இலக்கியம்

ரெண்டாவது கொழந்தை…

இன்னைக்கு சுதந்திர தினமாம். இந்த சுதந்திர தினம், குடியரசு தினம் மாதிரி புள்ள பொறக்குற தினத்தையும் முன்னாடியே முடிவு செய்யமுடிஞ்சா எவ்ளோ நல்லாருக்கும். வயித்துல கத்தியவச்சி சிசேரியன் பண்றதா இருந்தா தேதிய முன்னாடியே சொல்றாங்க. ஆனா சிசேரியன் நல்லதில்லயாமே. என் வீட்டுக்காரர் தான் சொன்னாரு. அதான் சொகப் ப்ரசவம் ஆகும்னு காத்திட்டு இருக்கேன். இன்னைக்கு வலி வருமா, நாளைக்கு வலி வருமான்னு பக்கு பக்குன்னு வயித்தபுடிச்சிக்கிட்டே இருக்கவேண்டிருக்கு. இதச்சொல்லி பொலம்பினா, ‘வாழ்க்கைன்னா ஒரு த்ரில் வேன்டாமாடீ’ ன்னு என் வீட்டுக்காரர் சொல்றாரு. அவருக்கென்ன, சாதாரணமா சொல்லிட்டு போயிருவாரு. வலியும் வேலையும் எனக்கு மட்டுந்தான. ரெண்டாவது ப்ரசவம்னாலும் அம்மா வீட்லதான் இருக்கேன். இப்பலர்ந்து எப்பவேணும்னாலும் புள்ள பொறாக்கலாங்குறதால, வீட்டுக்காரரும் லீவுசொல்லிட்டு வந்துட்டார்.

இன்னைக்காச்சும் வலிவந்து, இன்னைக்கே புள்ள பொறந்தா நல்லாத்தான் இருக்கும். வருசா வருசம் எம்புள்ள பொறந்தநாளைக்கு ஊரே கொடியேத்தி முட்டாய் குடுத்து கொண்டாடும்ல. சரி, அதெல்லாம் நம்ம கையிலயா இருக்கு.

“அம்மா” ன்னு கத்திக்கிட்டே கார்த்திகா வீட்டுக்குள்ள ஓடிவந்தா. தெருமுனையில கொடியேத்துறதுக்கு போயிட்டு வந்துருக்கா அவ. “அம்மா, பாப்பா பொறந்திச்சா” ன்னு கேட்டுக்கிட்டே எங்கிட்ட வந்தா. பக்கத்துல வந்ததும் வயித்தப்பாத்தே இன்னும் பொறக்கலன்னு இந்நேரம் தெரிஞ்சிருப்பா. முகம் கொஞ்சம் வாடித்தான் போச்சி புள்ளைக்கி. “நாளைக்கு பொறந்துடும்டா” ன்னு எப்பவும் சொல்றமாதிரி பக்கத்துல உக்காரவச்சி சொன்னேன்.

“வித்யா” ன்னு வீட்டுக்காரர் பக்கத்து ரூம்லருந்து கூப்புட்றார். என்னத்தயாவது எங்கயாவது வச்சிட்டு தேடிட்டிருக்கார்னு நினைக்கிறேன். மாமியார் வீட்டுக்கு வந்துருக்கார்னாலும் எதையோ தேடிட்டு இருக்கார்னு நினைக்கிறேன். நான் வச்சதா இருந்தாலும் நாந்தான் கண்டுபுடிக்கனும், அவர் வச்சதா இருந்தா அதையும் நாந்தான் தேடிக்கண்டுபுடிக்கனும். “உனுக்கு கழகுப்பார்வடி. நல்லா தேடிக்கண்டுபுடிச்சிடுவ” ன்னு ஐஸ் வேற வப்பாரு மனுசன். சரி, இந்தவாட்டி என்னத்ததான் தொலைச்சாருன்னு பாப்போம்னு மெதுவா எந்திக்கப்பாத்தேன். ஒருகைய கீழ ஊனிட்டு இன்னொரு கைய பக்கத்து செவுத்துல அழுத்தி எந்திரிக்க பாக்குறேன். ஆனா முடியல. சட்டுன்னு வயிறு வலிக்க ஆரம்பிச்சிருச்சி. மெதுவா ஆரம்பிச்சி அடிவயிறு அதிகமா வலிக்குது. செவுத்துல இருந்த கைய எடுத்து பக்கத்துல இருந்த சேர்ல வச்சி எழும்பப்பாக்குறேன். ஆனா சுத்தமா முடியல. வலி இன்னும் அதிகமாத்தான் ஆயிட்ருக்கு.

“வித்யா” “வித்யா” ன்னு வீட்டுக்காரர் வேற விடாம சத்தமா கத்திட்டு இருக்காரு.

“அம்மா, ஏம்மா இங்கயே உச்சா போயிட்ட” ன்னு கார்த்திகா அதிர்ச்சியா சொன்னப்பொறவுதான் கவனிக்கிறேன். பனிக்கொடம் ஒடஞ்சிருச்சி போல. பலம் மொத்தமா சேத்து “என்னங்க” ன்னு நான் இப்ப கத்திட்டேன். கார்த்திகாவும் “அப்பா” ன்னு கூப்ட்டுகிட்டே ஓடினா. கொஞ்ச நேரத்துல அம்மாவும் ஓடியாந்து என்ன புடிக்கிற நேரத்துல தண்ணியோட சேத்து இரத்தமும் ஒழுக ஆரம்பிச்சிரிச்சி.

பழைய பாவாடத்துணி ஒன்னைக் கொண்டாந்து என் தொடைக்கி நடுவுல வச்சி இரத்தத்த நிறுத்தப்பாத்தாங்க அம்மா. ஆனா அது நிப்பனான்னு அடம்புடிச்சி, துணியையும் முழுசா செவப்பாக்கிருச்சு. இப்ப அம்மா முகத்துல வந்த பயத்தப்பாத்து எனக்கும் பயம் அதிகமாயிருக்கு. எனக்கு ஒரு நோய் வரும்போது, எம்பக்கத்துல இருக்கிறவங்களோட முகத்தப் பாத்துதான் அது எவ்ளோ பெருசா இருக்குமுன்னு நான் புரிஞ்சிப்பேன்.

வாசல்ல ஆட்டோ வந்து நிக்கிற சத்தம் கேக்குது. அம்மாவும் அக்கம்பக்கத்து பொம்பளைங்களும் பழைய துணியவச்சி இரத்தத்தை துடைச்சிகிட்டே ஆட்டோ பக்கத்துல என்னைய கூட்டிட்டுப் போனாங்க. ஒரு பக்கம் அம்மாவும் இன்னொரு பக்கம் பக்கத்துவீட்டு ராணி அக்காவும் ஆட்டோவுல உக்கார, நான் அம்மா மேல சாஞ்சமாறியே நடுவுல உக்காந்துக்கிட்டேன்.

அதிகமா இரத்தம் வெளியபோயிட்டே இருக்குறதால மயங்கிருவனோன்னு பயந்து அம்மா பேச்சுகுடுத்திட்டே வருது. அதையெல்லாம் கேக்குற நிலைமலயா நான் இருக்கேன். வலி ஒருபக்கம், கால்முழுக்க வழிஞ்சி ஆட்டோவுலயும் ஊத்துற இரத்தத்தப் பாத்து பயம் இன்னொரு பக்கம். இதுல அம்மா பேசுறதெல்லாம் என் காதுக்கு உள்ளயே போகல.

லீவு நாளுங்குறதுனால வழியில பெருசா ட்ராபிக் இல்ல. சீக்கிரமே ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்துட்டோம். ஆட்டோவுக்கு முன்னாடியே வீட்டுக்காரர் வண்டியில வந்து நின்னுட்ருக்காரு. ஆட்டோவுல இருந்து அப்படியே இறக்கி ஒரு ஸ்ட்ரெச்சரில் தான் கூட்டிப்போறாங்க. நடக்குற சக்தியெல்லாம் இப்ப இல்ல எனக்கு. நேரா லேபர் வார்டுக்குத்தான் கூட்டிட்டுப்போறாங்கன்னு நினைக்கிறேன். உள்ள போகும்போது ஏதோ டஞ்சனுக்குள்ள நுழையுறமாதிரி தான் இருக்கு.

கார்த்திகாவ பெத்தப்போ நான் வேற ஆஸ்பத்திரிக்குத் தான் ப்ரசவத்துக்கு போனேன். அது இந்த ஊர்லயே ஓரளவுக்கு நல்ல ஆஸ்பத்திரி. சுமங்களா தான் எனக்கு அங்க ப்ரசவம் பார்த்த டாக்டர். அவங்க அப்பா காலத்துல இருந்தே அந்த ஆஸ்பத்திரிக்கு தான் எங்க குடும்பமே போயிட்ருக்கு. நான்கூட அங்கதான் பொறந்தேன். என் பெரியப்பா பசங்க, சித்தப்பா, அத்தைப்பசங்கன்னு எல்லாருமே பொறந்த, ப்ரசவசம் பாத்த ஆஸ்பத்திரி அது. அதே ஆஸ்பத்திரியில, என் மொத பொண்ண பெத்தெடுக்கும் போது பெருசா செலவாகல. ஆனா இப்ப ஏதோ பெரிய கம்பெனிக்காரங்க அந்த ஆஸ்பத்திரிய விலைக்கு வாங்கி எக்கச்சக்கமா பில்லை ஏத்திவச்சிருக்காங்க. போன வருசம் என்னோட பெரியப்பா பொண்ணு அங்க ப்ரசவத்துக்கு போனப்ப 70 ஆயிரம் ரூபாய்க்கு மேல பில்லு தீட்டிருக்காங்க. அதெல்லாம் நமக்கு கட்டுப்படியாகுமா. நானே எப்படா இந்த புள்ளைய பெத்தெடுப்போம், எப்படா திரும்பவும் வேலைக்குப் போவோம்னு காத்துட்டு இருக்கேன். நான் அஞ்சு வருசமா வேலைக்கு போயிட்டிருந்த எக்ஸ்போர்க் கம்பேனில நான் ப்ரசவ லீவு கேட்டா, “ப்ரசவ லீவெல்லாம் தரமுடியாது. இப்ப நீ வேலைய விட்டுட்டு போயிடு. கொழந்தை பொறந்ததும் திரும்ப வா, சேத்துக்குறேன்” ன்னு அந்த மேனேஜர் சொல்லிட்டார். சரி, திரும்ப வேலையாவது கெடைக்குதேன்னு அமைதியா வேலையைவிட்டு வந்துட்டேன். வேலையைவிட்டு அனுப்பிட்டாங்கன்னு தான் சொல்லனும். எங்க கம்பேனில ப்ரசவ லீவுன்னு யாருக்குமே தர்றதில்ல. வயித்துல புள்ள வந்துட்டாலே, வேலையைவிட்டு அனுப்பிருவாங்க. புள்ளா பொறந்ததும் திரும்பவும் புதுசா அங்கயே வேலைக்கு சேத்துப்பாங்க.

என்னோட சம்பளத்தையும் என் வீட்டுக்காரர் சம்பளத்தையும் சேத்துதான் எங்க குடும்ப வண்டி ஓடிட்டுருக்கு. இதுல 70 ஆயிரத்துக்கும் 80 ஆயிரத்துக்கும் ப்ரசவம் பாக்கனும்னா பேங்க்லதான் கொள்ளையடிக்கனும். வயித்துல புள்ள இருந்தா ஒருவாட்டி அரசு ஆஸ்பத்திரில போய் காட்டி, ஏதோ நம்பர் வாங்கனும்னு புதுசா சட்டம் போட்ருக்காங்களாம். அதுக்கு மூணுமாசமா இருந்தப்ப அரசு ஆஸ்பத்திரிக்கு போயிருந்தேன். அங்க இருந்த டாக்டரம்மா நல்லாத்தான் பேசுனாங்க. “இங்கயே நீங்க ப்ரசவம் பாக்கலாம். எல்லா வசதியும் இருக்கு” ன்னும் சொன்னாங்க. அந்த ஆஸ்பத்திரியில ஒவ்வொரு மாசமும் எத்தன பேர் ப்ரசவம் பாத்துருக்காங்க. அதுல எத்தன சுகப்ரசவம், எத்தன சிசேரியன்னு வாசல்ல ஒரு போர்ட்ல எழுதிவச்சிருந்தாங்க.

அங்க போயிட்டு வந்ததுல இருந்து, அரசு ஆஸ்பத்திரில ப்ரசவம் பாத்துரலாமான்னும் ஒரு யோசன வந்திச்சு. வீட்டுக்காரர்கிட்டயும் கேட்டுப்பாத்தேன். ஆனா அவரும் ஒத்துக்கல மாமியாரும் ஒத்துக்கல அம்மாவும்கூட ஒத்துக்கல. எல்லாருக்கும் அது கௌரவப் பிரச்சனை போல. உண்மையை சொல்லனும்னா எனக்கு சுமங்களா டாக்டர்கிட்ட தான் ப்ரசவம் பாக்கனும்னு ஆசை. ஆனா என்ன பண்றது, அவ்ளோ காசும் இல்ல, “எவ்ளோ செலவானாலும் பாத்துக்குறேன், அங்கயே போலாம்” னு தைரியமா சொல்லவும் ஆளு இல்ல. அதான் வேற வழியே இல்லாம இந்த வெளிச்சம் ஆஸ்பத்திரிக்கு வந்தேன். பேரப்பாரு வெளிச்சமாம் வெளிச்சம். பூரா டஞ்சன் மாதிரியேதான் இருக்கு.

லேபர் ரூமுக்குள்ள பெட்டு பக்கத்துல போய் ஸ்ட்ரெச்சர் நின்னுச்சி. ஸ்ட்ரெச்சரும் லேபர் பெட்டும் ஒரே உயரம் இருந்ததால, இதுல இருந்து அதுல கொஞ்சம் ஈசியா மாறிட்டேன். இது ஒன்னாவது இந்த ஆஸ்பத்திரில சரியா வச்சிருக்காங்களேன்னு சந்தோசப்பட்டுக்குறேன். அதற்குள் இரண்டு நர்சு பொண்ணுங்க வந்துட்டாங்க. ஒரு நர்சு பொண்ணு என்னோட கால்களைத் மெதுவா தூக்கி பெட்டைவிட கொஞ்சம் உயரமா இருந்த கட்டையில் நிக்கவச்சா. இன்னொரு நர்சு பொண்ணு என்னோட கைய புடிச்சி பிபி எல்லாம் பாத்துட்டு இருந்தா. எனக்கு வலி உயிர்போகுற மாதிரி இருக்கு. “அம்மா” “அம்மா” ன்னு விடாம கத்திட்டே இருக்கேன்.

வேகமா ரெண்டு டாக்டருங்க உள்ள வந்தாங்க. அங்க ஏற்கனவே இருந்த நர்சுங்ககிட்ட ஏதேதோ கேட்டாங்க. ஒரு டாக்டர் என் கால் பக்கத்துல நின்னுக்கிட்டாங்க. இன்னொரு டாக்டர் என் தலைபக்கத்துல வந்து, “ஒன்னும் பிரச்சன இல்லம்மா. நல்லபடியா சுகப்ரசவந்தான் ஆகப்போகுது. நீ மட்டும் கொஞ்சம் வலிய பொருத்துக்கிட்டு நல்லா புஷ் பண்ணு. அது போதும். மத்ததெல்லாம் நாங்க பாத்துக்குறோம். சரியா?” ன்னு சொல்லிட்டு அவங்களும் என் கால் பக்கத்துல போய் நின்னுக்கிட்டாங்க.

“புஷ் பண்ணு” ன்னு மெதுவா சொல்லிட்டே இருந்தாங்க. ரெண்டுபேர்ல எந்த டாக்டர் சொல்றாங்கன்னு கூட நான் கவனிக்கல. புஷ் பண்ண முயற்சி செஞ்ச்சிட்டு தான் இருக்கேன். கொஞ்ச நேரத்துல, “நல்லா புஷ் பண்ணு” “நல்லா புஷ் பண்ணு” ன்னு குரல உசத்தி சத்தமா சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கு சுத்தமா சக்தியே இல்ல, இதுல எங்கருந்து நல்லா புஷ் பண்றது. 

“டாக்டரம்மா, ஆப்பரேசன் பண்ணிடுங்கம்மா..” ன்னு என்னால முடிஞ்சமட்டும் கத்திப்பாத்துட்டேன். ஆனா அவங்க அதை கண்டுக்காம “புஷ் பண்ண், புஷ் பண்ணு” ன்னுதான் கத்திட்டு இருக்காங்க. சிசேரியன் பண்ணா ஆஸ்பத்திரிக்குதான் அதிகமா காசு வரும், ஆனாலும் பண்ணமாட்றாங்களே. நல்ல ஆஸ்பத்திரிதான் போலன்னு நினைச்சிக்கிட்டு நான் கூடியமட்டும் மூச்ச இழுத்துப்புடிச்சி புள்ளைய வெளிய தள்ளப்பாக்குறேன். ஆனா இந்த புள்ள வெளியவருவனான்னு அடம்புடிச்சி உள்ளார உக்காந்துகெடக்குது பாரேன்.

“நீ புஷ் பண்ண சொல்லிட்டிரு. நாங்க சீஃப் டாக்டர பாத்துட்டு வரோம்.” னு சொல்லிட்டு ரெண்டு டாக்டரும் வெளிய போயிட்டாங்க. நர்சு பொண்ணுங்க என்னையே பாத்துட்டு இருக்குதுங்க.

நான் நல்லா கெட்டியா கைய புடிச்சிக்கிட்டு இருக்குற ஒரு நர்சு பொண்ணு என்னையப் பாத்து, “அக்கா நல்லா புஷ் பண்ணிடுக்கா” ன்னு சொல்லுது. 

“முடியலம்மா…” ன்னு கூட முழுசா சொல்லமுடியாம கொளறி சொன்னேன். 

“டாக்டர்கிட்ட எனக்கு ஆப்பரேசன் பண்ணச் சொல்லிடும்மா” ன்னு என்னால் முடிந்த அளவு கெஞ்சிக்கேட்டேன் அந்த நர்சு பொண்ணுகிட்ட. அந்த பொண்ணுக்கு எப்படிப்பாத்தாலும் 20-22 வயசுதான் இருக்கும்.

“அக்கா, இங்க எப்பவும் ஆப்பரேசன் பண்ற டாக்டர் வேலய விட்டுப் போயிட்டாங்கக்கா. இப்ப இருக்குற டாக்டர் புதுசுக்கா. அவங்களுக்கு ஆப்பரேசன் பண்ணவெல்லாம் தெரியாதுக்கா. நீ எப்புடியாவது புஷ் பண்ணிடுக்கா. நெறய இரத்தம் வேற போயிருச்சி. இனிமேல வேற ஆஸ்பத்திரிக்கு போகக்கூட முடியாதுக்கா.  ப்ளீஸ்கா, எப்படியாவது புஷ் பண்ணிடுக்கா. புள்ள வெளிய வந்துட்டா, எல்லாம் சரியாயிடுங்கா” ன்னு பொல பொலன்னு கண்ணுல தண்ணி ஊத்திட்டே கடகடன்னு சொல்லிட்டா.

ஆஸ்பத்திரிக்கு வந்து எவ்ளோ நேரம் ஆச்சின்னு கூட தெரியல. சுதந்திர தினம் கூட முடிஞ்சிசிருக்குமோ என்னவோ. எட்டிநிமிந்து பாக்கமுடியலன்னா கூட, வயித்துல இருந்து ஒரு இம்மிகூட புள்ள வெளிய வரலன்னு பாக்காமலேயே எனக்கு தெரியுது. ஒருவேளை புள்ள ரொம்ப ஓவர் வெயிட்டா ஆயிருக்குமோன்னு தோனுது.

சீஃப் டாக்டர கூப்ட்டு வாரேன்னு சொல்லிட்டுப் போன ரெண்டு டாக்டரும் சீஃப் டாக்டர் இல்லாமத்தான் திரும்ப வந்தாங்க. திரும்பவும் “புஷ் பண்ணு, புஷ் பண்ணு” ன்னு டாக்டருங்க சொல்றாங்க. இதுவரைக்கும் எனக்கு வலிமட்டும் தான் ப்ரச்சனையா இருந்திச்சி. எப்படியும் புள்ள நல்லபடியா பொறந்துடும், ஆனா அதுவரையும் வலிதான் அதிகமா இருக்கும்னு நெனைச்சிட்டிருந்தேன். இப்ப தான் என் புள்ளைய பத்தி அதிகமா கவலப்படுறேன். அச்சோ, உள்ளார எம்புள்ளக்கு மூச்சுத்தெனறுதோ என்னவோன்னு ஏதேதோ யோசன வர ஆரம்பிச்சிருச்சி. இதுவரைக்கும் செஞ்சதவிட அதிகமா மூச்ச இழுத்து மொத்த உசுரையும் சேத்துவச்சி புள்ளைய வெளிய தள்ளப்பாத்தேன். 

பெரிய பிரச்சனைல இருக்கும்போதுதான் அந்த ப்ரச்சனைக்கு யார் காரணம்னு யோசிச்சிப் பாத்து கோபம் வரும்போல. “ரெண்டாவது புள்ள வேணாம், ரெண்டாவது புள்ள வேணாம்” னு தலப்பாட அடிச்சிக்கிட்டனே, கேட்டாங்களா எல்லாரும். “ஒத்தப்புள்ளன்னா தனியா கஷ்டப்படும், தம்பியோ தங்கச்சியோ இருந்தா கூட்டுசேந்து பொழச்சிக்கும். ஒன்னுக்கு ஒன்னுன்னா, இன்னொன்னு தொணை நிக்கும்” ன்னு தெனமும் நைனைன்னு தொல்லப்பண்ணி என்னைய இந்த நெலமைக்கு கொண்டாந்து விட்டுட்டாங்களே. 

“நாந்தான் உன்னைய ஒத்தப்புள்ளையா பெத்துட்டு இப்ப தனியா கெடக்குறேன். எனக்கு ஒன்னுன்னாகூட, உன் ஒருத்திய மட்டுந்தான் நம்பிக்கெடக்க வேண்டியிருக்கு. இதே இன்னொன்ன பெத்திருந்தா, ஒன்னு மாத்தி ஒன்னுன்னு ஆறுதலா இருந்திருப்பேன். நீயும் கார்த்திகாவ ஒத்தையா விட்ராதடீ” ன்னு எப்ப ஊருக்கு வந்தாலும் அம்மா ஒருபக்கம் பொலம்பித்தள்ளும்.

தெருவுல வெளையாடும்போது ஏதாவது பசங்க அடிச்சிட்டாங்கன்னு கார்த்திகா அழுதுட்டே வீட்டுக்கு வந்தாப்போதும், “இதுக்குதான் இன்னொன்ன பெத்துப்போட்டீன்னா, அதுங்களே வீட்டுக்குள்ளா வெளையாடிக்கும். இப்பப்பாரு தெனமும் இது தெருவுல போய் யார்கிட்டயாவது அடிவாங்கிட்டு வருது” ன்னு மாமியர் வேற சான்ஸ் கெடைக்கும்போதுலாம் சொல்லிக்காட்டிடுவாங்க. இதெல்லாம் பத்தாதுன்னு, ஒரு கல்யாணம் காட்சின்னு எங்க போனாலும், “என்ன ஒத்தையோட நிறுத்திட்டியா? அடுத்ததா விசேசம் எதுவும் இல்லியா?” ன்னு பாக்குறதுங்க எல்லாம் அதுங்கபாட்டுக்கு கேட்டுட்டு போகும். இதயெல்லாம் கேட்டுத்தானோ என்னவோ, “நமக்கு இன்னொரு புள்ள இருந்தா நல்லாத்தான் இருக்கும்லடீ” ன்னு என் வீட்டுக்காரர் வேற எப்பவாச்சும் இலேசா சொல்லிடுவாரு.

மொத புள்ளைய பெத்தெடுக்குறதுக்கே நான் பட்டபாடு எனக்குதான் தெரியும். “மொத புள்ளைக்கு மட்டுந்தாண்டி கொஞ்சம் கஷ்டமாருக்கும். ரெண்டாவதுக்குலாம் சரியாயிடும்”னு டாக்டர் கணக்கா பக்கத்து வீட்டு பெருசுங்க வேற நேரங்காலம் தெரியாம ஒத்து ஊதிட்டு போகும். ஒருத்தர் மாத்தி ஒருத்தரா பேசிப்பேசி, என்னைய ஏதோ கல்நெஞ்சக்காரி மாதிரியே பேச ஆரம்பிச்சிட்டாங்க. எல்லாரும் பேசுறத பாத்து, “எனக்கு ஒரு தம்பி வேணும்மா” ன்னு எம்புள்ளையே ஏங்க ஆரம்பிச்சிருச்சி.

ஒருகட்டத்துல எதுவுமே பேசமுடியாம, நானே ரெண்டாவது பெத்துக்க தயாராயிட்டேன். அதுவும் நிப்பனான்னு அடம்புடிச்சி ரெண்டு வாட்டி அபாசன் ஆயிரிச்சி. 

சரி, எம்புள்ளைக்கு எதுவும் ஆயிடக்கூடாதுன்னு இருந்த மொத்த பலத்தையும் இழுத்துப்புடிச்சி விடாம மூச்ச இழுத்துவிட்டு புள்ளைய வெளிய கொண்டார பாத்தேன். 

“அப்டிதான். அதேமாறிதான். நல்லா புஷ் பண்ணு” ன்னு இன்னமும் அந்த டாக்டருங்க சொல்லிட்டு இருந்தாங்க. இன்னும் அதிகமா மூச்ச இழுத்துவிட்டேன். புள்ளயோட தலை கொஞ்சம் வெளிய வந்துருச்சின்னு நானே உணந்தேன். புள்ளையோட தலையப்பாத்ததும், டாக்டருங்களும் நர்சுங்களும் பரபரப்பரப்பா ஆயிட்டாங்க. ஏதேதோ பேசிக்கிட்டாங்க. “இத எடு, அத எடு, இங்கப்புடி, அங்கப்புடி” ன்னு அவங்க பேசிக்கிட்டது எதுவும் எனக்கு சரியா புரியல. நான் என்னோட புள்ளைய காப்பாத்தனும்னு மட்டுந்தான் உசுரக்குடுத்து புஷ் பண்ணிட்டிருக்கேன். புள்ளையோட தலை பாதி வந்திருக்கும்னு நினைக்கிறேன். ஆனா கொஞ்சம் நிமிந்து என்னோட தொடைக்கு நடுவுல என்ன நடக்குதுன்னு பாக்குற தைரியமும் தெம்பும் கூட இல்ல எனக்கு.  டாக்டருங்க புள்ளையோட தலையப்புடிச்சி இப்ப இழுக்குறாங்க போல. அவங்க என்னையே புடிச்சி இழுக்குறமாதிரி இருந்திச்சி. அந்தளவுக்கு புள்ள டைட்டா உள்ளார இருக்குன்னு நெனைக்கிறேன். நானும் கத்துறேன், டாக்டருங்களும் கத்துறாங்க.

ஒருவாட்டி மூச்ச இழுத்து விடும்போது, “அம்மா….” ன்னு ஒரு பெரிய சத்தத்தோட நான் கத்தவும், புள்ள வெளியவந்து டாக்டர் கையில போய்ச்சேரவும், தொடைக்கு நடுவுல இருந்து பக்கட் இரத்தம் ஓங்கி பீச்சியடிக்கிறதுக்கும் ஒன்னா இருந்திச்சி. 

என்ன நடக்குதுன்னே தெரியாம கொஞ்ச நேரம் உடம்பும் மூளையும் அப்புடியே அமைதியா ஆயிரிச்சி போல. இப்ப இலேசா கண்ணமுழிச்சி பாக்கும்போதுதான் புரிஞ்சிது.

“அக்கா, உங்களுக்கு ஆம்பளப் புள்ள பொறந்திருக்கு. நாலரைக் கிலோ வெயிட்டு இருக்கான்கா” ன்னு அந்த நர்சு பொண்ணு என் காதுகிட்டு சந்தோசமா சொல்லிச்சி. உடம்ப அசைக்காம கண்ண மட்டும் சுத்தவிட்டு புள்ளைய எங்கன்னு நான் தேடுனத நர்சும் பாத்திருக்கனும்னு நினைக்கிறேன்.

“புள்ள ரொம்ப வெயிட்டா பொறந்ததுனால நல்லா செக் பண்றதுக்காக பக்கத்துல இருக்குற குழந்தைங்க ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருக்காங்கக்கா. ஆனா ஒன்னும் பிரச்சன இல்லக்கா. நல்லா கொழு கொழுன்னு அழகா இருக்கான்” ன்னு சொல்லிட்டு ஏதோ ஊசிபோட்டா எனக்கு.

மெதுவா எந்திரிக்கலாமான்னு பாத்தேன். ஆனா அசையமுடியல. எந்த உணருமே இல்லாத மாதிரி தான் இருக்கு. கொஞ்ச நேரம் கழிச்சி, திரும்பவும் வலி உசுருபோச்சி. “அம்மா” ன்னு கத்துனேன். அப்படியே  தலையிலருந்து நெஞ்சுவரையும் ஒரேதூக்கு தூக்கிப்போட்டிச்சி. திரும்பவும் என்ன நடந்ததுன்னே தெரியாம போச்சி. அதுக்கப்புறம் கண்ண தொறக்க நினைச்சாலும் முடியல. ஆனா நிறைய பேர் எம்பக்கத்துல நின்னு பேசுறது மட்டும் எனக்கு தெளிவில்லாம கேக்குது.

என்னென்னவோ பேசிக்குறாங்க. எனக்கு தோராயமாத்தான் கேக்குது. என்னாலயும் எதுவும் பேசவோ அசையவோ முடியல. சிலபேர் என்னைய பெட்ல இருந்து தூக்கி பக்கத்துல வச்சமாதிரி இருந்திச்சி. அது மெதுவா அசைய ஆரம்பிச்சப்போதான், என்னைய ஸ்ட்ரெச்சர்ல கூட்டிட்டுப் போறாங்கன்னு புரிஞ்சிக்கிட்டேன். என்னய டிஸ்சார்ஜ் பண்றாங்களா, நார்மல் வார்டுக்கு மாத்துறாங்களான்னு தெரியல.

யாரோ, “அசோக், பாத்து கூட்டிட்டுப் போ” ன்னு சொன்னது எனக்குக் கேட்டிச்சி. “அசோக்” அப்படிங்குற இந்த பேரை எப்பக் கேட்டாலும் திரும்பிப்பாப்பேன். ஆனா இப்ப திரும்பவும் முடியல, பாக்கவும் முடியல.

சந்தோசமான விசயம்னாலே அது பள்ளிக்கூட காலந்தான் எனக்கு. +1 படிக்கும் போதே, அசோக்கை எனக்கு ரொம்ப புடிக்கும். அவங்க ஊர்ல பத்தாவது வரைக்கும் படிச்சிட்டு புதுசா எங்க ஸ்கூலுக்கு +1ல சேர்ந்திருந்தான். அவனுக்கும் என்னைய புடிக்குதுன்னு எனக்கு தெரியும். அதை அவனா சொல்லட்டும்னு காத்திட்டே இருந்தேன். ஆனா, பயபுள்ள அநியாயத்துக்கு வெக்கப்படுவான். அவன்கிட்ட அதுவும் எனக்கு ரொம்ப புடிக்கும். +1 லீவுல இருக்கும்போது அவன ரொம்ப தேட ஆரம்பிச்சிருச்சி. அவன் ஊருல இருந்து எங்க ஊருக்குள்ள வர்ரது அவ்ளோ சாதாரண காரியமில்ல.  நானும் அவனோட ஊருக்கு போகமுடியாது. எப்படா ஸ்கூல் தொறக்குமுன்னு காத்துட்டு இருந்தேன். அவனே வந்து சொல்வான்னெல்லாம் ரொம்ப நாள் காத்துட்டு இருக்கமுடியாதுன்னு முடிவு பண்ணேன். +2 முடிஞ்சா ஆளாளுக்கு ஒருபக்கம் போயிருவாங்க. அதனால +2 ஆரம்பிச்சதுமே அவன்கிட்ட சொல்லிடனும்னு நினைச்சேன். ஸ்கூல் தொறந்து மொத நாள்ல சீக்கிரமாவே க்ளாசுக்கு வந்து நான் எப்பவும் உக்காரும் இடத்துல உக்காராம வேற இடத்துல போய் உக்காந்தேன். எனக்கப்புறந்தான் அவன் க்ளாசுக்கு வந்தான். நான் அவனையே பாத்துட்டு இருந்தேன். உள்ள நுழையும்போதே நான் வழக்கமா உக்காரும் இடத்தத்தான் அவன் பாத்தான். அங்க நான் இல்லன்னதும் எங்க உக்காந்திருக்கேன்னு சுத்திசுத்தி தேடுனான். நான் உக்காந்திருக்கிற இடத்த கண்டுபுடிச்சதும், எப்பவும் போல வெக்கப்பட்டுக்கிட்டே அவன் பென்ச்ல போய் உக்காந்தான். அந்த வெக்கம் புடிச்சிருந்தாலும், ‘அடேய், இன்னுமாடா நீ இந்த வெக்கத்த விடல’ ன்னு கடுப்பாவும் இருந்திச்சி.

நாங்க சிலபேர் லன்ச் ஒன்னாதான் சாப்புடுவோம். அசோக் என் பக்கத்துல தான் உக்காருவான். ஆனா பெருசா எதுவும் பேசமாட்டான். கேக்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்வான். அதுவும் வெக்கப்பட்டுக்கிட்டே தான். இவன் கோபப்பட்டாக் கூட வெக்கப்பட்டுக்கிட்டே தான் கோபப்படுவானோன்னு சந்தேகம் வரும். அந்தளவுக்கு எப்பவுமே மூஞ்ச வெக்கமாவே தான் வெச்சிருப்பான்.

+2 வந்தாலே, அடுத்தது என்ன பண்ணப்போறன்னு ஆளாளுக்கு கேட்டுக்குறதுதான வழக்கம். அன்னைக்கு லன்ச்லயும் அதுதான் முக்கியமான பேச்சா இருந்திச்சி. ஒவ்வொருத்தரா சொல்ல ஆரம்பிச்சாங்க. அசோக் என்ன சொல்வான்னு பாத்துட்டு இருந்தேன்.

“+2 ல நான் நிறைய மார்க் எடுத்தா, அடுத்தது இஞ்சினியரிங்க் படிப்பேன். ரொம்ப கம்மியா மார்க் எடுத்தா, டென்த் மார்க்க வச்சி பாலிடெக்னிக் சேருவேன். அதுவே மீடியமா மார்க் எடுத்தா, +2 மார்க்கயே வச்சி பாலிடெக்னிக் சேந்துருவேன்” ன்னு சொன்னான். 

“அப்போ நிறைய மார்க் எடுத்தா நாலு வருசம் படிப்ப, கம்மியா மார்க் எடுத்தா மூனு வருசம் படிப்ப, மீடியமா மார்க் எடுத்தா ரெண்டே வருசத்துல படிப்ப முடிச்சிருவ. அப்புடித்தான?” ன்னு நான் கேட்டதும் எல்லாரும் சிரிச்சிட்டாங்க. 

எல்லாரும் சிரிச்சிகிட்டு இருக்கும்போதே அவன் காதுகிட்டபோய், 

“நீ +2ல மீடியமா மார்க் எடு” ன்னு மெதுவா சொன்னேன்.

“எதுக்கு?” ன்னு கேட்டான்.

“அப்பதான, ரெண்டே வருசத்துல வேலைக்குபோய், என்னைய பொண்ணு கேட்டு எங்க வீட்டுக்கு வருவ” ன்னு சொன்னேன். அசோக் வழக்கம்போல வெக்கப்பட்டான். வழக்கத்துக்குமாறா நானும் கொஞ்சம் வெக்கப்பட்டுக்கிட்டேன். அந்த வெக்கம் வருசம் பூராவும் தொடர்ந்துச்சி. முழு ஆண்டுத்தேர்வு தேதி அறிவிச்சதுமே எங்க வீட்ல அரசல் புரசலா மாப்ள பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. எங்க வீட்டுக்கு யார் வந்தாலும், “அந்த வீட்ல ஒரு பையன் இருக்கான்”, “இந்த வீட்ல ஒரு பையன் இருக்கான்” ன்னு தகவல் சொல்லிட்டு போயிட்டே இருந்தாங்க. கல்யாணம் காட்சிக்கு ஏதாவது போயிட்டு வந்தாலும், அம்மாவும் நிறைய தகவலோட தான் வரும். நானும் அசோக்கும் காதலிக்கிற விசயம் எங்க வீட்ல தெரிஞ்சிபோச்சின்னு தான் நினைக்கிறேன். வீட்ல சொந்தக்காரங்க ஏதேதோ பேசிட்டு இருக்கும்போது, “என்ன இருந்தாலும் குடும்பமானம் முக்கியமில்லயா” ன்னு நடுநடுவுல சொல்வாங்க. அந்த வார்த்தைகள மட்டும், நான் எந்த ரூம்ல இருந்தாலும் எனக்கு கேக்குறமாதிரி சத்தமா சொல்வாங்க. உண்மையிலயே இவங்களுக்கு விசயம் தெரிஞ்சிருச்சா, இல்லன்னா அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்மாதிரி நாந்தான் அப்படி நினைச்சிக்கிறனான்னு தெரில.

ஒரு நாள் நான் ஸ்கூல் முடிஞ்சி வெளியவரும்போது, வாசல்ல என்னோட மாமா ஒருத்தர் வண்டியோட நின்னுட்டிருந்தார். எனக்கு பக்குன்னு ஆயிருச்சி. அசோக்குக்கு புரியனுங்குறதால, “மாமா” ன்னு கத்திட்டே அவர்கிட்ட ஓடிப்போனேன். எனக்கு கொஞ்சம் பின்னால வந்துட்டிருந்த அசோக், அப்படியே வேற பசங்களோட சேந்து நைசா போயிட்டான். 

“இந்த பக்கம் ஒருவேலையா வந்தம்மா. உனக்கு இப்ப ஸ்கூல்விடுற நேரமாச்சேன்னு, அப்படியே உன்ன வீட்ல விட்ரலாம்னு இங்க நின்னேன்” ன்னு சொல்லிட்டு வண்டில கூட்டிட்டுப்போய் வீட்ல விட்டாங்க. இப்படி அடிக்கடி நடக்க ஆரம்பிச்சிருச்சி. மாமாவோ, பெரியப்பாவோ, சித்தப்பாவோ, யாராவது ஒருத்தர் வாரத்துல ஒருநாளாவது திடீர்னு ஸ்கூலுக்கு வர ஆரம்பிச்சாங்க. என்னான்னு கேட்டா ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணத்த சொன்னாங்க. 

அப்படியே +2 பரிட்சையும் வந்திச்சி. மொத பரிட்சை நல்லபடியா எழுதிட்டு, வீட்டுக்கு வந்துபாத்தா, அத்தை-மாமா-சித்தப்பா-பெரியப்பான்னு ஒரு கூட்டமே வந்துருக்கு. என்ன ஏதுன்னு கேக்குறதுக்குள்ளயே, உள்ளகூட்டிட்டுப் போய், புடவைய மாத்தவச்சி, காபித்தட்டை கையில கொடுத்து, எல்லார் கால்லயும் விழவச்சி, ஏதேதோ பேசி முடிச்சிட்டாங்க. என்னோட கடைசி பரிட்சை முடிஞ்ச மறுநாளே எங்க ஊர்லயே இருக்குற மண்டபத்துல எனக்கும் என் அத்தப்பையனுக்கும் கல்யாணமாம். அத்தப்பையன் நல்லவந்தான். ஆனா எனக்கு அசோக்கத்தான புடிச்சிருக்கு. அத எப்படி இவங்ககிட்ட சொல்லிபுரியவப்பேன்.

அடுத்த நாள்ல இருந்து எல்லா பரிட்சைக்கும் என்னை யாராவது கூட்டிட்டு வந்து பரிட்சை ஹால்ல விட்டுட்டு, பரிட்சை முடியிற வரைக்கும் வாசல்லயே நின்னு திரும்ப வீட்டுக்கு கூட்டிட்டு போனாங்க. எனக்கு ரெண்டு பெஞ்ச் முன்னாடி உக்காந்துருக்குற அசோக்குக்ககூட எனக்கு கல்யாணம்னு சொல்ல முடியல. நல்லா தைரியத்த வரவழச்சிகிட்டு, ஒரு பரிட்சையில் ஒரு ஆன்சர் பேப்பர்லயே எல்லா விசயத்தையும் எழுதி பாஸ் பண்ற மாதிரி ஒரு பேப்பர்ல எழுதி முன்னாடி இருந்த பொண்ணுகிட்ட கொடுத்து அசோக்கிட்ட கொடுக்கச் சொன்னேன். அந்த பரிட்சை முடியிறவரைக்கும் நானும் அவனும் பேப்பர்ல எழுதியே மாத்திமாத்தி பேசிக்கிட்டோம். ஆனா என்ன செய்றதுன்னு மட்டுந்தான் எங்களுக்குத் தெரியல.

கடைசியா ஒரு பேப்பர்ல, “கடைசி பரிட்சை முடிஞ்சதும் நான் பின்வாசல்ல போய் நிப்பேன். நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ எனக்குத் தெரியாது. என்னைய எங்கயாவது கூட்டிட்டுப் போயிரு. இல்லன்னா அடுத்த நாள் உயிரோட இருக்கமாட்டேன்” அப்படின்னு எழுதி அந்த பேப்பரை அவனுக்கு பாஸ் பண்ணிட்டு அமைதியா ஜன்னலையே வெறிச்சி பாக்க ஆரம்பிச்சிட்டேன்.

அதுக்குப்பிறகு நடந்த பரிட்சை எதுலயும் நாங்க நேருக்கு நேரா பாத்துக்கவும் இல்ல, பேசிக்கவும் இல்ல, பேப்பர்ல கூட எதையும் எழுதி கொடுத்துக்கல. கடைசி பரிட்சை முடிஞ்சதும் பின்வாசல்கிட்ட போய் நின்னேன். அங்க அசோக்கும் வந்தான். அங்க ஒரு ஆட்டோ நின்னுச்சி. “வா. வந்து ஏறு” ன்னு அசோக் கூப்ட்டான். “எங்க போறோம்” ஒரு வார்த்தகூட அவன்கிட்ட நான் கேக்கல. ஆட்டோ நேரா அவங்க ஊருக்கு போச்சி, அவங்க வீட்டு வாசல்ல போய் நின்னுச்சி. அசோக்கோட அம்மாவும் அண்ணனும் வாசல்லயே நின்னுட்டு இருந்தாங்க. 

“உள்ள வாங்க” ன்னு கூட்டிட்டுப் போனாங்க.

“நீங்க இங்க இருந்தா ஊர்ப்பிரச்சனை ஆயிரும். தின்னவேலில என் ப்ரெண்ட் மணி வீட்டுக்கு போயிருங்க. இதுல அட்ரசும் காசும் இருக்கு. இந்த ஆட்டோலயே போயிருங்க” ன்னு அசோக்கோட அண்ணன் சொன்னாரு. அவங்கம்மா எதுவுமே பேசல. எங்களவிட ரொம்ப பயத்துல இருந்தாங்க அவங்க.

நாங்க தின்னவேலில மணியண்ணன் வீட்ல தங்குனோம். ரெண்டு நாளாச்சி, மூனு நாளாச்சி, நாலு நாளாச்சி. என்ன செய்றதுன்னும் தெரியல. ஊர்ல என்ன நெலவரம்னும் தெரியல. எப்பவுமே வெக்கப்பட்டுக்கிட்டே இருக்குற அசோக்கோட முகமே மாறி, பாக்கவே பரிதாபமா இருந்தான். எல்லாம் என்னாலதானன்னு எனக்கே எம்மேல கோபம்தான் வந்திச்சி. என்னென்னவோ நடந்துருச்சி, இனிமேல் எதுவுமே எங்ககைல இல்ல, என்னதான் நடக்குதுன்னு பாப்போம்னு தான் இருந்தோம். 

ஒருவாரம் கழிச்சி, மணியண்ணன் வழக்கமா வேலை முடிச்ச வர்ற நேரத்துல கதவு தட்டுற சத்தம் கேட்டுச்சி. கதவத்தொறந்ததும் திடுதிடுன்னு 10-20 பேர் வீட்டுக்குள்ள நுழைஞ்சி அசோக்க அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. என்னோட மாமா என் கையபுடிச்சி தரதரன்னு வெளிய இழுத்துட்டுப் போனாரு.

“பறத்தே… பையனுக்கு பிள்ளமாரு வீட்டுப் பொண்ணு கேக்குதா….” ன்னு சொல்லிசொல்லியே அசோக்க அடிச்சாங்க.

எனக்கும் அத்தப்பையனுக்கு நடக்க இருந்த கல்யாணமும் நின்னுருச்சி. அத்தப்பையன் என்ன கட்டிக்கமாட்டேன்னு சொன்னானோ என்னவோ. உடனே எனக்கு கல்யாணம் பண்ணிவைக்காம, ஒவ்வொரு சொந்தக்காரங்க வீட்லயா என்னைய ஒவ்வொரு வாரம் தங்கவச்சி, என்மனச மாத்த முயற்சி பண்ணாங்க. நான் யாருகிட்டயும் எதுவும் பேசாம அமைதியாவே இருந்தேன். அசோக் உயிரோட இருக்கானான்னு கூட தெரியல. ஒருவேளை உயிரோட இருந்தா, அவன் உயிரோடவாவது எங்கயாவது இருக்கட்டுமேன்னு நினைச்சி, நான் மனச மாத்திக்கிட்டமாதிரியும் அசோக்க மறந்துட்டமாதிரியும் காட்டிக்க ஆரம்பிச்சேன். என்னோட விசயம் எதுவும் தெரியாத தூரத்துல ஒரு சொந்தக்காரக் குடும்பத்துல என்னக் கட்டிக்குடுத்தாங்க. அங்கயே வாழ்ந்து, ரெண்டு புள்ளைங்களையும் பெத்துட்டேன். 

அதே அசோக் தான் என்னைய இப்ப ஸ்ட்ரெச்சர்ல கூட்டிட்டுப் போறானான்னு எனக்குத் தெரியல. ஆனா அவந்தான் இதுன்னு நினைச்சிக்கிட்டா கொஞ்சம் வலி குறையிற மாதிரி இருக்கு. அதனால அப்படியே நினைச்சிக்குறேனே. 

ஸ்ட்ரெச்ச்ர் அசையுறது இப்ப நின்னுருச்சி. வண்டியெல்லாம் போறவர்ற சத்தமும் கேக்குது. ஆஸ்பத்திரி வாசலுக்கு வந்துட்டோம்னு நினைக்கிறேன். என்னால கண்ணா தொறக்கமுடியல.

“விடாம ப்ளீடிங்க ஆயிட்டே இருக்கு. எங்களால இதுக்கு மேல எதுவும் செய்யமுடியல. நீங்க கவர்மண்ட் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போயிடுங்க.” ன்னு யாரோ சொல்றது என் காதுல கேக்குது.

“இவ்ளோ நேரம் கழிச்சி இப்பதான் சொல்றீங்க. எம் பொண்டாட்டிய எப்படியாவது காப்பாத்திக் குடுங்க” ன்னு என் வீட்டுக்காரர் குரல் கேக்குது. 

“எங்களால எதுவும் செய்யமுடியாது இதுக்கு மேல. நீங்க எடுத்துட்டு போங்க” ன்னு அவசர அவசரமா பேசுறது ஆஸ்பத்திரி ஓனரோ டாக்டரோவா தான் இருக்கனும்.

ஆளாளுக்கு மாத்தி மாத்தி கத்திகத்தி பேச ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கு எதுவும் புரியமாட்டேங்குது.

“அசோக்” ன்னு யாரோ அந்த பேரைச் சொல்லி கத்திட்டு, “ஸ்ட்ரெச்சர ஆஸ்பத்திரி வெளிய கொண்டு போய் விடு” ன்னு அதட்டி சொன்னதும் ஆஸ்பத்திரி ஓனராத்தான் இருக்கனும்.

இப்ப ஸ்ட்ரெச்சர் இலேசா அசையிறத என்னால கொஞ்சம் உணரமுடியுது.

“உங்க ஆஸ்பத்திரிய உண்டு இல்லன்னு பண்றேன் பாரு” ன்னு ஒரு பக்கத்துல இருந்து குரல்.

“நீங்க என்னவேனாலும் பண்ணிக்கோங்க. மொதல்ல இங்கருந்து கெளம்புங்க” இன்னொரு பக்கத்துல இருந்து குரல்.

“பொறக்கும்போதே அம்மாவ முழுங்கிட்டு பொறந்துருக்கானே, அவன் எனக்கு வேணவே வேணாம்.” ன்னு எங்கருந்தோ ஒரு குரல்.

“பாவிமக, இப்படி ரெண்டு கொழந்தையையும் விட்டுட்டுப் போயிட்டாளே” ன்னு நடுவுல ஒரு குரல்.

இனிமேல் நான் பொழைக்கமாட்டேன்னு எனக்கே தோண ஆரம்பிச்சிரிச்சி. எனக்கு புடிச்ச பையனோட என்ன வாழவிடல, நான் புள்ள பெத்துக்கனுமா வேணாமான்னு என்னையவே முடிவுபண்ணவிடல, எந்த ஆஸ்பத்திரில ப்ரசவம் பாக்கனுங்குறதையும் என்ன தீர்மானிக்க விடல. இப்படி எதுவுமே என்னைக்கேக்காம இவங்களே முடிவு பண்ணிட்டு, இவங்கல்லாம் ஆளாளுக்கு அடிச்சிக்குறாங்க. ஒருத்தர் மேல இன்னொருத்தர் பழிபோட்டுக்குறாங்க. என்னையவும் சேத்து திட்டுறாங்க. கண்ணுகூட தொறக்காத எம்புள்ளயவும் திட்டுறாங்க.

இவங்க யார்மேலயும் எனக்கு தனித்தனியா எந்த கோபமும் இல்ல. ஆனா எனக்கு புடிச்ச வாழ்க்கைய எப்பயுமே வாழவிடாம பண்ணிட்டாங்களேன்னு எல்லார்மேலயும் மொத்தமாத்தான் எனக்கு கோபம்.
“ஐயோ வித்யா…” ன்னு எல்லாரும் சேந்து கத்துனது ஒரு நொடி கேட்டுச்சி. அத்தோட எந்த குரலும் கேக்கல….

-இ.பா.சிந்தன்

Related Posts