கலாச்சாரம்

சம பாலின உறவும் கலாச்சார ஆயுதமும்!

Supreme Court of India

Supreme Court of India

டிசம்பர் 10 மனித உரிமை நாளாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாளே, மனித உரிமைகளில் ஒன்றாக வலியுறுத்தப்பட்டு வருகிற சம பாலின உறவு உரிமையை நிராகரிக்கும் தீர்ப்பை இந்தியாவின் தலைமை நீதிமன்றம், அளித்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன் 2009ல் தில்லி உயர்நீதிமன்றம், சம பாலின உறவு வாழ்க்கையைத் தேர்வு செய்வோரை சிறையில் அடைக்க வழி செய்யும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவு, அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துகிற நாட்டின் அரசமைப்பு சாசனத்துக்கு எதிரானது என்று தீர்ப்பளித்தது. பழமைவாதங்கள் கரடு தட்டிப் போயிருக்கிற இந்தியச் சமுதாயத்தில் இத்தகைய விசாலமான சிந்தனைகளும் முன்னெழுவதைக் கண்டு மனித நேயர்கள் மகிழ்ந்தார்கள். அந்த மகிழ்ச்சியைத் தட்டிப் பறிக்கிறது உச்சநீதிமன்றத் தீர்ப்பு.

இயற்கைக்கு மாறான உறவு சட்டவிரோதமானதுதான் என்பதே நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, எஸ்.ஜே. முகோபாத்யாயா ஆகியோர் கொண்ட அமர்வுக்குழு அளித்துள்ள தீர்ப்பின் சாரம். ஆனால், சட்ட வல்லுநர்களும் மருத்துவ அறிஞர்களும் குறிப்பிடுவது போல, “இயற்கையான உறவு” என்ன என்று அரசமைப்பு சாசனத்தின் எந்தச் சட்டத்திலும் வரையறுக்கப்படவில்லை என்கிறபோது, “இயற்கைக்கு மாறான உறவு” என்ற வரையறை மட்டும் எங்கிருந்து வருகிறது? பெரும்பாலான மக்கள் கடைப்பிடிக்கிற வழக்கம்தான் வரையறை என்றால், அதனை, வேறுவகையான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுக்கிற சிறுபான்மையான மக்கள் மீது திணிப்பது ஜனநாய விரோதம் அல்லவா? ஜனநாயகமும் சட்டமும் முரண்பட்டு நிற்கலாமா?

தில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தவர்கள் பல்வேறு மத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்தான். மதங்கள் அடிப்படையில் மனித உரிமைகளுக்கு எதிரானைவை என்பது இதன் மூலம் மேலும் மெய்ப்பிக்கப்படுகிறது. “நம் நாட்டிற்கென்று ஒரு பாரம்பரியமான கலாச்சாரம் இருக்கிறது, மேலை நாடுகளைப் பார்த்து அதை மாற்றக்கூடாது,” என்பது அவர்களது வாதம். கலாச்சாரத்தின் பெயரால்தான் பெண்களுக்கு எதிரான, ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு எதிரான வன்கொடுமைகள் இத்தனை ஆண்டுகளாக நியாயப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. பாரம்பரியத்தைப் பற்றிப் பேசுகிறவர்கள், 1860ம் ஆண்டில், இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரிட்டிஷ் அரசு கொண்டுவந்த சட்டத்தைப் பாதுகாக்கத் துடிக்கிற விசித்திரத்தையும் நாடு பார்க்க வேண்டியிருக்கிறது.

“377வது சட்டப் பிரிவு நடைமுறையில் இருந்து வருகிற கடந்த 150 ஆண்டுகளில், சம பாலின உறவாளர்கள், திருநங்கையர்கள் உள்ளிட்ட சமுதாயத்தின் மிகக்குறுகிய மக்கள்தொகையினரில் 200 பேருக்கும் குறைவானவர்களே தண்டனை பெற்றிருக்கிறார்கள் என்ற உண்மையை உயர்நீதிமன்றம் கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டது” என்று உச்சநீதிமன்ற அமர்வுக்குழு கூறியுள்ளது. ஆனால், ஒரு தவறான சட்டத்தின் கீழ் ஒரே ஒருவர் கூட தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதை அந்த அமர்வுக்குழுதான் கவனத்தில் கொள்ளத் தவறியிருக்கிறது. ஆகவேதான் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், சம பாலின உறவைக் குற்றச்செயலல்ல என்ற கருத்துக்குக் கட்சியின் ஆதரவைத் தெரிவித்திருக்கிறார். உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவறானது என்று கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் விமர்சித்திருக்கிறார்.

சம பாலின உறவு என்பதைத் தமிழில் “ஓரினச் சேர்க்கை” என்று கூறுவதே கூட, இதனை உடலுறவோடு மட்டும் தொடர்புபடுத்திக் கொச்சைப்படுத்துவதாக இருக்கிறது. உண்மையில் இது அவர்கள் தனிமைப்பட்டுப்போகாமல் சுமைகளைப் பகிர்ந்துகொள்வதற்குத் தேர்ந்தெடுக்கிற ஒரு வாழ்க்கை முறை. இந்த வாழ்க்கை முறையை அவர்கள் ஏன் தேர்வு செய்கிறார்கள் என்பதற்கு, எதிர்ப்பாலின உறவைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணிகள் போலவே இயற்கையியல், உளவியல், பொருளியல், சமூகவியல் காரணிகள் உள்ளன. எதிர்ப்பாலின உறவை அங்கீகரிப்பது போலவே இதையும் அங்கீகரிப்பதே நாகரிகம்.

சம பாலின உறவு அங்கீகரிக்கப்படுவதால் பாலியல் குற்றங்கள் குறைகின்றன, பாலியல் தொழிலுக்குப் பெண்கள் கடத்தப்படுவது குறைகிறது, பால்வினை நோய்கள் பரவுவது குறைகிறது, ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுக்கும் இத்தகைய இணைகள் நல்ல பெற்றோர்களாகத் திகழ்கிறார்கள். பல்வேறு ஆய்வுகள் காட்டுகிற இந்த உண்மைகளைப் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு இழிவுபடுத்துகிறார்கள் “சுயநியமன கலாச்சாரக் காவலர்கள்.”

“இன்றைக்கு இதை அனுமதித்தால் நாளை மிருகங்களோடும் உறவுகொள்வதை அனுமதிக்க வேண்டும்” என்ற கோரிக்கை எழும், என்று ‘சர்ச்சை ஸ்ரீ’ ராம் தேவ் போன்றோர் கூறுவது அப்படியான ஒரு இழிவுபடுத்தும் வேலைதான். ஒரு பரந்த விவாதத்திற்கு மனங்களைத் திறந்துவிடுவதற்கு மாறாக, எடுத்த எடுப்பிலேயே கலாச்சாரத்தின் பெயரால் கதவை மூடுவது ஒரு ஒடுக்குமுறை உத்தி. நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்ற கோரிக்கை எழுந்தபோது கூட, “இன்று பெண்களுக்குக் கேட்பார்கள், நாளை அலிகளுக்குக் கேட்பார்கள்,” என்று பத்திரிகையாளர் சோ உள்ளிட்டோர் இதே உத்தியைக் கையாண்டார்கள். அப்படியே அவர்களுக்கும் இட ஒது ஒதுக்கீடு தேவை என்று கோரப்பட்டால் என்ன தவறு என்ற எதிர்க்கேள்வி கேட்கப்பட்டபோது பதிலளிக்காமல் நழுவினார்கள்.

மதவாத அடிப்படையில் இதை எதிர்க்கிறவர்கள் உண்மையில் பதற்றப்படுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். மதத்தின் பெயரால் பட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிற மக்கள், வேலிகளை உடைத்துக்கொண்டு வெளியேறிவிடுவார்களோ என்ற பதற்றம். அப்படி வெளியேறிவிட்டால், சாதிப் பாகுபாட்டை, பெண்ணடிமைத்தனத்தை, பல்வேறு மூடத்தனங்களைத் தக்கவைக்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம். அப்படித் தக்கவைப்பதன் மூலம் சுரண்டல் சக்திகளுக்குத் தொண்டூழியம் செய்வது கெட்டுவிடுமோ என்ற கலக்கம். அதிலிருந்தே சிறுமைப்படுத்துகிற உத்திகள் கையாளப்படுகின்றன.

இப்படியாகச் சிறுமைப்படுத்துவதன் இன்னொரு வடிவம்தான், இந்த உரிமைகளுக்காகக் குரல் கொடுப்போர் அப்படியான வாழ்க்கை வாழ்கிறவர்கள் போலிருக்கிறது என்று வக்கிரத் தாக்குதல். அந்தத் தாக்குதலுக்கெல்லாம் அசராமல் மனித உரிமைகளுக்காகக் களம் காண்போர் தொடர்ந்து போராடுவார்கள். சமுதாயத்தின் பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டுள்ள கலாச்சாரப் பிடிமானங்களில் அசைப்பை ஏற்படுத்த ஆட்சியாளர்களும் முதலாளித்துவ – நிலப்பிரவுத்துவ கட்சிகளும் அவ்வளவு எளிதில் முன்வர மாட்டார்கள் என்ற புரிதலோடு போராட்டங்கள் தொடரும். நாட்டின் அரசமைப்பு சாசனத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிற 377 போன்ற சட்டப் பிரிவுகள் உதிர்க்கப்படுவதை அந்தப் போராட்டங்கள் சாதித்துக்காட்டும்.

Related Posts