தமிழ் சினிமா

சர்கார் Vs சர்க்கார் சர்ச்சைகள் .  . . . . . . . . . . . . !

கார்ப்பரேட் முதலாளி கலாநிதி மாறனின் தயாரிப்பில் , முருகதாஸ் இயக்கத்தில் , விஜய் நடிப்பில் வெளிவந்த படம் சர்கார். இது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி ஆளும் கட்சியினரால் பேனர் உட்பட கிழிக்கப்படும் எதிர்ப்பினை பெற்றுள்ளது யதார்த்தமா … வியாபார தந்திரமா … விளம்பர யுக்தியா … அதைத் தாண்டிய ஒன்றா … என சிந்திக்க வேண்டியுள்ளது.

வாக்களிக்க வந்த நாயகனின் ஓட்டு கள்ள ஓட்டாக மாறியதை முன்னிட்டு அவர் நீதிமன்றத்தை நாடி தேர்தல் முடிவை நிறுத்தி வைத்து தன் ஓட்டை செல்ல வைக்கிறார் . இதன் மூலம் சட்டப்பிரிவு 49 B ஐ பயன்படுத்தி வாக்காளர் தன் வாக்கை பதிய முடியும் என்பதை இப்படம் கூறுகிறது . தற்போதைய டிஜிட்டல் உலகில் கள்ள ஓட்டு என்பதை விட அரசால் தரப்படும் எலக்ட்ரானிக் வாக்குப் பெட்டியே பெரும் கள்ளத்தனம் செய்து வருவதைக் காண்கிறோம் . இந்நிலையில் இச்செய்தியால் என்ன பலன் ?

கார்ப்பரேட் நலன் காக்க மத்திய அரசு ரேசன் , கேஸ் உட்பட பல மானியங்களை நிறுத்தி வரும் சூழலில் அதை எதிர்க்கத் துணியாத மாநில ஆட்சியில் , தீபாவளிக்கு இலக்கு நிர்ணயித்து 600 கோடிக்கு மதுபானம் விற்கப்பட்டதில் பெருமை கொள்வோரின் ஆட்சியில் , மக்களுக்கான மிகச் சிறு நிவாரணங்களாக இலவசங்கள் ! இதைக் கூட கார்ப்பரேட்களால் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதே இப்படம் தரும் அடுத்த செய்தி !

ஆட்சிப் பணியாளர்களின் நேர்மையான செயல்பாடு முழுமையாக மக்கள் உயிர் காக்க பயன்பட வேண்டும் எனும் அரசியலை அறம் படம் துணிந்து கூறியது . ஆனால் இப்படம் மிக முக்கிய பிரச்னையான கந்துவட்டி பிரச்னை உட்பட சகல பிரச்னைகளையும் போகிற போக்கில் தூவி விட்டு அரசியல் படமாக விளம்பரம் செய்து கொள்வதில் என்ன நேர்மை உள்ளது ?  மக்கள் வாக்களித்து தேர்வு செய்த முதலமைச்சர் இடத்தில் ஒரு அதிகாரியை முன்னிறுத்தி காட்டுவதன் மூலம் இப்படம் என்ன வகை ஜனநாயகத்தை மக்களுக்கு காட்டுகிறது ?

புகை பிடிக்கும் விளம்பரக் காட்சி , கதை திருட்டு பிரச்னை மூலம் ஏற்பட்ட பரபரப்பு ஒரு வகையில் இப்பட வெற்றிக்கு வழி செய்தது என்றால் இப்படம்.வெளிவந்த பிறகான நிலைமை வேறொரு வகையில் பரபரப்பை உருவாக்கி வெற்றிக்கு வழி செய்து வருகிறது.

அதோடு ஜனநாயகத்தை நேசிப்போர் மனதில் ஆழமான சிந்தனையையும் உருவாக்குகிறது .

படம் வெளியானதும் தணிக்கை குழுவால் அனுமதிக்கப்பட்ட இப்படக் காட்சிகளை கண்ட அமைச்சர்கள் பேட்டிகளின் போது ‘ சட்ட ரீதியாக எதிர்ப்போம் ‘ என ஒரு கணம் அறிவிக்கின்றனர். அடுத்த கணம் இப்படம் திரையரங்குகளில் திரையிடப்படக் கூடாது என உத்தரவிடப்படுகிறது . இந்த சூடு அடங்கு முன் மற்றொரு குரல் இளைய தளபதியாக தமிழக இளைஞர்கள் கொண்டாடும் கதாநாயகனை ‘ வளர்ந்து வரும் நடிகர் ‘ எனும் வகையில் எச்சரித்து மிரட்டுகிறது. அரசின் இந்த எதிர்வினைகள் மக்களை எந்த திசையில் வழிநடத்துகிறது என்பதை கடந்த இரு தினங்களில் கண்டு வருகிறோம்.

இப்பட வில்லியின் பெயர் கோமளவல்லி! இது மறைந்த முதல்வரை அவமானப்படுத்துவது! மிக்ஸி, கிரைண்டர் உடைப்பு காட்சிகள் அம்மா கொண்டு வந்த திட்டங்களை மட்டும் எதிர்க்கும் செயல்! எனவே நாங்கள் உணர்ச்சி வசப்படுவதில் எந்த தவறுமில்லை!அமைச்சர்கள் முதல் அனைவரும் முதலில் அதிமுக உறுப்பினர்கள் . பிறகுதான் மக்களுக்கு பொறுப்பாளர்கள் !  என்று ஊடக விவாதங்களில் பங்கேற்ற ஆளும் தரப்பினரும் தங்கள் பங்கிற்கு சங்கூதினர்.

விளைவு ! சென்னை , மதுரை , கோவை , உட்பட பல ஊர்களில் அதிமுகவினர் கூட்டமாக சென்று தியேட்டர்களில் வைக்கப்பட்ட பேனர்களைக் கிழிப்பது கல்லெடுத்து வீசுவது என களத்தில் இறங்கியிருப்பதைக் காண்கிறோம். சில இடங்களில் பட திரையிடலும் நிறுத்தப்பட்டது.

ஒரு விவாதத்தில் பேசியவர் திரைப்படம் உருவாகி வெளிவர நடைபெறும் திரைமறைவு நடவடிக்கைகளும் அதில் ஆதாயங்களும் உள்ளபோது லாபமடையும் திரைத்துறையினர் நேர்மையாளர்கள் போல் பேசக்கூடாது என வெடிகுண்டு வீசி பேசியதையும் இணைத்துப்  பார்த்தால் தமிழகம் சென்று கொண்டுள்ள அபாயகரமான பாதை புலப்படுகிறதி.

இப்படம் அரசியலற்ற அரசியல் நோக்கி இளைஞர்களை நகர்த்துகிறது . பிரச்னையின். ஆழத்திற்குள் செல்லாமல் சர்வசாதாரணமாக பிரச்னைகளை அடுக்குகிறது எனும் ஆரோக்கியமான பட விமர்சனங்களுடன் அரசின் ஜனநாயக விரோதப் போக்கையும் ஒரு சார்பான நடவடிக்கைகளையும் வேறு சிலர் விவாதங்களில் அம்பலப்படுத்தியதையும் காண முடிந்தது.  இதை விட முக்கியமாக இந்த அராஜகம் என்பது ஒரு படத்திற்கோ ஒரு நாயகனுக்கோ மட்டுமான எதிர்ப்பின் வெளிப்பாடல்ல ! இதை அனுமதித்தால் இனி வரும் படங்களில் தணிக்கை குழுவிற்கு மேல் ஒரு தணிக்கை குழுவாக ஆளும் தரப்பினர் இருப்பார்கள் எனும் அபாயகரமான செய்தியும் இருப்பதை அழுத்தமாய் பதிந்து பொது சமூகத்தை எச்சரிக்கை செய்ததையும் காண முடிந்தது .

அமைதிப் பூங்கா என வருணிக்கப்பட்ட தமிழகத்தின் செயல்பாடுகள் பல சமீப காலங்களில் மாறியுள்ளதையும் அதற்கு பின்னணியில் மத்திய ஆளும் தரப்பின் அழுத்தம் இருப்பதையும் காணும் போது தமிழக ஆளுங்கட்சியினரின் இது போன்ற அராஜகங்களும் அரசின் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் மனநிலையும் மீண்டும் மீண்டும் கருத்து சுதந்திரத்தின் குரல்வளை நெரிப்பு கடுமையாவதையே காட்டுகிறது.

வட இந்தியாவில் வாட்டர் , பத்மாவத் போன்ற பல படங்கள் வெளியான போது மத உணர்வுகள் புண்படுவதாக கூறி ரவுடித்தனம் செய்து மிரட்டிய அராஜக செயல்களை ஒத்திருக்கிறது தற்போதைய அராஜகங்கள் . கமல் ரஜினி போன்ற நடிகர்கள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்திருப்பது வரவேற்கத் தக்கது.

இந்தப் படத்தில் வரும் கோமளவல்லி பெயர் மியூட் செய்யப்பட்டிருக்கிறது . இது அராஜகத்தின் மூலம் எதையும் சாதிக்கலாம் எனும் மனநிலையை ஆட்சியாளர்களுக்கு உருவாக்கினால் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல ! விஜய் உட்பட பலரும் அரசியலுக்கு வர ஆசைப்படும் சூழலில் மெர்சல் படத்தின் காரணமாக விழுந்த சூடு மத்திய அரசுடன் எந்தவித முரணும் எழக் கூடாது எனும் எச்சரிக்கையை உருவாக்கி இருப்பதையும் , முதலமைச்சர் கனவு காணும் அனைவரும் மாநில அரசை மட்டும் குறி வைத்து விமர்சிக்கும் மனநிலைக்கு மாறியிருப்பதையும் காண முடிகிறது .

மத்திய மாநில ஆட்சியாளர்களின் இந்தப் போக்கு தொடர்ந்தால் அது திரைத்துறைக்கு மட்டுமான அல்லது அரசியலுக்கு வர விரும்புபவர்களுக்கான மிரட்டலாக மட்டும் பார்க்க இயலாது. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனுக்கு வரும் அபாயகரமான நிலையிது ! எனவே மக்களாகிய நாம் அரசியல் அராஜகங்களை எதிர்ப்போம் ! கருத்து சுதந்திரம் முன்னெடுப்போம் ! ஜனநாயகத்தை பாதுகாப்போம் !

– இரா. செம்மலர்.

 

Related Posts