இந்திய சினிமா காதல் சமூகம் சினிமா மாற்று‍ சினிமா

‘சாய்ராத்’ – ஆணவக்கொலைகளுக்கு எதிரான ஆவணம்…

சோகமான கதையோ, காட்சிகளோ, திரைக்கதையோ கொண்ட எத்தனையோ திரைப்படங்களை நாம் பார்க்கிறோம். அவை தரும் சோகத்திலிருந்தும் அதிர்ச்சியிலிருந்தும் மீள்வதற்கு கொஞ்ச நேரம் ஆகலாம். ஆனால் ஒரு சில திரைப்படங்களின் சோகக் காட்சிகள் மட்டுமே அந்தக் காட்சியையும் தாண்டி பலநாட்கள் நம்மை சோகத்திற்குள்ளாக்கும். அக்காட்சிகளைப் போன்ற கொடுமைகள் நமக்கு அருகிலேயே சிலருக்கு நடந்துகொண்டிருக்கிறது என்கிற அதிர்ச்சிதான் அதற்கு மிகமுக்கியமான காரணமாக இருக்கும்.

சமீபத்தில் அப்படியாக அதிகமாக பாதித்த திரைப்படங்கள் – தமிழில் விசாரணை, மராத்தியில் ஃபான்றி.

“உனக்கு அருகிலேயே இப்படியொரு கொடூரம் நடந்துகொண்டிருக்கிறதே! அதனைக் கண்டும் காணாமல் எப்படி உன்னால் போகமுடிகிறது?”

என்று பளாரென்று அறைந்து கேட்பதுபோன்ற திரைப்படங்களாக அவை இருந்தன.

மராத்தி மொழியில் ஃபான்றி படத்தை எடுத்த அதே இயக்குனர் தற்போது “சாய்ராத்” என்றொரு திரைப்படத்தை எடுத்திருக்கிறார். வியாபார ரீதியாகவும் பெரியளவிலான வெற்றியை இத்திரைப்படம் எட்டியிருக்கிறது.

 

sairat2சாதியிலும் வர்கத்திலும் ஆதிக்கம் செலுத்தும் ஒரு குடும்பத்திலிருக்கும் பெண்ணும், எல்லாவற்றிலும் ஒடுக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் ஆணும் காதலிப்பது தான் கதை. அவர்கள் இணைந்தார்களா இல்லையா? இணைந்தார்கள் என்றால் அதன்பின்னர் அவர்களது வாழ்க்கை என்னவானது? என்கிற ஒருவரிக்கதையைக் கொண்டதுதான் சாய்ராத் திரைப்படம். ஆனால், நிகழ்காலத்தின் உண்மைகள் திரைக்கதையோடு சொல்லப்பட்டிருக்கும் விதம்தான் இத்திரைப்படத்தை கவனத்திற்கு உரியதாக்குகிறது. அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரத்தை தனக்கே தனக்கானதாக வைத்திருக்கும் ஆதிக்க பட்டேல் சாதியினரின் வாழ்க்கையையும், அரசியல் அதிகாரமோ எந்தவித சொத்துக்களோ உடைமைகளோ இல்லாமல் ஆதிக்க சாதிப் பட்டேல்களுக்கு அஞ்சியே வாழவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தலித்துகளின் வாழ்க்கையையும் அருகாமையில் நின்று பார்க்கிற அனுபவத்தை இத்திரைப்படம் கொடுக்கிறது.

தலித் குடும்பத்திலிருந்து கல்லூரிக்கு படிக்கவரும் நாயகனான பார்ஷ்யாவுக்கும், பட்டேல் குடும்பத்திலிருந்து அதே கல்லூரிக்கு படிக்கவரும் நாயகியான அர்ச்சிக்கும் காதல் வருகிறது. வழக்கமான திரைப்படங்களில் பார்க்கிற தலித் காதாபாத்திரமாக அவன் சித்தரிக்கப்படவில்லை. எந்தவிதக் கெட்டப்பழக்கமும் இல்லாதவனாகவும், பள்ளியிறுதியாண்டுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து கல்லூரிக்கு வந்தவனாகவும் காட்டப்படுகிறான் நாயகன். தமிழில் அட்டக்கத்தி திரைப்படத்தில் நாயகன் தனக்கு ஏற்பட்ட காதல் தோல்விக்குப்பின்னரான காட்சியில், ஒயின்ஷாப்பில் தண்ணியடிக்காமல் நேராக ஒரு டீக்கடைக்குச் சென்று டீயும் வெங்காய போண்டாவும் சாப்பிடுவானே, அப்படியானதொரு நுண்ணரசியல் சாய்ராத் திரைப்பட நாயகன் பார்ஷ்யாவின் கதாபாத்திர வடிவமைப்பிலும் பல காட்சிகளில் காணமுடிகிறது.

தலித் ஆசிரியரை வகுப்பில் எல்லா மாணவர்களுக்கும் முன்னாலேயே கைநீட்டி அடிக்கும் அர்ச்சியின் சகோதரன், மாணவர்களின் சாதியை ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே சொல்லிக்கொடுக்கவேண்டும் என்று கல்லூரி முதல்வரையே ஆணையிடும் அர்ச்சியின் தந்தை, என ஆதிக்க சாதி அதிகார மனோபாவத்தை நேரடியாகவே பிரச்சார நெடியில்லாமல் பல இடங்களில் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

எதிர்ப்பாத்தது போலவே அவர்களது காதலை அர்ச்சியின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்க்கின்றனர். பார்ஷ்யாவும் அவனது குடும்பமும் கடுமையான தாக்குதலுக்குள்ளாகின்றனர். கடுமையான போராட்டத்திற்குப் பின்னர் வேறுவழியின்றி அர்ச்சியும் பார்ஷ்யாவும் ஊரைவிட்டே வெளியேறுகின்றனர். அவர்கள் சென்றுசேர்கிற ஆந்திராவில் எவரொருவரையும் தெரியாத நிலையில் என்ன செய்வதென்றே தெரியாமல் தெருத்தெருவாக சுற்றுகின்றனர். அக்காட்சிகள் ‘காதல்’ திரைப்படத்தை நினைவுபடுத்துகிறது என்றாலும், ‘காதல்’ திரைப்படத்தைவிடவும் வலிமிகுந்ததாக இருக்கிறது. தெருவோரத்தில் வாழ்கிற மனிதர்கள் அன்றாடம் சந்திக்கிற அவலங்களை மெல்ல தொட்டுச்செல்கின்றன அக்காட்சிகள்.

யாரையுமே தெரியாத ஊரில் எங்கிருந்து எப்படி வாழ்க்கையைத் துவக்குவது என்று புரியாமல் தவிக்கின்றனர் பார்ஷ்யாவும் அர்ச்சீயும். துறுதுறுவெனவும் தைரியமான பெண்ணாகவும் இருந்த அர்ச்சீ, குழப்பங்களும் பயமும் ஆட்கொண்ட மனநிலைக்குத் தள்ளப்படுகிறாள். வீடென்று சொல்லமுடியாத ஓரிடத்தில் எவ்விதவசதிகளும் இல்லாமல் தங்கவேண்டிய சூழல் ஏற்படுகிறது. வறுமையிலும் வறுமை, ஆதரவற்ற நிலை, புரிதல் சண்டைகள் இவையெல்லாவற்றையும் தாண்டி திருமணம் செய்துகொள்கின்றனர். மெல்ல மெல்ல வாழ்க்கையை ஆரம்பிக்கின்றனர். வேலை, திருமணம், குழந்தை என அவர்களது வாழ்க்கையில் வெளிச்சம் நுழைகிறது.

ஒரு தலித்தை திருமணம் செய்துகொண்டதாலேயே அர்ச்சீயின் குடும்பமே சாதித்தூய்மையினை இழந்துவிடுவதாக, அவர்களது அரசியல் அதிகாரம் சரிகிறது. சாதிவெறிக் கூட்டத்தின் தலைவராக இருந்துவந்த அர்ச்சீயின் தந்தை, கட்சியில் பதவியையும் இழக்கிறார்.

‘ஒரு குழந்த பிறந்தால், எல்லாம் சரியாகிவிடும்” என்பதெல்லாம் ஒரே சாதிக்குள்ளான காதல் திருமணங்களில் மட்டும்தான்  சாத்தியம் என்பதை அறியாத அர்ச்சீ, தன்னுடைய அம்மாவை தொலைபேசியில் அழைத்து, குழந்தையைப் பேசவைக்கிறாள். அதன்பின்னர் அர்ச்சீயின் வீடுதேடி புத்தாடைகள் மற்றும் பரிசுப்பொருட்களுடன் அவளது சகோதரன் மற்றும் உறவினர்கள் வருகிறார்கள். பார்ஷ்யாவுக்கு பயமேற்படுகிறது. ஆனால் அர்ச்சீ மகிழ்ச்சியில் திளைக்கிறாள். அதற்குப்பின்னான இறுதி ஐந்து நிமிட காட்சிகள் நம்முடைய நெஞ்சை நிச்சயம் உலுக்கும். நாம் பார்த்துக்கொண்டிருப்பது வெறும் திரைப்படம்தானே என்பதை மறைத்து, கதறிக்கதறி அழவைக்கும்.

தனக்குப் பிடித்தமானவருடன் சேர்ந்துவாழ எவ்வளவு தூரம் ஓடி, எவ்வளவு துன்பங்களை காதலிப்பவர்கள் அனுபவிக்கவேண்டியிருக்கிறது என்பதையும், அவர்கள் எவ்வளவு தூரம் பயணித்தாலும் எந்தளவிற்கு உயர்ந்து மகிழ்வான வாழ்க்கை வாழ்ந்தாலும் அதனை ஒன்றுமில்லாமல் செய்வதற்கு சாதிவெறியும் எவ்வளவுதூரமென்றாலும் தேடிச்செல்கிறது என்பதைச் சொல்லும் படமே “சாய்ராத்”.

 

இப்படத்திலிருந்து அவ்வளவு எளிதாக பார்வையாளர்களால் வெளிவந்துவிடமுடியாது. வெறுமனே திரைப்படமாக மட்டுமே இருந்திருந்தால், சாய்ராத்திலிருந்து விரைவாக மீண்டுவந்துவிடலாம்.
ஆனால் ஆயிரமாயிரம் கௌசல்யா-சங்கர்கள், திவ்யா-இளவரசன்கள் இங்கே சாதிவெறி ஆணவக்கொலைகளால் துன்புறுகிறார்களே! அவர்களையெல்லாம் சாய்ராத் திரைப்படம் நம் கண்முன்னே கொண்டுவந்துவிடுகிறது. சாய்ராத்தின் காட்சிகளும் சம்பவங்களும் நமக்கு அருகிலேயே இன்னமும் நடந்துகொண்டுதானிருக்கிறது என்கிற யதார்த்தம்தான் அதிகளவிலான பயத்தை உண்டுபண்ணுகிறது…

இத்திரைப்படம் சாதிவெறியைக் குறைக்குமா என்று தெரியவில்லை. ஆனால், சாதிவெறியின் உச்சகட்டமாக நிகழ்த்தப்படும் ஆணவத்திமிர்ப் படுகொலைகள் குறித்து ஒரு பெரிய அதிர்வலைகளையும் பரந்துபட்ட விவாதங்களையும் சாதிவெறிக் கூடாரத்திற்குள்ளேயே கூட நிச்சயமாக துவக்கும் என்கிற நம்பிக்கையை இத்திரைப்படம் விதைக்கிறது…

– இ.பா.சிந்தன்

Related Posts