சித்திரங்கள்

தொலைந்துபோன எனது பணம் ரு.28 லட்சம் …

எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக கிட்டத்தட்ட 28 லட்சத்தை தொலைத்துவிட்டிருக்கிறேன். நான் மட்டுமா, என் அம்மாவும் சேர்த்து தொலைத்திருகிறார். எங்கள் குடும்பத்திற்கென இருக்கும் ஒரே சொத்தான வீட்டின் மதிப்பு ரூ.30 லட்சம். அதுவும், எங்கள் பகுதியில் நிலத்தின் மதிப்பு காரணமாக உயர்ந்தது.

அப்பா வாழ்நாள் முழுக்க உழைத்து, ஒரு கடனில்லாத வாழ்க்கையை எங்களுக்கு கொடுத்துவிட்டிருந்தார். அவரும் இருந்திருந்தால் – நாங்கள் தொலைத்த ஒட்டுமொத்த பணம் ரூ.84 லட்சம் ஆகியிருக்கும். நான் மட்டுமில்லை நீங்களும் தொலைத்திருக்கிறீர்கள். இன்றைக்கு பிறந்த குழந்தையும் கூட, பணத்தை தொலைத்தபடிதான் பிறக்கிறது.

***

மத்திய ஆட்சியில் பதவியேற்றிருக்கும் புதிய அரசு தனது முதல் ‘பட்ஜெட்டை’ சமர்ப்பித்தது. அதன்படி இந்த ஆண்டு பட்ஜெட்டில் மட்டும் ரூ.5.32 லட்சம் கோடி மதிப்பிலான சலுகைகள், இந்தியாவின் சவலைக் குழந்தைகளான முதலாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் இப்படி சலுகைகளைக் கொடுக்கிறது.

இந்த ஆண்டில் மறக்கப்பட்ட மொத்த தொகை 5.72 லட்சம் கோடி. தனிநபர் வருமானவரியில் கொடுக்கப்பட்ட ரூ.40 லட்சம் கோடியை மேற்சொன்ன கணக்கில் சேர்க்கவில்லை. ஏனென்றால் வருமான வரிச் சலுகை சாதாரண நடுத்தர வர்க்க மக்களுக்கு கிடைக்கிறது. மீதமுள்ள அத்தனை தொகையும், சில கார்பரேட் பெருநிறுவனங்களுக்கே வழங்கப்படுகிறது. அதுவும் நேரடியாகவே கார்பரேட் வருமான வரிச் சலுகை, சுங்கவரி மற்றும் தீர்வைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தம் அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து பெரும் பணக்கார நிறுவனங்களுக்கு இப்படி வரிச் சலுகைகள் தொடந்து வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், 2006-07 ஆண்டு காலகட்டத்தில் நிதி நிலை அறிக்கையிலேயே விபரங்கள் சொல்லப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட் அறிக்கையில் “மறக்கப்பட்ட வருமானத் தொகையின் மொத்த மதிப்பு அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை” என குறிபிட்டுள்ளது அரசு.

இப்படி 2005-06 நிதியாண்டில் இருந்து கார்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகளின் மொத்த மதிப்பு 36.5 லட்சம் கோடி. அதாவது, பெரிய அண்ணன்களுக்கு 9 ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட சலுகைத் தொகை  ரூ. 36500000000000 …. இதில் ஆறில் ஒரு பங்கு கார்பரேட் வருமானத்திற்கு கொடுக்கப்பட்ட வரிச் சலுகையாகும்.

9 ஆண்டுகளுக்கு முன் கொடுக்கப்பட்ட சலுகைகளையும் கூட்டினால் இந்தத்தொகை இன்னும் அதிகரிக்கும்.

சலுகையாகக் கொடுக்கப்பட்ட 36.5 ட்ரில்லியன் பணத்தை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் செய்திருக்க முடியும்?

  • மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை, இப்போது இருக்கும் நிலையில் சுமார் 105 ஆண்டுகளுக்கு நடத்தியிருக்க முடியும். ஒரு விவசாயத் தொழிலாளிக்கு வாழ் நாள் முடிவதும் கிடைக்கும் பலனைவிட இது பலமடங்கு அதிகமாகும். இப்போது அந்தத் திட்டத்திற்கு நாம் ஆண்டுக்கு 34 ஆயிரம் கோடி ரூபாய்தான் செலவு செய்கிறோம்.
  • ரேசன் கடை திட்டத்திற்கு 31 ஆண்டுகளுக்கு தங்குதடையில்லாமல் நிதி வழங்கியிருக்க முடியும். (இப்போது இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடி செலவாகிறது.)
  • ஒட்டுமொத்த மக்கள் தொகையால், இந்தக் கூட்டுத்தொகையை வகுத்துப்பாருங்கள் – தலைக்கு ரூ.28 லட்சம். ஒரு தனிமனிதனால் 9 ஆண்டுகளில் 28 லட்சம் சேமிக்க முடியுமா?. குடும்பத்துக்கு சுமார் 1.25 கோடி வருமானம் வருவது சாத்தியமா?… அதுவும் 9 ஆண்டுக்கு முன் பணத்தின் மதிப்பு என்ன என்பதையும் இணைத்துக் கணக்கிட்டால் – இதன் உண்மையான மதிப்பு என்ன?
  •  எத்தனை நவீன பள்ளிகள் கட்டியிருக்கலாம். எத்தனை மின் சாரத் திட்டங்களை நிரைவேற்றியிருக்கலாம்?

இந்தப் பணத்தை ஒழுங்காக வசூலித்திருந்தால், அவற்றில் சுமார் 30 சதவீதம் மாநில அரசுகளுக்கு கிடைத்திருக்கும். மாநிலங்கள் தற்போது சந்திக்கும் நிதிப் பற்றாக்குறை பெருமளவு தீரும். மத்திய அரசு இத்தனை பெரிய தொகையை வசூலிக்காமல் விட்டதன் விளைவாக, மாநிலங்களில் நிதி நிலையும் மோசமாகிறது.

revenue-forgone-2014

2013-2014 ஒரு ஆண்டில் மட்டும் இந்த வரியை வசூலித்திருந்தால் சுமார் 30 ஆண்டுகளுக்கு ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்த முடியும். 4.5 வருடங்களுக்கு ரேசன் கடைகளை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும். அல்லது எண்ணெய் கம்பனிகளுக்கு நட்டமாவதாகச் சொல்லப்படும் வருவாயை விட இந்த வரிச் சலுகை 4 மடங்கு அதிகம் என்பதையாவது நாம் கவனிக்க வேண்டும். இந்தப் பணத்தை வசூலித்தால் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையேற்றம் – அதன் காரணமாக நிகழ்ந்த ரயில் கட்டணம், பஸ்கட்டணம், உணவுப்பொருள் விலையேற்றத்தை தவிர்த்திருக்கலாம்.

வரி வசூலிக்காமல் விட்டதால் பலன் அடைந்தவர்கள் யார்? என்பதைப் பார்ப்போம் … வைரம் மற்றும் தங்கம் இறக்குமதிக்கான சுங்க வரி என்ற வகையில் 48 ஆயிரத்து 635 கோடியை வசூலிக்காமல் விட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் சாமானிய மக்கள் எப்போதாவதுதான் வாங்குகிறோம். கடந்த 36 மாதங்களில், தங்கத்துக்கும் வைரத்துக்கும் கொடுக்கப்பட்ட வரி 1.6 ட்ரில்லியன். வரும் ஆண்டில் நாம் நியாயவிலைக் கடைகளுக்கு செலவிடவுள்ள தொகையை விட இது மிக அதிகம். ஒட்டுமொத்த வரிச் சலுகையில் 16 சதவீதம், தங்கத்துக்கும், வைரத்துக்குமானதாகும்.

சென்ற ஆண்டு, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை வந்தபோது, தங்கம் விலை அதிகரித்தது. ஒவ்வொருமுறை தங்கம் வாங்கும்போதும், நாம் வரியோடு சேர்த்தே வாங்குகிறோம். ஆனால், தங்க வியாபாரிகள் வரி செலுத்த தேவையில்லை என்றால், எத்தனை பெரிய மோசடி இது.

இந்த 5.72 லட்சம் கோடியில் (2013 – 2014) 76 ஆயிரத்து 116 கோடி ரூபாய் நேரடியாகவே கார்பரேட்டுகள் செலுத்த வேண்டிய வருமான வரி ஆகும். அதன் இரண்டு மடங்கு தொகை (ரூ.1,95,679 கோடிகள்) தீர்வை என்கிற விதத்தில் மறக்கப்பட்டுள்ளது. அதை விட 3 மடங்கு தொகை சுங்கவரியின் விதத்தில் மறக்கப்பட்டுள்ளது (ரூ. 2,60,714 கோடிகள்).

2005 – 2006 ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்ட சலுகையை விட, இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தரப்பட்டுள்ள சலுகை 132 சதவீதம் அதிகம். அது நமது பணம். நம் பணத்தை எப்போது திருப்பிக் கேட்கப் போகிறோம்.

(பத்திரிக்கையாளர் பி.சாய்நாத் எழுதிய கட்டுரையை தழுவி எழுதப்பட்டது. ஆதாரம் … http://psainath.org/corporate-karza-maafi-at-rs-36-5-trillion)

Related Posts