பிற

உரக்கத்தான் பேசுவோம், இனி!

ஊமை சனங்களை

உரக்கப் பேசு‍ என

உசுப்பி விட்டவனே!

கனத்த தத்துவங்களின்

மையப் பொருளை

ஒற்றை வசனத்தில்

துடிக்கத் துடிக்க ஒலிக்கச்

செய்தவனே!

தங்களைத் தொலைத்தவர்களை

அருகே அழைத்துத் தடவுக் கொடுத்து‍

அவர்கள் உள்ளங்கையில் மை போட்டுத்

தங்களைத் தாங்களே மீட்டேடுக்க வைத்த

மந்திரக் கலைஞனே!

உபரி மதிப்பின் வர்க்கக் கணக்கை

உள்ளூர் வீதியில் படம் பிடித்துக் காட்டியவனே!

ஔரத் (பெண்), நீ நடத்திய

பாலியல் சமத்துவத்தின் அதிரடி‍ பாடம்!

காசியாபாத் தொழில்நகரத்துக்

காலர் கசங்கிய பாட்டாளிகளின்

கூலிக்கு‍ மட்டுமல்ல,

சுயமரியாதைக்குமாக உரத்துப் பேச எழுந்த

எங்கள் நவீன கதை சொல்லியே!

தோழர்களின் ஆவேசக் குரல்களினூடே

திடீரென்று‍ முளைத்தன

ஆளும் வர்க்கத்தின்

அடியாட்களது‍ குண்டாந்தடிகள்

அடிமைத்தனத்திற்கு‍ எதிரான உனது‍ கனல் பொறிகள்

அடியாட்களின் இதயத்தைத் தொடுமுன்

அவர்களது‍ எசமானர்களின்

ஏவல் தூண்டிவிட்டதில்

நாடகக் களத்தில்

களப் பலியானது‍ உனது‍ உடல்!

வெறிச் செயல்காரர்களது‍

வெற்றிக் களிப்பின் கொட்டத்தை

வெட்டி‍ வீழ்த்தியது‍,

உனது‍ ரத்தம் உறையாத மண்ணில்

உயர்ந்த மாலா ஹாஷ்மியின் முஷ்டி‍!

Related Posts