அறிவியல்

திருப்பதி சவரத் தொழிலாளர்களின் உரிமைத்தொகை (TDMA)

வாழ்விலிருந்து அறிவியல் – 1

திருப்பதியில் மொட்டை போடும் அனுபவம் பற்றி நகைச்சுவையாக சிலர் குறிப்பிடுவார்கள். அதிக வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்திருக்க வேண்டும் என்ற உந்துதலில் செய்யும் இக்காரியம் ஒரு சிறப்பான அறிவியல் கோட்பாட்டை விளக்குகிறது.

TDMA (Time Division Multiple Access) என்ற  கோட்பாடே அது, தகவல் தொழில்நுட்பம், தொடர்பாடல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் TDMA என்ற கோட்பாட்டை விளக்குவதற்கு திருப்பதி மொட்டையைவிட மிகச்சிறந்த உதாரணத்தைக் யாராலும் கூறமுடியாது. கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் சான்டியாகோ வளாகத்தில் இயங்கும் சென்டர் ஃபார் காக்னிட்டிவ் நியூரோ ஸயன்ஸின் துறைத்தலைவராக பணியாற்றும் பேராசிரியர் வில்லியனூர் ராமச்சந்திரன் ஒரு கண்ணாடியை வைத்து Phantam limbs  என்ற நரம்பியல் பிரச்சனையை குணப்படுத்தியதைப் பற்றி நேர்காணல் ஒன்றில் கூறுகையில் அறிவியல் என்பது விலையுயர்ந்த கருவிகளை வைத்து புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவது மட்டுமல்ல. அரிதான கோட்பாட்டை விலையில்லாத உபகரணங்கள் வைத்து நிறுவுவதின் மூலம்தான் அனைவரும் அறிவியலின் குழந்தைகள் என்ற உணர்வை ஏற்படுத்த முடியும் என்று கூறியிருக்கிறார்.

எளிய விளக்கங்கள் சாத்தியமே:

ஈர்ப்பு அலையை கண்டுபிடிக்க வடிவமைக்கப்பட்ட லிகோ உபகரணம் பல்லாயிரம்கோடி டாலர் பெறுமானது. கடவுள் துகளை கண்டுபிடிக்க வடிவமைக்கப்பட்ட உபகரணமான LHC  பல்லாயிரம் கோடி மட்டுமல்ல பல நாடுகளின் எல்லைக்குள் ஒரே உபகரணம் ஆக்கிரமித்திருக்கிறது. இதுமட்டுமே அறிவியல் அல்ல. எளிய விலையில்லாத உபகரணத்தின் முலம் ஒரு சிக்கலான கோட்பாட்டை விளக்க முடியும். பொதுவாக சிறிய சிந்தனையாக உதித்தெழுந்து அது சிக்கலான கோட்பாடுகளை விளக்குவதில் அடைந்த முன்னேற்றமே அறிவியல் கோட்பாடுகள் உருவான வரலாறாகும்.

பன்முகத்திறன்:

Multi Tasking – இதை சற்றேறக்குறைய அஷ்டாவதானி என்று கூறலாம். ஒரே நேரத்தில் ஒரு மனிதனோ இயந்திரமோ பல பணிகளைச் செய்தால் அதை நாம் Multi Tasking திறன் என்கிறோம். ஒரு இயந்திரமோ மனிதனோ ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வது சாத்தியமா என்றால் முடியாது என்பதுதான் இறுதியான விடை. ஆனால் இது மெய்நிகர் தளத்தில் (Virtual) சாத்தியப்படுத்தப்படுகிறது. இது எவ்வாறு என்றால் அதன் பின்னால் ஒளிந்திருப்பது TDMA கோட்பாடுதான். தொடர்பாடல் பொறியியல் (Communication Engineering) அடிப்படைகளை படிக்கும்பொழுது எனக்கு சவாலாக இருந்தது இந்த கோட்பாடு. இன்றும் இக்கோட்பாட்டை புரிந்து கொள்ள திணறும் பொறியியல் மாணவர்கள் அதிகம் உண்டு.

இன்று நாம் பயன்படுத்தும் கணிணிகளின் இயக்க முறைமை (Operating System) Multitasking திறன் கொண்டது. அது வின்டோஸாக இருந்தாலும் சரி, லைனக்ஸின் பல்வேறு அவதாரங்களாக இருந்தாலும் சரி அவையெல்லாம் Multitasking திறன் கொண்டவையே. அதாவது ஒரே நேரத்தில் பல Applicationகளை இயக்கும் திறன் கொண்டவை. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம்களை நாம் நிகழ்வுத் தூண்டல் அமைப்புகள் (Event Driven System) என்கிறோம். இதற்கு முன்னால் இருந்தது கட்டளைத் தூண்டல் அமைப்புகள் (Command Driven System). கட்டளைத் தூண்டல் அமைப்புகள் மூலம் ஒருநேரத்தில் ஒருபணியைத்தான் செய்ய முடியும். எனவேதான் DOS என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை நாம் பயன்படுத்திய காலத்தில் ஒருநேரத்தில் ஒரு Application மட்டும்தான் இயக்க முடிந்தது. கட்டளைத் தூண்டல் அமைப்பில் ஒவ்வொரு கட்டளையாகத்தான் நிறைவேற்ற முடியும். ஒரு கட்டளையை முடிக்காமல் அடுத்த கட்டளையை எடுத்துக் கொள்ள முடியாது.

டிடிஎம்ஏ:

நிகழ்வுத் தூண்டலில் ஒரு நிகழ்வின் ஒரு பகுதியை மட்டும் செய்துவிட்டு அதை செய்து முடிக்கும் பொழுது இன்னொரு நிகழ்வை உருவாக்கி, உருவாக்கிய அந்த நிகழ்வை வரிசையின் கடைசியில் நிறுத்திவிட்டு அடுத்த நிகழ்வை பணிக்கு எடுத்துக் கொள்ள முடியும். கட்டடளைத் தூண்டல் அமைப்பிலிருந்து நிகழ்வுத் தூண்டல் அமைப்பிற்கு மாறியதற்கு உதவிய அடிப்படை கோட்பாடு TDMA. அதாவது திருப்பதியில் மொட்டை போடும் சவரத் தொழிலாளர்கள் கையாண்டுவந்த அரிய கோட்பாடு.

ஒரு அலைவரிசையில் ஒரு செய்தியைத்தான் ஒருகாலத்தில் அனுப்பிக் கொண்டிருந்தோம். எனவே வானொலியில் ஒரு நிலையத்திற்கு ஒரு அலைவரிசை. இன்றோ ஒரு அலைவரிசையில் பல ஒலிபரப்புகளை செய்ய முடிகிறது. இதனடிப்படையில் வந்துவிட்டது கைபேசிகள். இதற்கும் உதவிய அடிப்படை கோட்பாடு திருப்பதி மொட்டையை விளக்கும் TDMA.

நுண் விநாடி வேலைகள்:

ஒரு வேலையைச் செய்ய செலவிடப்படும் நேரத்தை நுண் விநாடிகளில் (Micro Second) உடைத்து (ஒரு விநாடியின் பத்துலட்சத்தில ஒரு பங்கே ஒரு நுண் விநாடியாகும்) அதை பலகோடி சிறுவேலைகளாக பிரித்துவிடுவோம். அவற்றை வரிசைப்படுத்தி ஒவ்வொரு நுண் விநாடியாக தொடர்ச்சியாக இடைவெளியில்லாமல் அந்த வேலையைச் செய்தால் அது திட்டமிட்ட நேரத்தில் முடிவடைகிறது. எனினும் வெளியிலிருந்து பார்க்கும் பொழுது பல நுண் விநாடிகளின் வரிசையாக செய்யப்பட்ட சிறுவேலைகளின் தொகுப்பே அந்த முழுவேலை என்பது நமக்குத் தெரியாது. இதுபோல் கைவசம் உள்ள ஆயிரம் வேலைகள் ஒவ்வொன்றையும் நுண்விநாடிகளாக உடைத்து வரிசைப்படுத்திவிட்டு ஒரு வேலையின் ஒரு நுண் விநாடிப் பணியை மட்டும் செய்துவிட்டு அடுத்த வேலைக்குத் தாவி அதன்  ஒரு நுண் விநாடிப் பணியைச் செய்து இப்படியே ஒவ்வொரு வேலையாக தாவி ஆயிரம் வேலைகளையும் அவைகளின் ஒரு நுண் விநாடிப் பணியை மட்டும் செய்துவிட்டு அடுத்த சுற்றுக்கு வந்தால் நமக்குச் செலவாயிருப்பது ஒரு நொடியின் ஆயிரத்தில் ஒருபங்கு நேரம் மட்டுமே. எனவே ஒரு விநாடியில் அனைத்து வேலைகளிலும் ஆயிரம் முறை ஒவ்வொரு நுண் விநாடியாக நிறைவேற்றப்பட்டிருக்கும்.

குபேரர்களாவரோ சவரத் தொழிலாளர்கள்!

ஒரு பணியின் மொத்த நேரத்தை சிறு துளிகளாக உடைத்து பல பணிகளை வரிசையாக முறைவைத்து கையாள்வதே TDMA ஆகும். இந்த அரிய கோட்பாட்டிற்கு உரிமையாளர்கள் திருப்பதியின் சவரத் தொழிலாளர்கள். இந்தக் கோட்பாட்டின் அமலாக்கம் இல்லாத தொழில்நுட்பமே இன்று கிடையாது. ECE மாணவர்களிடம் உரையாட வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் அவர்களிடம் TDMA பற்றி விளக்குங்கள் என்பேன். இறுதியில் திருப்பதி சவரத் தொழிலாளர்களே இதற்கு உரிமையாளர்கள் என்பேன். வாழ்விலிருந்துதான் அறிவியல் வெடித்துக் கிளம்புகிறது. அறிவியலுக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. இன்றிருக்கும் முதலாளித்துவ சமூக அமைப்பில் அறிவுச் சொத்துடமை கோரப்படுகிறது. நீண்டகாலமாக TDMA கோட்பாட்டை இயல்பாகவே கையாண்டுவரும் திருப்பதி சவரத் தொழிலாளர்களே அதன் உரிமையாளர்கள். நியாயமாக அவர்களுக்குப் போய்ச் சேரவேண்டிய Royaltyயை எண்ணிப் பாருங்கள்.

Related Posts