அரசியல் விவசாயம்

ப்ளாஸ்டிக் அரிசி, முட்டை & பால் ஆகியவை வதந்திகளே . . . . . . . !

ப்ளாஸ்டிக் அரிசி, முட்டை, பால் ஆகியவை வதந்திகளே என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதற்காக கேள்விக்குறியுடனான தலைப்பை போடுவதும் கூட அவசியமில்லாமல் ஒரு வதந்தியை உயிரோடு வைத்திருக்கும்.
ப்ளாஸ்டிக் அரிசி, ப்ளாஸ்டிக் முட்டை, ப்ளாஸ்டிக் பால் என்று பலவிதமான வதந்திகள் நம்மை ஆட்கொள்கின்றன. உண்மைதானா? நாம் உணவை வாங்கிவருகின்ற ப்ளாஸ்டிக் கவரைப் போன்றதுதானா நாம் சாப்பிடும் உணவும்? …
பலருக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கும் இந்த செய்தி உத்திரபிரதேச ஊடகங்களால் ஒளிபரப்பப்பட்டு இன்று நாடு முழுவதும் பரபரப்பாகியுள்ளன. இதைப் போன்ற செய்திகள் பல முறை வந்து போயிருக்கின்றன. ப்ளாஸ்டிக் முட்டை என்ற வதந்தி காரணமாக முட்டைக் கடை உடைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்திலேயே நடந்திருக்கிறது. உலகத்தில் எங்கேயாவது இப்படி ஒரு அரிசி, முட்டை, பால் உண்டா? பாதிக்கப்பட்ட செய்திகள் உண்டா?
இதுபற்றிய தேடலில் ஸ்னோப்ஸ் இணையதளம் ஈடுபட்டது. முழுமையான ஆய்வு விபரங்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
2011 ஆம் ஆண்டில் இந்த வந்தந்தி சமூக வலைத்தளங்களில் பரவியது. முதல் முதலாக இப்படியொரு செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் அமெரிக்க இணையதளமான “ரா ஸ்டோரி” மற்றும் “மேரி சூ” ஆகியவற்றில் வெளியாகின. அந்த இரண்டு செய்தியிலும் எந்த உறுதியான தகவல்களும் இல்லை.
சிங்கப்பூர் ஊடகம் ஒன்றில் வியட்நாமில் ப்ளாஸ்டிக் அரிசி பயன்படுத்தப்படுவதாக ஒரு செய்தியை வெளியிட்டது. அந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பல முறை பகிரப்பட்டது. சாப்பிடக்கூடிய ‘உருளைக் கிழங்கு மற்றும் சர்க்கரைக் கிழங்கு’ ஆகியவற்றைப் பயன்படுத்தி அரிசிபோல் செய்யப்பட்ட ஒரு ’ப்ளாஸ்டிக்’ (!) அரிசி என்று செய்தியில் குறிப்பிட்டிருப்பதைக் கூட கவனிக்காமல் ‘ப்ளாஸ்டிக்’ அரிசி என்ற பெயரோடே பலமுறை பகிரப்பட்டது. அந்த செய்திகளில் ‘ஒரு சைனீஸ் உணவக உரிமையாளர்’ குறிப்பிட்டார் என்று பொதுவான பதங்கள் பயன்படுத்தப்பட்டன.
ஓராண்டுக்கு பிறகு, மீண்டும் யாரோ ஒருவர் அந்த செய்தியை பேஸ்புக் தளத்தில் போட, அது மீண்டும் பரவலாகியது.
போலி அரிசி என்று வீடியோக்களும் பகிரப்பட்டன. பின் அவற்றின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய முடியாமல் யூ-டியூப் தளத்திலிருந்து நீக்கப்பட்டன. இதுபோன்ற செய்திகளில் பல வீடியோக்கள் திரித்து பயன்படுத்தப்பட்டன. தெரியாத மொழியில் ஒருவர் பேசுவதைக் காட்டும்போது, மக்கள் கேள்வியற்று நம்பி பகிர்ந்தார்கள். விக்கிப்பீடியாவிலும் கூட அதற்கென பக்கம் உருவாக்கப்பட்டது. ஆனால், ஆதாரமாக கொடுத்த எந்தத் தகவல்களிலும் உண்மையில்லை. அடிப்படையில்லை.
2015 ஆம் ஆண்டில் வேறு வகையான செய்திகள் பரவின. ஒரு பெண், தான் வாங்கிய அரிசி குறித்து காவல்துறையில் புகார் கொடுத்ததாகவும், காவல்துறையினர் விசாரித்ததாகவும் அந்த செய்தி தெரிவித்தது. ஆய்வகத்திற்கு அனுப்பியபோது அந்த அரிசியில் ப்ளாஸ்டிக் எதுவும் இல்லை என்பது உறுதியானது.
பொதுவாக இந்தச் செய்திகள் பரப்பப்பட ஒரு காரணம் இருக்கிறது. சீன இறக்குமதிகள் அதிகரிக்கும் காரணத்தால், தங்கள் சொந்த கலாச்சாரம் பாதிக்கப்படுவதை உணரும் ஒரு சமூகம் – வதந்திகளின் வழியே எதிர்வினையாற்றுவதாகச் சொல்லலாம். மற்றபடி சிங்கப்பூர் இதழ் தொடங்கி  நைஜீரியா இப்போது இந்தியா வரையில் 7 ஆண்டுகளாக வெற்றிகரமாக, மைய ஊடகங்களிலும் அவ்வப்போது இடம்பிடித்து பயணித்துக் கொண்டிருக்கிறது இந்த செய்தி. அடிப்படை ஏதாவது இருக்கிறதா என்ற தேடலில், ஒரு இடத்தில் கூட அதனை உறுதி செய்ய முடியவில்லை. 
– சிந்தன்.ரா

Related Posts