடீர்ன்னு அந்தக் காளை மாடு பசு மாட்டு மேல ஏற, என்னடா இந்தக் காளை பண்ணுதுன்னு அந்த காக்க குனிஞ்சு பாக்க, அந்த காக்கா பசுமாட்டு வைத்துக்குள்ள போய்யிடுச்சி!’ என்று ஒரு கதை. அதே போல  ‘வெற்றிலைக்கு பெண் உறுப்பின் வாசனை வரும்’ என்று மற்றொரு கதையை வாசித்துவிட்டு ஒரு மாதிரி ஆகிப்போனதால் அப்படியே வைத்துவிட்டேன். (பின்பு பல நாள் கழித்து தான் அந்த புத்தகத்தை வாசித்து முடித்தேன்.)

இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்று தானே நினைக்கிறீர்கள்! வேறு என்ன பாலியல் கல்வி பற்றி எளிமையாக விளக்குவதற்கு தான். நம் இலக்கியங்கள் பலவும் நம் மனிதர்களின் பாலியல் உணர்வுகள், தேவைகள், கற்பனைகளைக் கொண்டே உருப்பெற்றிருக்கிறது. ஆனால் தற்போது அதன் தேவை நவீனமயமாக்கப்படும் போது கலாச்சாரச் சீர்கேடு என்ற பதட்டத்திற்குள்ளாகிறார்கள் பழமைவாதிகள். பாலியல் கல்வி என்ற வார்த்தையை வெறும் உடல் உறவை மட்டுமே சொல்லிக்கொடுப்பது என்று புரிந்து கொண்டதால் தான் அதை பற்றி பொதுவெளியில் நாம் விவாதிக்க முன்வருவதில்லை.

சில வருடங்களுக்கு முன்பு சேலத்தில் இளம் பெண்கள் பங்கேற்ற மாநில அளவிலான ஒரு கூட்டத்தில் நான் கலந்துக்கொள்ள நேர்ந்தது. அப்போது அங்கு 300 இளம் பெண்களும் 30 ஆண்களுமாக பங்கேற்றோம். ‘பெண் உடலைப் பற்றி அறிவோம்’ என்கிற தலைப்பில் ஒருவர் பேச ஆரம்பித்த பொழுது அங்கிருந்த 30 ஆண்களும் வெளியேற எழுந்தோம். ஆனால் அந்த வகுப்பு எடுத்தவர் ஆண்கள் யாரும் வெளியேற வேண்டிய அவசியம் இல்லை, சொல்லப்போனால் பெண்களை விட நீங்கள் தான் அவர்களின் உடலை பற்றி புரிந்துக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்தார். அப்போது அவர் அந்த இளம் பெண்களை நோக்கிக் கேட்ட முதல் கேள்வியே எத்தனை பேர் உங்கள் பெண் உறுப்பை நீங்களே தொட்டுப் பார்த்து இருக்கின்றீர்கள் என்று கேட்டார்.அங்கு இருந்த 300 பேர்களில் வெறும் 20 பேர்கள் தான் ஆம் என்று பதில் சொன்னார்கள். மற்றவர்கள் பதில் ஏதும் சொல்லாமல் கீழே இறக்கிய தலையை மேலே கூட தூக்கிப் பார்க்கவில்லை. அதில் பெரும்பாதி பேர் அச்சத்தாலும் கூச்சத்தாலும் சொல்லவில்லை என்று வைத்துக்கொண்டாலுமே கூட மீதி நபர்கள் உண்மையாகவே தன் பெண் உறுப்பைப் பார்க்க வேண்டும் என்ற அந்த யோசனையே அவர் கேட்கும் முன்பு வரை அவர்களுக்கு எழவில்லை என்று தான் புரிந்துகொள்ள முடிந்தது. தன் பெண் உறுப்பில் clitorius, vagina, urethral opening , labia majora, labia minora போன்ற பகுதிகள் இருக்கின்றன என்பதைக் கூட அறியாத நிலையில் தான் பல பெண்கள் இருப்பதைப்போல அவர்களும் இருந்தார்கள். இதை விடப் பெரிய அறியாமை என்னவென்றால் ஆண்களில் பல பேருக்கு பெண் உறுப்பில் இரண்டு துளைகள் இருக்கும்,அதில் ஒன்றில் தான் அவர்கள் சிறுநீர் கழிக்கிறார்கள் என்பது கூட அறியாதவர்களாகத்தான் இருக்கின்றார்கள். அவர்களைப் (ஆண்கள்) போலவே பெண்களுக்கும் சிறுநீரும் விந்தனுவும் ஒரே துளையின் வழியாகத்தான் வெளியேறுகின்றது என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். (அதனால் இன்றும் ‘எப்படி மச்சான் urine போற இடத்துல எல்லாம் வாய் வைக்க முடியும்?’ என்றும் கேட்கும் ஆண்கள் தான் அதிகம்.)

இப்படித்தான் ஆண்கள் உடலைப் பற்றி பெண்களுக்கு தெரியாமலும்,பெண்கள் உடலமைப்பைப் பற்றி ஆண்கள் தெரிந்துக்கொள்ளாமலும் இருந்து வருகிறோம். குறைந்த பட்சம் நம் பள்ளிக் கல்வியில் இருக்கும் Reproductive Organ பற்றிய பாடத்தைக்கூட நம் ஆசிரியர்கள் நடத்தத் துணியாமல் தவிர்க்கிறார்கள். என்பது தான் வேதனையான விஷயம். எனது 10ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தில் இந்தப்  பகுதியை நடத்தாமல், ‘இதிலிருந்து எந்த கேள்வியும் கேட்கமாட்டார்கள்,’ என்று என் அறிவியல் ஆசிரியை சொல்லிவிட்டு, மாறாக ‘இந்திந்த சாப்டர்களில் இருந்து இத்தனை மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்பார்கள் அல்லது சாய்ஸ்ல விட்டிடலாம்,’ என்று சொல்லி அதை மட்டும் படித்தால் போதும் என்று சொல்லிக்கொடுத்து, அந்த ஒரு பக்கத்தை மட்டும் முழுமையாக நடத்த மறுத்துவிடுவார்கள்.

பின்பு 11ஆம் வகுப்பில் நடந்தது இன்னும் மோசம். நான் படித்தது ஆண்கள் மேல்நிலை பள்ளி என்பதால் உயிரியல் (Biology) பிரிவு மாணவர்களுக்கு மட்டும் உயிரியல் வாத்தியார் ஆணுறை (condom) பயன்படுத்துவது எப்படி என்று வகுப்பு எடுத்துக்கொண்டு இருந்தார். கம்பியூட்டர் சயின்ஸ் குரூப் மாணவர்களுக்கும் ஆர்ட்ஸ் குரூப் மாணவர்களையும் இந்த வகுப்பில் சேர்த்துக்கொள்வதில்லை. நமது பாடத் திட்டம் கூட, இந்த குரூப் மாணவர்களுக்கு ஆணுறை அணிய அவசியம் வராது என்ற முடிவுக்கு வந்துவிட்டது ஏனென்று இன்னும் கூட விளங்காத சங்கதியாகவே இருக்கிறது.

மேலை நாடுகளில் சொல்லித்தரப்படும் பாலியல் கல்வியில் மூன்றில் ஒரு பகுதியைக்கூட இங்கு சொல்லிக்கொடுத்தால் போதுமானது. அப்படி செய்தால் தான் இளம் தலைமுறை தங்கள் வாழ்க்கையில் எதிர் நோக்கி சந்திக்க வேண்டிய உடலியல் பிரச்சனைகளுக்கு அவர்களுக்கு அவர்களாகவே குறைந்த பட்சமேனும் சரிசெய்துகொள்ளமுடியும்.

இளவயதில் ஏற்படும் உடல் மாற்றங்களுக்கும் பாலியல் சந்தேகங்களும் பதில் சொல்ல வேண்டிய அவசியத்தை பற்றி கவலைக் கொள்ளாமல், ஒரு உயர்கல்வி எப்படி ஆரோக்கியமாக அமையமுடியும். இந்த அடிப்படையான தேவையைப் பற்றி ஒரு அறிவார்ந்த சமூகம் விவாதித்திட வேண்டும்.

– அனஸ் சுல்தானா.

About ஆசிரியர்குழு‍ மாற்று