அரசியல் இதழ்கள் இலக்கியம் சமூகம்

சமூக அவலங்களின் எதிர்ப்பு குரலாக மண்டோ

Saadat Hasan Manto

Saadat Hasan Manto

சாதத் ஹசன் மண் டோ என்ற பெயர் எத்தனை பேருக்குள் அதிர்ச்சியையும் கிளர்ச்சியையும் ஏற்படுத்தி  இருக்கிறது என்பது இலக்கிய உலகம் அறிந்ததுதான். வாசகனின் மனதை அதிர்வுகளுக்கு உள்ளாக்கி அவர்களின் சிந்தனை போக்கையே நிலைகுலைய செய்யும் எழுத்தாற்றல் கொண்ட மகத்தான படைப்பாளன் மண்டோ என்பதால் தான் கீழ் கண்ட வரிகளின் மூலம் தன்னை யார் என்று பிரகடனப்படுத்திக் கொள்கிறார் மண்டோ.

In the name of god the compassionate, the merciful here lies Saadat Hasan Manto and with him lie buried all the secrets and mysteries of the art of short story writing under tons of earth he lies still wondering who among the two is greater short story writer : God or He…

மே மாதம் 11ம் தேதி 1912ல் ஒன்றுபட்ட பஞ்சாப் மாநிலத்தில் பிறந்து அமிர்தசரசில் பள்ளிப்படிப்பை முடித்து  இளம் வயதிலேயே உலக இலக்கியங்களை வாசித்து பழகியதன் விளைவாய் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்  சக்தி மிக்கதொரு படைப்பாளனாக திகழ்ந்தார்.

மொழிபெயர்ப்பில் தன் இலக்கிய பணியை துவங்கிய மண்டோ பம்பாயிலும் டெல்லியிலும் தன் வாழ்க்கை பயணத்தை துயர் மிகு சூழலிலும் எதற்கும் சமரசம் செய்து கொள்ளாமல் விரும்பியதுபோல் வாழ்ந்து முடித்தவர் மண்டோ.

உருது மொழிக்கும் அதன் இலக்கியத்திற்கும் மகுடம் சூட்டிய கிஷன் சந்தர்,ராஜேந்திர சிங் பேடி,இஸ்மத் சுக்தாய் ஆகியோரோடு மண்டோவும் ஒருவர் என்பதை விட அவர்களின் பட்டியலில் மண்டோ முதன்மையானவர் என்றால் கூட அது மிகையாகாது. தான் வாழும் காலத்திலேயே தன் கதைக் களங்களில் காணப்படும் பட்டவர்த்தனமான போக்குக்காக அதிக விமர்சனத்துக்குள்ளான மண்டோ திற, கருப்பு சல்வார், சில்லிட்டு போன சதைபிண்டம் ஆகிய கதைகளுக்காக வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றம் வரை சென்றிருந்தாலும் அவரின் காலத்திலேயே சக படைப்பாளிகளால் மிகசிறந்த எழுத்தாளன் என்று பெரும் பேரு பெற்றவர் மண்டோ.

துயரம் துரோகம் அவலம் என சமூகத்தில் அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருக்கும் அதன் அத்தனை கூறுகளையும் விமர்சனப்பூர்வமாக அனுகியதோடு மட்டுமல்லாமல் கலை, இலக்கியம், அரசியல் என எல்லா தளங்களிலும் ஊடுறுவி அரசதிகாரத்தின் இரட்டை நிலையை நேர்பட விமர்சித்தவர் மண்டோ.

ஹெகலையும் மார்க்ஸையும் மண்டோவுக்கு அறிமுகம் செய்தவரும் சோசலிச சித்தாந்தத்தில் மிகுந்த  நம்பிக்கை கொண்ட பத்திரிக்கையாளர் பாரி அலீக் என்பவரால் பத்திரிகை துறைக்கு அறிமுகமாகியவர் தான் மண்டோ.துவக்க காலத்தில் சோசலிசத்தின் மீது இருந்த நம்பிக்கை குடும்ப வறுமையின் காரணமாக யாரை எதிர்த்து எழுதி வந்தாரோ அதே பிட்டிஷ் அரசின் கிழக்கிந்திய நிறுவனத்தில் எழுத்தாளராய் பணிபுரிந்து மடிந்து போனதை கண்டு உள்ளம் கொதித்த மண்டோ தன் ஆசான் என்றும் பாராமல் சாய்வு நாற்காலி புரட்சியாளர் என துணிவோடு விமர்சித்தவர் மண்டோ.

அவர் காலத்திய சினிமா பிரபலங்களை இவருக்கு நெருக்கமானவர்களையும் கூட ஒளிவு மறைவின்றி அவர்களின் வெளித்திரை விளக்கி எழுதியதன் காரணத்துக்காகவும் அதிக விமர்சனதுக்குள்ளானவர் மண்டோ.

மண்டோவின் நூற்றாண்டை கொண்டாடிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் (2012 மே 11) அவரது படைப்புகளை மீள் பார்வைக்கு உட்படுத்துவதும் புதிய தலைமுறைக்கு அவரின் படைப்புகளை அறிமுகம் செய்வதும் ஆரோக்கியமானதொரு அமசமே என்றாலும் அவற்றின் படைப்புகளில் காணப்படும் அன்றைய சமூக அவலம் இன்றைக்கும் மாறாமல் அப்படியே நிலைத்திரும் வேதனையை அவரின் எழுத்துக்கள் நம் மனதில் ஆழப்பதிவு செய்துவிடுவதில் ஆச்சரியமில்லை.

ஆசிய மண்ணின் சமூக அவலத்தின் எதிர்ப்பு குரலாக விளங்கிய மன்டோவை இந்த நூற்றாண்டு நிகழ்வுகளின் வாயிலாக மக்களிடத்தில்  கொண்டு செல்வது இன்றைய தேவையும் ஆகும்.

சிறுகதைகள், சொற்சித்திரங்கள், நினைவோடைகள், கடிதம் என பல வகைகளில் மண்டோவின் படைப்புகள் நீண்டாலும் அதில் மிகமுக்கியமாக  விளங்குவது அவரின் சிறுகதைகளே ஆகும்.சிறுகதை வாசிப்பு, வாசகனின் வாசிப்பு  மனோநிலையை உந்தித்தள்ளும் சக்தி கொண்ட வடிவம் என்பதாலும் கவிதைக்கு அடுத்தார்ப்போல் சொல்ல வந்த விஷயத்தை சுருங்க சொல்லிவிடக் கூடிய வடிவம் சிறுகதைகளில் தான் சாத்தியப்படுகிறது என்பதாலும் மண்டோவின் சிறுகதைகள் அபாரசக்திமிக்கதாய் விளங்குகிறது.

அவமானம், திற, ஹமீதின் குழந்தை, மூன்றரையனா, கருப்பு சல்வார், ஜானகி, கடவுள் மீது சத்தியமாக, குஷியா, ஹாரிபான் ஜூபைதா, மோசஸ், நூறு விளக்குகளின் வெளிச்சம், 1919ல் நடந்தது, சுதந்திரத்துக்காக, சில்லிட்டுப்போன சதிப்பின்டம், சகாய், சல்யுட், ஒரு நாள் என மண்டோவின் ஆளுமை பறந்து விரிந்தாலும் “அவமானம், திற, சல்யுட், ஹாரிபான்,மூன்றரையனா, சில்லிட்டு போன சதைபிண்டம்” ஆகிய கதைகள் வாசக மனதை அதிர்வுகளுக்கு உள்ளக்கி நமது சிந்தனை போக்கையே அதிர்சிக்குள்ளாக்கும் வகையிலான கதைகள் ஆகும்.

நிர்வாணத்தையும் அவமானமற்ற உணர்வுகளையும் கண்டு பிரம்மித்து போகும்  நாணத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து அலட்சியப்படுத்துகிறான் என மண்டோவே தன்னை சுயமாக வெளிப்படுத்தி கொள்கிறார்.

அத்துணை அவலங்களின் மத்தியிலும் வறுமையின் பிடிக்குள் சிக்கிவிடாமல் பிரிடிஷ் இந்தியாவையும் சுதந்திர இந்தியாவையும் பிரிவினைக்கு பின்பான இந்திய-பாகிஸ்தானின் சமூக சூழலையும் அதன் பின்னால் செயல்பட்டுவந்த பிரிட்டிஷ் அமரிக்க நயவஞ்சக தனத்தையும் தனக்கே உண்டான மொழி நடையில் கேள்விக்குள்ளாக்கி கிண்டல் செய்கிறார் மண்டோ.

எழுதி என்ன கிழித்து விடப்போகிறீர்கள் பேசாமல் ஒரு மளிகை வைத்து பிழைக்கலாமே என்று மண்டோவின் மனைவி எதிர்பார்த்திருந்தால் கூட அங்கேயும் அந்த பொருட்களின் மீதான பார்வையும் அதன் நீட்சியுமாய் உதித்த எண்ணங்கள் கருத்துருவம் பெற்றுக்கொள்ளும்  ஆளுமை கொண்டவர் மண்டோ. அதனாலேயே அவர் “தான் பழக்கப்பட்ட பாதைகளை தவிர்த்து எப்போதும்  கயிற்றின் மேல் நடப்பதையே விரும்புகிறான். எந்த நொடியும் அவன் கீழே விழுந்து விடுவான் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள் ஆனால் அவன் இதுவரை இந்த வெட்கம் கெட்டவன் ஒருமுறை கூட கீழே விழுந்தவனில்லை” என்று தன்னை தானே பிரகடனப்படுத்தி கொள்கிறார் மண்ட்டோ.

இஸ்மத் சுக்தாய் கூறும்போது போது கூட அவன் (மண்டோ) சுய தம்பட்டம் செய்து கொள்ளும் பழக்கம் உடையவன் என்றாலும்  ஒருபோதும் தன்னை மிகைபடுத்தித் கொண்டதில்லை என மண்டோவுக்கும் அவருக்குமான அனுபவங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்துகொள்கிறார்.இந்த உலகத்தை ஒருவனால் மற்றொருவருக்கு விளக்க முடியாது.ஒருவன் தானாக அதை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறும் மண்டோ நான் கதைகளை எழுதுவதில்லை கதைகள் தான் என்னை எழுதிக் கொள்கிறது என்கிறார்.

உருது மொழிக்கு மகுடம் சூட்டிய மண்டோ மெட்ரிகுலேஷன் தேர்வில் மூன்றுமுறை தோல்வியை சந்தித்து தேறியவர்.பள்ளி நாட்களின் போது உருது மொழியில் தோல்வியுற்றவர் என்றால் இன்றைய உலகம் நம்புமா! பள்ளிக்கூட பாடத்துக்கும் நிதர்சன  வாழ்வுக்கும் எத்தனை  நீண்ட தூரம் இடைவெளி நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு மண்டோ சிறந்ததொரு உதாரணம்.

நறுமணங்களில் இருந்து விலகி தூய்மையற்றதை தேடி ஓடுகிறான், பிரகாசமான சூரிய  ஒளியை வெறுத்து குழப்பமான இருண்ட பாதைகளை தேர்ந்தெடுக்கிறான் என்று அவரே  போல விபச்சாரத்தையும் பற்றியும் மதஅடிப்படைவாத சிந்தனைகளின் பேரில் பிரிவினையின் போது பெண் உடல்களின் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்புணர்ச்சிகளை பற்றியும் எந்தவித கூச்சமும் இன்றி உள்ளது உள்ளபடியே எழுதியதால் மண்டோ பெண் உடலின் மீது இச்சை கொண்டவன் என்ற கூற்றையெல்லாம் பொய்யாக்கி உடலை உடலை விற்று பிழைப்பவர்களின் வறுமையையும் வலியையும் சில நேரங்களில் அவர்களுக்கு ஏற்ப்படும் அவமானங்களையும் மிகவும் எதார்த்தமாக தன படைப்புகளில் விவரிக்கும் போது அவர்களின் உள்ளத்திற்குள் முகிழும் ஆயிரமாயிரம் கேள்விகளையெல்லாம் சமூகத்தின் விவாத பொருளாக்குகிறார் எனினும் மிகவும் துணிச்சலோடு அதனை எதிர்கொள்ளும் ஆற்றல் படைத்தவருமாகிறார் மண்டோ.

250 கதைகளுக்கு மேல் எழுதி இருக்கும் மண்டோ தனக்கே உரித்தான கடித இலக்கியத்தில் தனிச்சிறப்பாய் விளங்கியவர்.சொற் சித்திரங்களின் மூலம் தேசிய நிகழ்வுகளை பதிவுசெய்தவர் என பன்முக தன்மையோடு தனித்து விளங்கிய மண்டோ தன வாழ்வின் இறுதி காலங்களில் குடிக்கு அடிமையாகி ஒரு கோப்பை மதுவுக்காக ஏங்கி தவித்தவர் ஆவார்.அவரின் மருத்துவர் குடிப்பழக்கத்தை நிறுத்த சொல்லி கட்டாயப்படுத்தியதால் அவரும் தன் வாழ்வை ஜனவரி 18ம் தேதி 1955ல் நிறுத்திக் கொண்டார்.

ஒரு இலக்கியவாதி சமூக அவலங்களை கண்டு மௌனியாகாமல் தனது பேனாவை அதற்கெதிரான ஆயுதமாக பயன்படுத்துவான் என்பதன் பிரதிபலிப்பே மண்டோவின் அமரத்துவம் பெற்ற படைப்புகள் நமக்கு செல்லும் செய்தியாகும்.

அவமானம்:தேர்தெடுக்கப்பட்ட படைப்புகள். பாரதி   புத்தகாலயம்.

அவமானம்:தேர்தெடுக்கப்பட்ட படைப்புகள். பாரதி புத்தகாலயம்.

என்னுடைய கதைகளை மோசமாக விமர்சனம் செய்யும் அவர்கள் தான் அதை ரகசியமாக படிக்கிறார்கள். படித்து என் கதைகளிலிருந்து எதையாவது கற்றுக் கொள்வதற்குப் பதில் கூச்சப்படுகிறார்கள்.பிறகு அந்த சந்தோஷங்களுக்காக குற்றவுணர்வு கொண்டு முட்டாள்தனமாக விமர்சனங்களை என் படைப்பின் மீது சுமத்துகிறார்கள் என்று சாடும் மண்டோ கால நிர்பந்தம் வாழ்க்கை சூழலின் நெருக்கடி என பல்வேறு காரணங்களால் உந்தப்பட்ட மண்டோ பிரிவினைக்கு பின்பு அவற்றின் விருப்பம் போல் பாகிஸ்தானில் குடியேறினார் என்றாலும்  இரு தேசங்களுக்குமான தனிப்பட்ட சொத்தாய் மாறாமல் மானிட சமூகத்தின் தோழனாய் அமரத்துவம் பெற்று நிலைத்து நிற்கிறார் சாதத் ஹசன் மண்டோ.

மண்டோவை தரிசிக்க :

  1. அவமானம்: தேர்தெடுக்கப்பட்ட படைப்புகள். பாரதி   புத்தகாலயம்.
  2. அங்கிள் சாம்கு மண்டோ கடிதங்கள். பயணி வெளியீட்டகம்.
  3. மண்டோ படைப்புகள். நிழல் மற்றும் புலம் பதிப்பகம்.

Related Posts