அரசியல் சமூகம் நிகழ்வுகள்

“எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ!”

வரதராஜ பெருமாள் கோவில்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் புதுவை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. சங்கரராமனை யாரும் கொலை செய்யவில்லை. அவர் தன்னைத் தானே வெட்டிக் கொன்று தற்கொலை செய்து கொண்டார் என்று கூறாமல் குற்றச்சாட்டு நிருபிக்கப்படவில்லை என்று கூறியதோடு நின்றுவிட்டது ஆறுதல் அளிக்கும் ஒன்றுதானே.

பக்தர்களுக்கு ஆசி வழங்குவதற்காகவே உயர்ந்து பழக்கப்பட்ட சங்கராச்சாரியார்களின் கைகள் நீதிமன்றத் தீர்ப்பை கேட்டவுடன் வெற்றி என்று சைகை காட்டும் வகையில் உயர்ந்துள்ளன.

தீர்ப்பு வெளியானவுடன் ஜெயேந்திரர் காஞ்சி மடத்திற்கு கூட செல்லாமல், ஆறுபடை வீடுகளில் ஒன்றான சூரசம்ஹாரம் நிகழ்ந்த திருச்செந்தூருக்கு சென்றிருக்கிறார்.

பிறழ் சாட்சியங்களில் கின்னஸ் சாதனை நிகழ்த்திய வழக்காக இதையே கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட அரசு தரப்பு சாட்சியங்களில் 83 பேர் பிறழ் சாட்சியங்களாக மாற்றப்பட்டன. கொலை செய்யப்பட்ட சங்கரராமன் மனைவியும், அரசு தரப்பு ஒன்றாவது சாட்சியுமான பத்மா அவரது மகனுமான ஆனந்த் சர்மா ஆகியோர் அரசு தரப்பு வழக்குக்கு எதிராக அதாவது கொலை குற்றம் சாட்டப்பட்ட சங்கராச்சாரியார்களுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்தனர்.

இந்த வழக்கில் புகார் கொடுத்தவரான கணேஷ் என்பவரே நீதிமன்றத்தில் பல்டி அடித்துவிட்டார். இதனால் வழக்கிற்கு ஆதாரமான புகாரே கேள்விக்குறியாகி விட்டது என்று நீதிபதி கூறியுள்ளார். இதில் ஆச்சரிப்பட ஒன்றுமில்லை. சங்கரராமன் மரண வாக்குமூலம் எதுவும் கொடுக்கவில்லை. அப்படி கொடுத்திருந்தால் இந்த கொலைக்கும் சங்கராச்சார்யார்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியதாகக்கூட வாக்குமூலம் தயாரித்திருகக முடியும். அந்த அளவிற்கு செல்வாக்கு மிக்கவர்கள் தான் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.

சங்கராச்சார்யார் கைது செய்யப்பட்டவுடன் அப்போதைய ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன் தமது துணைவியாரை சங்கர மடத்திற்கு அனுப்பி வைத்தார் என்பதையும், பின்னர் பாஜக பரிவாரம் சார்பில் சங்கராச்சார்யார் கைதை கண்டித்து புதுதில்லியில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் அவரே பங்கேற்றார் என்பதையும் கவனத்தில் கொள்க. அதுமட்டுமல்ல, இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்தபோது உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் தாம் சங்கர மடத்தின் பக்தர் என்றும் எனவே இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று கூறியதும் நினைவில் நிறுத்தத்தக்கது.

அதிமுக ஆட்சிக் காலத்தின் போதுதான் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் திமுக ஆட்சி வந்தது. அப்போது கும்பகோணத்தில் அமைச்சர் கோ.சி.மணி ஜெயேந்திர சரஸ்வதியை சந்தித்து “ஆசி” பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொலையாளிகளை சங்கரராமன் மனைவி பத்மா, மகள் உமா மைத்ரேயி ஆகியோர் அடையாளம் காட்டவில்லை என்று நீதிபதி தமது தீர்ப்பில் “அருமையாக” சுட்டிக் காட்டியுள்ளார். பட்டப்பகலில் கூலிப்படை மூலம்தான் சங்கரராமன் கொல்லப்பட்டார். கொலை நடந்த இடத்தில் பத்மா, உமா ஆகியோர் இல்லை. பிறகு எப்படி அடையாளம் காட்டமுடியும் என்பது தெரியவில்லை.

இந்த வழக்கில் முதலில் போலி குற்றவாளிகள் ஆஜராகினர். ஆனால் அவர்களை ஆஜராகுமாறு கூறியது, குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரர் உள்ளிட்டவர்கள்தான் என்பதை அரசுத்தரப்பால் நிருபிக்க முடியவில்லை என்றும் நீதிபதி கூறியுள்ளார். அந்த போலிக் குற்றவாளியிடம் முறையாக விசாரித்திருந்தால் கூட தங்களை ஆஜராகுமாறு கூறியது யார் என்பதை தெரிவித்திருப்பார்கள். அதைக் கூட கண்டறிய போலீசார் முயலவில்லை. நீதிமன்றமும் அதுகுறித்து கண்டு கொள்ளவில்லை.

பல்வேறு வழக்குகளில் சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதாக நீதிமன்றங்கள் கூறியுள்ளன. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு முதல்நாள் தில்லி உயர்நீதிமன்றம் சிறுமி ஆருஷி வழக்கில் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் கொலையை நேரில் பார்த்த சாட்சிகள் யாரும் இல்லை. ஆனால் ஆருஷியின் தோழி ஒருவர் கூறிய தகவல் அடிப்படையில் மட்டுமே நீதிபதி ஆருஷியின் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளார்.

ஆனால் சங்கர மடத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து சங்கரராமன் புனைபெயரில் தொடர்ச்சியாக கடிதம் எழுதி வந்துள்ளார். அது பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளது. நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொலை செய்யும் அளவுக்கு சங்கரராமனுக்கு வேறு எதிரிகள் யாரும் இருந்ததாக எதிர்தரப்பில் கூறப்படவில்லை. ஆருஷி கொலை வழக்கில் சந்தர்ப்ப சாட்சியத்தை அடிப்படையாகக் கொண்ட நீதிமன்றம் இந்த வழக்கில் அதை கருத்தில் கொண்டதா என்று நீங்கள் கேட்கக் கூடாது. ஆருஷியின் பெற்றோர்கள் என்ன மடத்தின் தலைவர்களாகவா இருந்தார்கள்?

தமிழகத்தின் இந்த வழக்கின் விசாரணை நியாயமாக நடைபெறாது என்று ஜெயேந்திரர் தரப்பில் கூறப்பட்டதை தொடர்ந்தே வழக்கு புதுவை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் தமிழக அரசு இந்த வழக்கை நடத்தக்கூடாது என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க புதுவை அரசு வழக்கை நடத்தியது. அதாவது வழக்கை பதிவு செய்தது தமிழக காவல்துறை, வழக்கை நடத்தியது புதுவை அரசு.

புதுவையில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தபோது விசாரணை நீதிபதியாக இருந்த ராமசாமி மற்றும் ஜெயேந்திரர் இடையே இடைத்தரகர்கள் மூலம் பேரம் பேசப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக தனி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையிலியேயே நீதிபதி ராமசாமி மாற்றப்பட்டு சி.எஸ்.முருகன் புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர்தான் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளார்.

தீர்ப்பு வழங்கப்பட்டவுடன் சங்கராச்சார்யார்களின் பக்தர்கள் நீதிமன்றத்திற்கு திருஷ்டி கழிக்க முயன்றனராம். இதற்கு சில வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தநிலையில் நீதிமன்றம் முன்பு தேங்காய் உடைத்துள்ளனர். இதற்கு பதிலாக நீதிமன்ற வாசலில் நின்று சங்கு ஊதியிருக்கலாம். காரியம் நல்லபடியாக முடிந்ததல்லவா?

ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் மீது பாலியல் புகார் உள்பட பல்வேறு புகார்கள் எழுந்தன. பிரபல எழுத்தாளர் அனுராதாரமணன் கூட ஜெயேந்திரர் மீது குற்றம் சாட்டியிருந்தார். அந்த புகார்கள் எதுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. கொலை வழக்கு விசாரணையே இந்த லட்சணத்தில் நடந்து முடிந்தால் மற்ற வழக்குகளை விசாரித்து என்ன பிரயோஜனம்.

புதுவை அரசு தரப்பு வழக்கை நடத்திய லட்சணம் இப்படியாக மங்கலம் பாடப்பட்டுவிட்டது. வழக்கை பதிவு செய்த அதிமுக அரசுதான் தற்போது தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. தமிழக அரசு மேல் முறையீடு செய்யுமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சந்தேகத்திற்கு இடமில்லாமல் புகார் நிருபிக்கப்படவில்லை என்று நீதிபதி கூறியுள்ளார். நமக்கு என்னவோ பல்வேறு விசயங்களில் பலத்த சந்தேகம் எழுகிறது.

Related Posts